Followers

Friday, August 5, 2022

இந்தியாவின் முதல் கொடி



இந்தியாவின் முதல் தேசியக் கொடி எது? "தாயின் மணிக்கொடி பாரீர்!" என்று பாரதி பாடியது தீர்க்க தரிசனமா? அல்லது அப்போது இந்தியாவுக்கு ஏதும் கொடி இருந்ததா?

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய மக்கள் மனதில் எழுந்த சுதேச எழுச்சியால் தேசியக் கொடிக்கான தேவை உருவானது. சுவாமி விவேகானந்தரின் முதன்மை சிஷ்யையான சகோதரி நிவேதிதா தான் இந்தியாவுக்கான முதல் தேசியக் கொடியை உருவாக்கியவர்.


மார்கரெட் எலிசபெத் நோபிள் (Margaret Elizabeth Noble) என்ற இயற்பெயரைக் கொண்ட சகோதரி நிவேதிதா அயர்லாந்தில் 1867-ஆம் ஆண்டு பிறந்தார். நோபிள் ஒரு வயது குழந்தையாக இருந்தபோதே அவரது குடும்பம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு குடிபெயர்ந்துவிட்டது. தந்தை சாமுவேல் கிறித்துவ மதகுருவாக இருந்தார். ஆரம்பத்தில் கிறித்துவ மதத்தின் மீது பிடிப்புக் கொண்டிருந்த நோபிள், இளமைப் பருவத்தில் புத்த மதக் கருத்துகளில் தீவிர ஈடுபாடு காட்டினார். கல்லூரிப் படிப்பை முடித்து, ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்து சில காலம் பணியாற்றிய பின் புதிய கல்வி முறையை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டி ஒரு பள்ளியைத் தொடங்கினார். அந்த நேரம் 1895-ஆம் ஆண்டு, இங்கிலாந்து சென்றிருந்த சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க நோபிளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்தச் சம்பவம்தான் நோபிள் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவை கேட்டு அவர்பால் அவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1898-ஆம் ஆண்டு ஜனவ‌ரி மாதம் கல்கத்தா வருகிறார் நோபிள். இந்து சமயத்தின் பிரம்மச்சரிய தீட்சையை ஏற்கும்போது நோபிளுக்கு "நிவேதிதா" என்ற பெயரை சூட்டுகிறார் விவேகானந்தர். இதன் பொருள் "அர்ப்பணிப்பு". இந்து சமய தீட்சை பெற்ற முதல் மேற்கத்திய பெண் இவரே.


நிவேதிதா இந்தியாவுக்கு வந்த இரண்டே மாதங்களில் கல்கத்தாவை பிளேக் நோய் கடுமையாகத் தாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்துக் கிடந்தனர். அப்போது வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ தாதியாக சேவை செய்தார்.

1898-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார் நிவேதிதா. அப்பள்ளியில் சிறுமிகளுக்கு எழுதப் படிக்க சொல்லித் தந்ததுடன், ஓவியம் வரைதல், மண்பொம்மைகள் செய்தல், துணி தைத்தல் முதலானவற்றையும் சொல்லித் தந்தார் நிவேதிதா. அதன்பின் சிறுமிகளின் அன்னையருக்கும் கல்வியும் மற்ற நுண்கலைகளும் சொல்லித் தந்தார். சுதந்திரப் போராட்டம் உச்சம் பெறாத காலத்திலேயே 'வந்தே மாதரம்' பாடலை தனது பள்ளியில் பாடச் செய்தார்.

1899-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுவாமி விவேகானந்தருடன் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அங்கு தனது பள்ளி வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டினார். மேலும் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டினர் கொண்டிருந்த பல தவறான நம்பிக்கைகளை மறுத்து, இந்தியாவின் பெருமைகளை விளக்கிப் பேசினார். நியூயார்க் நகரத்தில் "இராமகிருஷ்ண தொண்டர் சங்கம்" என்ற அமைப்பைத் தொடங்கி இந்தியாவின் பெருமையைப் பரப்ப உதவினார்.

