Followers

Saturday, May 16, 2020

ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்

மேலவளவு என்கின்ற ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்(Emperor George Gate) தேவகோட்டையில் அமைந்துள்ளது.

EMPEROR GEORGE GATE
DEVAKOTTAI 



கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி,1876ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பேரரசியாக பிரிட்டன் ராணி விக்டோரியா முடிசூட்டிக் கொண்டார். அவர் மறைந்த பின் அவரின் மகன் ஏழாம் எட்வர்ட் பிரிட்டன் அரசராகவும் இந்திய சக்கரவர்த்தியாகவும் தொடர்ந்தார். ஏழாம் எட்வர்ட் மறைந்த பின்னர் அவரின் மகன் ஐந்தாம் ஜார்ஜ் பிரிட்டன் அரசரானார். தான் இந்திய சக்கரவர்த்தியாக பதவியேற்றுக் கொள்ளும் விழா இந்தியாவில் வேகு விமர்சையாக நடக்க வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பப்படியே இந்தியாவில் பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பங்கேற்பதற்காக 40 நாள் பயணமாக ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும், அவர் மனைவி ராணி மேரியும் இந்தியா வந்தனர். இந்த விழாவில்தான் இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய சமஸ்தான அரசர்கள், மாகாண கவர்னர்கள், வணிகர்கள் எனப் பலர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி, 1911ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி டெல்லியில் வெகு தடபுடலாக நடைபெற்றது.

அதன் ஞாபகார்த்தமாக தேவகோட்டையில் ஓர் ஆர்ச் கேட் கட்டப்பட்டு தேவகோட்டை தாலுகா பிரசிடெண்ட்டாக இருந்த நாகசுந்தரம் ஐயர் என்பவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஆங்கிலத்திலும் தமிழிலும் கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் கல்வெட்டு வாசகமானது:
" ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்
மாக்ஷிமை தாங்கிய இந்தியாசக்கரவர்த்தி 5வது ஜார்ஜ் அரசர் டில்லியில் முசூட்டியருளிய ஞாபகார்த்தமாக நிற்மாணம் செய்வித்த கேட் 1911௵ டிசம்பர்௴ 12௳ யில் தேவகோட்டைத் தாலூகா போர்டு பிரிசிடெண்டு மகா-ள-ள-ஸ்ரீ நாகசுந்தரமய்யரவர்களால் திறக்கப் பெற்றது"

ஆங்கில கல்வெட்டு வாசகமானது :
" EMPEROR GEORGE GATE
INCOMMEMORATION OF THE CORONATION CELEBRATION
IN DELHI OF HIS IMPERIAL MAJESTY KING GEORGE V
OUR BELOVED EMPEROR OF INDIA ON 12th DECEMBER 1911
OPENNED BY MR. R.NAGASUNDRAMIER, PRESIDENT TALUQ BOARD OF DEVAKOTTA"

வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆர்ச் கேட் தேவகோட்டை வட்டாணம் ரோட்டில் அமைந்துள்ளது.

Kailash PL

Sunday, May 10, 2020

காந்திப் பசு

காந்திப் பசு

பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
(மகாத்மா காந்தியின் இளம் தோற்றம் )



தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் நலனுக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மேன்மையை உணர்ந்த, "இந்தியா" பத்திரிகையின் ஆசிரியர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தம் பத்திரிகை வாயிலாக காந்தியை வெகுவாகப் பாராட்டி வந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டத்துக்காக நிதி வசூல் செய்து, தாமே ஐந்து ரூபாய் போட்டு, பணத்தைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளார் பாரதி.

1909இல் காந்தி தென் ஆப்பிரிக்க இந்தியர் சார்பில் லண்டனுக்கு தூது சென்று திரும்பிய சமயம் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் காந்தியை கைது செய்தது.

இதைப் பற்றி பாரதி "இந்தியா" பத்திரிகையில் 1909இல் டிசம்பர் மாதம் ஒரு சித்திரம் மூலமாகவும் சித்திர விளக்கம் மூலமாகவும் தம் கருத்தை தெரிவித்துள்ளார்.

1909ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'இந்தியா' பத்திரிகையில் வந்த கார்ட்டூன்.


அந்த சித்திரத்தின் கீழுள்ள குறிப்பானது "ஸ்ரீ காந்தியென்ற பசுவானது தனது கன்றுக்குட்டியாகிய இதர இந்தியர்களின் நன்மையின் பொருட்டு இங்கிலாந்துக்குப் போய் பேசிவிட்டு, சிறையிலடைபடுவதற்காக மறுபடியும் திரான்ஸ்வாலுக்கு வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா உத்தியோகஸ்தர்களாகிய புலிகள் அவருடைய மேன்மையை அறியாமல் சிறையிலடைத்தார்கள்"

பத்திரிகையின் உள்ளே உள்ள சித்திர விளக்கமானது: "முற்காலத்தில் நடந்ததாக இந்துக்களின் புராணங்களில் சொல்லியிருக்கும் விஷயம் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு காட்டில் புலியின் வாயிலகப்பட்ட பசுவானது தன்னுடைய கன்றுக் குட்டிக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டபடியால் புலியைப் பார்த்து, 'ஹே பிரபு! இன்று என்னுடைய கடமையைச் செலுத்தாமல் வந்துவிட்டேன். என்னுடைய கன்றுக்குப் பால் கொடுக்கவில்லை. ஆதலால் நான் இப்போழுதே போய் பால் கொடுத்துவிட்டுவந்து உமக்கு இரையாகிவிடுகிறேன். உத்தரவளிக்க வேணும்' என்றது.

'புலி நெடுநேரம் யோசித்து அதனுடைய ஸத்தியத்தைப் பரீட்சிக்கும் பொருட்டு, 'போய் காரியமான உடனே வந்துவிடு' என்று சொல்லி அனுப்பியது.

பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு வந்து, 'என்னுடைய தர்மத்தைச் செய்துவிட்டுவர உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன், என்னைப் புசியும்' என்றது.

இதை கண்ட புலி ஆச்சரியப்பட்டு, 'அம்மா ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீசகதிக்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்' என்று சொல்லிப் பட்டினியிருந்து பிராணனைவிட்டது.

இப்பசுவை போல் நடந்துகொண்ட நமது காந்தி பிரபுவைத் தென் ஆப்பிரிக்கா புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா?

ஒன்றும் தெரியாத புலிகூட நம் இந்துஸ்தானத்தில் தாயினுடைய பிரவாகத்தைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்துப் புலியை பார்க்கிலும் கொடுமையாக,(தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்களை இக் கலிகாலத்தில்தான் காணலாம்".

இந்திய தலைவர்கள் பலர் காந்தியை அறியாதிருந்த காலத்தில்,1909இல் பாரதி இந்த சித்திரத்தையும் விளக்கத்தையும் வெளியிட்டதுதான் ஆச்சரியம்.

பிற்காலத்தில் மகாத்மா காந்தியை "வாழ்க நீ எம்மான்!... புவிக்குள்ளே முதன்மை பெற்றாய்!"(மகாத்மா காந்தி பஞ்சகம்) என்று பாடிப்புகழ்ந்தார் பாரதி.

-Kailash PL


நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...