Followers

Saturday, December 7, 2019

இந்தியாவின் முதல் காந்தி சிலை-காரைக்குடி.

ஆட்கொண்டநாதர் திருக்கோவில்.
இரணியூர்.
சிவகங்கை மாவட்டம்.

இந்தியாவிலேயே முதன்முதலில் மகாத்மா காந்தி அவர்களுக்கு சிற்பம் செதுக்கப்பட்ட இடம் காரைக்குடி அருகேயுள்ள இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி திருக்கோவில்.

நாட்டுக்கோட்டை நகரத்தாரின் ஒன்பது கோவில்களுள் ஒன்றான இரணியூர் கோவிலில் 1944ஆம் ஆண்டு பிரகார கல்தடித்தூண் திருப்பணி நடந்த போது பாரத மாதா, மகாத்மா காந்தி, இராட்டை சிற்பங்கள் கோவில் பிரகார விதானத்தில் எழுவங்கோட்டை சிற்பிகளை கொண்டு நகரத்தாரால் அமைக்கப்பெற்றது.

டெல்லியில் உள்ள ஜண்டேவாளன் மந்திர் எனும் கோவிலில் சுதந்திரப்போராட்ட காலத்தில் தேசியக் கொடியை ஏற்றுவார்கள் இது மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. பம்பாயில் விநாயகர் சதுர்த்தி தேசிய எழுச்சிக்குப் பயன்பட்டது. அது போல் இரணிக் கோவிலில் பாரத மாதா, மகாத்மா காந்தி சிற்பங்கள் தமிழக மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Saturday, November 23, 2019

தனவைசிய ஊழியன்

காரைக்குடியில் 1920ல் சொ.முருகப்பரால் "தனவைசிய ஊழியன்" எனும் வாரப்பத்திரிகை தொடங்கப்பட்டது.
சொ.முருகப்பர்

 பின்னர் 1930ல் "ஊழியன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 'தமிழ் கடல்'இராய.சொ அவர்களால் நடத்தப்பட்டு வந்தது.



 1934ல் பத்திரிகையின் துணை ஆசிரியராக சில மாதங்கள் புதுமைப்பித்தன் பணியாற்றினார்.
புதுமைப்பித்தன் 


ஊழியனில் புதுமைப்பித்தன் எழுதிய முதல் சிறுகதை "தெரு விளக்கு" என்ற தலைப்பில் 24.08.1934ல் வெளியானது. (85ஆண்டுகளுக்கு முன்பு)



"தெரு விளக்கு" 


தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.

தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது.

இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே, தெரு விளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்.

நிற்கும் கல் - உடம்பு சிறிது சாய்ந்துவிட்டது. சிரத்தில் இருந்த கண்ணாடிச் சில் ஒரு பக்கம் உடைந்துவிட்டது. அந்தச் சிறுவன் விளையாட்டாகக் கல்லை எறிந்தபொழுது விளக்கின் கஷ்டத்தை நினைத்தானா?

காற்று அடித்தால் உயிரை ஒரேயடியாகவாவது போக்கிவிடுகிறதா? குற்றுயிராய்த் துடிக்க வைத்து அதைக் கொல்லுகிறதே!

கொஞ்சமாவது மங்கிய வெளிச்சத்தைக் கொடுக்கிறதென்று இந்தக் காற்றிற்கு நன்றி இருக்கிறதா?

போய்விட்டது! பிறகு மழையில் அதன் குளிரை யார் கவனிக்கிறார்கள்?

அது காற்றிற்குத் தெரியுமா?

இனிமேல் விளக்கு அந்தப் பக்கத்திற்கு வேண்டாமாம்! அதை எடுத்துவிட வேண்டுமாம்!

அதற்கு ஒரு தோழன் - ஒரு கிழவன்.

ஒத்த வயதில்தானே நட்பு ஏற்படும். இதில் என்ன அதிசியம்!

விளக்கிற்குக் கிழவன்.

கிழவனுக்கு விளக்கு.

விளக்கை எடுத்துவிடப் போகிறார்கள் என்று கிழவனுக்குத் தெரியாது.

அவனுக்கு எப்படித் தெரியும்.

அவன் வயிற்றுக்குப் பிச்சை எடுக்க வேண்டாமா?

வயிற்றுக்கில்லாமல் உயிர் வாழ முடியுமா?

தெருவிளக்கு அவன் தோழன்தான். அதன் வெளிச்சம் அவனுக்கு எவ்வளவு மன நிம்மதியை அளித்தது.

அன்று சாயங்காலம் வந்தான்.

வெறும் குழி ஒன்றுதான் இருந்தது.

இருள்! இருள்!!

பற்றுக்கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை!

அன்று அவனுக்கு உலகம் சூனியமாய், பாழ்வெளியாய், அர்த்த மற்றதாய் இருந்தது.

உடைந்த தெரு விளக்குத்தான்! அனால், கொஞ்சமாவது அவனைத் தேற்றிவந்ததே!

மறுநாள் காலை கிழவனின் சவம் அங்கு கிடந்ததைக் கண்டார்கள்.

இப்பொழுது ஒரு புது விளக்கு!

மின்சார விளக்கு!

அதன் கிழே குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்குப் பழைய விளக்கையும் பழைய கிழவனையும் பற்றிக் கவலை என்ன?

ஒரு காலத்தில் இவர்களும் அப்படித்தான் ஆவார்கள்!

அதற்கென்ன?

எங்கும், எப்பொழுதும் அப்படித்தான்.

பழையன கழியும், புதியன வரும்.

இது உலக இயற்கையாம்!

