Followers

Showing posts with label தேவகோட்டை வரலாறு. Show all posts
Showing posts with label தேவகோட்டை வரலாறு. Show all posts

Wednesday, September 17, 2025

THE DEVAKOTTAI ZAMINDAR

- Kailash PL -



          The Devakottai Zamindar family is considered one of the most notable among the Nattukottai Nagarathars. AL.AR. Ramasamy Chettiar was the first Zamindar of Devakottai.


AL.AR.Ramasamy Chettiar 

As a prominent banker AL.AR. Ramasamy Chettiar was a close friend of King Bhaskara Sethupathi of Ramanathapuram. While the Ramanathapuram Zamin was under court administration, Chettiar provided crucial financial assistance to the minor Bhaskara Sethupathi. Around 1870A.D., he had lent the king approximately three and a half lakh rupees.


​When Bhaskara Sethupathi came of age, one of his relatives filed a case in the Madras High Court seeking a stay order, stating, "Bhaskara Sethupathi is a big spender and has borrowed several lakhs from Ramasamy Chettiar of Devakottai. Therefore, the kingdom should not be handed over to him". When Chettiar was examined as a witness in the case, he stated, "It is our duty to host the king. We will always do so. We have not given him any loan". As proof, he showed his account books in court. The amounts given to Bhaskara Sethupathi were not debited in the king's name but were instead listed as expenditures made in Ramasamy Chettiar's own name. The petition was thus dismissed, and the kingdom was handed over to Bhaskara Sethupathi.


​In gratitude for helping him regain his kingdom, King Bhaskara Sethupathi granted AL.AR. Ramasamy Chettiar, Twenty two and a half villages around Devakottai and and bestowed upon him the official status of "Devakottai Zamindar."


The Devakottai Zamindar Family had banking business and spinning mills. They traded in East Asian countries such as Burma, Sri Lanka, Malaysia, Singapore, and Vietnam. Notably, A.M.Murugappa Chettiar, founder of the great Murugappa Group, worked as an agent of Zamindar initially.


The Devakottai Zamindars were renowned patrons of temple renovation, undertaking extensive work in numerous sacred places, including Uppur, Rameswaram, Uthirakosamangai, KalaiyarKovil, ThirupandiKodumudi, AvudaiyarKovil, PeriyaNainar Kovil, Vaigal, Madurai, Thirupparankundram, Devakottai, Karaikudi and Koviloor.


​The family also served as trustees for major temples, including the Madurai Meenakshi Amman Temple, the Rameswaram Ramanathaswamy Temple, and the KalaiyarKovil Kaleeswara Temple.


The Devakottai Zamindars were also pioneers in public service. When Rajaji Hospital in Madurai was first constructed during the British era, the Devakottai Zamindar family funded the construction of its very first building. They went on to establish a veterinary hospital, school, and ponds in Devakottai. Notably, they founded Chettinad's first girls' elementary school at their palace in Devakottai.They also provided a large piece of land to the government for the construction of a TB hospital in Somanathapuram.


The Devakottai Zamin has three mansions in Devakottai. The first is their ancestral home, which is about 250 years old. The second, "Swarnavalli Vilas," was built around 1915A.D., and the third, "Lakshmi Vilas," was built in 1928A.D.


This article gives a short history of the Devakottai Zamindars. There are many more historical facts, but i have summarized only a few here.

Wednesday, July 16, 2025

தேவகோட்டை வெள்ளையன் ஊரணி குறித்து ஒரு சுவாரசியமான தகவல்.






தேவகோட்டை "வெள்ளையன் ஊரணி" இன்று ஊர் நடுவே மிகப்பெரிய சாக்கடையாக உள்ளது, சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து கழிவுநீர் ஊரணியில் கலக்கின்றது.

ஒரு காலத்தில் இந்த வெள்ளையன் ஊரணி தேவகோட்டை மக்கள் தாகத்தை தீர்க்கும் குடிதண்ணீர் ஊரணியாக இருந்துள்ளது. பின்னர் குளிக்கும் குளமாக இருந்துள்ளது, அதன்பின்னர் மலம் ஜலம் கழித்துவிட்டு கைகால் கழுவும் இடமாக இருந்தது, தற்போது அதற்கும் லாயக்கற்று இருக்கிறது.

