Followers

Monday, December 14, 2020

பாரதியின் ஆறு புகைப்படங்கள்

பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக் கொண்டதாக நமக்கு கிடைப்பவை ஆறு புகைப்படங்கள் மட்டுமே. இவற்றுள் இரண்டு புகைப்படங்கள் புதுவையிலும் இரண்டு புகைப்படங்கள் காரைக்குடியிலும் இரண்டு புகைப்படங்கள் சென்னையிலும் எடுக்கப்பட்டவை.

முதல் புகைப்படம்:

பாரதியும் மனைவி செல்லம்மாவும்.

புதுச்சேரியில் 1917இல் டி. விஜயராகவன் என்ற இளம் நண்பரின் விருப்பத்திற்கிணங்க எடுக்கப்பட்ட புகைப்படம்.

இரண்டாவது புகைப்படம்:


பாரதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்

1917இல் முந்திய படம் எடுத்த அதே நாளில் எடுத்த மற்றொரு படம் இது.
அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலம்) பாரதியின் இளைய மகள் சகுந்தலா, மனைவி செல்லம்மா. நிற்பவர்கள் பாரதியின் நண்பர்கள் ராமு, டி. விஜயராகவன் மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இந்த இரண்டு புகைப்படங்களையும் எடுத்த புகைப்பட கலைஞர் பெயர் ஜி. கிருஷ்ணராஜு, இவர் 1917இல் புதுச்சேரியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தவர்.

மூன்றாவது புகைப்படம்:

1920 ஜனவரியில் காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்திற்கு பாரதி இரண்டாவது முறையாக வருகைதந்த போது சங்கத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க தனியாக நாற்காலியில் அமர்ந்த நிலையில் எடுத்துக் கொண்ட புகைப்படம். முதல் முறையாக 1919இல் வந்திருந்த போது பாரதி இச்சங்கத்தினரை புகழ்ந்து வாழ்த்துப்பா பாடியுள்ளார்.

நான்காவது புகைப்படம்:

1920இல் முந்திய புகைப்படம் எடுத்த அதே நாளில் இந்து மதாபிமான சங்கத்தினருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.
அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலம்) அ.மு.க.மு.க. கருப்பன்செட்டியார்., தமிழ் கடல் இராய.சொ., மகாகவி சுப்பிரமணிய பாரதியார்., சீர்திருத்த செம்மல் சொ.முருகப்பா., கி.நாராயணன் செட்டியார். நிற்பவர்கள் மு. நடராசன்., சிறுவன் பெயர் தெரியவில்லை.

இந்த இரண்டு புகைப்படங்களும் எடுத்த நாளில் நடந்ததைச் சொ.முருகப்பா  பின்னாளில் ஒரு கடிதத்தில் விவரிக்கிறார் "அன்று பாரதியை முதலில் தனியாக ஒரு படமெடுத்தார்கள், புகைப்படத்திற்கு உட்கார்ந்த பாரதி தமது கைத்தடியை நடுபாதியில் சிலம்பு சுற்றுவது போல் பிடித்துக்கொண்டிருந்தார். படம் எடுப்பவர் தடியை இப்படிப் பிடித்தால் நன்றாயிராதென்று சொன்னார். 'எனக்கு தெரியும் படமெடு' என்று கூறிவிட்டார் பாரதி. ஹிந்து மதாபிமான சங்க இளைஞர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட இரண்டாவது படத்தின் போதும் பாரதி தடியை நடுவில் பிடித்தவண்ணம் உட்கார்ந்தார். அன்பர்கள் சொல்லிப்பார்த்தார்கள் பாரதி உடனே தடியை அதன் கொண்டைப் பக்கம் பிடித்து, செங்கோல் பிடிப்பதுபோல் நுனியை மேல் பக்கம் நீட்டிப் பிடித்துக் கொண்டுவிட்டார்! அதிகம் சொன்னால் எழுந்து போய்விடுவாரென்று பயந்து அவர் இஷ்டப்படியே படமெடுத்துக் கொண்டோம்"

ஐந்தாவது புகைப்படம்:

யானையடித்த சம்பவத்திற்கு பிறகு உடல் சிறிது தேறிய நிலையில், தமது நண்பர் பாரதிதாசனுக்கு அனுப்ப எடுத்துக் கொண்ட புகைப்படம். இது 1921இல் சென்னை பிராட்வே ரத்னா கம்பெனியில் புகைப்பட கலைஞர் வி.எஸ்.சர்மா எடுத்த படம். இதுவே இன்று வரை பாரதியின் பிரதான புகைப்படமாக திகழ்கிறது.

மேற்கண்ட ஐந்து புகைப்படங்களும் பாரதியியல் முன்னோடி ஆராய்ச்சியாளர் ரா.அ. பத்மநாபன் தனது 'சித்திர பாரதி' புத்தகத்தில் இணைத்துள்ளார்.

ஆறாவது புகைப்படம்:

இது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படம். 
பாரதி புதுவையில் வாழ்ந்தபோது எடுக்கப்பட்ட தாடியோடு கூடிய படங்களில் உள்ள தோற்றங்களில் இருந்து, இந்தப் படத்தில் உள்ள தோற்றம் சற்றே மாறுபட்டுள்ளது. விடுதலையான பாரதி 1919 பிப்ரவரியில் முதன்முறையாகச் சென்னை சென்றபோது ஆங்கிலத்திலும் தமிழிலும் பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். பெரும்பாலான கூட்டங்கள் நுழைவுக் கட்டணம் வைக்கப்பட்டே நடந்திருக்கின்றன. இந்தக் காலத்தில் நீதிபதி மணி ஐயர் தலைமையில் 1919 மார்ச் 2 ஆம் நாள் ஆற்றவிருந்த நித்திய வாழ்வு (The Cult Of Eternal) சொற்பொழிவுக்கான துண்டுப் பிரசுரத்தில் இடம்பெறுவதற்காகச் சென்னை பிராட்வேயிலிருந்த ரத்னா கம்பெனி என்னும் போட்டோ ஸ்டுடியோவில் பாரதியார் படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படம் அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்ததாம். “ஆனால் பாரதியால் புகழப்பெற்ற இந்தப் படம் இப்போது எங்கும் கிடைக்கவில்லை” என்று ரா.அ.பத்மநாபன் 'சித்திர பாரதி'யில் குறிப்பிட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இந்த புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் படத்தோடு சேர்த்து பாரதியின் அறியப்பட்ட புகைப்படங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

வாழிய பாரதி புகழ்.

அன்பன் 
பழ.கைலாஷ்

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...