Followers

Showing posts with label செட்டிநாடு. Show all posts
Showing posts with label செட்டிநாடு. Show all posts

Sunday, September 21, 2025

மெட்ராஸ் மேயர் மூவர்.

 ஒரு பழைய புகைப்படம்.



மெட்ராஸ் கவர்னர் லார்ட் ஜார்ஜ் கோஷெனுடன் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மற்றும் அவரது மூன்று மகன்கள் உள்ளனர்.


மூன்று மகன்கள்:-

1. ராஜா சர் முத்தையா செட்டியார்

2. மேயர் இராமநாதன் செட்டியார் 

3. M.A.சிதம்பரம் செட்டியார்

இவர்கள் மூவருமே மெட்ராஸ் மேயராக இருந்தவர்கள். மெட்ராஸின் முதல் மேயர் முத்தையா செட்டியார். உலகிலேயே உடன்பிறந்த சகோதரர்கள் அனைவருமே(மூவர்) ஒரு நகரத்தின் மேயராக இருந்தவர்கள் இவர்கள் மட்டுமே!.  

ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் சகோதரரும் இந்தியன் வங்கி நிறுவனருமான திவான் பகதூர் இராமசாமி செட்டியாருக்கு ஆன் வாரிசு இல்லாததால், அண்ணாமலை செட்டியார் தனது இரண்டாவது மகன் இராமநாதனை தனது சகோதரருக்கு சுவீகாரம் கொடுத்துவிட்டார்(தத்துக் கொடுத்துவிட்டார்).

M.A.சிதம்பரம் செட்டியார் பிசிசிஐ (BCCI)யின் தலைவராக இருந்தவர். இவரது முயற்சியால் உருவான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

- பழ.கைலாஷ்.

Photo Courtesy : Valliappan Ramanathan, Devakottai.

Friday, February 21, 2025

UNESCO Recognition for Chettinad!

Special Interview with Michel Adment and Bernard Dragon

By Kailash PL


Saratha Vilas 

 

                       Many tourists from other states and countries visit Chettinad, exploring and photographing the Chettinad houses and temples and they moving on to their next destination. But, two tourists from France who visited Chettinad fell in love with the Chettinad houses and have been living there for over two decades. They have also played a significant role in getting "Chettinad" included in UNESCO's "World Heritage Sites - Tentative List."

Last month, I met these two gentlemen, Mr.Michel Adment and Mr.Bernard Dragon, at "Saratha Vilas" in Kothamangalam during lunchtime.

This "Saratha Vilas" is a beautiful mansion built in 1905 by Mr.Chellappa Chettiar. They now run this house as a heritage hotel.

I started a conversation with them over lunch...

Bernard Dragon and Michel Adment

 ■Do you speak Tamil? Are you relatives or friends? Tell us about yourselves.

   Adment: We are friends and we are french. We both are architects. We understand a little tamil but We can't speak it.

   Dragon: My hometown is Marseille, in the south of France. Adment was born in Algeria, which was then a French colony. His family moved to Paris when he was two years old, and he grew up in France.


 ■How did you learn about Chettinad? When did you come here?

   Adment: It's a long story. I'll tell you a bit, and Dragon will fill in the rest. We were both working as architects for a multinational company in France, designing buildings all over the world. Around 1998, we were working on a big project in China. We had daily work and very little free time. Due to the heavy workload, we decided to set everything aside for six months and travel to India.

   Dragon: We first landed in Mumbai. We missed our flight to Chennai at Mumbai airport. There weren't as many flights in 1998 as there are now. While waiting for the next flight at Mumbai airport, we saw pictures of the Madurai temple towers in a guidebook. We went straight to Madurai and visited the Meenakshi Amman Temple. The temple looked beautiful at night with the lights. It was beyond words! Then we went to Kochi, Kerala, and bought old wooden pillars and chairs, which we sold in France in just three weeks for a huge profit. We continued to buy and sell antiques from Kerala. Once, we bought a wooden pillar in Kerala, and they told us it was a Chettinad pillar. That's when we first heard the word "Chettinad." We first came to Chettinad in 2000 and were overwhelmed by its grandeur! We thought there were only ten or twenty big houses, but we were amazed to see thousands of mansions.


 ■How did you bring Chettinad to UNESCO's attention? What attracted you to Chettinad?

   Adment: What attracted us was not just the Chettinad architecture, but the sheer number of large houses. There are no other places in the world with so many houses like this in one location. When we first came to Chettinad, the first village we saw was Pallathur. We were mesmerized by the beauty of the streets. Back then, no one would allow us to see their houses, but we managed to enter and see a few houses in Pallathur, which made us happy. After returning to France, we told our friends about the Chettinad houses. A few days later, when we returned to Chettinad, we met many people, including Mrs. Meenakshi Meyyappan, Mrs. Visalakshi Ramasamy, and Mr. M.V. Subbiah Chettiar, and learned about Chettinad architecture and the Chettiar lifestyle. Before us, in the late 1990s, a Frenchman named Mr.Robert Dulau had researched Chettinad houses and Chettiars and written a research book in French, which we also read.

   Dragon: We met with UNESCO representatives in France and told them about Chettinad. They introduced us to UNESCO's Indian headquarters in Delhi. In Delhi, a woman was in charge of UNESCO, and neither she nor anyone else there knew about Chettinad. After I presented information about Chettinad with photos, they launched the "Revive Chettinad Campaign" in 2006. The campaign included the district collector, MLAs, ministers, architecture students from Anna University, Chettiars, and local residents. It was held in Karaikudi. The aim of the campaign was to save Chettinad houses from destruction. Later, in 2008, along with French and Indian architecture students, we started surveying Chettiar houses one by one in Kothamangalam, Lakshmipuram, Kanadukathan, and Pallathur. We collected information by going door to door. We categorized the houses based on their facade and design to estimate the construction period. We measured and drew a map of the villages, including streets, old houses, drainage systems, ponds, and temples. We documented Chettinad's geography, economy, Chettiar history, and the current lifestyle of the people. Then, in 2010, on behalf of UNESCO, we published a book in English titled "Chettinad Village Clusters of Tamil Merchants." In 2012, UNESCO also published the book in French. After many stages of work, in April 2014, UNESCO included Chettinad in the "World Heritage Sites - Tentative List."

