Followers

Showing posts with label வாரணாசி. Show all posts
Showing posts with label வாரணாசி. Show all posts

Wednesday, September 17, 2025

"மணிமகுடத்தில் ஒரு மாணிக்கம்!" காசி - இராமேஸ்வரம் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்

- பழ.கைலாஷ் -


முதல்வர் திரிவேணித்தீர்த்தத்தை வழங்கும் காட்சி
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுடன் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞானதேசிக சுவாமிகள், C.RM.அருணாச்சலம் செட்டியார், விஸ்வ பூஷன் மிஸ்ரா.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் பாரத தேசத்தில் வடக்கே காசி முதல் தெற்கே சேது வரை பற்பல புண்ணிய தலங்களில் பற்பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. நகரத்தார் செய்த மற்றும் செய்து வரும் திருப்பணிகளுள் மணிமகுடமாய் திகழ்வது காசி திருத்தலத்தில் காசிவிஸ்வநாதருக்கு நாள்தோறும் மூன்று வேளை செய்து வரும் பூஜையே! இது சுமார் 250 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகவி பாடுவார் முத்தப்பர்,

"காசியிலும் சேதுவிலும் கனகத் தருமமிட்டு

வாசமுள்ள ஈசர் பதம் மனம் பணிந்தார்"

என்று அன்றே நகரத்தார் வாரணாசியிலும் இராமேஸ்வரத்திலும் செய்த திருப்பணிகளை குறிப்பிட்டு பாடியுள்ளார்.


இன்று நகரத்தார்(ஏஎல்.ஏஆர் கட்டளை) சார்பில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள புனிதநீர் பரிமாற்றம், மணி மகுடத்தில் ஒரு மாணிக்கமாக திகழ்கின்றது.


காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் கோடித்தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கையில் நீராடி மணலை கரைத்து, காசி விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பிரயாகையில் திரிவேணி தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை நிறைவுசெய்வார்கள்.


விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.


கடந்த பல ஆண்டுகளாக தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தாரின் ஏஎல்.ஏஆர் கட்டளை(AL.AR Trust) சார்பில் இராமேஸ்வரத்தில் இராமநாதருக்கு தினம்தோறும் மாலை திரிவேணித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தற்போது இதன் புதிய முகமாக காசியில் காசிவிஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யும் மரபு ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளையுடன் ஏஎல்.ஏஆர் கட்டளை இணைந்து திரிவேணி மற்றும் கோடித்தீர்த்தத்தை பரிமாறிக்கொள்ளும் ஆன்மீக வழிபாட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை 28ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயிலில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாண்புமிகு யோகி ஆதித்யநாத் அவர்களால் திரிவேணித்தீர்த்தம் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள் முன்னிலையில் ஏஎல்.ஏஆர் கட்டளையின் பிரதிநிதி சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார் அவர்களிடம் வழங்கப்பட்டது.


ஆகஸ்ட் 9ஆம் தேதி காசி விஸ்வநாதருக்கு இராமேஸ்வரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட கோடித்தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வில், இதற்கு மிகமுக்கிய காரணகர்த்தராக திகழ்ந்த கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள், ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வ பூஷன் மிஸ்ரா, ஏஎல்.ஏஆர் கட்டளையின் பிரதிநிதி சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார், வாரணாசி ஆட்சியாளர் இராஜலிங்கம் இ.ஆ.ப மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோடித்தீர்த்தத்தை காசி விஸ்வநாதர் கோயிலில் ஒப்படைக்கும் காட்சி..

கோடித்தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் காட்சி.


தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தார் பெரும் திருப்பணியாளர்கள். சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் தேவகோட்டை ஜமீந்தார் செய்திருக்கும் திருப்பணிகள் ஏராளம்.


