Followers

Showing posts with label காரைக்குடி வரலாறு. Show all posts
Showing posts with label காரைக்குடி வரலாறு. Show all posts

Friday, July 18, 2025

அழகப்பா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் காமராஜர்

       ழகப்பா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், கல்லூரி நிறுவனர் வள்ளல் அழகப்ப செட்டியார், முருகப்பா குரூப்ஸ் அ.மு.மு.முருகப்ப செட்டியார், கானாடுகாத்தான் C.V.CT.வெங்கடாசலம் செட்டியார் இருக்கும் புகைப்படம்.



கோட்டையூரில் தாம் கட்டிய வீட்டை(ஸ்ரீநிவாஸ்) 1954-ஆம் ஆண்டு மகளிர் கல்லூரியாக மாற்றினார் வள்ளல் அழகப்பர். ஆகையால் "குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்" என்று போற்றப்படுகிறார்.

-பழ.கைலாஷ் 

Friday, February 28, 2025

காரைச் சிவனடியார் திருக்கூட்டம்

சீர்திருத்தச்செம்மல் சொ.முருகப்பா அவர்களால் 1923ஆம் ஆண்டு காரைக்குடி பகுதியில் சைவ சமயத்தை வளர்க்கும் நோக்கில் "காரைச் சிவனடியார் திருக்கூடம்" என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் இதன் சார்பில் "குமரன்" என்னும் மாத இதழ் வெளிவந்து. இவ்வமைப்பினால் திரு.வி.க எழுதிய "நாயன்மார் வரலாறு" நூல் முதன் முதலில் வெளியிடப்பட்டது.

அமராவதிபுதூர் மழலையர் பள்ளி - 1939

          காரைக்குடி சீர்திருத்தச்செம்மல் சொ.முருகப்பா அவர்களால் 1938ல் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் இளம் விதவைப்பெண்கள் மற்றும் கைவிடப்பட்டபெண்கள் முன்னேற்றத்துக்காக "மகளிர் இல்லம்" தொடங்கப்பெற்றது. அதில் பெண்களுக்கு கல்வியும் , கைத்தொழில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. சிலருக்கு மறுமணமும் செய்துவைக்கப்பட்டுள்ளது. 


இப்பெண்களின் குழந்தைகள் கல்வி கற்க மகளிர் இல்ல வளாகத்தினுள்ளே 1939-ல் ஒரு மழலையர் பள்ளி தொடங்கப்பெற்றுள்ளது. மழலையர் பள்ளி கட்டிடத்தை இலங்கை ஸ்ரீலஸ்ரீ விபுலானந்த சுவாமிகள் திறந்துவைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


பெண்கள் மறுமணம், கல்வி மற்றும் முன்னேற்றத்துக்காக அயராது உழைத்த சொ.முருகப்பா பற்றி இன்று யாரும் பேசுவதில்லை. அறியப்படாத மனிதருள் ஒருவராய் உள்ளார்.


- பழ.கைலாஷ் 

Saturday, April 17, 2021

சுப்பிரமணியஞ் செட்டியார் குருகுலம்.

சுப்பிரமணியஞ் செட்டியார் குருகுலம், அமராவதிபுதூர், சிவகங்கை மாவட்டம் 

1937ஆம் ஆண்டு காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் இருக்கும் சுப்பிரமணியன் செட்டியார் குருகுலத்தாரால் வெளியிடப்பட்ட சிறிய கையேடு.

Monday, June 29, 2020

பர்மா கடிதங்கள்

1899இல் பர்மாவிற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்.

" பெரி.சு.று. கருப்பன் செட்டிக்கு
றெங்கோன்"

று- இராம
றெங்கோன்- ரங்கூன்(Rangoon)


பாரதி கடிதம்

1919இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கானாடுகாத்தான் வை.சு.சண்முகனாருக்கு எழுதிய கடிதம்.


Thursday, April 30, 2020

ஆச்சிமார்கள் பற்றி ஜப்பானிய பெண் எழுதியது!

ஜப்பானை சேர்ந்த பேராசிரியை யூகோ நிஷிமுரா(Yuko Nishimura) அவர்கள், 1998ஆம் ஆண்டு செட்டிநாட்டு ஆச்சிமார்களை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள்.

புத்தகத்தின் தலைப்பு:
Gender, Kinship and Property Rights: Nagarattar Womanhood in South India

யூகோ நிஷிமுரா

கண்ணதாசன்- மரபுக்கவிதைகள்

கவியரசு கண்ணதாசனின் மரபுக்கவிதைகள்.



செட்டிநாட்டு மாமியார் வாக்கு

நல்லாத்தான் சொன்னாரு
நாராயணச் செட்டி!

பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு

வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்

செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா

தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.

எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க

குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!

ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்

ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்

சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்

பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்

எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்

கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்

கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு

மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்

தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்

தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா

வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்

அப்பன் கொடுத்த சொத்து
ஆறுநாள் தாங்காது

கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்

கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு

மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படிக்கி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி

விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி

குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி

அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு

சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு

வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே

வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா

எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி

தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா

கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா

மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்

பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி

ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்

பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு

ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி

பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி

கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி

எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு

கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா

இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா

ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு

ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்

பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய

சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்

பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே

நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா

ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா

எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி

பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து

பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி

வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா

கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை

பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா

தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி

காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி

ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு

மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா

நல்லாத்தான் சொன்னாரு
நாராயணன் செட்டி!
••••••••••••


செட்டிநாட்டு மருமகள் வாக்கு

அவ கெடக்கா சூப்பனகை
அவ மொகத்தே யாரு பாத்தா?

அவுக மொகம் பாத்து
அடியெடுத்து வச்சேன் நான்

பத்து வராகன்
பணங்கொடுத்தார் எங்கய்யா

எத்தனைபேர் சீதனமா
இவ்வளவு கண்டவுக?

ராமாயணத்திலயும்
ராமனுக்கு சீதைவந்தா

சீதனமா இவ்வளவு
சேத்துவச்சா கொண்டுவந்தா?

கப்பலிலே ஏத்திவச்சா

கப்பல் முழுகிவிடும்

அவ்வளவு சாமான்
அரிசி பருப்புவரை

மாவு திரிச்சுவச்சு
மலைமலையா அடுக்கிவச்சு

ஊறுகாய் அத்தனையும்
ஒண்ணு விடாமவச்சு

நாக்காலி முக்காலி
நாலுவண்டி ஏத்திவச்சு

பாயும் தலையணையும்
பலவகையா கட்டிவச்சு

ஆளு வீடடங்காத
அழகான பீரோவும்

கண்ணாடிச் சாமானும்
கனத்தவெள்ளி பாத்திரமும்

அம்மிகுழவி
ஆட்டுக்கல் அத்தனையும்

கட்டிகொடுத்து
என்னை கட்டிக்கொடுத்தாக

வைரத்தால் கண்டசரம்
வளைககப்பு மோதிரங்கள்

சிறுதாலி பெருந்தாலி
சுட்டியெல்லாம் செஞ்சாக

தூக்கமுடியாம
தூக்கு கழுத்தூரு

முந்நூறு பவுனுக்கு
முள்ளங்கி பத்தைப்போல

எங்கையா ஆத்தா
எனக்குக் கொடுத்தாக

ஒருவேளை சோத்துக்கும்
உதவியில்லை இவ்வீட்டில்

மாமியார் இண்ணு சொல்லி
மாரடிச்சு என்னபண்ண?

கல்யாணியாச்சியும்தான்
கட்டிவிட்டா தன் மகளை

ஒருபொட்டுதாலி
ஒருவேளைச் சாப்பாடு

அதுமாதிரி இவளும்
அடைஞ்சிருக்க வேணுமடி

சம்பந்தம் பண்ணவந்தா
சண்டாளி சூப்பநகை

வேறேவைக்க நாதியில்லை
வீடில்லை வாசலில்லை

சோறுவைக்க பானையில்லை
சொத்துமில்லை பத்துமில்லை

புள்ளைதான் பெத்துவச்சா
பெண்ணோடு சோறு வர

தலைகாணிமந்திரமாம்
சங்கதிய கேளுங்கடி

பெண்டாட்டி சொல்கேக்க
புத்தியில்லா ஆம்பிளையா?

வீட்டு மருமகளா
வெளக்கேத்த வந்தவளை

சக்களத்தி போல நெனைச்சு
சதிராடுகின்றாளே

எங்களுக்கும் அண்ணந்தம்பி
ஏழுபேரு இருக்காக

அவுகளுக்கு பெண்ணாட்டி
அணியணியா வந்தாக

எங்காத்தா ஒருவார்த்தை
எடுத்தெறிஞ்சு பேசவில்லை

என்னைப்போல் பெண்ணாக
எண்ணி நடந்தாக

சனியம் புடிச்ச
என் தலையில்வந்து உக்காந்தா

மாமியார்க்கரியின்னா
மனசிரக்கம் கூடாதா

சாமியாரா ஆக
தன்மகனை விட்டிருந்தா

நாம ஏன் இங்கவந்து
நாத்தசோறுங்கோணும்?

அவுகளுக்கு நாஞ்சொல்லி
அலுப்பா அலுத்துவிட்டேன்

செவிடா இருக்காக்
சேதிசொல்ல எண்ணமில்லே

பட்டதெல்லாம் போதும்
பகவானே இங்கவந்து!

