Followers

Thursday, April 23, 2020

பாரன்ஹீட் 451

  பிரான்சுவா ட்ரூஃபாட் இயக்கத்தில் 1966ல் வெளியான படம் "பாரன்ஹீட் 451". புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் "ரே பிராட்பரி" எழுதிய முதல் புத்தகமான "பாரன்ஹீட் 451" 1953ல் வெளியானது, அப்புதினத்தின் தழுவலே இப்படம்.

பாரன்ஹீட் 451 என்பது காகிதம் தானாகவே எரிய தேவைப்படும் தோராயமான வெப்பநிலை. 

 வரலாறு நெடுகிலும் பல்வேறு நாடுகளில் புத்தகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, நூலகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, புத்தகத்தை எழுதியவர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள், புத்தகத்தை எரித்தவர்களும் எரிக்கப்பட்டிருகிறார்கள். இப்படி புத்தக எரிப்பின் கதை தான் இது.

 கதை நடப்பது வருங்காலத்தில், டெக்னாலஜி மிகவும் முன்னேறிய ஒரு நகரில். அங்கு புத்தகங்கள் படிப்பதும் வைத்திருப்பதும் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறி யாராவது புத்தகம் வைத்திருந்தார்கள் என்றால் அவர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்து, அவர்களது புத்தகங்களை உடனடியாகத் தீ வைத்து எரித்துவிடுவார்கள். அப்படி தீ வைத்து எரிப்பதற்கென்று தனியே ஒரு தீ எரிப்புத் துறை இருக்கிறது. அதில்தான் இந்தப் படத்தின் கதாநாயகன் மாண்டெக் வேலை பார்க்கிறான். எவருடைய வீட்டிலாவது புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாகத் தீ எரிப்புத் துறையினருக்கு தகவல் அனுப்பப்படும். தீ எரிப்புத் துறை வீரர்கள் அங்கே சென்று புத்தகங்களைக் கொளுத்தி விடுவார்கள்.

 ஒரு நாள், வயதான பெண்மணி ஒருவருடைய வீட்டில் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு எரிக்கப்படுகின்றன. அப்போது புத்தகத்தில் இருந்து ஒரு வரியை தற்செயலாகப் படிக்கிறான் மாண்டெக், அந்த வரியின் ஈர்ப்பில் அந்த புத்தகத்தைத் திருடிக்கொள்கிறான். தன்னைப் புத்தகங்களில் இருந்து பிரிக்க முடியாது என்று கூறி அந்த வயதான பெண்மணி, புத்தகங்களுடன் சேர்ந்து தன்னைக் கொளுத்திக் கொள்கிறாள்.

 புத்தகங்களுக்காக ஒரு பெண் ஏன் தற்கொலை செய்து கொள்கிறாள் என்று மாண்டெக்கால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் பிறகு தீவைக்கச் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் புத்தகங்களைத் திருடி வந்து படிக்கிறான் மாண்டெக். படித்து முடித்த புத்தகங்களைப் யாருக்கும் தெரியாமல் வீட்டினுள் ஒளித்துவைக்கிறான்.

புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்காக பேபர் என்ற பேராசிரியரைத் தேடிப் போகிறான், இருவரும் புத்தகம் பற்றி நிறையப் பேசுகிறார்கள். மனித குலம் அதன் கடந்த காலத்தை அறிந்துகொள்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது, அது புத்தகம். மனிதக் கற்பனையின் மிக உயரிய விடயம் எழுத்து என்று அவர் புரியவைக்கிறார்.

 ஒரு கட்டத்தில் மாண்டெக் புத்தகம் படிக்கும் விஷயம் அவன் மனைவியினால் அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவன் தேடப்படுகிறான். உயிர் பிழைப்பதற்காகத் தப்பி அலைந்து, நடமாடும் புத்தகங்களாக உள்ள ஒரு குழுவினருடன் சேர்ந்துகொள்கிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை முழுவதுமாக மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தந்த புத்தகத்தின் நடமாடும் வடிவமாக அவர்கள் இருக்கிறார்கள்.

 ஆக உலகில் இருந்து புத்தகங்கள் எரிக்கப்பட்டாலும் அவர்களின் நினைவில் அந்தப் புத்தகம் அப்படியே இருக்கிறது. அவர்கள் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நினைவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தப் பணியில் இணைந்த மாண்டெக் ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து, அவனும் ஒரு நடமாடும் புத்தகமாகிவிடுகிறான்.

KAILASH PL


No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...