தனது வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து 1901-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். சமூகப் பணிகளோடு தனது ஆன்மிகம் குறித்தத் தேடலையும் தொடர்ந்தார். இந்தியாவின் பாரம்பரியம், புராணங்கள், நம்பிக்கைகள் குறித்து ஆழ்ந்து அறிந்துகொண்டு, அவற்றின் பின்னணியில் இருந்த நல்ல கருத்துகளை மேலைநாட்டினர் புரிந்துகொள்ளும் வகையில் நூல்கள் எழுதினார்.

கல்விப்பணி, சமூக சேவை என்று அயராது பாடுபட்ட நிவேதிதாவுக்கு 1902-ஆம் ஆண்டு பெரும் சோகத்தைத் தந்தது. அவருடைய குருவான சுவாமி விவேகானந்தரின் மறைவுதான் அது. குருவை இழந்த நிவேதிதா சோர்ந்து விடாமல், அவரது பணிகளை இன்னும் வேகமாகச் செய்யத் தொடங்கினார்.

சுவாமி விவேகானந்தருக்குப் பிறகு அரவிந்தருடன் நட்பானார். அதோடு, இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பாடுபடத் தொடங்கினார். வங்காளத்தின் புரட்சிகர இயக்கங்கள் சிலவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார். லண்டன் பத்திரிகைகள், நிவேதிதாவை  'இந்தியாவின் போராட்ட வீராங்கனை' என்று போற்றிப் புகழ்ந்தது.

தனது சுதந்திரப் போராட்ட நிலைப்பட்டால் கோபம் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, கோபத்தால் இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்கிவிடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தால் அதில் இருந்து விலகினார்.

1904-ஆம் ஆண்டு, ஒரு நாள் ஜெகதீஸ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் நிவேதிதா புத்தகயாவுக்கு முதன்முதலாக சென்றிருந்தார், அங்கே வஜ்ராயுத சின்னத்தை காண்கிறார். அது அவர் மனதை கவர்ந்துவிடுகிறது. தொடர்ந்து வஜ்ராயுதத்தை பற்றி தேடித்தெரிந்து கொள்கிறார். புத்தமத நம்பிக்கையின்படி வஜ்ரா என்பது புத்தரின் அடையாளம் மேலும் இந்து மதத்தில் வஜ்ரா இந்திரனின் ஆயுதமாகவும், வலிமையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றதை புரிந்துகொள்கிறார் நிவேதிதா. 

1905-ஆம் ஆண்டு, சதுர வடிவில் சிவப்பு பின்னணியில் மஞ்சள் நிறத்தில் விளிம்பில் 108 ஜோதிகளுடன் மையத்தில் வஜ்ராயுத சின்னமும் வங்க மொழியில் "வந்தே மாதரம்" என்ற சொல்லுடன் தனது மாணவிகளை கொண்டு ஒரு கொடியை உருவாக்குகிறார். இதில் சிவப்பு சுதந்திர போராட்டத்தையும் மஞ்சள் வெற்றியையும் வஜ்ராயுத சின்னம் இந்தியாவின் ஆன்மீக மரபையும் உருவகப்படுத்துவதாக நிவேதிதா குறிப்பிடுகிறார். இதுவே இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட தேசியக் கொடி.

1905-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதி, காசியிலிருந்து திரும்பும் போது கல்கத்தா சென்று சகோதரி நிவேதிதாவை சந்திக்கிறார். அப்போது நிவேதிதா, “ஏன் உங்கள் மனைவியை அழைத்து வர வில்லை?" எனப் பாரதியைப் பார்த்து கேட்கிறார்.  "காசியில் நடந்தது காங்கிரஸ் மாநாடு அதில் பெண்கள் கலந்துகொள்வதால் என்ன பலன் மேலும் என் மனைவிக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது" என்கிறார். “உங்கள் மனைவிக்கு சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருவீர்கள்?" எனும் தொனியில் கேள்வி கேட்கிறார் நிவேதிதா. அது பாரதியை உலுக்கியது, அதுவரை அவர் கொண்டிருந்த பெண் விடுதலை குறித்த சிந்தனையை முழுதாக மாற்றி அமைத்தது. அந்தச் சம்பவத்துக்குப் பின் நிவேதிதாவை தம் குருவாக ஏற்றுக்கொண்டார் பாரதி. அவருக்கு குரு வணக்க பாடலும் இயற்றினார். 