சட்டியிலே பொட்டு
தாளிச்சு கொட்டிவிட்டா

வட்டியிலே போட்டு
ஒரு வாய்ச்சோறு வைக்கையிலே

கொட்டுகிறா கொட்டு
தேள்கூட கொட்டாது

அவளுக்கழுவேனா
அன்னாடம் புள்ளைகொண்ட

சீக்குக்கு அழுவேனா
தினமும் கவலையடி

கோட்டையூர் அம்மந்தான்
கூலிகொடுக்கோணும்

பொன்னரசி மலையரசி
பு த்தி புகட்டோணும்

எங்க சொகங்கண்டேன்
இங்குவந்த நாள்முதலா?

கடவுளுக்கு கண்ணிருந்தா
காட்டுவான் கண்ணெதிரே

வத்தக்குழம்பு
வறுத்துவச்ச மொளகாயும்

பத்தியம்போல் சாப்பிடத்தான்
பாவி இவ வீடுவந்தேன்

தம்பி மகளை எண்ணி
தாளமில்லே கொட்டுறா

நம்பி அவளும்வந்தா
நாயாப்போயிருப்பா

கும்பி கருகி
குடல்கருகி நின்னிருப்பா

வெம்பி வெதும்பி
வெளக்குமாறாயிருப்பா

தம்பி மகளாம்
தம்பிமக தெரியாதா?

நாமா இருந்தமட்டும்
நாலுழக்கு பாலூத்தி

தேனா கொடுத்து இவள
திமிர்புடிக்க வச்சிருக்கேன்

போனாபோகட்டுமிண்ணு
பொறுத்து கெடந்தாக்க

தானான கொட்டுகிறா
தடம்புரண்டு ஆடுகிறா

அவதலைய போட்டாத்தான்
ஆத்தா எனக்கு சொகம்

எப்பவருவானோ
எடுத்துக்கினு போவானோ

இப்பவா சாவா?
இழுத்து வலியெடுத்து

கெடையாகெடந்து
கிறுக்கு புடிக்காமே

சாகவே மட்டா
சத்தியமா நான் சொல்றேன்

எங்க கொலதெய்வம்
இருந்தா பழிவாங்கும்

பங்காளி மக்களெல்லாம்
பாக்க பழிவாங்கும்

படுத்துனா மருமகள
படுத்துட்டா இண்ணு சொல்லி

நடுத்தெருவில் நிண்ணு
நாலுபேர் சிரிப்பாக

பாக்கத்தான் போறேண்டி
பாக்கத்தான்போறேன்நான்

ஒருத்தனுக்கு முந்தானை
ஒழுங்காநான் போட்டிருந்தா

இருக்கிற தெய்வமெல்லாம்
எனக்காக கேக்கோணும்

அவகெடக்கா சூப்பநகை
அவமொகத்த யார்பாத்தா?
•••••••••••••

Tuesday, April 7, 2020

வள்ளல் அழகப்பர் பிறந்தநாளும் இறந்தநாளும்...

அழகப்ப செட்டியார் 
ள்ளல் டாக்டர் இராம.அழகப்ப செட்டியார் சென்னை வேப்பேரியில் உள்ள தனது இல்லமான கிருஷ்ண விலாஸில் 05.04.1957ல் மறைந்தார். 

அடுத்த நாள், 06.04.1957 அவரது 48ஆவது பிறந்தநாளன்று, அவருடைய பூதவுடல் கோட்டையூர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. 



மரியாதை நிமித்தமாக, அழகப்பர் தொடங்கி வைத்த அணைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. காரைக்குடி சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு அழகப்பர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.



இறுதி ஊர்வலமானது காரைக்குடி வீதிகளில் சுற்றி அழகப்பாபுரம் சென்றடைந்தது, அழகப்பரின் ஆசைப்படி அவர் முன்பே குறிப்பிட்ட இடத்தில், இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாலை 6 மணியளவில் அவரது அண்ணன் மகன் இராம.நாச்சியப்பன் சிதைக்குத் தீ மூட்டினார்.

இதில் வருத்தத்துக்குரிய செய்தி என்னவேன்றால் வள்ளல் டாக்டர் இராம.அழகப்ப செட்டியார் பிறந்த நாளும் எரியூட்டப்பட்ட நாளும் ஒரேநாள். 
••••••••

இத்தகவல் வள்ளல் அழகப்பரின் பேரன் திரு.இராமநாதன் வைரவன் எழுதிய Alagappa:A Beautiful Mind புத்தகத்தில் உள்ளது.

இன்று (ஏப்ரல் 6) வள்ளல் இராம.அழகப்ப செட்டியாரின் 111வது பிறந்தநாள்.