 

■How did you start this heritage hotel?

   Adment: The story of the UNESCO work and Saratha Vilas started almost at the same time. In 2007, I joined a multinational company in Chennai as an architect, while Dragon continued the UNESCO work in Chettinad. At that time, Saratha Vilas was introduced to us by Francis Wacziarg, a Frenchman and owner of Neemrana Hotels. He said, "Let's run Saratha Vilas as a heritage hotel together." But he withdrew for some reasons. Then we both jointly registered a company in India called "Adment & Dragon Tourism & Cultural Development P.Ltd." After that, in 2009, we leased the house from its owner, Mr. Chellappan. We started renovating the house little by little. The big story is yet to come!

   Dragon: Yes! Renovating this house was a challenging task. First, the house leaked in many places, so we removed the country tiles and relaid them. Some tiles were broken, and we used the country tiles from the house's cowshed as replacements. Nowadays, no one repairs country tiles. They replace them with Mangalore tiles or sheets. But we wanted to renovate the house without losing its antiquity, and we did. We avoided painting the walls as much as possible, using bleaching powder from France to remove dirt from the walls. We also removed the chemical paints applied later and restored the original paintings underneath. We didn't use new granite anywhere, only using Athangudi tiles where needed on the old flooring. The stucco sculptures on the exterior of the house were completely damaged, and we had them redone by specialized artists. We have been running the hotel successfully since 2010. Tourists from many parts of India and abroad stay at our hotel.


 ■What would you like to say to the people of Chettinad?

    We would like to say in one line, "Revive Chettinad." Don't demolish old houses. When renovating, renovate without losing the authenticity. Let's work together to bring Chettinad from the current tentative list to the permanent list of UNESCO.


- Namadhu Chettinad Magazine Feb 2025 -

Thursday, February 20, 2025

செட்டிநாட்டிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! மீஸெல் அட்மென்ட் - பெர்னார்ட் டிராகன் சிறப்பு பேட்டி.

-பழ.கைலாஷ்-


                     செட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பலர் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள், செட்டிநாட்டு வீடுகளையும் கோயில்களையும் சுற்றிபார்கிறார்கள் புகைப்படம் எடுக்கிறார்கள் பின்னர் அடுத்த சுற்றுலா தலத்திற்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பிரான்ஸ் நாட்டிலிருந்து செட்டிநாட்டுக்கு சு‌ற்றுலா வந்த இருவர் செட்டிநாட்டு வீடுகள் மேல் காதல் கொண்டு கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக செட்டிநாட்டிலேயே வசித்துவருகின்றனர். மேலும் இவர்கள் "செட்டிநாடு" யுனெஸ்கோ(UNESCO)வின் "உலக பாரம்பரிய இடங்கள்-தற்காலிக பட்டியலில்"(Tentative list) இணைய பெரும் பங்காற்றியுள்ளனர்.

பெர்னார்ட் டிராகன் மற்றும் மீஸெல் அட்மென்ட்


நான் கடந்த மாதம் இவர்கள் இருவரையும் கொத்தமங்கலம் "சாரதா விலாஸ்"-ல் ஒரு மதிய வேளையில் சந்தித்தேன். ஒருவர் பெயர் மீஸெல் அட்மென்ட்(Michel Adment) மற்றொருவர் பெயர் பெர்னார்ட் டிராகன்(Bernard Dragon). இந்த "சாரதா விலாஸ்" கி.பி.1905-ஆம் ஆண்டு சி.அ.சு.செல்லப்ப செட்டியாரால் கட்டப்பெற்ற அழகிய மாளிகை. இந்த வீட்டை தற்போது இவர்கள் இருவரும் ஹெரிடேஜ் ஹோட்டலாக(Heritage Hotel) நடத்திவருகின்றனர். இவர்களுடன் உணவருந்தி கொண்டு உரையாடலை தொடங்கினேன்...


சாரதா விலாஸ்


●தமிழில் பேசுவீர்களா? நீங்கள் இருவரும் உறவினரா? நண்பர்களா? உங்களை பற்றி கூறுங்கள்? 


அட்மென்ட் : நாங்கள் இருவரும் நண்பர்கள், இருவரும் கட்டிடக் கலைஞர்கள்(Architects), இருவரும் பிரான்ஸ் குடிமகன்கள். எங்களுக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. ஆனால் கொஞ்சம் தமிழ் புரியும் பேசவராது.


டிராகன் : எனது சொந்த ஊர் மசாய்ஸ், இது பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ளது. அட்மென்ட் பிறந்தது அல்ஜீரியா அது அப்போது பிரான்ஸின் காலனி நாடு, இரண்டு வயது இருக்கும் போது அவர் குடும்பத்தார் பாரிஸ் வந்துவிட்டனர், அவர் வளர்ந்தது பிரான்ஸில் தான்.  


●செட்டிநாடு பற்றி எப்படி தெரியும்? எப்போது இங்கு வந்தீர்கள்?


அட்மென்ட் : அது பெரிய கதை நான் கொஞ்சம் சொல்கிறேன், டிராகன் மீதியை சொல்வார். நாங்கள் இருவரும் பிரான்ஸில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆர்கிடெக்ட்-ஆக பணியாற்றி வந்தோம், உலகம் முழுவதும் பல கட்டிடங்களை வடிவமைத்துள்ளோம். இப்படி 1998 வாக்கில் சீனாவில் தங்கியிருந்து ஒரு பெரிய திட்டத்தில் பணியாற்றி வந்தோம். தினசரி வேலைகள் இருக்கும். ஓய்வு நேரம் மிகக் குறைவு. வேலைப் பளு அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் ஒரு ஆறு மாத காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு, கொஞ்ச காலம் எங்காவது சுற்றுலா செல்லலாம் என யோசித்து, இந்தியா செல்ல முடிவெடுத்தோம்.