1911ஆம் ஆண்டு வெள்ளையன் ஊரணி கலங்காதகண்ட விநாயகர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த அன்றைய திருவாடானை கோர்ட் நீதிபதி அவர்கள், ஊரணியில் பல் துலக்கிய பெண்கள் இருவரை கண்டித்து அபராதம் விதித்துள்ளார். அபராதம் என்றால் பணம் எதுவும் கட்ட சொல்லவில்லை, அவர்களை பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும்படி செய்துள்ளார். இது அன்றைய வைசியமித்ரன் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது.

வைசியமித்ரன் செய்தி பின்வருமாறு,

"வெள்ளையனூருணி விபரம்,

திருவாடானை நீதிபதியவர்கள் இவ்வூருக்கு வந்த போது, வெள்ளையனூருணியில் வந்திறங்கிப் பல் விளக்கி ஆபாசஞ் செய்தவர்களிருவருக்கு அபராதம் போடும்படி உத்தரவு செய்தார்களாம், பெண்கள் சிலருக்கும் அபராதமாகக் கோயிலுக்குத் தேங்காயுடைக்க செய்தார்களாம். எல்லோருக்கும் இது எச்சரிக்கையும், படிப்பினையுமாகும். இவ்வூருணியின் தண்ணீர் பானத்திற்கே உபயோகப்படுத்துவதாலும், அதன்கரையில் வசிப்போர்கள் காலையில் காவற்காரன் வருவதற்கு முன்னமேயே, அந்நீரில் ஸ்நானம் பண்ணுவதும், புடவைகளை நனைப்பதும், முதலிய அடாத செய்கைகளை விடியுமுன்பே செய்துவிட்டுப் போய் விடுவதாகக் கேள்வியுண்டாகையாலும், இவைகளை யெல்லாம் நிறுத்துவதற்கு, அவ்வூருணிக்கு இப்போது அமைந்திருக்கும் இரும்பு வேலியோடு இரும்பு கதவுகள் போட்டுவிட்டால் வெகு நலமாகும். அன்றியும், பலகைகளில் "ஆபாசஞ் செய்வோர் அபராதத்திற்குள்ளாவர்" என்று அறிவிப்பு எழுதி தொங்கவிடப்பட வேண்டும். இப்படி செய்தால் எவ்வழியும் அவ்வூருணித் தண்ணீருக்கு கெடுதி நேராது."


ஒரு காலத்தில் பல் துலக்கியதற்கும் புடவைகளை நனைத்ததற்கும் அபராதம் விதித்த ஊரணியின் நிலைமை இன்று படுமோசமாக இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

- பழ.கைலாஷ் 

Monday, January 27, 2025

சுதந்திரப்போராட்ட வீரர் D.R.அருணாசலம்

 




D என்பது தேவகோட்டை, R என்பது இராமநாதன் செட்டியார்


D.R.அருணாசலம் அவர்களின் தந்தை இராமநாதன் செட்டியார் திருகாளஹஸ்தி கோயில் திருப்பணியாளர்.


தேவகோட்டையில் பெரும் செல்வ குடும்பத்தில் பிறந்த D.R.அருணாசலம், மகாத்மா காந்தி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.


 1941-ல் தனிநபர் சத்தியாகிரகம் செய்தமைக்காகக் கைது செய்யப்பட்டார். பின்னர் 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். இவரது தூண்டுதலில் இவரது நண்பர்களால் தேவகோட்டை நீதிமன்றம் கொளுத்தப்பட்டது.

 மதுரை, அலிப்புரம், வேலூர், தஞ்சாவூர் சிறைச்சாலைகளில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். 


இந்திய விடுதலைக்குப்பின், இந்திய அரசு இவரது நாட்டுத் தொண்டைப் பாராட்டித் தாமிரப்பட்டயம் அளித்துள்ளது. 


தேவகோட்டையில் 1941-ல் மாபெரும் தமிழிசை மாநாட்டை இராஜா சர். அண்ணாமலை செட்டியார் தலைமையில் இவர் முன்னின்று நடத்தினார்.