19-ஆம் நூற்றாண்டு இறுதியில் இராமேஸ்வரம் கோயில் திருப்பணியை தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு.இராமசாமிச் செட்டியார் தொடங்கினார், அவருக்கு பின் அவரது மகன்களால் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றது, பழுதடைந்திருந்த இராமநாத சுவாமி சந்நிதியின் மஹா மண்டபம், முதல் திருச்சுற்று, இரண்டாம் திருச்சுற்றின் பெரும்பகுதி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதி ஆகியன முற்றிலுமாக பிரித்து புதிய கருங்கற்களால் கட்டப்பெற்றது. இடிந்து கிடந்த கிழக்கு கோபுரம் மீண்டும் எழுப்பப்பெற்றது, மேலும் கோயில் முழுமையும் பழுதுபார்த்து கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது.


தற்போது தேவகோட்டை ஜமீந்தாரின் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் காசியில் தொடங்கியிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்த சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார் கூறுகையில் "கடந்த ஏப்ரல் மாதம் கோவிலூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த காசி விஸ்வநாதர் கோயில் சி.ஈ.ஓ விஸ்வ பூஷன் மிஸ்ரா, கோவிலூர் சுவாமிகளுடன் இராமேஸ்வரம் வந்து நம் நகரவிடுதியில் தங்கியிருந்த போது, கோவிலூர் சுவாமிகள் என்னை மிஸ்ரா அவர்களிடம் அறிமுகப்படுத்திவைத்தார்கள். நான் எங்கள் குடும்பத்தார் இராமநாதசுவாமி கோவிலில் செய்திருக்கும் திருப்பணிகளையும், எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை பற்றியும் திரிவேணித்தீர்த்தத்தால் நாங்கள் அபிஷேகம் செய்துவருவது குறித்தும் கோடித்தீர்த்தம் குறித்தும் எடுத்து கூறினேன். பின்னர் நான் கோடித்தீர்த்தத்தையும் விபுதி பிரசாதத்தையும் மிஸ்ரா அவர்களிடம் கொடுத்தேன். அன்புடன் பெற்றுக்கொண்ட அவர் காசி சென்றதும், காசி விஸ்வநாதருக்கு அந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, அதன் வீடியோ காட்சியை முகநூல் உள்ளிட்ட சமூகவலைதலங்களில் பகிர்ந்து செய்திக்குறிப்பில் கோடித்தீர்த்தத்தின் விஷேசம் குறித்தும், விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்யும் மரபு முன்பு இருந்தது குறித்தும் எழுதியிருந்தார். அவரின் ஆர்வம் என்னை வியக்கவைத்தது. இராமேஸ்வரத்தில் நாம் செய்வது போல் காசியிலும் புதிதாய் தொடங்கலாமே என சிந்தித்து கோவிலூர் சுவாமிகள் மூலமாக மிஸ்ரா அவர்களை அணுகினேன். எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் காசி விஸ்வநாதருக்கு தினம்தோறும் ஒருவேளை கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய அனுமதி வேண்டி மிஸ்ரா அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். உடனே அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்து அவர்கள் எங்களுக்கு திரிவேணி தீர்த்தத்தை அனுப்புவதாகவும் நாங்கள் அவர்களுக்கு கோடித்தீர்த்தத்தை அனுப்ப வேண்டியும் விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்யும் மரபை மீண்டும் தொடங்குவோம் என ஒப்புதல் கடிதம் அனுப்பினார்கள்." என்றார்


மேலும் அருணாச்சலம் செட்டியார் கூறுகையில் "கடந்த ஜூலை 28ஆம் தேதி காசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் கோவிலூர் சுவாமிகளுடன் நான் எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் திரிவேணித்தீர்த்தத்தை பெற்றுக்கொண்டேன். பின்னர் ஆகஸ்ட் 1ஆம் தேதி இராமேஸ்வரம் கோயிலில் கோடித்தீர்த்தத்தை வைத்து பூஜை செய்து, கோவிலூர் சுவாமிகள் உதவியுடன் காசிக்கு அனுப்பினோம். காசியில் கோவிலூர் சுவாமிகள் நடத்தி வரும் அன்னஷேத்திரத்தில் தீர்த்தத்தை பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஆகஸ்ட் 9ஆம் தேதி தீர்த்தத்தை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துவந்து கோவிலூர் சுவாமிகளுடன் நான், விஸ்வ பூஷன் மிஸ்ரா, வாரணாசி கலெக்டரான தமிழர் இராஜலிங்கம் ஆகியோர் கோடித்தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தோம்." என்றார்.




