Followers
Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts
Thursday, April 30, 2020
Thursday, April 23, 2020
பாரன்ஹீட் 451
பிரான்சுவா ட்ரூஃபாட் இயக்கத்தில் 1966ல் வெளியான படம் "பாரன்ஹீட் 451". புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் "ரே பிராட்பரி" எழுதிய முதல் புத்தகமான "பாரன்ஹீட் 451" 1953ல் வெளியானது, அப்புதினத்தின் தழுவலே இப்படம்.
பாரன்ஹீட் 451 என்பது காகிதம் தானாகவே எரிய தேவைப்படும் தோராயமான வெப்பநிலை.
வரலாறு நெடுகிலும் பல்வேறு நாடுகளில் புத்தகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, நூலகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, புத்தகத்தை எழுதியவர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள், புத்தகத்தை எரித்தவர்களும் எரிக்கப்பட்டிருகிறார்கள். இப்படி புத்தக எரிப்பின் கதை தான் இது.
கதை நடப்பது வருங்காலத்தில், டெக்னாலஜி மிகவும் முன்னேறிய ஒரு நகரில். அங்கு புத்தகங்கள் படிப்பதும் வைத்திருப்பதும் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறி யாராவது புத்தகம் வைத்திருந்தார்கள் என்றால் அவர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்து, அவர்களது புத்தகங்களை உடனடியாகத் தீ வைத்து எரித்துவிடுவார்கள். அப்படி தீ வைத்து எரிப்பதற்கென்று தனியே ஒரு தீ எரிப்புத் துறை இருக்கிறது. அதில்தான் இந்தப் படத்தின் கதாநாயகன் மாண்டெக் வேலை பார்க்கிறான். எவருடைய வீட்டிலாவது புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாகத் தீ எரிப்புத் துறையினருக்கு தகவல் அனுப்பப்படும். தீ எரிப்புத் துறை வீரர்கள் அங்கே சென்று புத்தகங்களைக் கொளுத்தி விடுவார்கள்.
ஒரு நாள், வயதான பெண்மணி ஒருவருடைய வீட்டில் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு எரிக்கப்படுகின்றன. அப்போது புத்தகத்தில் இருந்து ஒரு வரியை தற்செயலாகப் படிக்கிறான் மாண்டெக், அந்த வரியின் ஈர்ப்பில் அந்த புத்தகத்தைத் திருடிக்கொள்கிறான். தன்னைப் புத்தகங்களில் இருந்து பிரிக்க முடியாது என்று கூறி அந்த வயதான பெண்மணி, புத்தகங்களுடன் சேர்ந்து தன்னைக் கொளுத்திக் கொள்கிறாள்.
புத்தகங்களுக்காக ஒரு பெண் ஏன் தற்கொலை செய்து கொள்கிறாள் என்று மாண்டெக்கால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் பிறகு தீவைக்கச் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் புத்தகங்களைத் திருடி வந்து படிக்கிறான் மாண்டெக். படித்து முடித்த புத்தகங்களைப் யாருக்கும் தெரியாமல் வீட்டினுள் ஒளித்துவைக்கிறான்.
புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்காக பேபர் என்ற பேராசிரியரைத் தேடிப் போகிறான், இருவரும் புத்தகம் பற்றி நிறையப் பேசுகிறார்கள். மனித குலம் அதன் கடந்த காலத்தை அறிந்துகொள்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது, அது புத்தகம். மனிதக் கற்பனையின் மிக உயரிய விடயம் எழுத்து என்று அவர் புரியவைக்கிறார்.
ஒரு கட்டத்தில் மாண்டெக் புத்தகம் படிக்கும் விஷயம் அவன் மனைவியினால் அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவன் தேடப்படுகிறான். உயிர் பிழைப்பதற்காகத் தப்பி அலைந்து, நடமாடும் புத்தகங்களாக உள்ள ஒரு குழுவினருடன் சேர்ந்துகொள்கிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை முழுவதுமாக மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தந்த புத்தகத்தின் நடமாடும் வடிவமாக அவர்கள் இருக்கிறார்கள்.
ஆக உலகில் இருந்து புத்தகங்கள் எரிக்கப்பட்டாலும் அவர்களின் நினைவில் அந்தப் புத்தகம் அப்படியே இருக்கிறது. அவர்கள் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நினைவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தப் பணியில் இணைந்த மாண்டெக் ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து, அவனும் ஒரு நடமாடும் புத்தகமாகிவிடுகிறான்.
