Followers

Wednesday, July 22, 2020

அமராவதிபுதூர் மகளிர் கல்லூரி:



செட்டிநாட்டின் சீர்திருத்த செம்மல் என்று போற்றப்படும் 'சொ.முருகப்பனார்'1893இல் காரைக்குடியில் சொக்கலிங்கம் செட்டியார்-விசாலாட்சி ஆச்சி இணையருக்கு மகனாக பிறந்தார்.

சொ.முருகப்பனார் 1917இல் காரைக்குடியில் "இந்து மதாபிமான சங்கம்" எனும் அமைப்பை மூத்தோர் சிலருடன் சேர்ந்து தோற்றுவித்தார். இச்சங்கத்திற்கு 1919இல் வருகை தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார், இச்சங்கத்தின் மீது வாழ்த்து பாக்கள் பாடியுள்ளார். பின்னர் இரண்டாவது முறையாக 1920இல் பாரதி இச்சங்கத்திற்கு வருகை தந்த போது சங்கத்தினருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இங்கு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக் கொண்டதாக நமக்கு கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு புகைப்படம் 1920இல் இங்கே எடுக்கப்பட்டது.

பின்னர் அதே 1920ஆம் ஆண்டு "தனவைசிய ஊழியன்" எனும் பத்திரிகையை உருவாக்கினார். இப்பத்திரிக்கை பின்னர் 'தமிழ் கடல்'இராய.சொ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு "ஊழியன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.

சொ.முருகப்பனார் 1923இல் "காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தை" தொடங்கினார் . அதன் சார்பில் அதே ஆண்டு "குமரன்" எனும் இதழை தொடங்கி 35 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தார்.

சீர்திருத்த சிந்தனையாளரான இவர் ஒரு முறை பட்டுக்கோட்டையில் கைம்பெண் மறுமணம் குறித்து ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த 'மரகதவல்லி' என்ற கைம்பெண் "நான் ஒரு விதவை பெண், என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ள தயாரா?" என்றார். உடனே இவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இவர்கள் திருமணம் 29/06/1923இல் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. அக்காலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வது என்பதே பெரும் புரட்சி. இவர் சாதி மறுப்பு மற்றும் விதவை மறுமணம் செய்துள்ளார். இதை பார்த்தது தமிழ்நாடே வியந்தது.

1937இல் நாட்டுக்கோட்டை நகரத்தாரில் முதல் விதவை மறுமணம் நடந்தது, இதை முன்நின்று நடத்தி வைத்தவர் சொ.முருகப்பனார் ஆவார்.

இப்படியாக அவரை எல்லோரும் "சீர்திருத்த செம்மல்" என்று அழைத்துவந்தனர்.



காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் சொ.முருகப்பனாரும் அவர் மனைவி மரகதவல்லி அம்மையாரும் இணைந்து மகளிர் இல்லம் ஒன்றை நிறுவினர். இளம் கைம்பெண்களுக்கு கல்வி கற்பித்து கைத்தொழில்கள் பயிற்றுவித்து மறுமணம் செய்து வைக்கும் நோக்கத்துடன் 10/04/1938இல் பல ஏக்கர் பரப்பளவில் தோற்றுவிக்கப்பட்டது. இதன் சார்பில் மரகதவல்லி அம்மையாரை ஆசிரியராக கொண்டு "மாதர் மறுமணம்" எனும் இதழ் வெளிவந்து. பின்னர் இவ்வளாகத்தில் மழலையர் பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது.

சொ.முருகப்பனார் 1956இல் மறைந்தார். சொ.முருகப்பனார் மறைந்த பின்னரும் மரகதவல்லி அம்மையாரால் மகளிர் இல்லம் நடத்தப்பட்டு வந்தது. அம்மையாரின் மறைவுக்கு பின்னர் பள்ளத்தூர் பழ.லெ.பழனியப்ப செட்டியார் குடும்பத்தினரால் தொடர்ந்து நல்ல முறையில் நடத்தப்பட்டு வந்தது மற்றும் இக்குடும்பத்தினர் பள்ளத்தூரில் நடத்தி வந்த "ஸ்ரீ சாரதா சேவாசிரமம்" என்கிற மகளிர் சேவை நிறுவனம் இவ்வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வளாகத்தினுள் சாரதா தேவி கோவில்( ஸ்ரீ சாரதா தேவி மந்திர்) ஒன்று இவர்களால் பல லட்சம் ரூபாய் செலவில் 1992இல் கட்டப்பட்டது.



இவை அனைத்தும் 1996இல் "ஸ்ரீ சாரதா நிகேதன் சமிதி அறக்கட்டளை " யிடம் இலவசமாக ஒப்படைக்கப்பட்டது. இந்த சாரதா நிகேதன் சமிதி அறக்கட்டளை மூலம் 1998இல் சிலர் நன்கொடையில், புதிதாக "ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி" ஒன்று தொடங்கப்பட்டது. சொ.முருகப்பனாரும் மரகதவல்லி அம்மையாரும் கண்ட கனவை ஸ்ரீ சாரதா நிகேதன் சமிதி அறக்கட்டளை திறம்பட செய்துவருகின்றனர். அனைத்து சமயப் பெண்களும் இங்கு பயின்று வருகின்றனர். பெண்கள் முன்னேற்றத்துக்காக இடைவிடாது செயல்பட்டு வருகிறது இந்த அமராவதிபுதூர் மகளிர் கல்லூரி.


- Kailash PL

ஆறு முகங்களுக்கும் ஆறு படிமங்கள்!


திருப்புகழ - ஏறுமயிலேறி (திருவருணை)

"ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே"
- அருணகிரிநாதர்.








புகைப்படங்கள்: அறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய " ஆறுமுகமான பொருள்” நூல்.

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...