நமது செட்டிநாடு இதழ் - Aug 2025



Thursday, April 30, 2020

சம்போவுக்கு என்றும் தடையில்லை.

ஓம் நமசிவாய 

இந்துக்களின் புனித தலமான காசியில், கி.பி 1813முதல் காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் தமிழர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் அன்று முதல் இன்று வரை, வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இது "சம்போ" என்று அழைக்கப்படுகிறது. "சம்போ சம்போ மகாதேவா" என்று கூவி கொண்டு செல்வதால் இப்பெயர் வந்தது.

"பஞ்சாப் மெயில் தவறினாலும், நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை" என்பது வாரணாசி பழமொழி.

இது வரை ஒரு நாள் கூட தவறியதில்லை, எமர்ஜென்சி காலத்தில் கூட தவறியதில்லை, தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காலத்திலும் விஸ்வநாதருக்கு நாள் தோறும் பூஜைகள் நடக்கின்றன, அதற்கான பொருட்கள் ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றது. தகவல் தந்த  காசி சத்திர மேலாண்மை கழகத் தலைவர் பழ.இராமசாமி அவர்களுக்கு நன்றி.

Kailash PL

Wednesday, July 17, 2019

காசியில் பாரதி வாழ்ந்த வீடு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காசியில் வாழ்ந்த வீடு.


"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே! இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே!"என்றார் பாரதி. 

இதன் மூலம் அவர் கங்கையையும் காசியையும் எந்த அளவு நேசித்துள்ளார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


காசியில் மொத்தம் 64 காட்கள்(ghat) உள்ளன. காட் என்றால் படித்துறை.
அதில் "ஹனுமன் காட்"ல் அதிகளவு  பிராமணர்கள் வசிக்கிறார்கள். ஒருகாலத்தில் இங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் பிராமண குடும்பங்கள் இருந்துள்ளனர் தற்போது குறைந்து விட்டனர். இவர்களெல்லாம்  ஐந்து தலை முறைக்கு முன்னர் தமிழகத்திலிருந்து காசிக்கு வந்து குடியேறியவர்கள்.

"ஹனுமன் காட்"ல் உள்ள காஞ்சி மடத்திற்கு நேர் எதிராக "சிவ மடம்" என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழமையான வீடு ஒன்று உள்ளது இந்த வீட்டில் தான் பாரதி தனது 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903)வாழ்ந்தார்.

1898ம் ஆண்டு பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் அங்கு போய்விட்டார்.





காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். பாரதியின் சமஸ்கிருத உச்சரிப்புத் தெளிவையும் அதன் தன்மையையும் காசிப் பண்டிதர்கள் கண்டு  வியந்தார்கள்.
கொஞ்ச காலம், பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். இந்த சமயத்தில் தான் பாரதி மீசை வளர்த்து கோட்,தலைப்பாகை அணிந்து தன்னையே மாற்றிக்கொண்டார்.

இப்போதும் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம்.

 தற்போது இந்த வீட்டில் உள்ளவர் பாரதியின் அத்தை பேரன்  KV.கிருஷ்ணன் 93 வயதுடைய இவர் காசி தமிழ் சங்க பிரசிடென்டாக உள்ளார் மற்றும் இங்குள்ள புகழ்பெற்ற வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழிலும் இந்தியிலும் இசையிலும் புலமை.