KAILASH PL
Wednesday, October 23, 2019
சுதந்திரத்தின் நிறம்
கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் வாழ்கை வரலாறு.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாரா கோப்பா என்ற பெண்மணி தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதியரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுவதற்காக தமிழகம் வந்து அவர்களுடன் தங்கியிருந்து இத்தாலிய மொழியில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். பின்னர் அந்த புத்தகத்தை அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஹச்.ஆல்பர்ட் "தி கலர் ஆஃப் ஃப்ரீடம்"(The colour of freedom)என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (18.10.2019)அன்று "தன்னறம் நூல்வெளி" இந்த புத்தகத்தை தமிழில் "சுதந்திரத்தின் நிறம்" என்ற பெயரில் வெளியிட்டனர். B.R.மகாதேவன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
மதுரை மாவட்டம் அய்யன்கோட்டையில் ஒரு ஹரிஜன குடும்பத்தில் பன்னிரண்டு குழந்தைகளுள் ஒருவராக 1926ல் பிறந்தார் கிருஷ்ணம்மாள். அப்பா குடிகாரர் அம்மா கூலிதொழிலாளி. தினசரி குடித்துவிட்டு தன் அம்மாவை அப்பா அடிப்பதை பார்த்த கிருஷ்ணம்மாள் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று தீர்மானம் எடுக்கிறார். பள்ளி படிப்பை முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று தமிழ் நாட்டின் முதல் ஹரிஜன பட்டதாரியாகிறார். பின்பு T.V.சுந்தரம் ஐயங்காரின் மூத்த மகள் டாக்டர்.சௌவுந்தரம்மாள் கைவிடப்பட்ட விதவைப் பெண்களுக்காக நடத்திய ஆசிரமத்தில் ஆசிரியராக சேர்ந்து பணிபுரிகிறார். இந்த கால கட்டத்தில் காந்தி மீது பற்றுக் கொண்டு காந்தியை சந்திக்க ஆசை படுகிறார் "மகாத்மா காந்தி தமிழகம் வருகிறார் அவருடம் மருத்துவ உதவிக்காக ஒரு டாக்டர் இருக்கிறார் டாக்டருக்கு உதவியாளராக ஒரு பெண் தேவை நீ செல்கிறாயா" என்றார் சௌந்தரம்மாள்.உடனே கிருஷ்ணம்மாள் காந்தியின் டாக்டரின் உதவியாளராக சேர்ந்தார். அப்போது காந்தியவாதியான ஜெகந்நாதனை சந்திக்கிறார்.
ஜெகந்நாதன் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள செங்கற்பட்டையில் செழிப்பான குடும்பத்தில் சங்கரலிங்கம் பிள்ளை என்பவருக்கு மகனாக 1914ல் பிறந்தார். மதுரையில் கல்லூரில் படிக்கும் பொழுது காந்தியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது காந்தியை சந்தித்த பின் காந்தியவாதியாகிறார் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு "தீன சர்வ சேவா" சங்கத்தில் சேர்ந்து தன் குடும்பத்தை விட்டு சன்னியாசியாக இந்தியா முழுவதும் பயணம் செய்து மக்களுக்காக தொண்டாற்றுகிறார். சுதந்திரத்திற்காக காந்தியுடன் சேர்ந்து அகிம்சை போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்கிறார். ஒரு நாள் கிருஷ்ணம்மாளை டாக்டர் சௌவுந்தரம்மாள் ஆசிரமத்தில் சந்திக்கிறார் ஆனால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பின்பே திருமணம் என்று தீர்க்கமான முடிவெடுக்கிறார். இவர் பெங்களூர் சிறையில் இருக்கையில் நாட்டுக்கு சுதந்திரம் கிடைகிறது.
1950ல் காந்தியவாதிகளான ஜெகந்நாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் எந்த ஆடம்பரமும் இல்லாமல் திருமணம் செய்துகொண்டு தம்பதியரானர்.
1951ல் வினோபா பாவே பூதான(பூமி தானம்) இயக்கத்தை தொங்குகிறார்.
