Followers

Monday, October 4, 2021

பாரதியின் கடிதம்


1901ஆம் ஆண்டு பாரதி காசியிலிருந்து தன் மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதம்.

ஓம்

ஸ்ரீகாசி 
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன் 
சி. சுப்பிரமணிய பாரதி

Source: "பாரதியின் கடிதங்கள்" நூல் - ரா.அ.பத்மநாபன்.

தஞ்சையில் நகரத்தார் கல்வெட்டு:




                        தஞ்சைப் பெரிய கோவில் விநாயகப் பெருமானை வணங்கி நின்றான் ராஜராஜன். இதுபோன்ற சதுர்த்தித்திருநாளாக இருந்திருக்கக் கூடும். விநாயகருக்கு வாழைப்பழ நிவேதனம் நடந்துகொண்டிருந்தது அதைப்பார்த்த மன்னனுக்கு ஏதோ தோன்றியது. பிள்ளையாருக்குப் படைக்க நாளொன்றுக்கு எவ்வளவு வாழைப்பழம் தேவை என்று கேட்டான்.

ஒரு நாளுக்கு 150 பழங்கள் என்றார் குருக்கள். அப்படியானால் வருடத்திற்கு (360 நாள்) 54000 பழங்கள் என்று கணக்கிட்டான். உடனே அருகிலுள்ள அதிகாரிகளை அழைத்து தரமான வாழைப்பழங்களின் விலை என்ன என்று கேட்டான். ஒரு காசுக்கு 1200 பழம் என்றனர். ஆக, வருடத்திற்கு 45 காசுகள் செலவாகும்.

அப்படி ஒவ்வொரு வருடமும் 45 காசுகள் செலவு செய்ய முதலீடு எவ்வளவு செய்ய வேண்டும்?  பெரிய கோவில் வங்கி அதிகாரி ஒரு காசுக்கு அரைக்கால் காசு (1/8) வட்டி என்று தெரிவித்தார். அப்படியானால் 360 காசுகள் முதலீடு செய்தால் அந்த வட்டிக்கு 45 காசுகள் கிடைக்கும் அல்லவா. ஆகவே தன் பங்குக்கு 360 காசுகளை ராஜராஜன் வழங்கினான். அதை தஞ்சை வணிகர்களுக்கு கடனாக வழங்கவும் உத்தரவிட்டான். ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன்படி நாளொன்றுக்கு 150 பழங்கள் விநாயகருக்கு நிவேதனம் செய்வதாக நகரத்தார் ஒப்புக்கொண்டனர். அதைக் கல்வெட்டாக அங்கேயே பொறித்தும் வைத்தான் ராஜராஜப் பெருவேந்தன்.

தகவல்: anchor.fm/krishnan8
Courtesy: Viswanathan Arunachalam

அண்ணல் அரையாடைக்கு வயது நூறு - காரைக்குடியின் தனிச் சிறப்பு.



அண்ணல் காந்தியடிகள் மேலாடையைத் துறந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவாகின்றன. 1921ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் காலை மதுரையில் அரையாடை அணிந்த காந்திஜி, முதன் முறையாக செட்டிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இரவு காரைக்குடியில் தங்கினார். அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை இக்கட்டுரையில் காண்போம். 

மதுரை வருகை
ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், நாடெங்கிலும் ஒத்துழையாமை குறித்து மக்களிடம் பரப்புரை செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1921 செப்டம்பர் 21 அன்று பிற்பகல் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தார். கதர் மற்றும் சுதேசி இயக்கம் மக்களிடம் வலுப்பெறவும், அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கவும் அவர் மேற்கொண்ட இந்தியச் சுற்றுப் பயணத்தில் ஒரு பகுதியாக இவ்வருகை அமைந்திருந்தது. 

அன்று மாலை காந்திஜி, மதுரையில் வயல்களில் வேலை செய்யும் ஏழை விவசாயிகளையும் ஆடைகளை நெய்யும் ஏழை நெசவாளிகளையும் பார்த்தார். உணவும் உடையும் தருபவர்கள் நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள் ஆனால் அவர்கள் உடுத்துவதற்குப் போதிய உடை இல்லை. கோவணம் அணிந்து வேலை செய்யும் அவர்களின் வறுமையை நினைத்து வருந்தினார். 

அன்று இரவு மதுரையில் தனது ஆதரவாளரும் குஜராத் தொழிலதிபருமான ராம்ஜி கல்யாண்ஜியின் விருந்தினராக, மேலமாசி வீதியில் அவருக்குச் சொந்தமான இல்லத்தில் மாடி அறையில் தங்கினார். மறுநாள் செட்டிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவு முழுவதும் அன்று பகலில் தாம் கண்ட மக்களையே நினைத்துக் கொண்டிருந்தார். 