- புதுமைப்பித்தன்
(24.08.1934-ஊழியன்- காரைக்குடி)

Kailash PL

Tuesday, November 12, 2019

காரைக்குடியில் பாரதி


பிங்கள ஆண்டு ஆவணித்திங்கள் இருபத்தாறாம் நாளன்று (10.09.1917) செட்டிநாட்டின் சீர்திருத்தத் தந்தை எனப் பாராட்டப் பெறும் சொ.முருகப்பா முன் நிற்க, அவருக்குத் துணையாக 'தமிழ் கடல்'ராய.சொக்கலிங்கனார், கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் மற்றும் பலரது துணையுடன் காரைக்குடி திருவாசக மடத்தில் இந்துமதாபிமான சங்கமானது தொடங்கப்பட்டது.

திருவாசக மடம் காரைக்குடி 


திருவாசக மடம் காரைக்குடி 

 நாடு,சமயம்,மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை இளைஞர்களிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.

'கம்பநாடர்'இதழின் ஆசிரியரான மோ.வே.கோவிந்தராச ஐயங்காரை கொண்டு இளைஞர்களுக்கு திருக்குறள் மற்றும் கம்பராமாயண வகுப்புகளை இச்சங்கத்தினர் நடத்தினர்.

தமிழ்ப்பெரும்புலவர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் மறைந்தபோது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் அப்படியே விலை கொடுத்து வாங்கி 1918ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் 'விவேகானந்தா நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது, அந்நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்துக்குக்கு உ.வே.சா., வ.உ.சி., திரு.வி.க., வ.வே.சு.ஐயர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி ரா.பி.சேதுப்பிள்ளை, எனப்பலர் வந்திருக்கின்றனர். இந்தச் சங்கத்திற்கு வாராத தமிழறிஞரே இல்லை எனலாம்.

இத்தகு பெருமைக்குரிய இந்துமதாபிமான சங்கத்திற்கு 1919ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் நாள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வருகைபுரிந்தார்.

கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்கள் கடையத்திலுள்ள பாரதியாருடன் கடித தொடர்பு கொண்டு கானாடுகாத்தானுக்கு அழைக்கிறார் இதனை ஏற்று பாரதி கானாடுகாத்தான் வருகிறார் வரும் வழியில் காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் கலந்துகொண்டு இச்சங்கத்தினை வாழ்த்தி சில பாடல்கள் பாடியுள்ளார். அதுபோல், பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்குக் கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு படங்கள் இங்கு எடுக்கப்பெற்றவையாகும்.


பின் கானாடுகாத்தானில் வை.சு.சண்முகம் செட்டியார் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். 'இன்பமாளிகை' என்று பெயரிடப்பட்ட அந்த வீட்டில் பின்னாளில் மகாத்மா காந்தி கானாடுகாத்தான் வந்திருந்த போது தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியை மனைவி செல்லம்மாள் மற்றும் குழந்தைகளுடன் இன்பமாளிகையிலேயே தங்கிக்கொள்ளுமாரு வேண்டினார் வை.சு.சண்முகம் செட்டியார். இதை பெரும் விருப்பத்துடன் பாரதி ஏற்றுக்கொள்ள, செல்லம்மாள் மற்றும் குழந்தைகளை அழைத்து வர கடையதிற்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் செல்லம்மாள் வரவில்லை. ஒருவேளை செல்லம்மாள் கானாடுகாத்தான் வந்திருந்தால் வரலாற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

செல்லம்மாள் வராததால் கடையம் திரும்பினார் பாரதி.
கானாடுகாத்தானில் இருந்த போது "செட்டி மக்கள் குலவிளக்கு" என்ற தலைப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தாரை புகழ்ந்து சில பாடல்கள் பாடியுள்ளார்.

பின்னர் பாரதி 1920ல் ஒரு முறை காரைக்குடிக்கும் கானாடுகாத்தானுக்கும் வந்துசென்றுள்ளார்.




இந்து மதாபிமான சங்கம் 1952லிருந்து காரைக்குடி சிவன் கோவில் அருகில் சொந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

Kailash PL

Saturday, November 9, 2019

பெருமை மிகு காரைக்குடி



ன்றிலிருந்து சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் அதாவது 1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காரைக்குடிக்கு வருகை புரிந்திருந்தார்.

இன்று(09.11.2019) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காரைக்குடிக்கு வந்ததின் நூற்றாண்டு நிறைவு நாள்.

 பாரதியார் தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்கு கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு புகைப்படங்கள் காரைக்குடியில் எடுக்கப்பட்டது.



அதில் ஒன்று காரைக்குடி இந்துமதாபிமான சங்க குழுவினர்கள் அ.மு.க.மு.க.ரெங்கநாதன் செட்டியார், இராய.சொக்கலிங்கம், சொ.முருகப்பர், கி.நாராயணன் செட்டியார், மு.நடராஜன் உடன்
சுப்பிரமணிய பாரதியார் இருக்கும் புகைப்படம். பின்னாளில் ஒரு பத்திரிகை பேட்டியில் இராய.சொ கூறுகையில் "பாரதியைப் படம் பிடிக்க விரும்பினோம். எதற்கும் அவரை இணக்குவது முடியாத காரியம். அவருக்கே மனம் வந்ததால்தான் படம் பிடிக்க ஒப்புக் கொண்டார். வேண்டிய எல்லாம் தயார் செய்யப்பெற்றன. பாரதியாரை உட்காரவைத்தோம். ஒரு தடிக் கம்பைத் தூக்கிக் கையிலே தலைக்குமேலே கம்பு தோன்றும்படி நிறுத்திக்கொண்டார். அம்மாதிரிப் படம் பிடிக்கப் படம்பிடிப்பவருக்குச் சம்மதமில்லை. அவர் எவ்வளவோ சொல்லியும் பாரதி கேட்கவில்லை பிறகு அப்படியே எடுக்கச் செய்தோம்''.



மற்றொன்று பாரதியாரின் மிக புகழ் பெற்ற புகைப்படமான கருப்பு கோட் அணிந்து தலைப்பாகையுடன் கையில் கோல் கொண்டு நாற்காலியில் வீற்றிருக்கும் அவரின் அழகிய புகைப்படம். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்து பலநூறு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது பல சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

-Kailash PL

Tuesday, November 5, 2019

காந்தி நாவன்னா


"தேவகோட்டை காந்தி நாவன்னா" என்று அழைக்கப்பட்ட SV.L.RM.நாராயணன் செட்டியார் ஒரு பழுத்த காந்தியவாதி.