பூதான இயக்கம் என்றால் பெரு நிலமுடையவர்கள் தானாக முன் வந்து நிலமில்லாதோர்களுக்கு வழங்கவேண்டும். இதை அகிம்சை முறையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வழிநடத்தியவர் வினோபா பாவே அவருடன் கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் இந்தியா முழுவதும் கால்நடையாக பயணம் செய்தனர். பூதான இயக்கம் நிலமில்லாதோர்க்கு பதிமூன்று ஆண்டுகளில் 40,00,000 ஏக்கர் நிலத்தை பிரித்து வழங்கியது. தமிழகத்தில் கிருஷ்ணம்மாள் மட்டும் சுமார் 13500 ஏக்கர் நிலத்தை பெரு நிலமுடையவர்களிடம் பெற்று அதை பிரித்து நிலமில்லாதோர்க்கு வழங்கினார்.
டிசம்பர் 25 1968ல் கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்ட 18 குடும்பங்களை சேர்ந்த 44 பேர் ஒரு குடிசையில் சிலரால் தீயிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்து. அடுத்த நாள் இதை நாளிதழ்களில் அறிந்த கொண்ட கிருஷ்ணம்மாள் தன் கணவர் ஜெகந்நாதன் மற்றும் குன்றக்குடி அடிகளாருடன் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். 1974ல் கீழ்வெண்மணியை சேர்ந்த 74 குடும்பங்களுக்கு தலா 1ஏக்கர் என 74ஏக்கர் நிலங்களை பெற்று 74 குடும்பங்களுக்கும் பிரித்து வழங்கினார் மற்றும் நல்ல வீடு, தண்ணீர் ,மின்சார வசதிகள் செய்து கொடுத்துள்ளார். உழுபவருக்கு நிலம் (Land for the Tillers' Freedom -LAFTI) திட்டத்தை 1981ல் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தொடங்கினர்.
கிருஷ்ணம்மாளுக்கு இந்திய அரசு 1989ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது.
2008ல் நோபல் பரிசுக்கு இணையான Right Livelihood Award கிருஷ்ணம்மாளுக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் தங்கி இருந்த ஜெகந்நாதன் பிப்ரவரி12 2013ல் காலமானார்.
தம் கணவர் மறைந்த பின்னரும் 94 வயதில் சேவையே வாழ்க்கை என்று உழைத்து வருகிறார் கிருஷ்ணம்மாள். 2014ல் அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
-Kailash PL
21/10/2019
சுதந்திரத்தின் நிறம் புத்தகம் வாங்க
தன்னறம் நூல்வெளி
அழைபேசி:9843870059
Tuesday, October 1, 2019
பிரதாப முதலியார் சரித்திரம்
"பிரதாப முதலியார் சரித்திரம்"
மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களால் 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான புதினம்.தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக கருதப்படுகிறது. அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாக கொண்டிருந்த தமிழிற்கு வேதநாயகம் பிள்ளை புதினத்தை அறிமுகப்படுத்தினார்.
பிரதாப முதலியார் என்கிற கற்பனை கதாபாத்திரத்தை கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. பிரதாப முதலியார் ஞானாம்பாளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதே கதை சுருக்கம்.
இந்த புதினம் மூன்றாம் பார்வையில் எழுதப்படாமல், பிரதாப முதலியாரின் கூற்றிலேயே சொல்லப்படுகிறது.
கதை ஆரம்பித்து முதல் பத்து அத்தியாயங்களும் கல்வியின் முக்கியத்தையும் பெண்கள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தையும் சொல்கிறது. (கதை நடப்பது 1800கள் ஆரம்பம்)
கதையில் சில இடங்களில் கம்பராமாயண செய்யுளை காட்டி கதையை விளக்குகிறார். "விதவை" என்பதை "கைம்பெண்" என எழுதியுள்ளார். கதை எழுதப்பட்ட காலத்தில் நடந்த அமெரிக்க அடிமை வாழ்க்கையை பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
கதையின் நடுவில் பல குறுங்கதைகள் வருகின்றன அதில் ஒரு கதையில் அனந்தன் என்பவன் தமிழை கற்காமல் தவிர்த்து ஆங்கிலம் மட்டும் கற்று பின் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறான். தமிழின் முக்கியத்துவம் பற்றி அப்போதே இந்த கதையில் சொல்லுகிறார் மற்றும் பல நகைச்சுவை கதைகள் நடு நடுவே வருகிறது.