டிராகன் : முதலில் மும்பை வந்திறங்கினோம். மும்பை விமான நிலையத்தில் சென்னைக்கான விமானத்தை தவரவிட்டுவிட்டோம். இப்போது இருப்பது போல் 1998-ல் நிறைய விமானங்கள் இல்லை. மும்பை விமான நிலையத்தில் அடுத்த விமானத்திற்காக காத்திருந்த போது கைடுபுக்கில்(GuideBook) மதுரை கோயில் கோபுரங்களை பார்த்தோம். நேரடியாக மதுரை வந்திறங்கினோம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றோம் இரவு நேரத்தில் விளக்கொளியில் கோயில் மிக அழகாக இருந்தது. சொல்ல வார்த்தையே இல்லை! பின்னர் கேரளா கொச்சின் சென்றோம். அங்கு பழைய மரத்தூண்கள், நாற்காலிகள் வாங்கிக்கொண்டு பிரான்ஸ் சென்றோம், மூன்றே வாரத்தில் அத்தனை பொருட்களையும் விற்றுவிட்டோம் பெரும் லாபம் கிடைத்தது. தொடர்ந்து சில முறை கேரளா வந்து பழைய பொருட்களை வாங்கிச் சென்றோம். அப்படி ஒருமுறை கேரளா வந்தபோது ஒரு மரத்தூணை வாங்கினோம் இது செட்டிநாட்டு தூண் என்றார்கள், செட்டிநாடு என்கிற வார்த்தையை அப்போது தான் கேள்விப்பட்டோம். 2000-ஆவது ஆண்டில் முதன்முதலாக செட்டிநாடு வந்தோம் இந்த பிரமாண்டத்தில் ழூழ்கினோம்! நாங்கள் ஏதோ பத்து இருபது பெரிய வீடுகள் இருக்கும் என நினைத்து வந்தோம், ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான மாளிகைகள் இருப்பதை கண்டு வியந்துபோனோம்.


●செட்டிநாட்டை யுனெஸ்கோ(UNESCO) வரை எடுத்து சென்றது எப்படி? செட்டிநாட்டில் தங்களை எது ஈர்த்தது? 


அட்மென்ட் : எங்களை ஈர்த்தது செட்டிநாட்டு கட்டிடக்கலை என்று சொல்வதைவிட இவ்வளவு எண்ணிக்கையிலான பெரிய வீடுகள் தான் ஈர்ப்புக்கு காரணம். உலகில் எங்குமே இதுபோன்ற வீடுகள் ஒரே இடத்தில் இல்லை. நாங்கள் முதன்முதலாக செட்டிநாடு வந்தபோது முதன்முதலில் பார்த்த ஊர் பள்ளத்தூர், தெருக்களின் அழகில் மயங்கினோம். அப்போதெல்லாம் யாரும் தங்கள் வீட்டை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள், இருப்பினும் பள்ளத்தூரில் சில வீடுகளுக்கு உள்ளே நுழைந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சி தந்தது. பிரான்ஸ் சென்றவுடன் நண்பர்களிடம் செட்டிநாட்டு வீடுகள் பற்றி கூறினோம். சிலநாட்களில் மீண்டும் செட்டிநாடு வந்த போது திருமதி.மீனாட்சி மெய்யப்பன், திருமதி.விசாலாட்சி இராமசாமி, திரு.எம்.வி.சுப்பையா செட்டியார் ஆகியோர் உள்ளிட்ட பலரை சந்தித்து செட்டிநாடு கட்டிடக்கலை மற்றும் செட்டியார் வாழ்க்கை முறை பற்றி கேட்டறிந்தோம். எங்களுக்கு முன் 1990கள் இறுதியில் செட்டிநாட்டு வீடுகளையும் செட்டியார்களையும் ராபர்ட் துலாவ்(Robert Dulau) எனும் பிரெஞ்ச்காரர் ஆய்வுசெய்து பிரெஞ்ச் மொழியில் ஆய்வு நூலாக எழுதியிருந்தார். அதை படித்தும் தெரிந்துகொண்டோம்.


டிராகன் : பிரான்ஸில் யுனெஸ்கோ அமைப்பினரை சந்தித்து செட்டிநாடு பற்றி கூறினோம். அவர்கள் டெல்லியில் உள்ள யுனெஸ்கோவின் இந்திய தலைமையகத்திற்கு எங்களை அறிமுகப் படுத்தினார்கள். டெல்லியில் ஒரு பெண்மணி தான் யுனெஸ்கோ தலைமை பொறுப்பில் இருந்தார்கள், அவர்கள் உள்ளிட்ட அங்குள்ள யாருக்கும் செட்டிநாடு பற்றி தெரியவில்லை. நான் செட்டிநாடு பற்றி புகைப்படங்களுடன் செய்திகளை எடுத்து கூறிய பின் 2006-ல் Revive Chettinad Campain என்னும் திட்டத்தை கொண்டுவந்தார்கள். அதில் எங்களுடன் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., அமைச்சர், அண்ணா பல்கலைக்கழக ஆர்கிடெக்ட் மாணவர்கள், செட்டியார்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இது காரைக்குடியில் நடைபெற்றது. இத்திட்டத்தின் நோக்கம் செட்டிநாட்டு வீடுகளை அழிவிலிருந்து மீட்டெடுப்பது. பின்னர் 2008-ல் பிரான்ஸ் நாட்டு ஆர்கிடெக்ட் மாணவர்கள் மற்றும் இந்திய ஆர்கிடெக்ட் மாணவர்களுடன் சேர்ந்து நாங்கள் கொத்தமங்கலம், லெட்சுமிபுரம், கானாடுகாத்தான், பள்ளத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள செட்டியார் வீடுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய தொடங்கினோம். வீடுவீடாக சென்று செய்திகளை சேகரித்தோம். வீடுகள் கட்டிய காலங்களை கணக்கிட முகப்பு தோற்றம் மற்றும் வீட்டின் வடிவமைப்பை கொண்டு வகைப்படுத்தினோம்.