லூயிஃபிஷர் எழுதிய 'நான் கண்ட காந்தி', ஜி. ராமச்சந்திரன் எழுதிய 'காந்திஜி வாழ்க்கையில் சில ரசமான சம்பவங்கள்' முதலிய சில நூல்களை ஆங்கிலத்திலிருந்தும் சில நூல்களை இந்தியிலிருந்தும் இவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 


- பழ.கைலாஷ்

Friday, January 5, 2024

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்



                    இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து இராமேசுவரம் செல்லும் வழியில் 15கி.மீ தொலைவில் கிழக்கு கட‌ற்கரை சாலையில் உள்ள ஊர் உப்பூர் சத்திரம் என்னும் உப்பூர். இங்கு இராமநாதபுர சமஸ்தான தேவஸ்தானத்திற்குரிய அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் உள்ளது.

அருள்மிகு வெயிலுகந்த விநாயகர்


இராமேசுவரம் புனித யாத்திரை செல்லும் மெய்யன்பர்கள் உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கி செல்வது நியதி. இதுபோல் காசி யாத்திரை செல்லும் மெய்யன்பர்களும் இங்கிருந்து தான் தொடங்குவார்கள். உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கி, தேவிப்பட்டிணம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி தரிசித்து பின்னர் இராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி மண் எடுத்துக் கொண்டு அலகாபாத் திருவேணி சங்கமத்தில் தீர்த்தமாடி காசி அடைவார்கள். 

சீதையை மீட்க வானர சேனைகளுடன் சேதுக்கரை நோக்கி இராமர் செல்கையில் உப்பூர் வன்னிமரத்தடியில் அமைதியான சூழலில் வீற்றிருந்த விநாயகரை வணங்கி சென்றுள்ளார் என்கிறது தலபுராணம்.

மேலும் இக்கோவில் குறித்த பல்வேறு கதைகள் தலபுராணத்தில் உள்ளன அதில் ஒன்று சிவபெருமானால் சாபம் பெற்ற சூரியன், பரிகாரம் தேட முற்பட்டு வன்னி மந்தார வனம்(உப்பூர்) என்ற ஊரில் உள்ள விநாயகரை நோக்கி தவத்தில் ஈடுபட்டார். சூரியனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். வெய்யோன் தவத்தை விநாயகர் உகந்ததால் (ஏற்றுக்கொண்டதால்) "வெயில் உகந்த விநாயகர்" என்ற பெயர் நிலைத்தது. இவ்வாறு பல புராண கதைகள் இருந்தாலும் வரலாற்று படி பார்த்தோமேயானால்.
 
அக்காலத்தில் தென்னிந்திய மக்கள் மட்டுமில்லாது வட இந்திய பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் ஆண்டுதோறும் இராமேசுவரத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டு வந்துள்ளனர். மழையிலும் பனியிலும் நனைந்து வெய்யிலிலே உலர்ந்து வருடத்தின் பல மாதங்கள் கால்நடையாகவே நடந்து இராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர். இதை கண்ட தேவகோட்டை இராம.அழகப்ப செட்டியார் கி.பி1800கள் தொடக்கத்தில் உப்பூரில் ஒரு அன்னதான சத்திரம் நிறுவி, ஊருணி அமைத்து நாள்தோறும் யாத்திரிகர்களுக்கு பருக நீரும், உண்ண உணவும், இளைப்பாறுவதற்கு உறைவிடமும் வழங்கி வந்தார். இதே கால கட்டத்தில் இவரின் உறவினரான வீர.இராமநாதன் செட்டியார் தனுஷ்கோடியில் ஒரு அன்னச்சத்திரம் நிறுவி அன்னம் பாலித்து வந்தார்(1964-ல் தனுஷ்கோடி சத்திரம் புயலில் அழிந்துவிட்டது)

உப்பூர் சத்திரம்
       

உப்பூரில் அழகப்ப செட்டியார் சத்திரம் நிறுவியதாலேயே இவ்வூர் "உப்பூர் சத்திரம்" என்று பொதுவாக யாத்திரிகர்களால் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு மரத்தடியில் இருந்த விநாயகரை பக்தர்கள் வணங்கி சென்றுள்ளனர்.

அழகப்ப செட்டியாருக்கு நான்கு புதல்வர்கள், அதில் மூன்றாம் மற்றும் நான்காம் புதல்வர்களான அழ.அருணாசலம் செட்டியார் மற்றும் அழ.சிதம்பரம் செட்டியார் ஆகிய இருவரும் தொடர்ந்து அன்னச்சத்திரத்தை நிர்வகித்து வந்தனர். 