பாலியல் திருமணம் வேண்டா, திருமணத்தில் இருவர் சம்மதம், ஐரோப்பா, புருசியா, ரோமாபுரி, ஆஸ்திரியா போன்ற நாடுகளின் கதை. அக்காலத்தில் அரசு உத்தியோகத்தினர் செய்யும் ஊழல்கள், யாருக்கும் புரியா ஆங்கிலத்தில் வாதாடும் வக்கீல்கள் என பலதரப்பட்ட விஷயங்களை கதை பேசுகிறது.
“இக்காலத்தில்(1800கள்) கலி முத்திப் போச்சு” என்று சலித்துக்கொள்ளும் வசனங்களும் வருகிறது.
இந்த கதையை ஏன் வாசிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும் அது என்னவென்றால் " பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம்"
FIRST NOVEL IN TAMIL LANGUAGE.
Kailash PL
Tuesday, July 16, 2019
புகார் நகரத்துப் பெருவணிகன்.
இதில் மன்னர்கள் வருகிறார்கள் என்றாலும் கதை அவர்களைப் பற்றியது அல்ல மக்களே இதில் பிரதானம் குறிப்பாக இது ஆயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தன வணிகர்களின் கதை.
சோழ நாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் எனும் புகார் நகரை மையமாக கொண்டு கதை நகர்கிறது.
இது ஒரு கற்பனை கதை என்றபோதும் தகவல் களஞ்சியமாக திகழ்கிறது.
இதோ அதில் சில தகவல்கள்.
⚫அந்த காலத்திலேயே சோழ நாட்டில் சுங்க சாவடிகள்(Toll gate) இருந்துள்ளன.வணிகர்கள் ஏற்றி செல்லும் பொருட்களுக்கு தகுந்தாற்போல் வரி கட்ட வேண்டும். ரசீது ஓலை சுவடிகளில் வழங்கப்பட்டும்.⚫சோழ நாட்டில்
•செப்பு காசு
•காணம்(வெள்ளியால் செய்ய பட்டது)
•கழஞ்சு(தங்கத்தால் செய்ய பட்டது)
என மூன்று விதமான நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.
⚫அன்று இருந்த மது வகைகள்.
•கள்
•காடி
இவைகள் ஏழை எளிய மக்களுக்கு.
•வடிகள்
•தேறல்
இவைகள் உயர் குடியியினருக்கு.
⚫சோழ நாட்டில் வழங்கப்படும் பட்டங்கள்
•எட்டி
•காவிதி
என்பவை வணிகர்களுக்கு.
•கிழார்
•கிழான்
என்பவை புலவர்களுக்கு.
•ஏனாதி
•மாராயன்
என்பவை வீரர்களுக்கு.
•குவளை
•தாமரை
என்பவை கலைஞர்களுக்கு.
•தலைக்கோல் பட்டம்
அனைத்திலும் சிறந்த நபருக்கு வழங்கபடும்.
⚫வெளிநாடுகளில் வணிகம் செய்பவன் நாய்கன் என்றும் அதே பெரும் வணிகம் செய்பவன் மாநாய்கன் என்று அழைப்பது வழக்கம்.
உள்நாட்டில் வணிகம் செய்பவன் சாந்தன் என அழைக்கப்படுவான் .
பொதுவில் செட்டியார் எனப்படுவார்கள் இது எட்டி எனும் பட்டத்தில் இருந்து செட்டி என மருவியதாகும்.
50க்கும் மேற்பட்ட கலங்கள்(கப்பல்கள்) உடையவன் நாய்கன். அதே 100க்கும் மேற்பட்ட கலங்கள் உடையவன் மாநாய்கன்.
⚫தெப்பம் பரிசல் புனை ஓடம் படகு நாவாய் பஃறி என 23 வகை கலங்கள் உள்ளன
•பஃறி என்பது ஒரு பாய் மரமுள்ள கலம் இதில் கரையோரம் மட்டுமே பயணம் செய்யலாம்.
•நாவாய் என்பது நான்கும் அதற்கு மேற்பட்ட பாய் மரமுள்ள கலம் இதில் நடுக்கடலில் பயணம் மேற்கொள்ளலாம்.
மற்றும் கப்பல்கள் எப்படி கட்டப்படுகின்றன? எப்படி மீன்களை பார்த்து திசைகளை கண்டனர்? எப்படி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்? எந்த எந்த நாட்டினரிடையே தமிழர் வணிகம் செய்தனர்? கடாரம் எப்படி இருக்கும்? சீனம் எப்படி இருக்கும்? என பல அறிய தகவல்களை நமக்களிக்கிறது இந்த புத்தகம்.