1908-ஆம் ஆண்டு பாரதி வெளியிட்ட  "ஸ்வதேச கீதங்கள்" நூலில் நிவேதிதாவுக்கு சமர்ப்பணம் செய்து எழுதியிருந்தார். பின்னர் 1909-ஆம் ஆண்டு ’’ஸ்வதேச கீதங்கள்" நூலின் இரண்டாம் பாகமான "ஜன்ம பூமி" நூலில் "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் சொல்லி உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என்று எழுதி நிவேதிதாவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார்.

இந்த "ஜன்ம பூமி" நூலில் இடம்பெற்ற பாடல் தான் "மாதாவின் துவஜம்" எனும் பாரத நாட்டுக் கொடியை புகழ்ந்து பாடும் பாடல்கள்.

அதில்,
"தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!"
என்று பாரதி பாடிப்பரப்பியது சகோதரி நிவேதிதாவின் கொடியைத்தான்!

"ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!"
அதாவது, நிமிந்து உயர்ந்து நிற்கின்ற ஒரு கொடிக்கம்பம் அதன் மேல் "வந்தே மாதரம்" என்று அழகாக பொறிக்கப்பட்டு விளங்குகின்ற சிவந்த பட்டுத் துணியாலான கொடியொன்று பிரகாசமாக பறப்பதை பாரீர்.

"இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?"
அதாவது, அக்கொடியின் ஒரு பகுதியில் இந்திரனது வச்சிராயுதச் சின்னமும் மற்றொரு பகுதியில் எங்கள் நண்பர்களான இஸ்லாமியர்களின் பிறை வடிவமும் இருக்கும். மையத்தில் "வந்தே மாதரம்" என்னும் மந்திரம் இருக்கும். அந்தக் கொடியின் மகிமையை வரையறுத்துச் சொல்லிட ஆற்றல் உடையவனோ நான்?

"மாதாவின் துவஜ"த்தில் மொத்தம் பத்து பாடல்கள் அதில் மேற்கண்ட இரண்டு பாடல்களை மட்டும் நோக்கினாலே நமக்கு புரியும், சிவப்பு நிற பட்டுக்கொடி அதில் வந்தே மாதரம் என்னும் சொல், இந்திரனின் வஜ்ராயுத சின்னம் என இவை குறிப்பது நிவேதிதாவின் கொடியைத்தான். வஜ்ராயுத சின்னத்தின் மேற் பகுதியும் கீழ் பகுதியும் பார்ப்பதற்கு பிறை போல் அரை வட்டமாக உள்ளதால் இதை இஸ்லாமியர்களின் பிறை வடிவம் என்று வர்ணிக்கிறார் பாரதி.

1906-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் இக்கொடி பார்வைக்கு வைக்கப்பட்டது. ஜெகதீஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல அறிஞர்கள் இந்தக் கொடியை ஆதரித்தபோதிலும் இது மக்கள் மனதை கவரத்தவறிவிட்டது.

1911-ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று டார்ஜிலிங்கில் தனது 44-வது வயதில் உயிர்நீத்தார் சகோதரி நிவேதிதா. தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்து அக்டோபர் 7-ஆம் நாள் தனது சொத்துகளையும், படைப்புகளையும் இந்தியப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கென எழுதி வைத்தார்.

எங்கோ அயர்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இந்திய தேசம் வந்து கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று எத்தனையோ கலைஞர்களை, வீரர்களை உருவாக்கி, அவர்களின் வழியே இந்தியாவின் பெருமைகளை ஓங்கிடச் செய்து, இந்தியாவுக்கென முதல் கொடியை உருவாக்கிய சகோதரி நிவேதிதாவை நமது சுதந்திர இந்தியாவின் 75-ஆவது ஆண்டில் போற்றி வணங்குவோம். 

அன்பன்
பழ.கைலாஷ்.
05/08/2022


நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...