மூன்றாம் புதல்வரான அருணாசலம் செட்டியார் உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு கி.பி1862-ல் கல்குறடு(கல்மேடை) அமைத்து, தினசரி பிராமணர்களை கொண்டு விநாயகருக்கு பூசைகள் நடத்த தொடங்கினார். இச்செய்திகள் கோயிலிலே கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் அழ.அருணாசலம் செட்டியார் நாட்டுக்கோட்டை நகரத்தார் சிலருடன் சேர்ந்து கோவிலூர் கொற்றவாளீசுவரர் கோவில் மதில் சுவரை எழுப்பியுள்ளார். 

உப்பூர் பிள்ளையார் கோயில் கல்வெட்டு
    

பின்னர் அழ.அருணாசலம் செட்டியாரின் ஒரே புதல்வரான அழ.அரு.இராமசாமி செட்டியார் தற்போது நாம் காணும் கற்கோயிலை எழுப்பினார். பரிவார தெய்வங்களுக்கான சன்னிதிகளையும் அமைத்தார். சேதுபதி மன்னருக்கும் தமது மூதாதையர்களுக்கும் சதா சேவிப்பு சிலைகள் வைத்தார்.


 அழ.அருணாச்சலம் செட்டியார்
   

அழ.சிதம்பரம் செட்டியார்
   

அழ.அரு.இராமசாமி செட்டயார்
    
 
இராமசாமி செட்டியார் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நெருங்கிய நண்பராக இருந்தார்.  இவர் ஒருமுறை பாஸ்கர சேதுபதிக்கு செய்த பேருதவியால் சேதுபதி மன்னர் இவருக்கு 22 1/2 கிராமங்களை கொடுத்து தேவகோட்டை ஜமீந்தாராக ஆக்கினார். ஜமீந்தார் அழ.அரு.இராமசாமி செட்டியார் சிவப்பெருஞ்செல்வராக வாழ்ந்து இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில், காளையார்கோவில், திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேசுவரர் கோயில் ஆகிய கோயில்களுக்கு செம்மையான திருப்பணி செய்தார்.

அழ.அரு.இராமசாமி செட்டியார் கட்டிய உப்பூர் விநாயகர் கோயிலின் உள்ளே வெயில் வருவதற்கான வழி இல்லாமல் முழுவதும் அடைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது. சில மாதங்களில் கோயிலில் விநாயகரை சுற்றியுள்ள மேற்கூரை தாமாக இடிந்துவிழுந்தது. இக்காலத்தில் வயது மூப்பு காரணமாக ஜமீந்தார் அழ.அரு.இராமசாமி செட்டியாரும் இறந்துவிட அவரின் மூத்த மகனான அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியார் கோயில் முழுமையும் புனரமைத்து விநாயகர் மேல் வெயில் படும்படி அமைத்து 10.02.1905-ல் இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்தார்.

அதை தொடர்ந்து தமது சகோதரர்களுடன் இணைந்து அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியார் ஆவணி மாத பத்து நாள் திருவிழாவை தொடங்கிவைத்தார். விநாயகருக்கு வெள்ளியில் பெருச்சாளி, மயில், இடபம், காமதேனு, குதிரை, சிம்மம், யானை,கேடகம், ரதம் ஆகிய வாகனங்களும் உற்சவ மூர்த்திகளும் நகைகளும் அழ.அரு மற்றும் அழ.சித குடும்பத்தினரால் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் சொன்ன புராண கதைகள் "லவணபுரம் என்னும் உப்பூர் புராணம்" என்கிற தலபுராண நூலில் உள்ளன. இது தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயரால் கி.பி1918-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு ஜமீந்தார் அழ.அரு. இராம.அருணாசலம் செட்டியாரால் வெளியிடப்பட்டுள்ளது. சொர்ணநாதபுரம் பழனியப்ப ஐயா "வெயிலுகந்த விநாயகர் பதிகம்" இயற்றியுள்ளார்.