ஊரின் வரைபடம் அதில் தெருக்கள், பழைய வீடுகள், வடிகால் அமைப்புகள், ஊருணிகள், கோயில்கள் ஆகியவற்றை அளந்து வரைந்தோம். செட்டிநாட்டின் புவியியல், பொருளாதாரம், செட்டியார்களின் வரலாறு மற்றும் மக்களின் இன்றைய வாழ்க்கை முறையை பதிவுசெய்தோம். பின்னர் 2010-ல் யுனெஸ்கோ சார்பில் நாங்கள் "Chettinad Village Clusters of Tamil Merchants" என்னும் தலைப்பில் இவற்றை புத்தகமாக எழுதி ஆங்கிலத்தில் வெளியிட்டோம். அந்த புத்தகத்தை 2012-ல் பிரெஞ்ச் மொழியிலும் யுனெஸ்கோ சார்பில் வெளியிட்டோம். இப்படியாக தொடங்கிய எங்கள் பயணம் பல கட்ட பணிக்கு பின், 2014 ஏப்ரல் மாதம் செட்டிநாட்டை "உலக பாரம்பரிய இடங்கள்-தற்காலிக பட்டியலில்" இணைத்தது யுனெஸ்கோ.


●இந்த ஹெரிடேஜ் ஹோட்டல் தொடங்கியது எப்படி? 


அட்மென்ட் : கிட்டத்தட்ட யுனெஸ்கோ பணி கதையும் சாரதா விலாஸ் கதையும் ஒரே இடத்தில் தொடங்கியது தான். 2007-ல் நான் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆர்கிடெக்ட்-ஆக பணியில் சேர்ந்தேன், அதேநேரம் டிராகன் செட்டிநாட்டில் யுனெஸ்கோ பணியை தொடர்ந்து வந்தார். அப்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் நீம்ரானா ஹோட்டல்ஸ்(Neemrana Hotels) உரிமையாளருமான பிரான்சிஸ் வக்சியார்க்(Francis Wacziarg) மூலம் சாரதா விலாஸ் எங்களுக்கு அறிமுகமானது. அவர் "நாம் மூவரும் இணைந்து சாரதா விலாஸை ஹெரிடேஜ் ஹோட்டலாக நடத்துவோம்" என்றார். ஆனால் அவர் சில காரணங்களால் விலகிக்கொண்டார். பின்னர் நாங்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து "Adment & Dragon Tourism & Cultural Development P.Ltd." எனும் நிறுவனத்தை இந்தியாவில் பதிவு செய்தோம். அதன்பின்னர் 2009-ல் சாரதா விலாஸ் உரிமையாளரான திரு.செல்லப்பன் அவர்களிடம் ஒப்பந்தம் செய்து இந்த வீட்டை குத்தகைக்கு எடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை புனரமைக்க தொடங்கினோம். இனிமேல் தான் பெரிய கதையே இருக்கு!


டிராகன் : ஆமாம்! இந்த வீட்டை புனரமைப்பது மிகுந்த சவாலான பணியாக இருந்தது. முதலில் வீட்டின் பல இடங்களில் ஒழுகியது, ஆகையால் வீட்டில் உள்ள நாட்டு ஓடுகளை பிரித்து பின் மீண்டும் அதே நாட்டு ஓடுகளை பரப்பினோம். அதில் சில ஓடுகள் உடைந்திருந்தது அவற்றுக்கு பதிலாக வீட்டின் மாட்டு கொட்டகையில் இருந்த நாட்டு ஓடுகளை பயன்படுத்தினோம். இப்போது யாரும் நாட்டு ஓடுகளை பழுதுபார்ப்பதில்லை. சீமை ஓடுகள் மற்றும் சீட் மூலம் நாட்டு ஓடுகளை மாற்றி அமைக்கின்றனர். ஆனால் நாங்கள் பழமை குன்றாதவாறு வீட்டை சீரமைக்க எண்ணினோம். அப்படியே செய்தோம். வீட்டின் சுவர்களில் பெயிண்ட் அடிப்பதை முடிந்த வரை தவிர்த்தோம், பிரான்ஸில் இருந்து வாங்கி வந்த பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தி சுவற்றில் உள்ள அழுக்குகளை நீக்கினோம். மேலும் பிற்காலத்தில் அடிக்கப்பட்டிருந்த கெமிக்கல் பெயிண்ட்ஸை நீக்கி அதன் உள்ளே இருந்த ஒரிஜினல் ஓவியங்களை மீட்டெடுத்தோம். எங்குமே புதிய கிரானைட் கற்களை பயன்படுத்தவில்லை, பழைய தரைதலத்தில் தேவைப்படும் இடத்தில் மட்டும் ஆத்தங்குடி பூக்கல் பயன்படுத்தினோம். வீட்டின் வெளிப்புறம் இருந்த சுதை சிற்பங்கள் எல்லாம் முற்றிலுமாக சிதைந்திருந்தது. அவற்றை அதற்கான கலைஞர்களை கொண்டு புதிதாக செய்தோம். 2010 முதல் சிறப்பாக ஹோட்டலை நடத்தி வருகிறோம். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து எங்கள் ஹோட்டலில் தங்குகின்றனர்.







●நீங்கள் செட்டிநாட்டவர்களுக்கு சொல்ல விரும்புவது?