மூன்றாவது முறையாக மகாத்மா காந்தி அவர்கள் 1934ல் தேவகோட்டை வந்தபோது தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் சுதந்திர போராட்ட நிதிக்காக காந்திஜியிடம்  நாவன்னா ரொக்கமாக 2600 உரூபாய் வழங்கினார். தேவகோட்டை கார்ப்பரேஷன் ரோட்டில்(EB ROAD) உள்ள தன் தோட்டத்திற்கு காந்திஜியை அழைத்து சென்றார்.
அங்கே நாவன்னாவின் மகளுக்கு சாவித்திரி என்று பெயர் சூட்டி புகைப்படத்தின் பின் சாவித்திரி என்று தன் கையால் தமிழில் எழுதி கொடுத்தார் காந்தி. பெயர் சூட்டியதற்காக நாவன்னாவின் மனைவி சிவகாமி ஆச்சி வெள்ளி தட்டையும் ஒரு பவுனையும் அளித்து மரியாதை தெரிவித்தார். 

காந்தி நாவன்னா வீடு
தேவகோட்டை 
           


மகாத்மாகாந்தி அவர்கள் 1937ல் மத்திய பிரதேசத்திலிருந்து தேவகோட்டையிலுள்ள காந்தி நாவன்னாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் தமிழில் காந்தி என கையொப்பமிட்டுள்ளார். (தற்போது இந்த கடிதம் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ளது)

காந்தி நாவன்னா தன் விரல்களாலே எலுமிச்சை பலத்தை வெட்டி எல்லோரையும் ஆச்சரிய பட வைப்பாராம்.
சட்டை அணியாமல் வெண்தாடியுடன் இருப்பவர் காந்தி நாவன்னா.

ஆட்டு பால் மற்றும் கடலை மட்டுமே சாப்பிட்டு சட்டை அணியாமல் சாகும்வரை காந்தியவாதியாக வாழ்ந்தவர் நாவன்னா என்பது குறிப்பிடத்தக்கது. 1978 பிப்ரவரி 27ல் மறைந்தார்.


Kailash PL

தேவகோட்டையில் காந்தி

தேவகோட்டையில் காந்தி 

தேவகோட்டை நகர சிவன் கோவில் புகைப்படம்.

1927ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மாலை தேவகோட்டை நகர சிவன் கோவிலுக்கு மகாத்மா காந்திஜி அவரது மனைவி கஸ்தூரிபாயுடன் வருகைதந்திருந்தார். சிவன் 
கோவில் எதிரே உள்ள ஊரணி கரையில்(தற்போது கந்தசஷ்டி விழா நடக்கும் இடம்) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். உடன் காந்தி மெய்யப்பச்செட்டியார் இருந்தார், காந்தியவாதியான இவர் செட்டிநாட்டில் காந்திஜி சென்ற ஊர்களுக்கு காந்திஜியுடனேயே பயணம் செய்தவர்.

பொதுகூட்டத்தில் தேவகோட்டை இளைய ஜமீன்தாரான அள.அரு.இராம.வெ.சோமநாதன் செட்டியார் நகரத்தார் சார்பாக காந்திஜியிடம் ஒரு பணமுடிப்பை அளித்தார். சுவர்ண மூர்த்தி பெண்கள் பள்ளி மாணவிகளின் சார்பாக ஒரு பணமுடிப்பு அளிக்கப்பட்டது. வேந்தன்பட்டி சொக்கலிங்கம் செட்டியார் பஞ்சை எவ்வாறு உயர் ரக நூலாக நூற்க முடியும் என்பதை காட்டும் வகையில் ஒரு பொருட்காட்சி அமைத்திருந்தார் மேலும் அவர் உற்பத்தி செய்திருந்த மெல்லிய அழகான நூலைக்கொண்டு நெய்யப்பெற்ற கதர் துணியை காந்திஜியிடம் வழங்கினார். 

மேடையில் பேசிய காந்திஜி வங்காளத்தில் உள்ள சட்டர்ஜி ஒருவர் தான் கிட்டத்தட்ட இதைபோன்ற மெல்லிய துணியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யக்கூடியவர் என்று பாராட்டி பேசினார் பின்பு இந்த துணியை 1000 ரூபாய்க்கு மேல் கேட்டால் ஏலத்தில் விற்க போவதாகவும் இல்லையேல் இதை அகில பாரத சர்க்கா சங்கத்தின் பொருட்காட்சியில் வைக்கப்போவதாக கூறினார். துணியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.(இதே துணியை அடுத்த நாள் காரைக்குடி கூட்டத்தில் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்) 
இறுதியாக சீனிவாச ஐயங்கார் தானே நூற்று நெய்த ஒரு துண்டை காந்திஜியிடம் வழங்கினார். 

பொதுக்கூட்டம் முடிந்ததும் காந்திஜி அவரது மனைவியுடன் காரைக்குடி திரும்பினார். 1927ல் செட்டிநாட்டில் காந்திஜி இருந்த நான்கு நாட்களிலும் பயணம் செய்துவிட்டு இரவு காரைக்குடியில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.

மகாத்மா காந்திஜி மூன்று முறை தேவகோட்டை வந்துள்ளார்.

முதல் முறையாக 1921ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் வந்திருந்தார்.
இரண்டாவது முறை தன் மனைவியுடன் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்திருந்தார்.
மூன்றாவது முறை 1934ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வந்திருந்தார்.