உப்பூர்ப்புராணம்
    

வெயிலுகந்த விநாயகர் பதிகம்
    

இன்றுவரை சுமார் 180 ஆண்டுகளுக்கு மேலாக உப்பூர் சத்திரம் சிறப்பாக இயங்கிவருகிறது. தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு மற்றும் அழ.சித குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

விநாயகருக்கு தினசரி நான்கு வேளைகள் பூசை நடக்கின்றன. அதில் இரண்டு வேளை இராமநாதபுரம் சமஸ்தானமும் இரண்டு வேளை தேவகோட்டை ஜமீந்தாரும் நடத்தி வருகின்றனர்.

ஆவணி சதுர்த்தி திருவிழாவில் விநாயகர் திருமணம் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தினரால் கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு இராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் முன்னிலையில் கும்பாபிஷேம் செய்யப்பெற்றது.

- பழ.கைலாஷ்

Sunday, August 8, 2021

ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டை.

ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டை

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் 'இந்திய தேசிய காங்கிரஸ்' மாநாடு நடந்தது. அதில் பேசிய மகாத்மா காந்தி "செய் அல்லது செத்து மடி" என்று முழங்கி 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அன்று இரவு காந்தி, பட்டேல், நேரு மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்திய தேசமே கொந்தளித்தது. இதற்கு பிறகே விடுதலை போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது. ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியதால் இது 'ஆகஸ்ட் புரட்சி' என்றும் அழைக்கப்பட்டது.

எங்கு நோக்கினும் கடையடைப்பு, ஊர்வலம், கண்டனக் கூட்டம்! "வெள்ளையனே வெளியேறு"  என்ற முழக்கம் இமயம் முதல் குமரி வரை எதிரொலித்தது!

தமிழக மக்களும் இந்த போராட்டத்தில் எந்த தயக்கமும் இன்றி கலந்துகொண்டனர். வரலாற்று புகழ்மிக்க இந்த ஆகஸ்ட் புரட்சியில் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை பகுதி மக்களும் வீரம் கொண்டு முனைந்து நின்றனர். தேச பக்தியின் உறைவிடமாக திகழ்ந்தது தேவகோட்டை.

தேவகோட்டை மற்றும் காரைக்குடி அடங்கிய செட்டிநாட்டு பகுதியில் தேசபக்தர்களான 'தமிழ் கடல்'இராய.சொ., 'சீர்திருத்த செம்மல்' சொ.முருகப்பா., 'கம்பனடிப்பொடி' சா.கணேசன்., காந்தி மெய்யப்ப செட்டியார், டி.ஆர்.அருணாசலம்., சின்ன அண்ணாமலை., அமராவதிபுதூர் பிச்சப்பா சுப்பிரமணியம்., பாகனேரி ஆர்.வி.சாமிநாதன்., வேலாயுதம் செட்டியார்., 'இராட்டிண புலவர்'என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்ட ஆசிரியர் முருகன் ஆகியோர் மக்கள் மத்தியில் தேசபக்தியை உரமிட்டு வளர்த்து வந்தனர்.



அன்று ஆகஸ்ட் 9, காலை தேவகோட்டையில் தேசபக்தர்களால் உருவாக்கப்பட்ட 'சரஸ்வதி வாசக சாலை'யில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை நாளிதழ்களில் படித்த இளைஞர்கள் கொந்தளித்தெழுந்தனர். தேவகோட்டை நகர காங்கிரஸ் தலைவரான எம்.ஜி.முகுந்தராஜ ஐயங்காரும் செயலாளரான கே.ஆர்.எஸ்.முத்துவும் கலந்தாலோசித்து சில அவசர முடிவுகளை எடுத்து உடனடியாக செயலில் இறங்கினர். 

சின்ன அண்ணாமலை, பி.ஆர்.இராமசாமி, ஆர்ச் அண்ணாமலை, காந்தி நாராயணன் செட்டியார், டைரி அருணாசலம், தொண்டர் முத்தையா ஆகியோரோடு இளைஞர்கள் பலர் வீதியில் இறங்கி காந்தி, பட்டேல், நேரு ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்திகளை முழங்கினர்.

தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கேட்ட மக்கள் வருந்தினர், கோபம் கொண்டனர். பிரிட்டிஷ் அரசை கண்டித்து சின்ன அண்ணாமலை தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஐம்பது பேருடன் தொடங்கிய ஊர்வலம் சில தெருக்களை கடக்கும் முன் ஐநூறு பேராக உருவெடுத்தது.

