Followers

Saturday, July 13, 2019

சிலைத் திருடன்

சிலைத் திருடன்

"THE IDOL THIEF"எனும் ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம். 


நூல் ஆசிரியர் எஸ்.விஜய் குமார் 
இவர் விருத்தாசலத்தில் பிறந்தவர். சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வருகிறார்.  2007 முதல் www.poetryinstone.in எனும் இணையத்தில் இந்திய சிலைகளை பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறார்.  பல்வேறு சிலைத் திருடர்கள் கைதுக்கும் சிலைகள் மீட்புக்கும் இவர் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.   

சிலைத் திருடன் :

இது பத்தோடு பதினொன்றாக படிக்க வேண்டிய நூல் அல்ல தமிழர்கள் அனைவரும் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய நூல்.

நம்மில் எத்தனை பேருக்கு சுத்தமல்லி, ஸ்ரீ புரந்தான்,பழவுர், காமராசவல்லி போன்ற ஊர்களில் உள்ள கோவில்களை தெரியும்? முதலில் இந்த ஊர்கள் எங்கே இருக்குனு நமக்கு தெரியுமா? அப்புறம் எப்படி கோவில்களை தெரியும்!!!

இந்தியாவிலேயே அதிகமான சிலை திருட்டு நடப்பது நம் தமிழகத்தில் தான். அதுவும் சோழர்கால வெண்கலச் சிலைகளுக்கு உலகம் முழுவதும் கிராக்கி அதிகம்.

மேலே குறிப்பிட்ட ஊர்களை போல்  குக்கிராமங்களில் உள்ள கோவில்களில் தான் அதிக அளவில் திருட்டு நடக்கிறது.

இந்தியாவில் 1972ல் இயற்றப்பட்ட சட்ட படி,
1972க்கு பின் எந்த ஒரு நூறு வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த சிலைகளையும் கலைபொருட்களையும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லக்கூடாது. அப்படி 1972க்கு பின் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் சென்றிருந்தால் அவைகளை எந்தவொரு இழப்பீடும் இல்லாமல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும்.

ஒருபுறம் இப்படியிருக்க..

சிலைகள் எப்படி திருடப்படுகிறது?
யார் திருடுவது?
எப்படி கடத்தபடுகிறது?
அது எப்படி விற்கப்படுகிறது?

சிலைகளை எப்படி மீட்டனர்?
சட்டம் சொல்வது என்ன?
திருடியவர்கள் கைது செய்யப்பட்டார்களா?
போன்ற கேள்விகளுக்கு இந்த நூல் விளக்கமளிக்கிறது.

உலகில் மிக பெரிய சிலை திருடர்களின் ஒருவனான சுபாஷ் கபூர் எப்படி சிலை திருட ஆரம்பித்தான் முதல் எப்படி அகப்பட்டான் என்பது வரை அவனை பற்றியும் சிலை திருட்டை பற்றியும் பாமரனுக்கும் புரியும் படி எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் வியாபாரி சுபாஷ் கபூரிலிருந்து காரைக்குடியிலிருக்கும் வியாபாரி தினகரன் வரை எப்படி பிசினஸ் லிங்க் இருக்கும் என்பதை மிக சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.

1972லிருந்து 2001வரை 17 சிலைகள் தான் வெளிநாடுகளிருந்து மீட்கபட்டுள்ளது. 2001லிருந்து 2013 வரை எதுவுமே மீட்கப்படவில்லை. ஆனால் வருடத்திற்கு சுமார் ஆயிரம் சிலைகள் காணாமல்போகின்றன அப்படியானால் ஒரு நாளைக்கு மூன்று சிலைகள் காணாமல்போகின்றன. 2013லிருந்து 2018வரை 28 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது இதில் பெரும் பங்கு இந்த சிலைத் திருடன் நூல் ஆசிரியர்  எஸ்.விஜய்குமாரையே சேரும்.

அதுவும் வரலாற்று திருப்பமாக இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது.

●கடந்த 2014 செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி இந்தியா வருகையில் புது தில்லியில் இந்திய பிரதமர் மோதியிடம் தமிழகத்தில் திருடுபோன இரண்டு சிலைகளை ஒப்படைத்தார் அதில் ஒன்று அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தன் எனும் ஊரில் கடந்த 2006ல் திருடப்பட்ட நடராஜர் சிலை (வெண்கலச் சிலை). மற்றொன்று விருத்தாசலம் அர்த்தநாதீஸ்வரர் சிலை (கற் சிலை).

●கடந்த 2016 ஜூன் மாதம் பிரதமர் மோதி அமெரிக்க பயணம் சென்றபோது அமெரிக்கா 8 சிலைகளை முதற் கட்டமாக பிரதமர் மோதியிடம் கொடுத்தது.
பின்னர் இந்த சிலைகள் அதைத்தும் தமிழகம் வந்து சேர்ந்தது.

சில புத்தகம் புள்ளிவிவரங்களுடன் இருக்கும் ஆனால் சுவாரசியமாக இருக்காது. சில புத்தகம் சுவாரசியமாக இருக்கும் ஆனால் புள்ளிவிவரங்கள் இருக்காது. இந்த புத்தகத்தில் இரண்டுக்குமே பஞ்சம் கிடையாது மிக அருமையான புத்தகம்.

இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது பத்து பேரிடமாவது இதை பற்றி பேசவேண்டும் அப்போதுதான் சிலை திருட்டு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும்.

-Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...