- Kailash PL
என் இனிய இயந்திரா
சுஜாதா வின் ஆக சிறந்த படைப்புகளில் ஒன்று.
1985ல் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதை இது.
இயக்குனர் ஷங்கர் எந்நிரன் படம் எடுக்க அடிப்படையாக இருந்த கதை.
கதை சுருக்கம் :
கி.பி 2022 இல் இந்தியா ஜீவா எனும் சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் உள்ளது. தேசத்தில் எங்கும் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. பிள்ளை பெற்றுக் கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கையும் கிடையாது . அனைவருக்கும் ஒரு நம்பர் ஒதுக்கபட்டுயிருக்கும் வெளியில் பெயருக்கு பதிலாக நம்பரை பயன் படுத்தவேண்டும்.
இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவிடமிருந்து இந்த நாட்டை மீட்க புறப்படும் ரவி, மனோ எனும் இரு புரட்சிக்காரர்களுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் இணைந்து கொள்ளும் நிலா நிலாவுக்கு நண்பனாக மாறும் ரவியின் இயந்திர நாய் இவர்களை சுற்றியே கதை நகர்கிறது.
இந்தக் கதையில் முக்கியமான பாத்திரமான ஜீனோ எனும் இயந்திர நாய் மெல்ல மெல்ல தன் அறிவை விருத்தி செய்வதுடன் மனிதர்களைப் போல சிந்திக்கவும் தொடங்குகின்றது. ஆரம்பத்தில் பயம், இரக்கம், பாசம் போன்ற உணர்வுகளை அறியாதிருந்த நாய் மெல்ல மெல்ல அனைத்து மனித இயல்புகளையும் பெறத் தொடங்குகின்றது.
பின்பு சிபியை நிலா கண்டு பிடித்தாலா ஜீவா என்ன ஆனார்
புரட்சி என்ன ஆனது என்று ஏகப்பட்ட திருப்பங்களுடன் சென்று கதை நிறைவடைகிறது.
(பாகம் இரண்டு தனியாக உள்ளது அதன் பெயர் "மீண்டும் ஜீனோ")
*****************
அப்போதே (1985ல்) சுஜாதா வீடியோ கால், வீ வீ திரை, ஹோலோ பிம்பம், பறக்கும் தட்டு இன்னும் பல அறிவியல் சாதனங்களை பற்றி யோசித்து கதையில் எழுதியுள்ளார்.
ஜனத்தொகை 125 கோடி என்கிறார் இது கிட்ட தட்ட நம் தற்போதைய ஜனத்தொகையை குறிக்கிறது.
வருங்கால அறிவியல் பற்றி துள்ளியமாக கணித்துள்ளார்.
2022 வருவதற்குள் அனைவரும் கண்டிப்பாக ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய நாவல் இது.
- Kailash PL
Saturday, July 13, 2019
சிலைத் திருடன்
சிலைத் திருடன்
"THE IDOL THIEF"எனும் ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம்.
நூல் ஆசிரியர் எஸ்.விஜய் குமார்
இவர் விருத்தாசலத்தில் பிறந்தவர். சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வருகிறார். 2007 முதல் www.poetryinstone.in எனும் இணையத்தில் இந்திய சிலைகளை பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறார். பல்வேறு சிலைத் திருடர்கள் கைதுக்கும் சிலைகள் மீட்புக்கும் இவர் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
சிலைத் திருடன் :
இது பத்தோடு பதினொன்றாக படிக்க வேண்டிய நூல் அல்ல தமிழர்கள் அனைவரும் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய நூல்.நம்மில் எத்தனை பேருக்கு சுத்தமல்லி, ஸ்ரீ புரந்தான்,பழவுர், காமராசவல்லி போன்ற ஊர்களில் உள்ள கோவில்களை தெரியும்? முதலில் இந்த ஊர்கள் எங்கே இருக்குனு நமக்கு தெரியுமா? அப்புறம் எப்படி கோவில்களை தெரியும்!!!
இந்தியாவிலேயே அதிகமான சிலை திருட்டு நடப்பது நம் தமிழகத்தில் தான். அதுவும் சோழர்கால வெண்கலச் சிலைகளுக்கு உலகம் முழுவதும் கிராக்கி அதிகம்.
