Followers

Thursday, September 16, 2021

பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்


    பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்

மிழகம் எத்தனையோ அறிஞர்களையும், கலைஞர்களையும், கவிஞர்களையும் ஈன்றெடுத்திருக்கிறது. இந்த வரிசையிலே முதன்மையாக வைத்து எண்ணத்தக்கவர்களுள் ஒருவர் "மகாமகோபாத்தியாயர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்". 

இப்பெருந்தகையாளரை நாடு நன்கறியும். ஏழு மாதங்கூடப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச் சிறப்பு இவருக்கு மட்டுமே உரியது. 

"இவர் பட்டம் பெறப் பிறந்தவரல்லர்; பட்டம் வழங்கப் பிறந்தவர்" என்பார் சோமலெ. 

"பண்டிதர்கள் உலகிற் பலர் இருப்பினும் அவருள் நம் கதிரேசனார் மணி போலத் திகழ்கின்றார். ஆதலின் அறிஞர்களாகிய உங்கள் முன்னிலையில் இக்கதிரேசனார்க்கு யாம் 'பண்டிதமணி' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்" என்று கூறி மு.கதிரேசச் செட்டியாருக்கு "பண்டிதமணி" என்னும் பெயரைச் சூட்டியவர் மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர். 

தமிழகத்தில் பொதுவாக "பண்டிதமணி" என்னும் பெயர் இவரையே குறிக்கும்.

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்!" என உலக ஒருமைப்பாட்டைப் பாடிய புலவர் பெருந்தகை கணியன் பூங்குன்றனார் பிறந்த பூங்குன்றை நாட்டின் தலைநகராம் மகிபாலன்பட்டியில் கி.பி.1881ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் முத்துக்கருப்பன் செட்டியார் - சிகப்பி ஆச்சியின் மகிமைமிகு பாலனாய் உதித்தார் கதிரேசச் செட்டியார். இவரது மூன்றாம் வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டார், அதனால் பிற சிறுவர்கள் போல் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை. ஏழாம் வயதில் அவரை அருகில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஆனால் அதுவும் சுமார் ஏழு மாதங்களே நீடித்தது. 

அக்காலத்தில் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதிலேதான் நாட்டுக்கோட்டை நகரத்தார் பலருக்கு ஆர்வம் இருந்ததே தவிர, பட்டப்படிப்பில் நாட்டமில்லை. அதனால் பண்டிதமணியின் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்பு பாதியிலே நின்று போனது. 

இதைப் பற்றி பண்டிதமணி, "யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக இருக்கும்பொழுது தான் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச்சிறுசிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. 'ஆ! இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன!' என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடு ஒரு சில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. அவ்வாறு அரிதிற் கிடைத்த திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது" என்கிறார். 

இதிலிருந்தே பண்டிதமணியின் அறிவாற்றலையும், கற்றலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் அறியலாம். குடும்பச் சூழலால் அவர் பதினோராவது வயதில் வியாபார நிமித்தமாக இலங்கைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருக்க, தந்தை இறந்த செய்தி கேட்டு தாய்நாட்டுக்குத் திரும்புகிறார். குடும்பப் பொறுப்பை ஏற்கிறார். ஆனால் இளம்பிள்ளை வாதத்தால் அவரது உடல் மென்மேலும் நலிவுற்றது. ஊன்றுகோலின் உதவியில்லாமல் நிற்கவோ, நடக்கவோ இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் உள்ளம் தளராது தாமே இலக்கிய நூல்களைப் பயில ஆரம்பித்தார். 

ஆனால் இலக்கண நூல்களைப் பயில்வது மிகக் கடினமாக இருந்தது. அந்நிலையில் முதுபெரும் புலவர் மதுரை அரசன் சண்முகனாரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. பண்டிதமணியின் மீது பேரன்பு பூண்ட சண்முகனார், பண்டிதமணியின் இல்லத்திலேயே தங்கி அவருக்கு இலக்கணத்தில் இருந்த ஐயங்களைப் போக்கியருளினார். 

தொடர்ந்து பல இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்றுத்தேர்ந்து சிறந்த புலவரானார் பண்டிதமணி. சண்முகனாரின் மூலம் அக்காலத்தில் முதுபெரும் தமிழறிஞர்களாகப் போற்றப்பட்ட மு.ரா. கந்தசாமிக் கவிராயர், மறைமலையடிகள், ஞானியாரடிகள், உ.வே.சாமிநாதையர் போன்ற அறிஞர்களின் நட்புக் கிடைத்தது. அறிஞர்களது தொடர்பால் பண்டிதமணியின் இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. சைவ சமய சாத்திரஙகளைப் பயில வேண்டும் என்ற பெரு விருப்பமும் அவருக்கு உண்டானது. அவற்றை தாமே பயில்வதை விட, சமயத்துறையில் வல்ல பெரியார் ஒருவர் மூலம் பயிலுதல் சிறப்புத் தரும் என்று கருதினார். அப்போது காரைக்குடியில் வாழ்ந்த சிறந்த சிவபக்தரும், சைவ அறிஞருமான "சொக்கலிங்க ஐயா"வை நாடி, அவரிடம் இரண்டு ஆண்டுகள் சைவ சாத்திரங்களைப் பயின்றார். 