பதிவு: Kailash PL
06.04.2020



Monday, March 30, 2020

காரைக்குடியில் ராஜேந்திர பிரசாத்

இராஜன்பாபு-வரவேற்புரை 


பாரதத்தின் முதல் ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத் அவர்கள், 1935ல் காங்கிரஸின் தலைவராக பதவி வகித்த போது காரைக்குடிக்கு வருகை தந்திருந்தார். அப்போது காரைக்குடி மக்கள் அளித்த வரவேற்புரை இது, இயற்றியவர் தமிழ் கடல் இராய.சொ .

Saturday, March 21, 2020

சித்தாட்டிவயல் பிள்ளையார் கோயில்

சிவகங்கை மாவட்டம் 'உஞ்சனை'யை அடுத்துள்ள ஊர் 'சித்தாட்டிவயல்'.

இந்த சித்தாட்டிவயல் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் ஒரு பழமையான பிள்ளையார் கோவில் உள்ளது.
















ஒரு காலத்தில் இந்த ஊரில் நாட்டுக்கோட்டை செட்டியார்/நகரத்தார் சமூகத்தினர் சிலர் வாழ்ந்து வந்துள்ளனர்.

நகரத்தார்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் கட்டிய பிள்ளையார் கோவில் இன்று பராமரிப்பின்றி உள்ளது.

கருங்கல்,செம்பராங்கல் மற்றும் சுட்ட செங்கலால் கோவிலை கட்டியுள்ளனர்.
பிள்ளையார் சிலை மற்றும் மூஞ்சுறு சிலை தவிர்த்து மற்ற சிலைகள் திருடு போய்விட்டது.  கல்தூணின் இரண்டு செட்டியார்கள் சிலைகள் உள்ளன. சமீபத்தில் தான் பைரவர் சிலை திருடுபோனதாக கூறுகிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பிள்ளையார் சிலையை திருடிய ஒருவன், ஊர் எல்லையை கடக்கும் போது கண் குருடாகி கண்மாயில் விழுந்து இறந்து போனானாம்! பின்னர் ஊர் மக்கள் சிலையை மீட்டு கொண்டுவந்து வைத்துள்ளனர்.

செட்டியார்கள் யாராவது வந்து கோவிலை புணரமைத்து தரவேண்டும் என்பது இவ்வூர் மக்கள் விருப்பம்.

Kailash PL

உஞ்சனை மகா கணபதி கோயில்

உஞ்சனை சிவன் கோயில்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள 'உஞ்சனை'யில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் முன்புறம் சாத்தன் செட்டியார் மகன் சுப்பிரமணியன் செட்டியாரால் சுமார் 700 ஆண்டுகட்கு முன்பு செம்பூரான் கற்களினால் கட்டப்பட்ட பிள்ளையார் கோயில் ஒன்றுள்ளது.
மகா கணபதி கோயில்



ஸ்ரீ மகா கணபதி 
                 
சுப்பிரமணியன் செட்டியார் 

செட்டியார் சிலை 2


செட்டியார் சிலை 3

செட்டியார் சிலை 4


13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு 

"கல்வாச நாட்டில் 
எலையாத்தங்குடியான 
குல சேகர புரத்தில் 
பெருமரவூர் உடையார் சாத்தன்
செட்டியார் சுப்பிரமணியன்"  என்ற  கல்வெட்டு வாசகம் ஒரு செட்டியார் சிலையின் மேற்புறத்தூணில் வடிக்கப்பட்டுள்ளது.

அக்காலத்தில் உஞ்சனையில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்/நகரத்தார்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

 உஞ்சனையை விட்டு அருகிலிருந்த ஊர்களுக்கு வசிக்கச் சென்ற பின்
13ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற  இக்கோவில் பராமரிப்பின்றிச் சிதிலமடைந்தது.

இந்நிலையில் உஞ்சனை நாட்டுப் பெரிய அம்பலகாரர் இராம.இராமசாமி அய்யா அவர்கள், நாட்டார்கள் மற்றும் கிராமத்தார்கள்
அனைவரும்
முனைவர் தேவகோட்டை இராமநாதன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேற்படி தேவகோட்டை  இராமநாதன் அவர்களின்  பெருமுயற்சியால், நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சார்பில் திருஅண்ணாமலை நகரத்தார் உபயதாரர்கள்குழுவின் தலைவர் கோட்டையூர் க.வீ.மு.சொ.நா.சொ.அழகப்பன் செட்டியார் அவர்களால்
மிகவும் பழமை வாய்ந்த, தினமும் காலையில் சூரியன் கதிரொளியால் பூசிக்கும்,அதிசயமான உஞ்சனை "மகா கணபதி கோயில்" மிகச்சிறப்பான முறையில் பழமை மாறாமல் திருப்பணி செய்யப்பட்டு, இன்று(12.03.2020) குடமுழுக்கு நடத்தப்பெற்றது.

புதிய கல்வெட்டு 
க.வீ.மு.சொ.நா.சொ.அழகப்பன் செட்டியார்  குடும்பத்தினர், தேவகோட்டை இராமநாதன் மற்றும் நான்.

Kailash PL

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...