பழ.கைலாஷ்
19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். தமக்கு இன்னும் முருகன் அருள் செய்யவில்லையே என்று கோபம் வந்து விட்டால் எழுதிய பாடல்களை கிழித்து ஆற்றில் விட்டுவிடுவாராம். நீரில் மட்டுமின்றி நெருப்பிலும் இடுவாராம். பாடி எழுதாமல் போன பாடல்களும் பல. இப்படி எழுதாது போனவை, நீரில்விட்டவை, நெருப்பிலிட்டவை போக இதுவரை நமக்கு கிடைத்துள்ள பாடல்கள் சுமார் 50,000 என திருவாமாத்தூர் கௌமார சபையினர் கணக்கு வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றுள் சுமார் 30,000 பாடல்கள் அச்சில் ஏறி உள்ளன. இன்னும் பல சுவடிகளிலேயே உள்ளன.
![]() |
| வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் |
திருநெல்வேலி நகரில் சைவ வேளாளர் மரபில் செந்நிநாயகம் பிள்ளை - பேச்சிமுத்து அம்மாள் இணையரின் மகனாக பிறந்தவர். இயற்பெயர் சங்கரலிங்கம். வண்ணப்பாடல் பாடுவதில் வல்லவர் என்பதால் "வண்ணச்சரபம்" என்றும், கையில் தண்டத்தைக் கொண்டிருந்ததால் "தண்டபாணி சுவாமிகள்" என்றும் அழைக்கப்பட்டார். மேலும் இவருக்கு முருகதாசர், ஓயாமாரி, திருப்புகழ் சுவாமிகள் என இன்னும் பல பட்டப்பெயர்கள் உண்டு.
அறு சமையக் கடவுளையும் சமமாக துதி செய்பவர். உடல் முழுதும் திருநீறு பூசி, இரு தோள்பட்டைகளில் திருநாமம் தரித்து, கழுத்தில் துளசி மாலை மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்து இருப்பார்.
இவர் செட்டிநாட்டுக்கு வந்து தங்கியிருந்து பல தலங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். இதற்கு ஆதார நூல்களாக இருப்பவை, தண்டபாணி சுவாமிகளே தம் வரலாற்றை செய்யுளாக பாடிய "குருபரதத்துவம்" என்னும் நூல். அதில் 'நாட்டுக்கோட்டை சருக்கம்' எனும் பகுதியில் அவர் செட்டிநாட்டுக்கு வந்து நிகழ்த்திய அற்புதங்களை பதிவு செய்துள்ளார்.
பின்னர் தண்டபாணி சுவாமிகளின் மகன் தி.மு.செந்நிநாயகம் சுவாமிகள் பாடிய "தண்டபாணி விஜயம்" என்னும் செய்யுளிலும், "தண்டபாணீயம்" என்னும் உரைநடை நூலிலும் தண்டபாணி சுவாமிகளின் பேரன் தி.செ.முருகதாச சுவாமிகள் எழுதிய "தண்டபாணி சுவாமிகள் வரலாறு" என்னும் நூலிலும் செட்டிநாட்டு விஜயம் குறித்த தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
இவர் தமிழகம் மட்டுமல்லாது கேரளம், ஈழம் முதலிய பல பகுதிகளுக்குச் சென்று பல திருத்தலங்களில் பற்பல பாடல்களை பாடி இருக்கிறார். செல்லாத தலம் இல்லை பாடாத கடவுள் இல்லை என்று கூட நாம் கூறலாம்.
ஒருமுறை பழனி சென்றிருக்கையில் முருகனை தரிசித்து விட்டு அடிவாரத்தில் சில காலம் தங்கியிருந்தார். ஒருநாள் முருகன் இவர் கனவில் செட்டியார் வடிவில் தோன்றி "நம் இனத்தவரிடம் செல்க" என்றார். அடுத்த நாளே அங்கிருந்து புறப்பட்டு மதுரை, இராமநாதபுரம் சென்று செட்டிநாட்டில் நகரத்தார் அதிகம் வசிக்கும் தேவகோட்டை நகர் வந்தடைந்தார்.
தேவகோட்டையில் வேதாந்தம் கருப்பன் செட்டியாரின் தனித் தவச்சாலையில் தங்கி இருந்தார். அவர் சுவாமிகளை தேவகோட்டை நகரத்தாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
தேவகோட்டை பெரும்புலவர் வன்றொண்டர் நாராயணன் செட்டியார் சுவாமிகளுடன் நன்கு பழகி வந்தார். அப்போது "காற்றே பஞ்சாயிருக்கும் காண்" என வெண்பா ஈற்றடி கூறி மேலே மூன்று வரிகளை சேத்து பாடச் சொன்னார்.
"கடுஒழுகும் வாய்க்கினிய காசினியிற் றேர்ந்து
கொடுபருக்க ஒட்டாது கொண்டு - நெடுநாளா
மாற்றே(வு) உறங்குகின்ற மாசுணத்தோல் மெத்தைக்கு
காற்றேபஞ் சாயிருக்கும் காண்."
என சுவாமிகள் பாட வன்றொண்டர் மனம் மகிழ்ந்தார்.
