Followers

Thursday, April 30, 2020

சம்போவுக்கு என்றும் தடையில்லை.

ஓம் நமசிவாய 

இந்துக்களின் புனித தலமான காசியில், கி.பி 1813முதல் காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் தமிழர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் அன்று முதல் இன்று வரை, வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இது "சம்போ" என்று அழைக்கப்படுகிறது. "சம்போ சம்போ மகாதேவா" என்று கூவி கொண்டு செல்வதால் இப்பெயர் வந்தது.

"பஞ்சாப் மெயில் தவறினாலும், நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை" என்பது வாரணாசி பழமொழி.

இது வரை ஒரு நாள் கூட தவறியதில்லை, எமர்ஜென்சி காலத்தில் கூட தவறியதில்லை, தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காலத்திலும் விஸ்வநாதருக்கு நாள் தோறும் பூஜைகள் நடக்கின்றன, அதற்கான பொருட்கள் ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றது. தகவல் தந்த  காசி சத்திர மேலாண்மை கழகத் தலைவர் பழ.இராமசாமி அவர்களுக்கு நன்றி.

Kailash PL

ஆச்சிமார்கள் பற்றி ஜப்பானிய பெண் எழுதியது!

ஜப்பானை சேர்ந்த பேராசிரியை யூகோ நிஷிமுரா(Yuko Nishimura) அவர்கள், 1998ஆம் ஆண்டு செட்டிநாட்டு ஆச்சிமார்களை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள்.

புத்தகத்தின் தலைப்பு:
Gender, Kinship and Property Rights: Nagarattar Womanhood in South India

யூகோ நிஷிமுரா

கண்ணதாசன்- மரபுக்கவிதைகள்

கவியரசு கண்ணதாசனின் மரபுக்கவிதைகள்.



செட்டிநாட்டு மாமியார் வாக்கு

நல்லாத்தான் சொன்னாரு
நாராயணச் செட்டி!

பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு

வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்

செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா

தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.

எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க

குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!

ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்

ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்

சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்

பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்

எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்

கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்

கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு

மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்

தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்

தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா

வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்

அப்பன் கொடுத்த சொத்து
ஆறுநாள் தாங்காது

கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்

கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு

மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படிக்கி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி

விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி

குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி

அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு

சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு

வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே

வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா

எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி

தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா

கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா

மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்

பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி

ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்

பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு

ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி

பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி

கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி

எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு

கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா

இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா

ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு

ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்

பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய

சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்

பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே

நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா

ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா

எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி

பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து

பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி

வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா

கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை

பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா

தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி

காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி

ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு

மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா

நல்லாத்தான் சொன்னாரு
நாராயணன் செட்டி!
••••••••••••


செட்டிநாட்டு மருமகள் வாக்கு

அவ கெடக்கா சூப்பனகை
அவ மொகத்தே யாரு பாத்தா?

அவுக மொகம் பாத்து
அடியெடுத்து வச்சேன் நான்

பத்து வராகன்
பணங்கொடுத்தார் எங்கய்யா

எத்தனைபேர் சீதனமா
இவ்வளவு கண்டவுக?

ராமாயணத்திலயும்
ராமனுக்கு சீதைவந்தா

சீதனமா இவ்வளவு
சேத்துவச்சா கொண்டுவந்தா?