நாங்கள் இருவரும் ஒரே வரியில் சொல்ல விரும்புவது "Revive Chettinad". செட்டிநாட்டை மீட்டெடுங்கள். யாரும் பழையவீட்டை இடிக்காதீர்கள். புனரமைக்கும் போதும் பழமை குன்றாதவாறு புனரமையுங்கள். தற்போது யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் உள்ள செட்டிநாட்டை நிரந்தர பட்டியலுக்கு கொண்டுவர சேர்ந்து முயர்ச்சிப்போம்.■


நமது செட்டிநாடு

பிப்ரவரி 2025







Sunday, January 5, 2025

"சோமலெயின் செட்டிநாடும் செந்தமிழும்"



           செட்டிநாட்டார் செந்தமிழுக்கு செய்திருக்கும் சேவைகள் ஏராளம். திரைக்கடல் ஓடித் திரவியம் திரட்டப் பல அயல்நாடுகளுக்கு சென்றிருந்தாலும் அங்கும் தமிழை வளர்ப்பதையே முதற்கண் காரியமாக கொண்டிருந்துள்ளனர். எப்பொழுதும் முத்தமிழை வளர்த்து வருபவர்கள் என்ற வரிசையில் முதலில் நிற்பவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் என்பதை நாடறியும்.

செட்டிநாடும் தமிழும்:
'உலகம் சுற்றிய தமிழர்' என புகழாரம் சூட்டப்படும் சோமலெ அவர்கள் 1954ஆம் ஆண்டில் 'செட்டிநாடும் தமிழும்' எனும் நூலை எழுதினார், இந்நூல் செட்டிநாட்டின் வரலாற்றை கூறுவதாக அமைந்தது . இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1960ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் இந்நூலில் மேலும் பல திருத்தங்கள் செய்து, விரிவுபடுத்தி 'செட்டிநாடும் செந்தமிழும்' எனும் தலைப்பில் 1984ஆம் ஆண்டு வெளியிட்டார். செட்டிநாடு எனும் பலகணி மூலம் தமிழ்கூறும் நல்லுலகை காண 'செட்டிநாடும் செந்தமிழும்' எனும் இந்நூல் பெரிதும் உதவி புரிகிறது. 


செட்டிநாடு யாது?:
ஏழு வட்டகைகள் எழுபத்தியாறு ஊர்கள் என்பதே செட்டிநாடு. இந்நூலில் ஏழு வட்டகைகளையும் எழுபத்தியாறு ஊர்களையும் பட்டியலிடும் சோமலெ, ஒவ்வொரு ஊரின் தனிச்சிறப்புகளை எடுத்துக் கூறியுள்ளார்.

" வெள்ளாறது வடக்காமேற் குப்பிரான் மலையாத் 
தெள்ளார் புனல்வைகை தெற்காகும் - ஒள்ளிய நீ
ரெட்டிக் கடற்கிழக்கா மிஃதன்றோ நாட்டரசன்சேர் 
செட்டிநாட் டெல்லையெனச் செப்பு"
என்ற பாடலின் மூலம் செட்டிநாட்டு எல்லைக்கு வரையறை வகுத்தப் பெருமை பாடுவார் முத்தப்பரை சேரும் என்றால்! வரைபடம் வரைந்த பெருமை 'சோமலெ'வை சேரும்! முதன் முதலில் செட்டிநாட்டின் வரைபடம் இந்நூலில் தான் இடம்பெற்றுள்ளது. இந்த வரைபடத்தில் 9கோயில்களும் நகரத்தார் வாழக்கூடிய 76 ஊர்களும் அருகாமையில் உள்ள ஊர்களும் அவற்றை இணைக்கக்கூடிய சாலைகளும் இரயில் தடங்களும் இடம்பெற்றுள்ளன.

செட்டிநாடும் செந்தமிழும்:
இந்நூல் நகரத்தார் செய்த தமிழ் பணியை கூறுவதாக மட்டும் அமையாமல் செட்டிநாட்டில் வாழக்கூடிய அத்தனை சமூகத்தினரும் தமிழுலகத்திற்கு ஆற்றியிருக்கும் அறப்பணிகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
  
716பக்கங்களை கொண்ட இப்பெரும் நூல் சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான தமிழ்கூறும் செட்டிநாட்டு நிலப்பகுதியின் வரலாற்றை 40 தலைப்புகளில் சொல்கிறது. பின்னிணைப்பாக 24 தலைப்புகளில் பல அரிய செய்திகளும், கட்டுரைகளும், புள்ளிவிபரங்களும் இணைக்கப்பட்டுள்ளது இந்நூலின் கூடுதல் சிறப்பாகும்.

தமிழ் பண்பாட்டுக்கு கட்டியம் கூறும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் சொற்றொடரை ஈன்றது செட்டிநாடு என இந்நூலின் முதல் பக்கத்தை தொடங்கும் நூலாசிரியர் சோமலெ, சங்ககாலம், சிலப்பதிகார காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம் எனக் கடந்து சமகாலம் வரையிலான செட்டிநாட்டின் செந்தமிழ் வரலாற்றை வர்ணிக்கிறார்.

செட்டிநாட்டு வீட்டின் அமைப்பு முறை, மங்கல நிகழ்ச்சிக்கு காப்புக் கட்டும் முறை, மணமக்களை வாழ்த்தும் முறை ஆகியவற்றை சங்க கால இலக்கியங்களோடு ஒப்பிட்டும், சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரத்தார் சமூக பெண்கள் கடல் கடப்பதில்லை என்பதை சங்க கால மரபுகளோடு சான்றுடன் ஒப்பிட்டும் விளக்குகிறார்.

தமிழுக்கு ஒப்பனையாக விளங்கும் செட்டிநாட்டு ஒப்பாரியையும், தாளத்துடன் பாடப்படும் தாலாட்டையும் ஆய்வு செய்து தனித்தனி கட்டுரைகளாக இந்நூலில் பதிவுசெய்துள்ளார். இதுவே பின்னாளில் சிலர் நகரத்தார் தாலாட்டு மற்றும் ஒப்பாரி குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்ய பேருதவியாக இருந்துள்ளது.