சுவாமிகளிடம் தேவகோட்டை மேலவிட்டு விர.லெ.சிதம்பரம் செட்டியார் தமக்கு ஆண் மகப்பேறு வேண்டினார். "எனக்கு ஊரில் இப்பொழுது உள்ள கடனை நீ அடைத்தால், முருகனிடம் உனக்கு ஆண் பிள்ளை பிறக்க வேண்டுகிறேன்" என்றார் சுவாமிகள். திருநெல்வேலியில் கிணறு தோண்டுவதற்காக சுவாமிகள் கடன் வாங்கி இருந்தார், அக்கடனை அடைக்க அலைந்து திரிந்ததை அவரே தம் பாடல்களில் பதிவு செய்திருக்கிறார். அந்த கடன் ஆயிரம் ரூபாயை சிதம்பரம் செட்டியார் அடைத்தார். ஆகையால் செட்டியாருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தேவகோட்டை நகரச்சிவன் கோயில் பாலதண்டாயுதபாணி மீது பிள்ளைத்தமிழ், அந்தாதி, 36 திருப்புகழ் பாடல்கள் மற்றும் தண்டபாணி பதிகம் உள்ளிட்டவை பாடி ஆண்டவனின் அருள் செட்டியாருக்கு கிட்டும் படி வேண்டினர். ஆண்டவன் திருவருளால் அடுத்த ஆண்டே சிதம்பரம் செட்டியாருக்கு ஆண் பிள்ளை பிறந்தது.
மேலும் நகரச்சிவன் கோயிலில் எழுந்தருளும் சுந்தரேஸ்வரர் மீது ஒரு பதிகமும், மீனாட்சி அம்மை மீது ஒரு கவியும் பாடியுள்ளார்.
ஒரு நாள் சுவாமிகள் ஒரு பிராமணர் வீட்டில் உணவு அருந்தி விட்டு, திண்ணையில் ஓய்வு எடுத்த சமயம், அடுத்த திண்ணையில் வன்றொண்டரின் மாணவர் சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் அருணகிரிநாதர் பாடலை ஒரு சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். "நான் இச்சிறுவனுக்கு இப்பாடலை சொல்லிக் கொடுக்கலாமா?" என்று சுவாமிகள் கேட்க, "நீங்கள் யார்?" என்று ஐயர் கேட்டார். "நான் திருநெல்வேலிக்காரன்" என்றார். "அப்படியா தாராளமாக நீங்கள் பாடம் சொல்லிக் கொடுக்கலாம், உங்களுக்கு தண்டபாணி சுவாமிகளை தெரியுமா? அவர் நலமா?" என்று அன்புடன் ஐயர் கேட்டார். அதற்கு சுவாமிகள் "அடியேனை உலகத்தார் அப்படி கூறுவர்" என்றார். அதைக் கேட்டதும் ஐயர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்து அன்று முதல் சுவாமிகளின் மாணவராக சேர்ந்தது வண்ணம் பாடும் திறன் கற்றார்.
தேவகோட்டை அருகே கோட்டூரில் தேவார பாடல் வைப்புதலமான அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு சுவாமிகள் சென்றிருந்தபோது, ஒரு அன்பர் இன்முகத்தோடு நல்உணவு பரிமாறியதை தனிப்பாடல் ஒன்றில் பாடியுள்ளார்.
"கோட்டூரில் சைவன்முகம் கோணாமற் கூடத்தில்
ஈட்டுதென்னை ஓலைஇலை கொணர்ந்து - போட்டெனக்குச்
சோறும் இலைக்கறியும் சுண்டைக்கா யும்பருப்புச்
சாறுமிட்டுப் பெற்றான் தவம்"
இன்றும் கோட்டூரில் வருடம் தோறும் சிவராத்திரியை ஒட்டி தேவகோட்டை திண்ணப்ப செட்டியார் வகையார் அளிக்கும் அன்னதானம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தண்டபாணி சுவாமிகள் குன்றக்குடிக்கு சென்று சண்முகநாத பெருமானை தரிசித்து ஆறு வகுப்புகளும் வண்ணமும் பாடி அரங்கேற்றினார். இதை அறிந்த காரைக்குடி நகரத்தார் சுவாமிகளை காரைக்குடிக்கு அழைத்துவந்து 500ரூபாய் கொடுத்து சிறப்பு செய்தார்கள். இந்த நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. செட்டியாரை போன்ற தோற்றத்தில் வந்த முருகப் பெருமான் வண்ணச்சரபரிடம் சற்று நேரம் பேசி இருந்துவிட்டு மறைந்துள்ளார். இந்நிகழ்ச்சியை சுவாமிகள் "காரைநகர்ச் செட்டியுருக் காட்டினானே" என்ற பதிகத்தில் பாடியுள்ளார். மேலும் சில நாட்கள் காரைக்குடியில் தங்கி இருந்த போது காரைக்குடி நகரச்சிவன் கோயிலில் எழுந்தருளும் சுந்தரேஸ்வரர் மீது ஒரு பதிகமும், சுப்பிரமணியர் மீது 36 திருப்புகழ் பாடல்களும் பாடியுள்ளார்.
அரிமழம் நகரச்சிவன் கோயிலில் எழுந்தருளும் சுந்தரேஸ்வரர் மீது ஒரு பதிகமும், முருகன் மீது வெண்பாவும், திருப்புகழும் பாடியுள்ளார்.
கானாடுகாத்தான் அருகே பெரியகோயில் என்று அழைக்கப்பெறும் சௌந்தரநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளும் சிவன் மீது வெண்பாவும், பதிகமும், முருகன் மீது திருப்புகழும் பாடியுள்ளார்.
கோவிலூரில் உள்ள விநாயகர் மீது "கழனிநகர் கணபதி பதிகம்" பாடியுள்ளார். செம்பொன்மாரி முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
எப்போதும் நகரத்தார் புலவர்களையும் தமிழுக்கு தொண்டாற்றுபவர்களையும் ஆதரிப்பது வழக்கம். வண்ணச்சரபரையும் ஆதரித்து உள்ளனர்.
நமது செட்டிநாடு டிசெம்பர் 2025.




.jpg)


.jpg)



