-Kailash PL

Wednesday, October 23, 2019

அழகப்பா கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட கதை



காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் பிறந்த
'தமிழ்கடல்' இராய.சொ என்கின்ற இராய.சொக்கலிங்கம் செட்டியார் 1939ஆம் ஆண்டு காரைக்குடி நகரவையின் தலைவராகப் பொறுப்பு வகித்தபோது "காந்தி மாளிகை" என்னும் பெயரில் நகரவைக் கட்டிடம் ஒன்றை கட்டினார் திறப்பு விழாவுக்கு வருகை தந்த அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சி முதல்வர் இராஜாஜி "இது ஒரு நகராட்சிக்கு மிகவும் நல்லது, ஒரு நாள் இந்த கட்டிடம் ஒரு கல்லூரியாகவோ மருத்துவமனையாகவோ மாறும் என்று நம்புகிறேன்" என்றார்.




இராஜாஜியின் வாக்கு உண்மையானது வள்ளல் இராம.அழகப்ப செட்டியார் அவர்களால் ஆகஸ்ட் 11 1947ஆம் ஆண்டு காந்தி மாளிகை கட்டிடத்தில் மாத வாடகை 2400ரூபாய்க்கு "அழகப்பா கலை கல்லூரி" தொடங்கப்பட்டது பின்பு
1948ல் கல்லூரி புது கட்டிடத்து மாற்றப்பட்டது.


தற்போது காந்தி மாளிகை கட்டிடம் அரசு மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது.

-Kailash PL

Source : Alagappa A Beautiful Mind
BOOK by Dr.Ramanathan Vairavan.

சுதந்திரத்தின் நிறம்


கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் வாழ்கை வரலாறு.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாரா கோப்பா என்ற பெண்மணி தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதியரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுவதற்காக தமிழகம் வந்து அவர்களுடன் தங்கியிருந்து இத்தாலிய மொழியில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். பின்னர் அந்த புத்தகத்தை அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஹச்.ஆல்பர்ட் "தி கலர் ஆஃப் ஃப்ரீடம்"(The colour of freedom)என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை (18.10.2019)அன்று "தன்னறம் நூல்வெளி" இந்த புத்தகத்தை தமிழில் "சுதந்திரத்தின் நிறம்" என்ற பெயரில் வெளியிட்டனர். B.R.மகாதேவன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

துரை மாவட்டம் அய்யன்கோட்டையில் ஒரு ஹரிஜன குடும்பத்தில் பன்னிரண்டு குழந்தைகளுள் ஒருவராக 1926ல் பிறந்தார் கிருஷ்ணம்மாள். அப்பா குடிகாரர் அம்மா கூலிதொழிலாளி. தினசரி குடித்துவிட்டு தன் அம்மாவை அப்பா அடிப்பதை பார்த்த கிருஷ்ணம்மாள் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று தீர்மானம் எடுக்கிறார். பள்ளி படிப்பை முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று தமிழ் நாட்டின் முதல் ஹரிஜன பட்டதாரியாகிறார். பின்பு T.V.சுந்தரம் ஐயங்காரின் மூத்த மகள் டாக்டர்.சௌவுந்தரம்மாள் கைவிடப்பட்ட விதவைப் பெண்களுக்காக நடத்திய ஆசிரமத்தில் ஆசிரியராக சேர்ந்து பணிபுரிகிறார். இந்த கால கட்டத்தில் காந்தி மீது பற்றுக் கொண்டு காந்தியை சந்திக்க ஆசை படுகிறார் "மகாத்மா காந்தி தமிழகம் வருகிறார் அவருடம் மருத்துவ உதவிக்காக ஒரு டாக்டர் இருக்கிறார் டாக்டருக்கு உதவியாளராக ஒரு பெண் தேவை நீ செல்கிறாயா" என்றார் சௌந்தரம்மாள்.உடனே கிருஷ்ணம்மாள் காந்தியின் டாக்டரின் உதவியாளராக சேர்ந்தார். அப்போது காந்தியவாதியான ஜெகந்நாதனை சந்திக்கிறார்.

ஜெகந்நாதன் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள செங்கற்பட்டையில் செழிப்பான குடும்பத்தில் சங்கரலிங்கம் பிள்ளை என்பவருக்கு மகனாக 1914ல் பிறந்தார். மதுரையில் கல்லூரில் படிக்கும் பொழுது காந்தியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது காந்தியை சந்தித்த பின் காந்தியவாதியாகிறார் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு "தீன சர்வ சேவா" சங்கத்தில் சேர்ந்து தன் குடும்பத்தை விட்டு சன்னியாசியாக இந்தியா முழுவதும் பயணம் செய்து மக்களுக்காக தொண்டாற்றுகிறார். சுதந்திரத்திற்காக காந்தியுடன் சேர்ந்து அகிம்சை போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்கிறார். ஒரு நாள் கிருஷ்ணம்மாளை டாக்டர் சௌவுந்தரம்மாள் ஆசிரமத்தில் சந்திக்கிறார் ஆனால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பின்பே திருமணம் என்று தீர்க்கமான முடிவெடுக்கிறார். இவர் பெங்களூர் சிறையில் இருக்கையில் நாட்டுக்கு சுதந்திரம் கிடைகிறது.

1950ல் காந்தியவாதிகளான ஜெகந்நாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் எந்த ஆடம்பரமும் இல்லாமல் திருமணம் செய்துகொண்டு தம்பதியரானர்.

1951ல் வினோபா பாவே பூதான(பூமி தானம்) இயக்கத்தை தொங்குகிறார்.
பூதான இயக்கம் என்றால் பெரு நிலமுடையவர்கள் தானாக முன் வந்து நிலமில்லாதோர்களுக்கு வழங்கவேண்டும். இதை அகிம்சை முறையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வழிநடத்தியவர் வினோபா பாவே அவருடன் கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் இந்தியா முழுவதும் கால்நடையாக பயணம் செய்தனர். பூதான இயக்கம் நிலமில்லாதோர்க்கு பதிமூன்று ஆண்டுகளில் 40,00,000 ஏக்கர் நிலத்தை பிரித்து வழங்கியது. தமிழகத்தில் கிருஷ்ணம்மாள் மட்டும் சுமார் 13500 ஏக்கர் நிலத்தை பெரு நிலமுடையவர்களிடம் பெற்று அதை பிரித்து நிலமில்லாதோர்க்கு வழங்கினார்.