பர்மா, மலேசியா இலங்கை, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து, லண்டன், அமெரிக்கா ஆகிய அயல் தேசங்களில் செட்டிநாட்டவர்கள் செய்திருக்கும் தமிழ்ப்பணிகளை இந்நூலில் திறம்பட தொகுத்தளித்துள்ளார்.

செட்டிநாட்டார் ஆதரித்த புலவர்கள் நூற்றுக் கணக்கானோர். அவர்களை இந்நூலில் ஆங்காங்கே குறிப்பிடுவதுடன். 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் செட்டிநாட்டார் ஆதரித்த புலவர்பெருமக்கள் பலரின் விபரங்களை இந்நூலில் கொடுத்துள்ளார் மற்றும் 18ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை செட்டிநாட்டில் சிறப்புடன் வாழ்ந்து வந்த பெரும் புலவர்களின் வரலாற்றையும் எழுதியுள்ளார் மேலும் பாடுவார் முத்தப்பர் உள்ளிட்ட நகரத்தார் மரபு புலவர்கள் வரலாற்றையும் அவர்கள் இயற்றிய நூல்களையும் தொகுத்தளித்துள்ளார்.

பதிப்பகத்துறை, இதழியல் துறை, சிற்பக் கலைத்துறை, தமிழிசைத்துறை, நூலகத்துறை, பயண இலக்கியத்துறை, குழந்தை இலக்கியத்துறை ஆகியவற்றில் செட்டிநாட்டவர் ஆற்றியிருக்கும் பங்குகளை இந்நூலில் விரிவாக விவரித்திருக்கிறார்.

பின்னிணைப்பில் "யார் எவர்?" என்ற தலைப்பின் கீழ் செட்டிநாட்டை பூர்வீகமாக கொண்ட சாதனையாளர்கள் பலர் பற்றிய தனிக்குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

போற்றுவோம்:
"எல்லா நாடும் தன் நாடாய், 
எங்கும் சுற்றி ஆராய்ந்து 
நல்லார் பலரின் கருத்தையெலாம் 
நாளும் தேடித் தமிழ்மக்கள் 
பல்லார் அறியச் செந்தமிழில் 
பண்பாய் உரைக்கும் என்நண்பன் 
சொல்லால் அமுதை வென்றிடுவோன் 
சோம இலக்கு மணன்வாழ்க" 
என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் சோமலெயை போற்றுகிறார்.

சோமலெ ஒரு சிறந்த படைப்பாளராகவும் ஆய்வாளராகவும் சமுதாயச் சிந்தனையாளராகவும் திகழ்ந்து தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் தமிழுக்காக செலவிட்டு இலக்கியப் பணியோடு பல சமுதாய நற்பணிகளையும் செய்துள்ளார். 80க்கும் அதிகமான நூல்களை படைத்துள்ளார். அத்தனை நூல்களும் தமிழ்கூறும் நல்லுலகால் என்றென்றும் போற்றப்படக்கூடியது. அவற்றுள் முதன்மையாக திகழ்வது "செட்டிநாடும் செந்தமிழும்" நூல். சோமலெ அரிதின் முயன்று பல செய்திகளையும் சான்றுகளையும் சேகரித்து செந்தமிழ் கலைக்களஞ்சியமாகவே இந்நூலை படைத்துள்ளார். இது செட்டிநாட்டவர் மட்டுமின்றி தமிழர்கள் அனைவரும் படித்துப் பயன்பெற்ற வேண்டிய அரிய நூல்.

- பழ.கைலாஷ் 

வேந்தன்பட்டி கும்பாபிஷேக மலர் - 2024

Monday, June 29, 2020

பர்மா கடிதங்கள்

1899இல் பர்மாவிற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்.

" பெரி.சு.று. கருப்பன் செட்டிக்கு
றெங்கோன்"

று- இராம
றெங்கோன்- ரங்கூன்(Rangoon)


பாரதி கடிதம்

1919இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கானாடுகாத்தான் வை.சு.சண்முகனாருக்கு எழுதிய கடிதம்.


Saturday, May 16, 2020

ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்

மேலவளவு என்கின்ற ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்(Emperor George Gate) தேவகோட்டையில் அமைந்துள்ளது.

EMPEROR GEORGE GATE
DEVAKOTTAI 



கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி,1876ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பேரரசியாக பிரிட்டன் ராணி விக்டோரியா முடிசூட்டிக் கொண்டார். அவர் மறைந்த பின் அவரின் மகன் ஏழாம் எட்வர்ட் பிரிட்டன் அரசராகவும் இந்திய சக்கரவர்த்தியாகவும் தொடர்ந்தார். ஏழாம் எட்வர்ட் மறைந்த பின்னர் அவரின் மகன் ஐந்தாம் ஜார்ஜ் பிரிட்டன் அரசரானார். தான் இந்திய சக்கரவர்த்தியாக பதவியேற்றுக் கொள்ளும் விழா இந்தியாவில் வேகு விமர்சையாக நடக்க வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பப்படியே இந்தியாவில் பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பங்கேற்பதற்காக 40 நாள் பயணமாக ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும், அவர் மனைவி ராணி மேரியும் இந்தியா வந்தனர். இந்த விழாவில்தான் இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய சமஸ்தான அரசர்கள், மாகாண கவர்னர்கள், வணிகர்கள் எனப் பலர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி, 1911ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி டெல்லியில் வெகு தடபுடலாக நடைபெற்றது.