பாரதி இங்கு இருந்த போது இவர் பிறக்கவேயில்லை,பிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். பின்பு காசி மக்கள் மற்றும் அரசாங்க உதவியுடன் பாரதிக்கு இதே "ஹனுமன் காட்"ல் உள்ள தன் சொந்த நிலத்தில் சிலை அமைக்கவும் செய்தார்.

பின்னர் பாரதியார் சிலையை பராமரிக்கும் பொறுப்பை "ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்"தாரிடம் ஒப்படைத்துள்ளார்.

-Kailash  PL

Sunday, July 14, 2019

சம்போ... சம்போ... சம்போ மகாதேவா...

ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து  இரவு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சம்போ காட்சி.






ஒவ்வொரு நாளும் இரண்டு முறை ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து சம்போ காசி விஸ்வநாதர் கோவிலுக்கு  செல்கிறது.


" பஞ்சாப் மெயில் தவறினாலும் நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை " என்பது காசி பழமொழி.

ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் 

காசி விஸ்வநாதர் 

சம்போ என்றால் என்ன?

 சம்போ என்பது சமஸ்கிருத சொல் இதன் அர்த்தம் சிவபெருமானைக் குறிக்கும்.

காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது.
அவை உஷத்கால பூஜை, உச்சிகால பூஜை, அர்த்தசாம பூஜை.
அதற்கான அத்தனை பூஜை பொருட்கள், அபிஷேக பொருட்கள், அலங்கார பொருட்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து தினமும் இரண்டு முறை எடுத்து செல்லப்படுகிறது. இது வரை ஒரு நாள் கூட தவறியதில்லை. எமர்ஜென்சி காலத்தில் கூட தவறியதில்லை.

காலை 10.30க்கும் இரவு 9.30க்கும் சத்திரத்தில் இருந்து முறைப்படி எடுத்து செல்லப்படுகிறது. குளிர் காலங்களில் காலை மாலை நேரங்கள் (30min) மாறும்.


அதிகாலை உஷத்காலப் பூஜைக்கு தேவையான பொருட்கள் இரவே காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

உச்சிகாலப் பூஜைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள்:
வாசனைத் தைலம், தேன், பன்னீர், ஊதுபத்தி, சூடம், அத்தர், பழுப்பு சர்க்கரை, திருநீறு, சந்தனம், வில்வம், அறுகம்புல், பூமாலை, பால், தயிர், பஞ்சாமிர்தம், பிரயாகை தீர்த்தம், மங்கள அட்சதை கொண்டு செல்லப்படுகிறது.

சம்போவுக்கு தயாராக இருக்கும் பொருட்கள்.

சம்போவுக்காக சந்தனம் அரைக்கும் காட்சி.

அர்த்தசாம பூஜைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள்
 மேற்கண்ட பொருட்களுடன் சவ்வாது, பட்டு, ஆபரணம், பால் அண்டா, பூக்கூடை, ஆரத்தி பொருட்கள் (வெள்ளி சாமான்கள்) அனைத்தும்  கொண்டு செல்லப்படுகிறது .

சம்போ  வீடியோ காட்சிகள்
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து சம்போ செல்லும் காட்சி.




- Kailash PL



Saturday, July 13, 2019

காசி வரலாற்றுப் பார்வை

காசி


காசி நகரம் இராமாயண, மஹாபாரத காலத்திற்கு முன்பிருந்தே மிகவும் புகழ் பெற்றிருந்த நகரம். ‘ஆனந்த வனம்’ என்ற பெயரும் இப்புராதன நகருக்கு உண்டு சிவன் மிகவும் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் என்பதால் இப்பெயர். ‘அவிமுக்தம்’என்ற பெயரும் உண்டு நிச்சயமாக முக்தியைத் தரும்  ஸ்தலம் இது.
வாராண், அஸ்ஸி என்னும் இரு நதிகளும் இங்கு வந்து கங்கையுடன் கலப்பதால் ‘வாரணாசி’என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.
இது சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிலிங்கங்களுள் ஒன்றாகும்.