மாலை நான்கு மணிக்கு தேவகோட்டை ஆர்ச் பகுதியில் தொடங்கிய மற்றோரு கண்டன ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மாலை ஆறு மணிக்கு ஜவஹர் மைதானத்தை அடைந்தது ஊர்வலம். அங்கு நடந்த கூட்டத்திற்கு அழ.சுப.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தேவகோட்டையை சேர்ந்தவர்களுள் இவரே நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர்.

ஆகஸ்ட் ஒன்பதை தொடர்ந்து அடுத்த சில தினங்கள் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக பொது கூட்டங்கள் நடத்தப்பட்டது. அக்காலத்தில் சிறந்த பேச்சாளர்களாக இருந்த சின்ன அண்ணாமலை மற்றும் கே.ஆர்.எஸ்.முத்து அனல்பறக்க உரையாற்றினர். கே.ஆர்.எஸ்.முத்து ஒரு கால் ஊனமுற்றவர், ஆனால் தம் நாவாற்றலால் மக்கள் மண ஊனத்தை அகற்றி விடுதலை வேட்கையை ஊன்ற செய்தவர்.

அதிர்ந்து போன பிரிட்டிஷ் அரசு சின்ன அண்ணாமலை., எஸ்.இராமநாதன்., டி.ஆர்.அருணாச்சலம்., பி.ஆர்.இராமசாமி., கே.ஆர்.எஸ்.முத்து ஆகிய ஐவரையும் கைது செய்ய ஆகஸ்ட் 15ஆம் தேதி 'கைது வாரண்ட்' பிறப்பித்தது. கைது வாரண்ட் பிறப்பித்ததை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஐவரும் காரைக்குடியில் ஒரு வீட்டில் தலைமறைவாகினர்.

அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை ஒன்பது மணியளவில் தலைமறைவாக இருந்த வீட்டை விட்டு கிளம்பி பக்கத்து தெருவில் உள்ள ஐக்கிய இளைஞர் சங்கத்திற்கு சென்று பத்திரிகை படித்து விட்டு வருவதாக சின்ன அண்ணாமலையும் எஸ்.இராமநாதனும் சென்றனர்.

அவர்கள் இருவரையும் மப்டி-யில் இருந்து கவனித்துக் கொண்டுயிருந்த குருசாமி நாயுடு மற்றும் காந்திமதிநாத பிள்ளை ஆகிய காவலர்கள் மேல் இடத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சற்று நேரத்தில் இரண்டு லாரிகளில் பறந்து வந்த போலீஸார் சங்க கட்டிடத்தை சுற்றி வளைத்தனர் சின்ன அண்ணாமலையையும் எஸ்.இராமநாதனையும் கைது செய்து திருவாடானை சிறையில் அடைத்தனர். அன்றிரவே கே.ஆர்.எஸ்.முத்து தலைமையில் நான்கு இளைஞர்கள் தேவகோட்டை சப் கோர்ட் முன் மறியலில் ஈடுபட தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

அடுத்த நாள் அதாவது அந்த கொடூர சம்பவம் நடந்தேறிய நாள், ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை ஒன்பது மணியளவில் அரு.சிற்சபேசன், சித.பெரி.சிதம்பரம், சௌ.சே.இராமநாதன், ஆர்ச் அண்ணாமலை ஆகிய நான்கு இளைஞர்கள் 'சரஸ்வதி வாசக சாலை'யிலிருந்து வீரநடைப்போட்டு, நெற்றியில் வீரத்திலகத்துடன், வந்தே மாதரம்! வந்தே மாதரம்! என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டு 'கோர்ட்' நோக்கி நடந்தனர்.

தேவகோட்டை 'ஆர்ச்' அருகே இருந்த 'சப் கோர்ட்' வாசலை அடைந்ததும் "ஆங்கிலேயரின் அநீதியை நிலைநாட்டும் நீதி மன்றங்களை பொதுமக்களும், வழக்கறிஞர்களும் ஊழியர்களும் புறக்கணிக்க வேண்டும்" என்று முழங்கினர்.