அதன் ஞாபகார்த்தமாக தேவகோட்டையில் ஓர் ஆர்ச் கேட் கட்டப்பட்டு தேவகோட்டை தாலுகா பிரசிடெண்ட்டாக இருந்த நாகசுந்தரம் ஐயர் என்பவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஆங்கிலத்திலும் தமிழிலும் கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் கல்வெட்டு வாசகமானது:
" ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்
மாக்ஷிமை தாங்கிய இந்தியாசக்கரவர்த்தி 5வது ஜார்ஜ் அரசர் டில்லியில் முசூட்டியருளிய ஞாபகார்த்தமாக நிற்மாணம் செய்வித்த கேட் 1911௵ டிசம்பர்௴ 12௳ யில் தேவகோட்டைத் தாலூகா போர்டு பிரிசிடெண்டு மகா-ள-ள-ஸ்ரீ நாகசுந்தரமய்யரவர்களால் திறக்கப் பெற்றது"

ஆங்கில கல்வெட்டு வாசகமானது :
" EMPEROR GEORGE GATE
INCOMMEMORATION OF THE CORONATION CELEBRATION
IN DELHI OF HIS IMPERIAL MAJESTY KING GEORGE V
OUR BELOVED EMPEROR OF INDIA ON 12th DECEMBER 1911
OPENNED BY MR. R.NAGASUNDRAMIER, PRESIDENT TALUQ BOARD OF DEVAKOTTA"

வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆர்ச் கேட் தேவகோட்டை வட்டாணம் ரோட்டில் அமைந்துள்ளது.

Kailash PL

Thursday, April 30, 2020

ஆச்சிமார்கள் பற்றி ஜப்பானிய பெண் எழுதியது!

ஜப்பானை சேர்ந்த பேராசிரியை யூகோ நிஷிமுரா(Yuko Nishimura) அவர்கள், 1998ஆம் ஆண்டு செட்டிநாட்டு ஆச்சிமார்களை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள்.

புத்தகத்தின் தலைப்பு:
Gender, Kinship and Property Rights: Nagarattar Womanhood in South India

யூகோ நிஷிமுரா

கண்ணதாசன்- மரபுக்கவிதைகள்

கவியரசு கண்ணதாசனின் மரபுக்கவிதைகள்.



செட்டிநாட்டு மாமியார் வாக்கு

நல்லாத்தான் சொன்னாரு
நாராயணச் செட்டி!

பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு

வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்

செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா

தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.

எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க

குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!

ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்

ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்

சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்

பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்

எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்

கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்

கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு

மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்

தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்

தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா

வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்

அப்பன் கொடுத்த சொத்து
ஆறுநாள் தாங்காது

கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்

கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு

மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படிக்கி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி

விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி

குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி

அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு

சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு

வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே

வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா

எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி

தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா

கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா

மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்

பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி

ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்

பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு

ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி

பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி

கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி

எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு

கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா

இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா

ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு

ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்

பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய

சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்

பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே

நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா

ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா

எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி

பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து

பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி

வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா

கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை

பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா

தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி

காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி

ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு

மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா

நல்லாத்தான் சொன்னாரு
நாராயணன் செட்டி!
••••••••••••


செட்டிநாட்டு மருமகள் வாக்கு

அவ கெடக்கா சூப்பனகை
அவ மொகத்தே யாரு பாத்தா?

அவுக மொகம் பாத்து
அடியெடுத்து வச்சேன் நான்

பத்து வராகன்
பணங்கொடுத்தார் எங்கய்யா

எத்தனைபேர் சீதனமா
இவ்வளவு கண்டவுக?

ராமாயணத்திலயும்
ராமனுக்கு சீதைவந்தா

சீதனமா இவ்வளவு
சேத்துவச்சா கொண்டுவந்தா?

கப்பலிலே ஏத்திவச்சா

கப்பல் முழுகிவிடும்

அவ்வளவு சாமான்
அரிசி பருப்புவரை

மாவு திரிச்சுவச்சு
மலைமலையா அடுக்கிவச்சு

ஊறுகாய் அத்தனையும்
ஒண்ணு விடாமவச்சு

நாக்காலி முக்காலி
நாலுவண்டி ஏத்திவச்சு

பாயும் தலையணையும்
பலவகையா கட்டிவச்சு

ஆளு வீடடங்காத
அழகான பீரோவும்

கண்ணாடிச் சாமானும்
கனத்தவெள்ளி பாத்திரமும்

அம்மிகுழவி
ஆட்டுக்கல் அத்தனையும்

கட்டிகொடுத்து
என்னை கட்டிக்கொடுத்தாக

வைரத்தால் கண்டசரம்
வளைககப்பு மோதிரங்கள்

சிறுதாலி பெருந்தாலி
சுட்டியெல்லாம் செஞ்சாக

தூக்கமுடியாம
தூக்கு கழுத்தூரு

முந்நூறு பவுனுக்கு
முள்ளங்கி பத்தைப்போல

எங்கையா ஆத்தா
எனக்குக் கொடுத்தாக

ஒருவேளை சோத்துக்கும்
உதவியில்லை இவ்வீட்டில்

மாமியார் இண்ணு சொல்லி
மாரடிச்சு என்னபண்ண?

கல்யாணியாச்சியும்தான்
கட்டிவிட்டா தன் மகளை

ஒருபொட்டுதாலி
ஒருவேளைச் சாப்பாடு

அதுமாதிரி இவளும்
அடைஞ்சிருக்க வேணுமடி

சம்பந்தம் பண்ணவந்தா
சண்டாளி சூப்பநகை

வேறேவைக்க நாதியில்லை
வீடில்லை வாசலில்லை

சோறுவைக்க பானையில்லை
சொத்துமில்லை பத்துமில்லை

புள்ளைதான் பெத்துவச்சா
பெண்ணோடு சோறு வர

தலைகாணிமந்திரமாம்
சங்கதிய கேளுங்கடி

பெண்டாட்டி சொல்கேக்க
புத்தியில்லா ஆம்பிளையா?

