Followers

Sunday, December 31, 2023

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்



                    இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து இராமேசுவரம் செல்லும் வழியில் 15கி.மீ தொலைவில் கிழக்கு கட‌ற்கரை சாலையில் உள்ள ஊர் உப்பூர் சத்திரம் என்னும் உப்பூர். இங்கு இராமநாதபுர சமஸ்தான தேவஸ்தானத்திற்குரிய அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் உள்ளது.

அருள்மிகு வெயிலுகந்த விநாயகர்

இராமேசுவரம் புனித யாத்திரை செல்லும் மெய்யன்பர்கள் உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கி செல்வது நியதி. இதுபோல் காசி யாத்திரை செல்லும் மெய்யன்பர்களும் இங்கிருந்து தான் தொடங்குவார்கள். உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கி, தேவிப்பட்டிணம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி தரிசித்து பின்னர் இராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி மண் எடுத்துக் கொண்டு அலகாபாத் திருவேணி சங்கமத்தில் தீர்த்தமாடி காசி அடைவார்கள். 

சீதையை மீட்க வானர சேனைகளுடன் சேதுக்கரை நோக்கி இராமர் செல்கையில் உப்பூர் வன்னிமரத்தடியில் அமைதியான சூழலில் வீற்றிருந்த விநாயகரை வணங்கி சென்றுள்ளார் என்கிறது தலபுராணம்.

மேலும் இக்கோவில் குறித்த பல்வேறு கதைகள் தலபுராணத்தில் உள்ளன அதில் ஒன்று சிவபெருமானால் சாபம் பெற்ற சூரியன், பரிகாரம் தேட முற்பட்டு வன்னி மந்தார வனம்(உப்பூர்) என்ற ஊரில் உள்ள விநாயகரை நோக்கி தவத்தில் ஈடுபட்டார். சூரியனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். வெய்யோன் தவத்தை விநாயகர் உகந்ததால் (ஏற்றுக்கொண்டதால்) "வெயில் உகந்த விநாயகர்" என்ற பெயர் நிலைத்தது. இவ்வாறு பல புராண கதைகள் இருந்தாலும் வரலாற்று படி பார்த்தோமேயானால்.
 
அக்காலத்தில் தென்னிந்திய மக்கள் மட்டுமில்லாது வட இந்திய பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் ஆண்டுதோறும் இராமேசுவரத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டு வந்துள்ளனர். மழையிலும் பனியிலும் நனைந்து வெய்யிலிலே உலர்ந்து வருடத்தின் பல மாதங்கள் கால்நடையாகவே நடந்து இராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர். இதை கண்ட தேவகோட்டை இராம.அழகப்ப செட்டியார் கி.பி1800கள் தொடக்கத்தில் உப்பூரில் அன்னதான சத்திரம் நிறுவி ஊருணி அமைத்து நாள்தோறும் யாத்திரிகர்களுக்கு பருக நீரும், உண்ண உணவும், இளைப்பாறுவதற்கு உறைவிடமும் வழங்கி வந்தார். இதே கால கட்டத்தில் இவரின் உறவினரான வீர.இராமநாதன் செட்டியார் தனுஷ்கோடியில் ஒரு அன்னச்சத்திரம் நிறுவி அன்னம் பாலித்து வந்தார்(1964-ல் தனுஷ்கோடி புயலில் அழிந்துவிட்டது)

      உப்பூர் சத்திரம் 

உப்பூரில் அழகப்ப செட்டியார் சத்திரம் நிறுவியதாலேயே இவ்வூர் "உப்பூர் சத்திரம்" என்று பொதுவாக யாத்திரிகர்களால் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு மரத்தடியில் இருந்த விநாயகரை பக்தர்கள் வணங்கி சென்றுள்ளனர்.

அழகப்ப செட்டியாருக்கு நான்கு புதல்வர்கள், அதில் மூன்றாம் மற்றும் நான்காம் புதல்வர்களான அழ.அருணாசலம் செட்டியார் மற்றும் அழ.சிதம்பரம் செட்டியார் ஆகிய இருவரும் தொடர்ந்து அன்னச்சத்திரத்தை நிர்வகித்து வந்தனர். 

மூன்றாம் புதல்வரான அருணாசலம் செட்டியார் உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு கி.பி1862-ல் கல்குறடு(கல்மேடை) அமைத்து, தினசரி பிராமணர்களை கொண்டு விநாயகருக்கு பூசைகள் நடத்த தொடங்கினார். இச்செய்திகள் கோயிலிலே கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் அழ.அருணாசலம் செட்டியார் நாட்டுக்கோட்டை நகரத்தார் சிலருடன் சேர்ந்து கோவிலூர் கொற்றவாளீசுவரர் கோவில் மதில் சுவரை எழுப்பியுள்ளார். 

