Followers

Monday, October 5, 2020

ஒ வெ செ மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை.

 ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை.


மண்பானைக்கும், மணக்கும் மல்லிக்கும் பெயர் பெற்ற ஊர் மானாமதுரை. ஊரின் உயிர் நாடி  அதன் நடுவில் ஓடும் வைகை நதி.

மேல் கரையில் ஆனந்தவள்ளி உடனாய சோமநாதர் கோயில், கீழ் கரையில் வீர அழகர் கோயில் ஆகியவை இவ்வூரின் சிறப்பு.

இவ்வூரின் மற்றுமொரு சிறப்பாய் விளங்குவது 'ஒக்கூர் வெள்ளையன் செட்டியார்  மேல்நிலைப்பள்ளி'.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மானாமதுரை மேல்கரையில் கொரட்டி கருப்பண்ணசாமி கோவில் அருகே குப்பண்ண அய்யங்கார் என்பவர் ஹையர் எலிமெண்டரி ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்தார். அதே காலகட்டத்தில் சீனிவாச அய்யங்கார் என்பவர் ஹிந்து செகண்டரி ஸ்கூல் என்ற மிடில் ஸ்கூல் ஒன்றை அதன் அருகே நடத்திவந்தார். இப்பள்ளியை சீனிவாச ஐயங்காரிடம் இருந்து ஒக்கூரை சேர்ந்த சி.கரு.சி.கரு.வெள்ளையன் செட்டியாரின் மூத்த புதல்வர் ராவ்சாகேப் சிந்தாமணி செட்டியார் 1921இல் விலைக்கு வாங்கி "ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் ஹைஸ்கூல்" என்று தம் தந்தையின் பெயரால் நடத்திவந்தார்.

இதே காலகட்டத்தில் மானாமதுரை கீழ்கரையில் "வித்யாபிவிருத்தி சங்கம்" என்ற பெயரில் நடந்துவந்த ஆரம்பப் பள்ளியையும் வாங்கி இவரே நடத்தி வந்தார்.

2 வருடம் கழித்து குப்பண்ண அய்யங்கார் பள்ளி நடத்தப்படாமல் மூடப்பட்டது. அதன் காரணமாக மேல்கரையில் தொடக்கப்பள்ளி இல்லாத குறையைப் போக்க தெற்கு ரதவீதி மேல்கோடியில்  'ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் தொடக்கப்பள்ளி மேற்கு' என்ற பெயரில் மற்றொரு தொடக்கப் பள்ளியைத் துவக்கினார். பிற்பாடு  குப்பண்ண அய்யங்கார் பள்ளிக் கட்டிடம் பயன்படுத்தப் படாமல் இருந்ததால் தொடக்கப் பள்ளி அவ்விடத்திற்கு மாற்றப்பட்டது.

1928 வாக்கில் தற்போதைய மேல்நிலைப்பள்ளி இருக்கும் இடம் வாங்கப்பட்டு ராவ்சாகேப் சி.கரு.சி.கரு.வெ.சிந்தாமணி செட்டியாரின் சகோதரர் சி.கரு.சி.கரு.வெ.ஆதப்ப செட்டியாரால் சுமார் ரூ.87,000 செலவில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 25.4.1935இல் அன்றைய மெட்ராஸ் மாகாண கல்வி அமைச்சர் திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியாரால் திறந்து வைக்கப்பட்டு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

இப்பகுதியிலேயே அழகிலும், அமைப்பிலும் சிறந்ததாக, ஐந்து ஏக்கர் பரப்பளவு உள்ள விளையாட்டு மைதானத்துடன் இப்பள்ளி அமைந்துள்ளது.

அக்காலத்தில் ஒருங்கிணைந்த இராமநாதபுர மாவட்டத்தில் இப்பள்ளியைச் சேர்த்து மொத்தம் 12 உயர்நிலைப் பள்ளிகள்தான் இருந்தன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

1978இல் இது மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.

வரும் 2021இல் நூற்றாண்டு விழா கொண்டாட காத்திருக்கிறது.


அன்பன்
பழ.கைலாஷ்

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...