இதே சமயத்தில் பண்டிதமணிக்கு வடமொழியும், வடநூல் சாத்திரங்களும் பயிலும் எண்ணம் தோன்றியது. ஆகவே அக்காலத்தில் சிறந்த வடமொழி வல்லுநராக விளங்கிய தருவை நாராயண சாஸ்திரியாரை அணுகித் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். சுமார் ஐந்து ஆண்டுகள் அர்த்தசாஸ்திரம், விதுர நீதி, சுக்ரநீதி போன்ற சாத்திர நூல்களையும், பாணினி போன்ற இலக்கணங்களையும், சாகுந்தலம், மேகதூதம் போன்ற காவியங்களையும் கற்றுத் தேர்ந்தார். 

பண்டிதமணியின் அறிவும் திறனும் கண்டு தமிழறிஞர்கள் பலரும் அவரிடம் நட்பு கொண்டனர். மகாவித்வான் ரா. ராகவையங்கார் அவரை நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கி நடத்திவந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் அறிமுகப்படுத்தினார். தேவர், மதுரை தமிழ்ச் சங்கத்தை நடத்தும் புலவர்களுள் ஒருவராகப் பண்டிதமணியையும் ஏற்றுக் கொண்டார். பண்டிதமணியும் தம் உடல்நிலைமையையும் பொருட்படுத்தாது அச்சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தார். அதேசமயம் அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய தமது செட்டிநாட்டுப் பகுதியிலும் இதே போன்றதொரு சங்கம் இருந்தால், அது மேலும் அறிவைப் பெருக்க்கவும், தமிழையும், சமயத்தையும் வளர்க்கவும் உதவுமே என்று நினைத்தார். 

ஊருக்குச் செல்லும் போதெல்லாம் மேலைச்சிவபுரி வள்ளல் வ.பழ.சா.பழநியப்பச் செட்டியாரைக் கண்டு இலக்கியம், சமயம், சாத்திரம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது பண்டிதமணியின் வழக்கம். அவ்வாறு பேசும்போதெல்லாம் நம் பகுதியிலும் ஒரு சங்கம் அமைக்க வேண்டும், அதன் மூலம் தமிழையும், சைவத்தையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார். இருவரது முயற்சியால் 1909ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் மேலைச்சிவபுரியில் 'சன்மார்க்க சபை' நிறுவப்பட்டது. 

இவரது பெருமையையும் அறிவுத்திறனையும் கண்ட செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், தனது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவரைத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்குமாறு வேண்டினார். முதலில் மறுத்தாலும் பின்னர் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு சுமார் 12 ஆண்டுகாலம் அக்கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் பணியாற்றினர். 

சொற்பொழிவு, நூல் பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு செய்தல் எனத் தமிழ் இலக்கியத்தின் பல்துறைகளிலும் ஆர்வம் காட்டினார். 

வடமொழியிலிருந்து சிறந்த நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்த முன்னோடி இவர். மிருச்சகடிகத்தை மண்ணியல் சிறுதேராகவும், கௌடிலீயம் என்னும் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை பொருள் நூலாகவும், சுக்கிர நீதி, சுலோசனை, உதயண சரிதம், மாலதி மாதவம், பிரதாப ருத்ரீயம் போன்ற நூல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். 

மேலு‌ம் இலக்கியக் கட்டுரைகள், சமயக்கட்டுரைகள், திருவாசக உரைக் கட்டுரையான கதிர்மணி விளக்கம் போன்ற உரைநடைக் கோவை நூல்களைப் படைத்திருப்பதுடன், தன் பொறுப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழிசைப் பாடல் வரிசை போன்ற நூல்களையும் பதிப்பித்திருக்கிறார். 

வித்துவான் வயிநாகரம் அ.இராமநாதன் செட்டியாரால் தொகுத்து வைக்கப்பட்ட நாட்டுக்கோட்டை நகரத்தார் திருக்கோயில் திருப்பணிகள் பட்டியல் 1953ஆம் ஆண்டு மேயர் ஆர்.இராமநாதன் செட்டியாரின் உதவியால் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியாரால் சீரிய முறையில் திருத்தி விளக்கி "நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. 

திருவாசகம், திருச்சதகம், நீத்தல்விண்ணப்பம், திருவெம்பாவைப் பகுதிகட்கு இவர் எழுதிய திருப்பு 'கதிர்மணி விளக்கம்' உரை நூல்கள் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் இவரின் கொடையாகும். 

சைவ சமயத்தின் மீது அளவிலாப் பற்றுக் கொண்ட பண்டிதமணி, பலவான்குடியில் மணிவாசகச் சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கினார். 

பண்டிதமணியின் தமிழ்ச்சேவையையும், சமயப் பணியையும் பாராட்டி ஆங்கிலேயே அரசு அவருக்கு "மகாமகோபாத்தியாய" என்ற பட்டத்தை வழங்கியது. உ.வே.சாமிநாதையருக்கு பிறகு இப்பட்டத்தை பெற்றவர் இவரே. 

மேலும் சைவ சித்தாந்த வித்தகர், முதுபெரும் புலவர், தமிழ் ஞாயிறு என பல்வேறு பட்டங்களை தமிழுலகம் அவருக்கு அளித்து சிறப்பித்தது. 

தமிழ், வடமொழி, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் கொண்ட பண்டிதமணி கி.பி 1953ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் அமரரானார். 

மகிபாலன்பட்டியில் நினைவு மண்டபம் அமைத்தும், அவரின் நூல்களை நாட்டுடைமையாக்கியும் தமிழக அரசு அவருக்கு சிறப்புசெய்துள்ளது. 


அன்பன்
பழ.கைலாஷ் 


[உதவிய நூல் "பண்டிதமணி" - சோமலெ, இன்பநிலையம்]

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...