கப்பலிலே ஏத்திவச்சா

கப்பல் முழுகிவிடும்

அவ்வளவு சாமான்
அரிசி பருப்புவரை

மாவு திரிச்சுவச்சு
மலைமலையா அடுக்கிவச்சு

ஊறுகாய் அத்தனையும்
ஒண்ணு விடாமவச்சு

நாக்காலி முக்காலி
நாலுவண்டி ஏத்திவச்சு

பாயும் தலையணையும்
பலவகையா கட்டிவச்சு

ஆளு வீடடங்காத
அழகான பீரோவும்

கண்ணாடிச் சாமானும்
கனத்தவெள்ளி பாத்திரமும்

அம்மிகுழவி
ஆட்டுக்கல் அத்தனையும்

கட்டிகொடுத்து
என்னை கட்டிக்கொடுத்தாக

வைரத்தால் கண்டசரம்
வளைககப்பு மோதிரங்கள்

சிறுதாலி பெருந்தாலி
சுட்டியெல்லாம் செஞ்சாக

தூக்கமுடியாம
தூக்கு கழுத்தூரு

முந்நூறு பவுனுக்கு
முள்ளங்கி பத்தைப்போல

எங்கையா ஆத்தா
எனக்குக் கொடுத்தாக

ஒருவேளை சோத்துக்கும்
உதவியில்லை இவ்வீட்டில்

மாமியார் இண்ணு சொல்லி
மாரடிச்சு என்னபண்ண?

கல்யாணியாச்சியும்தான்
கட்டிவிட்டா தன் மகளை

ஒருபொட்டுதாலி
ஒருவேளைச் சாப்பாடு

அதுமாதிரி இவளும்
அடைஞ்சிருக்க வேணுமடி

சம்பந்தம் பண்ணவந்தா
சண்டாளி சூப்பநகை

வேறேவைக்க நாதியில்லை
வீடில்லை வாசலில்லை

சோறுவைக்க பானையில்லை
சொத்துமில்லை பத்துமில்லை

புள்ளைதான் பெத்துவச்சா
பெண்ணோடு சோறு வர

தலைகாணிமந்திரமாம்
சங்கதிய கேளுங்கடி

பெண்டாட்டி சொல்கேக்க
புத்தியில்லா ஆம்பிளையா?

வீட்டு மருமகளா
வெளக்கேத்த வந்தவளை

சக்களத்தி போல நெனைச்சு
சதிராடுகின்றாளே

எங்களுக்கும் அண்ணந்தம்பி
ஏழுபேரு இருக்காக

அவுகளுக்கு பெண்ணாட்டி
அணியணியா வந்தாக

எங்காத்தா ஒருவார்த்தை
எடுத்தெறிஞ்சு பேசவில்லை

என்னைப்போல் பெண்ணாக
எண்ணி நடந்தாக

சனியம் புடிச்ச
என் தலையில்வந்து உக்காந்தா

மாமியார்க்கரியின்னா
மனசிரக்கம் கூடாதா

சாமியாரா ஆக
தன்மகனை விட்டிருந்தா

நாம ஏன் இங்கவந்து
நாத்தசோறுங்கோணும்?

அவுகளுக்கு நாஞ்சொல்லி
அலுப்பா அலுத்துவிட்டேன்

செவிடா இருக்காக்
சேதிசொல்ல எண்ணமில்லே

பட்டதெல்லாம் போதும்
பகவானே இங்கவந்து!

சட்டியிலே பொட்டு
தாளிச்சு கொட்டிவிட்டா

வட்டியிலே போட்டு
ஒரு வாய்ச்சோறு வைக்கையிலே

கொட்டுகிறா கொட்டு
தேள்கூட கொட்டாது

அவளுக்கழுவேனா
அன்னாடம் புள்ளைகொண்ட

சீக்குக்கு அழுவேனா
தினமும் கவலையடி

கோட்டையூர் அம்மந்தான்
கூலிகொடுக்கோணும்

பொன்னரசி மலையரசி
பு த்தி புகட்டோணும்

எங்க சொகங்கண்டேன்
இங்குவந்த நாள்முதலா?

கடவுளுக்கு கண்ணிருந்தா
காட்டுவான் கண்ணெதிரே

வத்தக்குழம்பு
வறுத்துவச்ச மொளகாயும்

பத்தியம்போல் சாப்பிடத்தான்
பாவி இவ வீடுவந்தேன்

தம்பி மகளை எண்ணி
தாளமில்லே கொட்டுறா

நம்பி அவளும்வந்தா
நாயாப்போயிருப்பா

கும்பி கருகி
குடல்கருகி நின்னிருப்பா

வெம்பி வெதும்பி
வெளக்குமாறாயிருப்பா

தம்பி மகளாம்
தம்பிமக தெரியாதா?