சுற்றி கூடி நின்ற நூற்றுக்கணக்கான பொதுமக்களும் சேர்ந்து கோஷம் போட தொடங்கினர். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த குருசாமி நாயுடுவும் காந்திமதிநாத பிள்ளையும் மக்களிடையே மாட்டிக் கொண்டனர். காட்டிக் கொடுத்த இருவரையும் மக்கள் அடித்து நொறுக்கினர். அதிலிருந்து தப்பிச்சென்ற காந்திமதிநாத பிள்ளை கோர்ட் பகுதியிலிருந்து ஒன்றரை மயில் தொலைவிலுள்ள திண்ணஞ் செட்டி ஊருணி தென்கரையில் இருந்த தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்கு சென்று "கோர்ட் முன் பெரிய கலவரம் நடந்து கொண்டு இருப்பதாகவும், குருசாமி நாயுடுவை மக்கள் அடித்து கொன்று விட்டதாகவும்" சொன்னான்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீராச்சாமி ஐயரும் சப் இன்ஸ்பெக்டர் கமருதீனும் மாஜிஸ்திரேட் 'வாக்கர்'-ஐ சந்தித்து நடந்ததை கூறி ஸ்டேஷனில் இருந்த மொத்த பன்னிரெண்டு போலீசாரையும் கூட்டிக் கொண்டு 'ஆர்சு' பகுதிக்கு வந்தனர். உண்மையில் குருசாமி நாயுடு கொல்லப்படவில்லை, போலீஸ்காரர்களை கண்ட மக்கள் மேலும் ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.

தேவகோட்டை தாலுகா மாஜிஸ்திரேட் 'வாக்கர்' என்கிற ஆங்கிலேய கொடூரன், என்ன? ஏது? என்று எதுவும் விசாரிக்காமல் அனைவரையும் சுட உத்தரவிட்டான். அவனின் உத்தரவுப்படி பன்னிரெண்டு போலீசாரும் நிரபராதிகளான மக்களை சுட தொடங்கினர். முதலில் 'வி.தர்மராஜன்' என்பவர் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார், பலர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இச்சமயத்தில் மேலும் கோபம் கொண்ட தேச பக்தர்கள் புதிதாக ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த பளிங்கு மாளிகையான 'தேவகோட்டை சப் கோர்ட்'-ஐ தீயிட்டு எரித்தனர். அரசாங்கம் நடத்திவந்த பேருந்து நிறுவனமான 'சிம்சன் கம்பேனி' பேருந்துகளையும் எரித்தனர்.

குண்டடிப்பட்ட ஒருவர் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டுக் கொண்டிருந்தார் இதை பார்த்த பதினெட்டு வயதுகூட நிரம்பாத இளைஞன் கிருஷ்ணன் தண்ணீர் எடுக்க சென்றான்.

தண்ணீர் எடுக்க சென்ற அந்த இளைஞனையும் சுட்டு வீழ்த்தினர் கொடூர குணம் படைத்த போலீசார்.

துப்பாக்கி குண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது, நிலைமை மோசமானதை கவனித்த போலீசின் கையாளான மோட்டர் மெக்கானிக் ஒருவன் குறுக்கு பாதையில் காரைக்குடிக்கு ஓடிச் சென்று காரைக்குடி நகர் காவல் நிலையத்தில் நடந்ததை தெரிவித்தான். உடனே காரைக்குடி போலீசார், அங்கு தயாராக இருந்த மலபார் போலீசார் நாற்பது பேரை இரண்டு லாரிகளில் ஏற்றி தேவகோட்டைக்கு அனுப்பிவைத்தனர்.

கலவரமும் துப்பாக்கிச் சூடும் நடந்த 'ஆர்ச்' பகுதி தேவகோட்டையின் நுழைவில் இருந்ததால், ஊரில் நுழைந்ததும் மலபார் போலீசார் கண்மண் தெரியாமல் பொதுமக்களை சுட்டு வீழ்த்தினர். திடீரென்று புதிய போலீஸ் படை வந்ததையும் கண்மண் தெரியாமல் சுடுவதையும் கண்ட பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து, சிதறி ஓடத்தொடங்கினர்.

ஆங்கிலேயரின் இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் அந்த இடத்திலேயே பிணமாயினர்! நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கீழே சாய்ந்தனர்.

போலீசார் சாலையில் கிடந்த ஐம்பது பிணங்களில் ஆறை மட்டும் தூக்கி தங்கள் பஸ்சின் மேற்பகுதியில் போட்டனர். மேலும் சுமார் ஐம்பது பேரைக் கைது செய்து லாரிகளில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றனர்.