அரையாடை பூண்டார்
அடுத்த நாள், செப்டம்பர் 22ஆம் தேதி, அதிகாலை மதுரையில் இருந்து செட்டிநாட்டிற்கு புறப்படும்போது மகாத்மா மேற்கொண்ட முக்கியத்துவமிக்க ஆடை மாற்றம் நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சட்டையில்லாமல் அரையாடை புனைந்து வெளியில் அவர் பொது நடவடிக்கைகளுக்கு வந்தது அன்று தான். 

இளமையில் காந்திக்கு எல்லோரையும் போல் ஆடம்பர உடை உடுப்பதில் ஆர்வம் இருந்தது. இங்கிலாந்திலிருந்தபோது மேற்க்கத்திய உடைகளை அணிந்தார். இதற்காகப் பெரும் பணமும் செலவிட்டார். ஆனால் காலப்போக்கில் அவர் உடையில் மாறுதல் ஏற்பட்டது. ஆடம்பர உடைகளை விட்டொழித்தார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது அங்குள்ள ஏழை இந்தியக் கூலிகளைப் போலவே உடை உடுத்தினார். இந்தியா திரும்பிய பின் கத்தியவார் நாட்டு மக்களைப் போல கதராலான சட்டை, நீளமான தலைப்பாகை, வேட்டி உடுத்தினார். 1921ஆம் ஆண்டு மதுரையில் செப்டெம்பர் 22ஆம் நாள் அரையாடைக்கு மாறினார், அதாவது ஒரு துண்டும், இடையில் முழங்காலளவு ஒரு வேட்டியும் உடுத்தினார். அரையாடைக்கு மாறிய பின் மதுரையில் காந்தியை தனியாக ஒரு புகைப்படம் எடுத்தனர். 

முதலில் இவ்வாறு சட்டையில்லாமல் வேட்டி மட்டும் கட்டிக் கொள்வதை ஒரு தற்காலிகமான முடிவாகத்தான் அவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் பின்னர் அதுவே நிலைத்து விட்டது. அவர் மறையும் வரை இது மாறவே இல்லை. இவ்வளவு பெரிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க முடிவை காந்திஜி மதுரையம்பதியில் வந்து மேற்கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரே கூட முன்கூட்டி இன்ன தேதியில் இன்ன இடத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது என்று திட்டமிட்டுச் செய்யவில்லை. அவர் உள்ளத்தில் எழுந்த ஓர் எண்ணம் படிப்படியாக நாளொரு வண்ணமாக, வளர்ந்து மதுரையம்பதியில் முழுமை அடைந்திருக்கிறது. 

ஒரு வியப்பு என்னவென்றால் இந்தப் புரட்சிகரமான செயலை ஒரு செய்தியாக அந்தக் காலத்துப் பத்திரிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை. 

அரை ஆடை புனைந்த பின் காலை 7மணிக்கு சௌராஷ்டிரீயர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்திலிருந்து நேராக காந்திஜியும் அவர் குழுவினரும் காலை 9மணிக்கு செட்டிநாட்டிற்கு புறப்பட்டனர். 


செட்டிநாடு நோக்கி
செட்டிநாடு நல்ல செல்வச் செழிப்புடன் இருந்த காலம் அது. காந்திஜியின் வருகையை முன்னிட்டு செட்டிநாடே விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கு சில இடங்களில் காந்திஜியின் காரைச் சில விநாடிகள் நிறுத்தி அவர் மீது மலர்களைச் சொரிந்து அதன் மூலம் தங்கள் அன்பையும் சொரிந்து வழி அனுப்பி வைத்தனர் மக்கள். செட்டி நாடே எழுச்சி பெற்றதன் அறிகுறி இவையெல்லாம் என்று மக்கள் பேசிக் கொண்டனர். 

கானாடுகாத்தான்
செட்டிநாட்டில் காந்தி காலடி பட்ட முதல் ஊர் பலவான்குடி. பலவான்குடியில் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு, நல்ல நடு மதிய நேரத்தில் கானாடுகாத்தான் வந்து சேர்ந்தார். அங்கு உணவு அருந்தி விட்டு, ஓர் அழகான பந்தலின் கீழ் ஐயாயிரம் மக்கள் அமைதியாக அமர்ந்திருந்ததைக் கண்டு ஆனந்தத்துடன் உரையாற்றினார். பல சங்கங்களின் சார்பாக ஏராளமாக வரவேற்புக்களும் பணமுடிப்புக்களும் வழங்கப் பெற்றன. "வெளிநாட்டுச் சாமான்களையெல்லாம் விலக்க வேண்டும்" என்று அங்கு அறிவுரை கூறிவிட்டு, பள்ளத்தூர், வேலங்குடி வழியாகக் கோட்டையூருக்குப் சென்றார். அங்கும், ஒரு விசாலமான பந்தலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

காரைக்குடி
இவைகளையெல்லாம் முடித்துக் கொண்டு, காரைக்குடிக்கு காந்திஜி வந்து சேர்ந்தபோது இரவு 7 மணி, அந்நகரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்தும் தலைவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நிலக்கிழார்கள் ஆகியோர் அவருக்கு வரவேற்பளிப்பதற்காக அங்கு வந்திருந்தனர்.