வரலாறு;


காசி விஸ்வநாதர் கோவில் பல முறை மொகலாய அரசர்களால் இடிக்கப்பட்டு பின்பு இந்து அரசர்களால் பல முறை கட்டப்பட்டுள்ளது. கி.பி 1669ல் அக்பரின் கொள்ளு பேரன் அவுரங்கசீப்பால் விஸ்வநாதர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டது மற்றும் இந்துக்கள் காசி நகரில் நுழைவதற்கும் கங்கையில் நீராடுவதற்கும் 'ஜிஸியா' என்ற வரி விதித்தார். அவுரங்கசீப் மகன் மூரத் பட்டத்திற்கு வந்தபின் பணத்தேவைக்காக ’ஜிஸியா’ வரியை அதிகமாகப் பெறுவதற்காக கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் ’ஜிஸியா’ வரி கட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.
 தற்போது உள்ள விஸ்வநாதர் கோவில் கி.பி 1777ம் ஆண்டு இந்தூர் ராணி அகல்யாபாயால் கட்டப்பட்டது. அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட மசூதி தற்போதும் இருக்கிறது. மசூதி இருக்கும் இடம் தற்போது உள்ள விஸ்வநாதர் கோவிலுக்கு நேர் பின்புறம் உள்ளது. இங்கு தான் ஆதி விஸ்வநாதர் சன்னதி இருந்ததாகக் கூறப்படுகிறது இதற்கு ஆதாரமாக ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நந்தி ஒன்று மசூதியை பார்த்து உள்ளது. விஸ்வநாதர் கோவிலை சேர்ந்த  சிருங்கர் மண்டப சுவற்றில் மேல் மசூதி கட்டப்பட்டிருப்பது தற்போதும் கண்கூடாக  தெரிகிறது.


காசி விஸ்வநாதர் கோவில்:



தசாஸ்வேமேத் படித்துறையில் இருந்து   ஒரு குறுகிய தெரு  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்கிறது. கோவிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது.
கி.பி 1813 முதல் காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் அன்று முதல் இன்று வரை நகரத்தாரால் ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து நாள் தோறும் அனுப்பப்படுகிறது இது சம்போ எனப்படுகிறது.




கி.பி 1835ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து தங்கக் கோபுரத்தை அமைத்தார். கி.பி 1841ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர் கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது அதற்கான கவசம் அண்மையில் நகரத்தாரால் அமைக்கப்பட்டது.

காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள அத்தனை கதவுகளும் நகரத்தாரால் அமைக்கப்பட்டுள்ளது "ஓம் நமச்சிவாய" எனவும் 'ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம்' எனவும் தமிழில் எழுதி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.


தாயார் சன்னதி:


விஸ்வநாதர் கோவிலுக்கு உள்ளேயே அன்னபூரணிக்கு தனி சன்னதி உள்ளது இதற்கான வெள்ளி கதவுகள் நகரத்தாரால் அமைக்கப்பட்டுள்ளது.
முற்காலத்தில் அன்னபூரணியும்  விசாலாட்சியும் ஒன்றாகவே மக்களால் கருதப்பட்டு வந்தனர் பின்னர் காசி விசாலாட்சிக்கு தனி கோவில் நகரத்தாரால் கட்டப்பட்டது.

கங்கை ஆர்த்தி;


கங்கை ஆற்றின் கரையில்(தசாஸ்வேமேத் படித்துறையில்) தினமும் கங்கை ஆறுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை கங்கா ஆர்த்தி என்கின்றனர்.

கும்பாபிஷேகம்

239 ஆண்டுகளுக்குப் பின்னர் நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு குடமுழுக்கு சூலை 5 2018இல் நடைபெற்றது.

-Kailash PL 

( 31.12.2018 அன்று எழுதப்பட்டது)

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...