தேவகோட்டை நகரம் அன்றிரவு சுடுகாடு போலத் தோன்றியது. ஆர்ச் பகுதியில் எங்கு நோக்கினும் ரத்தமும் பிணங்களும் படுகாயமுற்றோர்களும் கிடந்ததால் போர்க்களம் போல் காட்சியளித்தது.

மலபார் போலீசாரால் சுடப்பட்டு மாண்ட 50 பேரில் உடனடியாக அடையாளம் காணப்பட்டவர்கள்; 1.வி.தருமராஜன், 2.கிருஷ்ணன், 3.மணிவண்ணன், 4.பால்க்கார நடேசன்,  5.சாவல்கட்டு,  6.மணியன்.

மறுநாள், ஆகஸ்ட் 18ஆம் தேதி மேலும் பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தேவகோட்டை வட்டாரத்தில் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தி போராட்டம் நடத்திய தீவிரவாதிகளாக  டி.ஆர்.அருணாச்சலம், ஆர்ச் அண்ணாமலை, அள.சுப.திருநாவுக்கரசு, முகுந்தராஜ ஐயங்கார், கே.எம்.வல்லத்தரசு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேவகோட்டை நகரில் 144 தடை உத்தரவை மீறி ஊர்வலம் நடத்தியது, பொதுக்கூட்டம் நடத்தியது, சப் கோர்ட் முன்னால் மறியல் செய்தது, கலவரம் புரிந்து கோர்ட் நடவடிக்கைகளை தடுத்தது, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோர்ட் கட்டிடத்தையும் அங்கிருந்த கோர்ட் சாமான்களையும் ஆவணங்களையும் எரித்தது, போலீசாரை தாக்கியது ஆட்சிக்கு எதிராக சதி செய்தது முதலிய குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 120 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. 'தேவகோட்டை கலவர வழக்கு' என்று அழைக்கப்பட்ட அதில் 73 பேரு‌க்கு 2 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தேவகோட்டையில் நடந்த இந்த ஆகஸ்ட் புரட்சி அத்தோடு நிற்கவில்லை! திருவாடானை, தொண்டி, திருவேகம்பத்தூர், முப்பையூர் ஆகிய ஊர்களிலும் வெடித்து பரவியது.

இந்த ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டையில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளில் நினைவாக, போராட்டம் நடந்த ஆர்ச் பகுதியில் நாட்டின் விடுதலைக்கு பின் நினைவுத் தூண் நிறுவப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டது. அதற்கு 'தியாகிகள் பூங்கா' என்றும் பூங்கா அமைந்துள்ள சாலைக்கு 'தியாகிகள் சாலை' என்றும் பெயரிடப்பட்டது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூறுவோம். ஜெய் ஹிந்த்! 


அன்பன், 
பழ.கைலாஷ்


Saturday, April 17, 2021

அக்காலத்தில் இப்படி ஒரு சட்டமா?


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்,   தேவகோட்டை யூனியன் ஆபிசில் 1911ஆம் ஆண்டு பழ.ப.பிச்சப்ப செட்டியார் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள 'குழந்தை வேலன் செட்டி தெரு'வில் 30 அடி நீளத்திற்கும் 3அடி அகலத்திற்கும் உரிய இடத்தில் 31நாட்களுக்கு கட்டிட சாமான்களை வீதியில் போட்டு எடுத்துக் கொள்வதற்கு உரிமம் பெற்றுள்ளார். "கட்டிட சாமான்களை வீதியில்ப்போட்டு எடுத்துக்கொள்வதற்கு லைசென்சு" என்ற தலைப்பில் தேவகோட்டை யூனியன் ஆபிஸ் அக்கிராசனாதிபதி (தலைவர்) சில நிபந்தனைகளுடன் 26/07/1911அன்று உரிமம் வழங்கியுள்ளார். அதாவது மக்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கட்டிட சாமான்களை தெருவில் போட்டுக் கொள்ளளாம், இரவில் மக்கள் நடமாட போதுமான வெளிச்சம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதை தவறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் இப்படி ஒரு சட்டம் இருந்திருக்கிறது என்பது அனைவரையும் வியப்படைய செய்கிறது.

110 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட உரிமம்.

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...