புதுக்கோட்டையே காரைக்குடியில் குடியேறிவிட்டது போல் தோன்றியது. புதுக்கோட்டையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்களின் சார்பாக அண்ணலிடம் வரவேற்புரைகளும் பணமுடிப்புகளும் அளிக்கப்பெற்றன. 

காரைக்குடிக்கு காந்திஜி வந்திருந்தபோது திருக்குறளைப் பற்றிய பேச்சு இடையே வந்தது, அப்போது காந்திஜி, "திருக்குறளைப் பற்றி எனக்குத் தெரியும். திருவள்ளுவர் மிகப் பெரிய ஆசிரியர்" என்று கூறியது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. 

காரைக்குடியில் காந்திஜி வரவேற்பு ஏற்பாடுகளில் பெரும் பங்கு கொண்டவர் காந்தி மெய்யப்பச் செட்டியார். இவர் காந்திஜி மீது மிகுந்த பக்தி கொண்டவராதலால், இவரை காந்தி மெய்யப்பர் என்று எல்லோரும் அழைத்தார்கள். 

காரைக்குடியைச் சேர்ந்த பெண்கள் பலர் அண்ணலைச் சந்தித்து வரவேற்புரையும் பணமுடிப்பும் அளித்தார்கள். இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவரால் மேடைக்குச் செல்ல முடியவில்லை. ஆகையால்  இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட அப்பெருங்கூட்டத்தில் ஒரு ஓரத்தில் தம் காரில் இருந்து கொண்டே பேசினார். இந்து மதாபிமான சங்கம் ஒரு வரவேற்பு பத்திரம் வாசித்தளித்தது. காரைக்குடியைச் சேர்ந்த எட்டு அமைப்புக்களின் சார்பாகப் பண முடிப்புக்களும் எட்டு வரவேற்புரைகளும் அளிக்கப்பெற்றன. பின்னர் இரவு 8மணிக்கு காந்திஜி, தேவகோட்டைக்கு புறப்பட்டார். 

தேவகோட்டை
தேவகோட்டை செல்லும் வழியில் அமராவதிபுதூரில் சில நிமிடங்கள் காரை நிறுத்தி வரவேற்புரையைப் பெற்றுக் கொண்டு சென்றார். இன்று இரவு எ‌வ்வளவு நேரமானாலும் காந்திஜியை கண்டுவிட வேண்டும் என பலர் தேவகோட்டையில் காத்திருந்தனர். தேவகோட்டை சென்றவுடன் நேரடியாகப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.  தனவைசிய சபையினர் சார்பாகவும் சுவாமி விவேகானந்தர் சங்கத்தின் சார்பாகவும் வரவேற்புரைகள் அளிக்கப்பெற்றன. இதில் ஒரு வரவேற்புரை தங்கத் தட்டிலேயே பொரிக்கப் பெற்றிருந்தது.  மேலும் காந்திஜியிடம் ஏராளமான பண முடிப்புகள் அளிக்கப்பட்டது. 

பொது கூட்டத்தில் பேசிய காந்திஜி, "தேவகோட்டையில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குதிரை இருப்பது போல, ஒவ்வொரு வீட்டிலும் ஓர் இராட்டை இருக்க வேண்டும் மற்றும் என்னைப்போன்று நீங்களும் எளிய கதர் ஆடைகள் அணிந்தால், இந்தியாவில் மட்டுமல்லாமல் இரங்கூனிலும் மற்ற இடங்களிலும் உங்களுடைய தொழில் வெகு சிறப்பாக நடைபெறும். ஆந்திராவில் உள்ளவர்களைப் போன்றே இங்குள்ள ஆண்களும். கல்வைத்த மோதிரங்களும் கடுக்கண்களும் அணிவதில் ஆசையுள்ளவர்களாய் இருப்பதைக் காணுகிறேன், அவைகளைத் சுதந்திர போராட்ட நிதிக்கு கொடுத்து விட்டு நீங்கள் எளிமையாக வாழ்ந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்று பேசினார். 

இரவு காரைக்குடியில் உறக்கம்
நள்ளிரவு மீண்டும் காரைக்குடி திரும்பினார். முதன் முதலில் அரையாடை உடுத்திய பின் அண்ணல் காந்தி உறங்கிய ஊர் என்பதால் காரைக்குடி சிறப்புற்றது.

அன்பன்
பழ.கைலாஷ்
22/09/2021

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...