வீட்டு மருமகளா
வெளக்கேத்த வந்தவளை

சக்களத்தி போல நெனைச்சு
சதிராடுகின்றாளே

எங்களுக்கும் அண்ணந்தம்பி
ஏழுபேரு இருக்காக

அவுகளுக்கு பெண்ணாட்டி
அணியணியா வந்தாக

எங்காத்தா ஒருவார்த்தை
எடுத்தெறிஞ்சு பேசவில்லை

என்னைப்போல் பெண்ணாக
எண்ணி நடந்தாக

சனியம் புடிச்ச
என் தலையில்வந்து உக்காந்தா

மாமியார்க்கரியின்னா
மனசிரக்கம் கூடாதா

சாமியாரா ஆக
தன்மகனை விட்டிருந்தா

நாம ஏன் இங்கவந்து
நாத்தசோறுங்கோணும்?

அவுகளுக்கு நாஞ்சொல்லி
அலுப்பா அலுத்துவிட்டேன்

செவிடா இருக்காக்
சேதிசொல்ல எண்ணமில்லே

பட்டதெல்லாம் போதும்
பகவானே இங்கவந்து!

சட்டியிலே பொட்டு
தாளிச்சு கொட்டிவிட்டா

வட்டியிலே போட்டு
ஒரு வாய்ச்சோறு வைக்கையிலே

கொட்டுகிறா கொட்டு
தேள்கூட கொட்டாது

அவளுக்கழுவேனா
அன்னாடம் புள்ளைகொண்ட

சீக்குக்கு அழுவேனா
தினமும் கவலையடி

கோட்டையூர் அம்மந்தான்
கூலிகொடுக்கோணும்

பொன்னரசி மலையரசி
பு த்தி புகட்டோணும்

எங்க சொகங்கண்டேன்
இங்குவந்த நாள்முதலா?

கடவுளுக்கு கண்ணிருந்தா
காட்டுவான் கண்ணெதிரே

வத்தக்குழம்பு
வறுத்துவச்ச மொளகாயும்

பத்தியம்போல் சாப்பிடத்தான்
பாவி இவ வீடுவந்தேன்

தம்பி மகளை எண்ணி
தாளமில்லே கொட்டுறா

நம்பி அவளும்வந்தா
நாயாப்போயிருப்பா

கும்பி கருகி
குடல்கருகி நின்னிருப்பா

வெம்பி வெதும்பி
வெளக்குமாறாயிருப்பா

தம்பி மகளாம்
தம்பிமக தெரியாதா?

நாமா இருந்தமட்டும்
நாலுழக்கு பாலூத்தி

தேனா கொடுத்து இவள
திமிர்புடிக்க வச்சிருக்கேன்

போனாபோகட்டுமிண்ணு
பொறுத்து கெடந்தாக்க

தானான கொட்டுகிறா
தடம்புரண்டு ஆடுகிறா

அவதலைய போட்டாத்தான்
ஆத்தா எனக்கு சொகம்

எப்பவருவானோ
எடுத்துக்கினு போவானோ

இப்பவா சாவா?
இழுத்து வலியெடுத்து

கெடையாகெடந்து
கிறுக்கு புடிக்காமே

சாகவே மட்டா
சத்தியமா நான் சொல்றேன்

எங்க கொலதெய்வம்
இருந்தா பழிவாங்கும்

பங்காளி மக்களெல்லாம்
பாக்க பழிவாங்கும்

படுத்துனா மருமகள
படுத்துட்டா இண்ணு சொல்லி

நடுத்தெருவில் நிண்ணு
நாலுபேர் சிரிப்பாக

பாக்கத்தான் போறேண்டி
பாக்கத்தான்போறேன்நான்

ஒருத்தனுக்கு முந்தானை
ஒழுங்காநான் போட்டிருந்தா

இருக்கிற தெய்வமெல்லாம்
எனக்காக கேக்கோணும்

அவகெடக்கா சூப்பநகை
அவமொகத்த யார்பாத்தா?
•••••••••••••

Tuesday, April 7, 2020

வள்ளல் அழகப்பர் பிறந்தநாளும் இறந்தநாளும்...

அழகப்ப செட்டியார் 
வள்ளல் டாக்டர் இராம.அழகப்ப செட்டியார் சென்னை வேப்பேரியில் உள்ள தனது இல்லமான கிருஷ்ண விலாஸில் 05.04.1957ல் மறைந்தார். 

அடுத்த நாள், 06.04.1957 அவரது 48ஆவது பிறந்தநாளன்று, அவருடைய பூதவுடல் கோட்டையூர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. 



மரியாதை நிமித்தமாக, அழகப்பர் தொடங்கி வைத்த அணைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. காரைக்குடி சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு அழகப்பர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.



இறுதி ஊர்வலமானது காரைக்குடி வீதிகளில் சுற்றி அழகப்பாபுரம் சென்றடைந்தது, அழகப்பரின் ஆசைப்படி அவர் முன்பே குறிப்பிட்ட இடத்தில், இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாலை 6 மணியளவில் அவரது அண்ணன் மகன் இராம.நாச்சியப்பன் சிதைக்குத் தீ மூட்டினார்.

இதில் வருத்தத்துக்குரிய செய்தி என்னவேன்றால் வள்ளல் டாக்டர் இராம.அழகப்ப செட்டியார் பிறந்த நாளும் எரியூட்டப்பட்ட நாளும் ஒரேநாள். 
••••••••

இத்தகவல் வள்ளல் அழகப்பரின் பேரன் திரு.இராமநாதன் வைரவன் எழுதிய Alagappa:A Beautiful Mind புத்தகத்தில் உள்ளது.

இன்று (ஏப்ரல் 6) வள்ளல் இராம.அழகப்ப செட்டியாரின் 111வது பிறந்தநாள்.

பதிவு: Kailash PL
06.04.2020



Monday, March 30, 2020

காரைக்குடியில் ராஜேந்திர பிரசாத்

இராஜன்பாபு-வரவேற்புரை 


பாரதத்தின் முதல் ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத் அவர்கள், 1935ல் காங்கிரஸின் தலைவராக பதவி வகித்த போது காரைக்குடிக்கு வருகை தந்திருந்தார். அப்போது காரைக்குடி மக்கள் அளித்த வரவேற்புரை இது, இயற்றியவர் தமிழ் கடல் இராய.சொ .

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...