    கல்வெட்டு

பின்னர் அழ.அருணாசலம் செட்டியாரின் ஒரே புதல்வரான அழ.அரு.இராமசாமி செட்டியார் தற்போது நாம் காணும் கற்கோயிலை எழுப்பினார். பரிவார தெய்வங்களுக்கான சன்னிதிகளையும் அமைத்தார். சேதுபதி மன்னருக்கும் தமது மூதாதையர்களுக்கும் சதா சேவிப்பு சிலைகள் வைத்தார்.


    அழ.அருணாச்சலம் செட்டியார்

   அழ.சிதம்பரம் செட்டியார்

    அழ.அரு.இராமசாமி செட்டயார்
 
இராமசாமி செட்டியார் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நெருங்கிய நண்பராக இருந்தார்.  இவர் ஒருமுறை பாஸ்கர சேதுபதிக்கு செய்த பேருதவியால் சேதுபதி மன்னர் இவருக்கு 26 1/2 கிராமங்களை கொடுத்து தேவகோட்டை ஜமீந்தாராக ஆக்கினார். ஜமீந்தார் அழ.அரு.இராமசாமி செட்டியார் சிவப்பெருஞ்செல்வராக வாழ்ந்து இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில், காளையார்கோவில், திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேசுவரர் கோயில் ஆகிய கோயில்களுக்கு செம்மையான திருப்பணி செய்தார்.

அழ.அரு.இராமசாமி செட்டியார் கட்டிய உப்பூர் விநாயகர் கோயிலின் உள்ளே வெயில் வருவதற்கான வழி இல்லாமல் முழுவதும் அடைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது. சில மாதங்களில் கோயிலில் விநாயகரை சுற்றியுள்ள மேற்கூரை தாமாக இடிந்துவிழுந்தது. இக்காலத்தில் வயது மூப்பு காரணமாக ஜமீந்தார் அழ.அரு.இராமசாமி செட்டியாரும் இறந்துவிட அவரின் மூத்த மகனான அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியார் கோயில் முழுமையும் புனரமைத்து விநாயகர் மேல் வெயில் படும்படி அமைத்து 10.02.1905-ல் இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்தார்.

அதை தொடர்ந்து தமது சகோதரர்களுடன் இணைந்து அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியார் ஆவணி மாத பத்து நாள் திருவிழாவை தொடங்கிவைத்தார். விநாயகருக்கு வெள்ளியில் பெருச்சாளி, மயில், இடபம், காமதேனு, குதிரை, சிம்மம், யானை,கேடகம், ரதம் ஆகிய வாகனங்களும் உற்சவ மூர்த்திகளும் நகைகளும் அழ.அரு மற்றும் அழ.சித குடும்பத்தினரால் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் சொன்ன புராண கதைகள் "லவணபுரம் என்னும் உப்பூர் புராணம்" என்கிற தலபுராண நூலில் உள்ளன. இது தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயரால் கி.பி1918-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு ஜமீந்தார் அழ.அரு. இராம.அருணாசலம் செட்டியாரால் வெளியிடப்பட்டுள்ளது. சொர்ணநாதபுரம் பழனியப்ப ஐயா "வெயிலுகந்த விநாயகர் பதிகம்" இயற்றியுள்ளார்.

    உப்பூர்ப்புராணம்

    வெயிலுகந்த விநாயகர் பதிகம்

இன்றுவரை சுமார் 180 ஆண்டுகளுக்கு மேலாக உப்பூர் சத்திரம் சிறப்பாக இயங்கிவருகிறது. தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு மற்றும் அழ.சித குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

விநாயகருக்கு தினசரி நான்கு வேளைகள் பூசை நடக்கின்றன. அதில் இரண்டு வேளை இராமநாதபுரம் சமஸ்தானமும் இரண்டு வேளை தேவகோட்டை ஜமீந்தாரும் நடத்தி வருகின்றனர்.

ஆவணி சதுர்த்தி திருவிழாவில் விநாயகர் திருமணம் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தினரால் கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு இராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் முன்னிலையில் கும்பாபிஷேம் செய்யப்பெற்றது.

- பழ.கைலாஷ் 


   






No comments:

Post a Comment

துதிக்கையில்லா கரிமுகன்

  நடுவாற்று மருதம் பிள்ளையார் சி வகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர் கண்டரமாணிக்கம் . இவ்வூரையடுத்த கொங்கரத்தியில் மணிமுத்தாற்றின் ...