டிசம்பர் 25 1968ல் கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்ட 18 குடும்பங்களை சேர்ந்த 44 பேர் ஒரு குடிசையில் சிலரால் தீயிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்து. அடுத்த நாள் இதை நாளிதழ்களில் அறிந்த கொண்ட கிருஷ்ணம்மாள் தன் கணவர் ஜெகந்நாதன் மற்றும் குன்றக்குடி அடிகளாருடன் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். 1974ல் கீழ்வெண்மணியை சேர்ந்த 74 குடும்பங்களுக்கு தலா 1ஏக்கர் என 74ஏக்கர் நிலங்களை பெற்று 74 குடும்பங்களுக்கும் பிரித்து வழங்கினார் மற்றும் நல்ல வீடு, தண்ணீர் ,மின்சார வசதிகள் செய்து கொடுத்துள்ளார். உழுபவருக்கு நிலம் (Land for the Tillers' Freedom -LAFTI) திட்டத்தை 1981ல் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தொடங்கினர்.

கிருஷ்ணம்மாளுக்கு இந்திய அரசு 1989ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது.

2008ல் நோபல் பரிசுக்கு இணையான Right Livelihood Award கிருஷ்ணம்மாளுக்கு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் தங்கி இருந்த ஜெகந்நாதன் பிப்ரவரி12 2013ல் காலமானார்.

தம் கணவர் மறைந்த பின்னரும் 94 வயதில் சேவையே வாழ்க்கை என்று உழைத்து வருகிறார் கிருஷ்ணம்மாள். 2014ல் அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

-Kailash PL
21/10/2019

சுதந்திரத்தின் நிறம் புத்தகம் வாங்க
தன்னறம் நூல்வெளி
அழைபேசி:9843870059




Tuesday, October 1, 2019

பிரதாப முதலியார் சரித்திரம்



"பிரதாப முதலியார் சரித்திரம்"


 மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களால் 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான புதினம்.தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக கருதப்படுகிறது. அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாக கொண்டிருந்த தமிழிற்கு வேதநாயகம் பிள்ளை புதினத்தை அறிமுகப்படுத்தினார்.

பிரதாப முதலியார் என்கிற கற்பனை கதாபாத்திரத்தை கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. பிரதாப முதலியார் ஞானாம்பாளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதே கதை சுருக்கம்.

இந்த புதினம் மூன்றாம் பார்வையில் எழுதப்படாமல், பிரதாப முதலியாரின் கூற்றிலேயே சொல்லப்படுகிறது.

கதை ஆரம்பித்து முதல் பத்து அத்தியாயங்களும் கல்வியின் முக்கியத்தையும் பெண்கள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தையும் சொல்கிறது. (கதை நடப்பது 1800கள் ஆரம்பம்)

கதையில் சில இடங்களில் கம்பராமாயண செய்யுளை காட்டி கதையை விளக்குகிறார். "விதவை" என்பதை "கைம்பெண்" என எழுதியுள்ளார். கதை எழுதப்பட்ட காலத்தில் நடந்த அமெரிக்க அடிமை வாழ்க்கையை பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

கதையின் நடுவில் பல குறுங்கதைகள் வருகின்றன அதில் ஒரு கதையில் அனந்தன் என்பவன் தமிழை கற்காமல் தவிர்த்து ஆங்கிலம் மட்டும் கற்று பின் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறான். தமிழின் முக்கியத்துவம் பற்றி அப்போதே இந்த கதையில் சொல்லுகிறார் மற்றும் பல நகைச்சுவை கதைகள் நடு நடுவே வருகிறது.

பாலியல் திருமணம் வேண்டா, திருமணத்தில் இருவர் சம்மதம், ஐரோப்பா, புருசியா, ரோமாபுரி, ஆஸ்திரியா போன்ற நாடுகளின் கதை. அக்காலத்தில் அரசு உத்தியோகத்தினர் செய்யும் ஊழல்கள், யாருக்கும் புரியா ஆங்கிலத்தில் வாதாடும் வக்கீல்கள் என பலதரப்பட்ட விஷயங்களை கதை பேசுகிறது.

 “இக்காலத்தில்(1800கள்) கலி முத்திப் போச்சு” என்று சலித்துக்கொள்ளும் வசனங்களும்  வருகிறது.

இந்த கதையை ஏன் வாசிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும் அது என்னவென்றால் " பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம்"

FIRST NOVEL IN TAMIL LANGUAGE.

Kailash PL

Sunday, August 25, 2019

சென்னை தினம் கொண்டாட இவர் தான் காரணம்.!

Madras Day 


S Muthiah 

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள்.
இந்நாள் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முழு காரணகர்த்தாவாக இருந்தவர் மறைந்த வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா.

எஸ்.முத்தையா

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் 1930 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை என்.எம்.சுப்பையா செட்டியார் சிலோன் இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் இலங்கையில் கொழும்பு மாநகர மேயராக இருந்தார். முத்தையா தனது பள்ளி கல்வியை இந்தியாவிலும் பின் கொழும்புவிலும் முடித்தார். ஐக்கிய அமெரிக்காவில் தந்தையின் விருப்பத்தின் பேரில் கட்டடப் பொறியியலும், தன் விருப்பத்திற்காக அரசியல் அறிவியலிலும்(political science) முதுகலை பட்டம் பெற்றார்.1951 இல் இலங்கை திரும்பிய பின் டைம்ஸ் ஒஃப் சிலோன் (Times of Ceylon) பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணி புரிந்து இறுதியில் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். இலங்கையில்1968 ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டம் இறுக்கமான போது தனது பதவியைத் துறந்து இந்தியா திரும்பினார்.