மேலே குறிப்பிட்ட ஊர்களை போல் குக்கிராமங்களில் உள்ள கோவில்களில் தான் அதிக அளவில் திருட்டு நடக்கிறது.
இந்தியாவில் 1972ல் இயற்றப்பட்ட சட்ட படி,
1972க்கு பின் எந்த ஒரு நூறு வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த சிலைகளையும் கலைபொருட்களையும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லக்கூடாது. அப்படி 1972க்கு பின் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் சென்றிருந்தால் அவைகளை எந்தவொரு இழப்பீடும் இல்லாமல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும்.
ஒருபுறம் இப்படியிருக்க..
சிலைகள் எப்படி திருடப்படுகிறது?
யார் திருடுவது?
எப்படி கடத்தபடுகிறது?
அது எப்படி விற்கப்படுகிறது?
சிலைகளை எப்படி மீட்டனர்?
சட்டம் சொல்வது என்ன?
திருடியவர்கள் கைது செய்யப்பட்டார்களா?
போன்ற கேள்விகளுக்கு இந்த நூல் விளக்கமளிக்கிறது.
உலகில் மிக பெரிய சிலை திருடர்களின் ஒருவனான சுபாஷ் கபூர் எப்படி சிலை திருட ஆரம்பித்தான் முதல் எப்படி அகப்பட்டான் என்பது வரை அவனை பற்றியும் சிலை திருட்டை பற்றியும் பாமரனுக்கும் புரியும் படி எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் வியாபாரி சுபாஷ் கபூரிலிருந்து காரைக்குடியிலிருக்கும் வியாபாரி தினகரன் வரை எப்படி பிசினஸ் லிங்க் இருக்கும் என்பதை மிக சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.
1972லிருந்து 2001வரை 17 சிலைகள் தான் வெளிநாடுகளிருந்து மீட்கபட்டுள்ளது. 2001லிருந்து 2013 வரை எதுவுமே மீட்கப்படவில்லை. ஆனால் வருடத்திற்கு சுமார் ஆயிரம் சிலைகள் காணாமல்போகின்றன அப்படியானால் ஒரு நாளைக்கு மூன்று சிலைகள் காணாமல்போகின்றன. 2013லிருந்து 2018வரை 28 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது இதில் பெரும் பங்கு இந்த சிலைத் திருடன் நூல் ஆசிரியர் எஸ்.விஜய்குமாரையே சேரும்.
அதுவும் வரலாற்று திருப்பமாக இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
●கடந்த 2014 செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி இந்தியா வருகையில் புது தில்லியில் இந்திய பிரதமர் மோதியிடம் தமிழகத்தில் திருடுபோன இரண்டு சிலைகளை ஒப்படைத்தார் அதில் ஒன்று அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தன் எனும் ஊரில் கடந்த 2006ல் திருடப்பட்ட நடராஜர் சிலை (வெண்கலச் சிலை). மற்றொன்று விருத்தாசலம் அர்த்தநாதீஸ்வரர் சிலை (கற் சிலை).
●கடந்த 2016 ஜூன் மாதம் பிரதமர் மோதி அமெரிக்க பயணம் சென்றபோது அமெரிக்கா 8 சிலைகளை முதற் கட்டமாக பிரதமர் மோதியிடம் கொடுத்தது.
பின்னர் இந்த சிலைகள் அதைத்தும் தமிழகம் வந்து சேர்ந்தது.
சில புத்தகம் புள்ளிவிவரங்களுடன் இருக்கும் ஆனால் சுவாரசியமாக இருக்காது. சில புத்தகம் சுவாரசியமாக இருக்கும் ஆனால் புள்ளிவிவரங்கள் இருக்காது. இந்த புத்தகத்தில் இரண்டுக்குமே பஞ்சம் கிடையாது மிக அருமையான புத்தகம்.
இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது பத்து பேரிடமாவது இதை பற்றி பேசவேண்டும் அப்போதுதான் சிலை திருட்டு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும்.
-Kailash PL
Subscribe to:
Posts (Atom)
செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...
-
பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக் கொண்டதாக நமக்கு கிடைப்பவை ஆறு புகைப்படங்கள் மட்டுமே. இவற்றுள் இரண்டு புகைப்படங்கள் புதுவையிலும் இரண்டு புகைப்...
-
Special Interview with Michel Adment and Bernard Dragon By Kailash PL Saratha Vilas M any tourists from other sta...