நாமா இருந்தமட்டும்
நாலுழக்கு பாலூத்தி

தேனா கொடுத்து இவள
திமிர்புடிக்க வச்சிருக்கேன்

போனாபோகட்டுமிண்ணு
பொறுத்து கெடந்தாக்க

தானான கொட்டுகிறா
தடம்புரண்டு ஆடுகிறா

அவதலைய போட்டாத்தான்
ஆத்தா எனக்கு சொகம்

எப்பவருவானோ
எடுத்துக்கினு போவானோ

இப்பவா சாவா?
இழுத்து வலியெடுத்து

கெடையாகெடந்து
கிறுக்கு புடிக்காமே

சாகவே மட்டா
சத்தியமா நான் சொல்றேன்

எங்க கொலதெய்வம்
இருந்தா பழிவாங்கும்

பங்காளி மக்களெல்லாம்
பாக்க பழிவாங்கும்

படுத்துனா மருமகள
படுத்துட்டா இண்ணு சொல்லி

நடுத்தெருவில் நிண்ணு
நாலுபேர் சிரிப்பாக

பாக்கத்தான் போறேண்டி
பாக்கத்தான்போறேன்நான்

ஒருத்தனுக்கு முந்தானை
ஒழுங்காநான் போட்டிருந்தா

இருக்கிற தெய்வமெல்லாம்
எனக்காக கேக்கோணும்

அவகெடக்கா சூப்பநகை
அவமொகத்த யார்பாத்தா?
•••••••••••••

Thursday, April 23, 2020

பாரன்ஹீட் 451

  பிரான்சுவா ட்ரூஃபாட் இயக்கத்தில் 1966ல் வெளியான படம் "பாரன்ஹீட் 451". புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் "ரே பிராட்பரி" எழுதிய முதல் புத்தகமான "பாரன்ஹீட் 451" 1953ல் வெளியானது, அப்புதினத்தின் தழுவலே இப்படம்.

பாரன்ஹீட் 451 என்பது காகிதம் தானாகவே எரிய தேவைப்படும் தோராயமான வெப்பநிலை. 

 வரலாறு நெடுகிலும் பல்வேறு நாடுகளில் புத்தகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, நூலகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, புத்தகத்தை எழுதியவர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள், புத்தகத்தை எரித்தவர்களும் எரிக்கப்பட்டிருகிறார்கள். இப்படி புத்தக எரிப்பின் கதை தான் இது.

 கதை நடப்பது வருங்காலத்தில், டெக்னாலஜி மிகவும் முன்னேறிய ஒரு நகரில். அங்கு புத்தகங்கள் படிப்பதும் வைத்திருப்பதும் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறி யாராவது புத்தகம் வைத்திருந்தார்கள் என்றால் அவர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்து, அவர்களது புத்தகங்களை உடனடியாகத் தீ வைத்து எரித்துவிடுவார்கள். அப்படி தீ வைத்து எரிப்பதற்கென்று தனியே ஒரு தீ எரிப்புத் துறை இருக்கிறது. அதில்தான் இந்தப் படத்தின் கதாநாயகன் மாண்டெக் வேலை பார்க்கிறான். எவருடைய வீட்டிலாவது புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாகத் தீ எரிப்புத் துறையினருக்கு தகவல் அனுப்பப்படும். தீ எரிப்புத் துறை வீரர்கள் அங்கே சென்று புத்தகங்களைக் கொளுத்தி விடுவார்கள்.

 ஒரு நாள், வயதான பெண்மணி ஒருவருடைய வீட்டில் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு எரிக்கப்படுகின்றன. அப்போது புத்தகத்தில் இருந்து ஒரு வரியை தற்செயலாகப் படிக்கிறான் மாண்டெக், அந்த வரியின் ஈர்ப்பில் அந்த புத்தகத்தைத் திருடிக்கொள்கிறான். தன்னைப் புத்தகங்களில் இருந்து பிரிக்க முடியாது என்று கூறி அந்த வயதான பெண்மணி, புத்தகங்களுடன் சேர்ந்து தன்னைக் கொளுத்திக் கொள்கிறாள்.

 புத்தகங்களுக்காக ஒரு பெண் ஏன் தற்கொலை செய்து கொள்கிறாள் என்று மாண்டெக்கால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் பிறகு தீவைக்கச் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் புத்தகங்களைத் திருடி வந்து படிக்கிறான் மாண்டெக். படித்து முடித்த புத்தகங்களைப் யாருக்கும் தெரியாமல் வீட்டினுள் ஒளித்துவைக்கிறான்.

புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்காக பேபர் என்ற பேராசிரியரைத் தேடிப் போகிறான், இருவரும் புத்தகம் பற்றி நிறையப் பேசுகிறார்கள். மனித குலம் அதன் கடந்த காலத்தை அறிந்துகொள்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது, அது புத்தகம். மனிதக் கற்பனையின் மிக உயரிய விடயம் எழுத்து என்று அவர் புரியவைக்கிறார்.

 ஒரு கட்டத்தில் மாண்டெக் புத்தகம் படிக்கும் விஷயம் அவன் மனைவியினால் அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவன் தேடப்படுகிறான். உயிர் பிழைப்பதற்காகத் தப்பி அலைந்து, நடமாடும் புத்தகங்களாக உள்ள ஒரு குழுவினருடன் சேர்ந்துகொள்கிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை முழுவதுமாக மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தந்த புத்தகத்தின் நடமாடும் வடிவமாக அவர்கள் இருக்கிறார்கள்.

 ஆக உலகில் இருந்து புத்தகங்கள் எரிக்கப்பட்டாலும் அவர்களின் நினைவில் அந்தப் புத்தகம் அப்படியே இருக்கிறது. அவர்கள் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நினைவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தப் பணியில் இணைந்த மாண்டெக் ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து, அவனும் ஒரு நடமாடும் புத்தகமாகிவிடுகிறான்.

KAILASH PL


Tuesday, April 7, 2020

வள்ளல் அழகப்பர் பிறந்தநாளும் இறந்தநாளும்...

அழகப்ப செட்டியார் 
ள்ளல் டாக்டர் இராம.அழகப்ப செட்டியார் சென்னை வேப்பேரியில் உள்ள தனது இல்லமான கிருஷ்ண விலாஸில் 05.04.1957ல் மறைந்தார். 

அடுத்த நாள், 06.04.1957 அவரது 48ஆவது பிறந்தநாளன்று, அவருடைய பூதவுடல் கோட்டையூர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. 



மரியாதை நிமித்தமாக, அழகப்பர் தொடங்கி வைத்த அணைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. காரைக்குடி சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு அழகப்பர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.



இறுதி ஊர்வலமானது காரைக்குடி வீதிகளில் சுற்றி அழகப்பாபுரம் சென்றடைந்தது, அழகப்பரின் ஆசைப்படி அவர் முன்பே குறிப்பிட்ட இடத்தில், இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாலை 6 மணியளவில் அவரது அண்ணன் மகன் இராம.நாச்சியப்பன் சிதைக்குத் தீ மூட்டினார்.

இதில் வருத்தத்துக்குரிய செய்தி என்னவேன்றால் வள்ளல் டாக்டர் இராம.அழகப்ப செட்டியார் பிறந்த நாளும் எரியூட்டப்பட்ட நாளும் ஒரேநாள். 
••••••••

இத்தகவல் வள்ளல் அழகப்பரின் பேரன் திரு.இராமநாதன் வைரவன் எழுதிய Alagappa:A Beautiful Mind புத்தகத்தில் உள்ளது.

இன்று (ஏப்ரல் 6) வள்ளல் இராம.அழகப்ப செட்டியாரின் 111வது பிறந்தநாள்.

பதிவு: Kailash PL
06.04.2020



உலகின் முதல் மதம் இந்து மதம்!!!

நரசிம்மரா?!

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களிலேயே மிக பழமை வாய்ந்தது "சிங்க மனிதன்"(lion-man) சிலை.

இது ஜெர்மனியில் உள்ள ஹோலென்ஸ்டீன்-ஸ்டேடல் (Hohlenstein-Stadel) குகையில் 1939ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது, யானைத் தந்தத்தில் செதுக்கப்பட்ட இந்த சிங்க மனிதன் சிலை சுமார் 32,000 முதல் 40,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
LION MAN


இதுவே மனிதன் வணங்கிய முதல் கடவுளாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேலிய எழுத்தாளர் யூவால் நுவா அராரி தனது "சேப்பியன்ஸ்" புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Sapiens- A Brief History Of Humankind


நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...