முத்தையா மெட்ராஸ் நகரில் குடியேறியபின்பு 1981ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரின் சுற்றுலா வழிகாட்டிகளைத் தயாரிக்க அவர் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மெட்ராஸ் டிஸ்கவர்ட் (Madras Discovered)என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார்.
இலங்கை, சென்னை, செட்டிநாடு கட்டடக் கலை வரலாறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களை தன் வாழ்நாளில் எழுதி சாதனைபடைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தன் 89வயதில் காலமானார்.

Kailash PL




Sunday, August 11, 2019

உப்பு - சீனப் புராண கதை.




உப்பு எப்படி வந்தது என்பதுக்கு சீனாவில் ஒரு புராண கதை இருக்கிறது.


வானத்திலிருந்து விசித்திரமான பறவை ஒன்று பூமிக்கு தரையிறங்கி வந்து மண்ணை கொத்தி கொண்டிருந்தது. அந்த பக்கம் சென்ற மீனவன் ஒருவன் அந்த விசித்திரமான பறவையை பிடிக்க முயலுகிறான் ஆனால் பறவை பறந்து சென்று விடுகிறது. பறவை கொத்திய இடத்தில் சாம்பல் நிறத்தில் சிறு சிறு கட்டிகளாக ஏதோ கிடந்தன. அதை புதையல் என்று நினைத்து எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு சென்றான். மீனவன் மனைவி இதை புதையல் என்று நம்ப மறுக்கிறாள்.

அடுத்த நாள் காலை மீனவன் புதையலை அரசரிடம் கொடுத்து தக்க சன்மானம் பெறப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு அரண்மனை நோக்கி செல்கிறான்.
அரண்மனை தர்பாரில் இருந்த அரசர் அந்த சாம்பல் நிற மண்கட்டி போன்ற பொருளை பார்த்து "இதை எதற்காக கொண்டு வந்தாய்?" என்று கேட்க, "இது ஒரு புதையல்! அரசே"என்றான் மீனவன். அரசருக்கு பயங்கரமாக கோபம் வர "இந்த மண்கட்டியை தூக்கி எறிந்துவிட்டு, இவனை சிறையில் அடையுங்கள்" என்றார். மீனவனை சிறையில் அடைத்துவிட்டு அந்த மண்கட்டியை ஒரு வீரன் தூக்கி எறிந்தான் அதில் கொஞ்சம் தவறி சமைத்துக்கொண்டு இருந்த உணவில் விழுந்துவிடுகிறது. அந்த உணவை உண்ட அரசர் "இப்படி ஒரு ருசியான உணவை நான் ஒரு போதும் சாப்பிட்டதில்லை" என்று புகழ்ந்து தள்ள. சமையல்காரன் நடந்த உண்மையை சொல்கிறான். உடனே அரசர் அந்த மீனவனை விடுவித்து "எந்த இடத்தில் இந்த மண்கட்டி கிடைத்தது?" என்று கேட்டு, வீரர்களை அனுப்பி சேகரித்து வர செய்கிறார். அப்படி ஒரு விசித்திரமான பறவை காட்டிக்கொடுத்த பொருள் தான் உப்பு! என்று முடிகிறது சீனக் கதை.

-kailash PL 



Tuesday, August 6, 2019

இலவசம் என்பதை ஏன் ஓசி என்கிறோம்?

ஓசி = இலவசம்

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த போது தபால் துறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது இருப்பதை போலவே அப்போதும் தபால் உறையில் தபால் தலை ஒட்டும் வழக்கம் இருந்தது. தபால் தலைக்கு கட்டணம் உண்டு.

ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனி தொடர்பான தபால்களை இலவசமாக அனுப்ப தபாலின் உறையில் OCS(On Company Service) என்று சுருக்கமாக எழுதி அனுப்புவார்கள்.

OCS என்பது நாளடைவில் நம் வாழ்க்கையில் இரட்டுற கலந்து OC ஆக மருவி போனது. பின் இலவசம் என்பதற்கு ஓசி என்ற பெயரும் நிலைத்துப் போனது. இன்று காரணம் தெரியாமலே பெரும்பாலான மக்கள் இலவசம் என்பதற்கு ஓசி என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர்.



Wednesday, July 17, 2019

காசியில் பாரதி வாழ்ந்த வீடு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காசியில் வாழ்ந்த வீடு.


"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே! இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே!"என்றார் பாரதி. 

இதன் மூலம் அவர் கங்கையையும் காசியையும் எந்த அளவு நேசித்துள்ளார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


காசியில் மொத்தம் 64 காட்கள்(ghat) உள்ளன. காட் என்றால் படித்துறை.
அதில் "ஹனுமன் காட்"ல் அதிகளவு  பிராமணர்கள் வசிக்கிறார்கள். ஒருகாலத்தில் இங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் பிராமண குடும்பங்கள் இருந்துள்ளனர் தற்போது குறைந்து விட்டனர். இவர்களெல்லாம்  ஐந்து தலை முறைக்கு முன்னர் தமிழகத்திலிருந்து காசிக்கு வந்து குடியேறியவர்கள்.

"ஹனுமன் காட்"ல் உள்ள காஞ்சி மடத்திற்கு நேர் எதிராக "சிவ மடம்" என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழமையான வீடு ஒன்று உள்ளது இந்த வீட்டில் தான் பாரதி தனது 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903)வாழ்ந்தார்.

1898ம் ஆண்டு பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் அங்கு போய்விட்டார்.





காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். பாரதியின் சமஸ்கிருத உச்சரிப்புத் தெளிவையும் அதன் தன்மையையும் காசிப் பண்டிதர்கள் கண்டு  வியந்தார்கள்.
கொஞ்ச காலம், பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். இந்த சமயத்தில் தான் பாரதி மீசை வளர்த்து கோட்,தலைப்பாகை அணிந்து தன்னையே மாற்றிக்கொண்டார்.

இப்போதும் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம்.

 தற்போது இந்த வீட்டில் உள்ளவர் பாரதியின் அத்தை பேரன்  KV.கிருஷ்ணன் 93 வயதுடைய இவர் காசி தமிழ் சங்க பிரசிடென்டாக உள்ளார் மற்றும் இங்குள்ள புகழ்பெற்ற வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழிலும் இந்தியிலும் இசையிலும் புலமை.

பாரதி இங்கு இருந்த போது இவர் பிறக்கவேயில்லை,பிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். பின்பு காசி மக்கள் மற்றும் அரசாங்க உதவியுடன் பாரதிக்கு இதே "ஹனுமன் காட்"ல் உள்ள தன் சொந்த நிலத்தில் சிலை அமைக்கவும் செய்தார்.

பின்னர் பாரதியார் சிலையை பராமரிக்கும் பொறுப்பை "ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்"தாரிடம் ஒப்படைத்துள்ளார்.

-Kailash  PL

Tuesday, July 16, 2019

புகார் நகரத்துப் பெருவணிகன்.


'குமரிக்கண்டமா சுமேரியமா?’ என்னும் புகழ்பெற்ற நூலை எழுதிய பா.பிரபாகரனின் "புகார் நகரத்துப் பெருவணிகன்"நாவல் ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதையை விவரிக்கிறது.
இதில் மன்னர்கள் வருகிறார்கள் என்றாலும் கதை அவர்களைப் பற்றியது அல்ல மக்களே இதில் பிரதானம் குறிப்பாக இது ஆயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தன வணிகர்களின் கதை.

சோழ நாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் எனும் புகார் நகரை மையமாக கொண்டு கதை நகர்கிறது.

இது ஒரு கற்பனை கதை என்றபோதும் தகவல் களஞ்சியமாக திகழ்கிறது.

இதோ அதில் சில தகவல்கள்.

⚫அந்த காலத்திலேயே சோழ நாட்டில் சுங்க சாவடிகள்(Toll gate) இருந்துள்ளன.வணிகர்கள் ஏற்றி செல்லும் பொருட்களுக்கு தகுந்தாற்போல் வரி கட்ட வேண்டும். ரசீது ஓலை சுவடிகளில் வழங்கப்பட்டும்.

⚫சோழ நாட்டில்
•செப்பு காசு
•காணம்(வெள்ளியால் செய்ய பட்டது)
•கழஞ்சு(தங்கத்தால் செய்ய பட்டது)
என மூன்று விதமான நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.

⚫அன்று இருந்த மது வகைகள்.
•கள்
•காடி
இவைகள் ஏழை எளிய மக்களுக்கு.

•வடிகள்
•தேறல்
இவைகள் உயர் குடியியினருக்கு.

⚫சோழ நாட்டில் வழங்கப்படும் பட்டங்கள்

•எட்டி
•காவிதி
என்பவை வணிகர்களுக்கு.

•கிழார்
•கிழான்
என்பவை புலவர்களுக்கு.

•ஏனாதி
•மாராயன்
என்பவை வீரர்களுக்கு.

•குவளை
•தாமரை
என்பவை கலைஞர்களுக்கு.

•தலைக்கோல் பட்டம்
அனைத்திலும் சிறந்த நபருக்கு வழங்கபடும்.

⚫வெளிநாடுகளில் வணிகம் செய்பவன் நாய்கன் என்றும் அதே பெரும் வணிகம் செய்பவன் மாநாய்கன் என்று அழைப்பது வழக்கம்.
உள்நாட்டில் வணிகம் செய்பவன் சாந்தன் என அழைக்கப்படுவான் .
பொதுவில் செட்டியார் எனப்படுவார்கள் இது எட்டி எனும் பட்டத்தில் இருந்து செட்டி என மருவியதாகும்.
50க்கும் மேற்பட்ட கலங்கள்(கப்பல்கள்) உடையவன் நாய்கன். அதே 100க்கும் மேற்பட்ட கலங்கள் உடையவன் மாநாய்கன்.

⚫தெப்பம் பரிசல் புனை ஓடம் படகு நாவாய் பஃறி என 23 வகை கலங்கள் உள்ளன
•பஃறி என்பது ஒரு பாய் மரமுள்ள கலம் இதில் கரையோரம் மட்டுமே பயணம் செய்யலாம்.
•நாவாய் என்பது நான்கும் அதற்கு மேற்பட்ட பாய் மரமுள்ள கலம் இதில் நடுக்கடலில் பயணம் மேற்கொள்ளலாம்.

மற்றும் கப்பல்கள் எப்படி கட்டப்படுகின்றன? எப்படி மீன்களை பார்த்து திசைகளை கண்டனர்? எப்படி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்? எந்த எந்த நாட்டினரிடையே தமிழர் வணிகம் செய்தனர்? கடாரம் எப்படி இருக்கும்? சீனம் எப்படி இருக்கும்? என பல அறிய தகவல்களை நமக்களிக்கிறது இந்த புத்தகம்.

- Kailash PL

என் இனிய இயந்திரா


சுஜாதா வின் ஆக சிறந்த  படைப்புகளில் ஒன்று.

1985ல் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதை இது.

இயக்குனர் ஷங்கர் எந்நிரன் படம் எடுக்க அடிப்படையாக இருந்த கதை.

கதை சுருக்கம் :

கி.பி 2022 இல் இந்தியா ஜீவா எனும் சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் உள்ளது. தேசத்தில் எங்கும்  லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. பிள்ளை பெற்றுக் கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கையும் கிடையாது . அனைவருக்கும் ஒரு நம்பர் ஒதுக்கபட்டுயிருக்கும் வெளியில் பெயருக்கு பதிலாக நம்பரை பயன் படுத்தவேண்டும்.

இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான்.  ஜீவாவிடமிருந்து இந்த நாட்டை மீட்க புறப்படும் ரவி, மனோ எனும் இரு புரட்சிக்காரர்களுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் இணைந்து கொள்ளும் நிலா நிலாவுக்கு நண்பனாக மாறும் ரவியின் இயந்திர நாய் இவர்களை சுற்றியே கதை நகர்கிறது.

இந்தக் கதையில் முக்கியமான பாத்திரமான ஜீனோ எனும் இயந்திர நாய் மெல்ல மெல்ல தன் அறிவை விருத்தி செய்வதுடன் மனிதர்களைப் போல சிந்திக்கவும் தொடங்குகின்றது. ஆரம்பத்தில் பயம், இரக்கம், பாசம் போன்ற உணர்வுகளை அறியாதிருந்த நாய் மெல்ல மெல்ல அனைத்து மனித இயல்புகளையும் பெறத் தொடங்குகின்றது.

பின்பு சிபியை நிலா கண்டு பிடித்தாலா ஜீவா என்ன ஆனார்
புரட்சி என்ன ஆனது என்று  ஏகப்பட்ட திருப்பங்களுடன் சென்று கதை நிறைவடைகிறது.

(பாகம் இரண்டு தனியாக உள்ளது அதன் பெயர் "மீண்டும் ஜீனோ")
*****************

அப்போதே (1985ல்) சுஜாதா  வீடியோ கால், வீ வீ திரை, ஹோலோ பிம்பம், பறக்கும் தட்டு இன்னும் பல அறிவியல் சாதனங்களை பற்றி யோசித்து கதையில் எழுதியுள்ளார்.
ஜனத்தொகை 125 கோடி என்கிறார்  இது கிட்ட தட்ட நம் தற்போதைய ஜனத்தொகையை குறிக்கிறது.

வருங்கால அறிவியல் பற்றி துள்ளியமாக கணித்துள்ளார்.

 2022 வருவதற்குள் அனைவரும் கண்டிப்பாக ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய நாவல் இது.

- Kailash PL

Monday, July 15, 2019

மறந்து போன தமிழ்


குறிப்பாக குளிர் காலங்களில் என் அப்பத்தா சொல்லும் வாக்கியம் இது
"வளவுல படுக்காத அப்பச்சி வாட காத்தடிக்கும் அறைக்குள்ள போய் ஒறங்கு"



இந்த வாட காத்துக்கு(வாடை காற்றுக்கு)என்ன அர்த்தமென்று அப்பதெரியாது.
இன்று ஒரு புத்தகத்தின் மூலம் இதன் அர்த்தம் விளங்கியது.

அதாவது
இரவு நேரத்தில்
வடக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் வாடை. இது குளுமையாக இருக்கும்.

அதேபோல்
மேற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் கச்சான்.

கிழக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் கொண்டல்.

தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் சோழகம்.

இதே மாலை நேரத்தில்
தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் தென்றல் இது மென்மையாக இருக்கும். இதை தான் இளையராஜா " தென்றல் வந்து தீண்டும் போது......" என பாடினாரோ என்னமோ.

வாடை, கச்சான், கொண்டல், சோழகம்,
இந்த வார்த்தைகளெல்லாம் பண்டைய காலங்களில் கடலோடிகளும் தன வணிகர்களும் கப்பலில் செல்லும் போது காற்றை குறிக்க பயன்படுத்திய தமிழ்  வார்த்தைகள் ஆகும்.


- Kailash PL

Sunday, July 14, 2019

சம்போ... சம்போ... சம்போ மகாதேவா...

ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து  இரவு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சம்போ காட்சி.






ஒவ்வொரு நாளும் இரண்டு முறை ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து சம்போ காசி விஸ்வநாதர் கோவிலுக்கு  செல்கிறது.


" பஞ்சாப் மெயில் தவறினாலும் நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை " என்பது காசி பழமொழி.

ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் 

காசி விஸ்வநாதர் 

சம்போ என்றால் என்ன?

 சம்போ என்பது சமஸ்கிருத சொல் இதன் அர்த்தம் சிவபெருமானைக் குறிக்கும்.

காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது.
அவை உஷத்கால பூஜை, உச்சிகால பூஜை, அர்த்தசாம பூஜை.
அதற்கான அத்தனை பூஜை பொருட்கள், அபிஷேக பொருட்கள், அலங்கார பொருட்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து தினமும் இரண்டு முறை எடுத்து செல்லப்படுகிறது. இது வரை ஒரு நாள் கூட தவறியதில்லை. எமர்ஜென்சி காலத்தில் கூட தவறியதில்லை.

காலை 10.30க்கும் இரவு 9.30க்கும் சத்திரத்தில் இருந்து முறைப்படி எடுத்து செல்லப்படுகிறது. குளிர் காலங்களில் காலை மாலை நேரங்கள் (30min) மாறும்.


அதிகாலை உஷத்காலப் பூஜைக்கு தேவையான பொருட்கள் இரவே காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

உச்சிகாலப் பூஜைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள்:
வாசனைத் தைலம், தேன், பன்னீர், ஊதுபத்தி, சூடம், அத்தர், பழுப்பு சர்க்கரை, திருநீறு, சந்தனம், வில்வம், அறுகம்புல், பூமாலை, பால், தயிர், பஞ்சாமிர்தம், பிரயாகை தீர்த்தம், மங்கள அட்சதை கொண்டு செல்லப்படுகிறது.

சம்போவுக்கு தயாராக இருக்கும் பொருட்கள்.

சம்போவுக்காக சந்தனம் அரைக்கும் காட்சி.

அர்த்தசாம பூஜைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள்
 மேற்கண்ட பொருட்களுடன் சவ்வாது, பட்டு, ஆபரணம், பால் அண்டா, பூக்கூடை, ஆரத்தி பொருட்கள் (வெள்ளி சாமான்கள்) அனைத்தும்  கொண்டு செல்லப்படுகிறது .

சம்போ  வீடியோ காட்சிகள்
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து சம்போ செல்லும் காட்சி.




- Kailash PL



நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...