Followers

Showing posts with label சுவாரசியம். Show all posts
Showing posts with label சுவாரசியம். Show all posts

Sunday, May 10, 2020

காந்திப் பசு

காந்திப் பசு

பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
(மகாத்மா காந்தியின் இளம் தோற்றம் )



தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் நலனுக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மேன்மையை உணர்ந்த, "இந்தியா" பத்திரிகையின் ஆசிரியர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தம் பத்திரிகை வாயிலாக காந்தியை வெகுவாகப் பாராட்டி வந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டத்துக்காக நிதி வசூல் செய்து, தாமே ஐந்து ரூபாய் போட்டு, பணத்தைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளார் பாரதி.

1909இல் காந்தி தென் ஆப்பிரிக்க இந்தியர் சார்பில் லண்டனுக்கு தூது சென்று திரும்பிய சமயம் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் காந்தியை கைது செய்தது.

இதைப் பற்றி பாரதி "இந்தியா" பத்திரிகையில் 1909இல் டிசம்பர் மாதம் ஒரு சித்திரம் மூலமாகவும் சித்திர விளக்கம் மூலமாகவும் தம் கருத்தை தெரிவித்துள்ளார்.

1909ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'இந்தியா' பத்திரிகையில் வந்த கார்ட்டூன்.


அந்த சித்திரத்தின் கீழுள்ள குறிப்பானது "ஸ்ரீ காந்தியென்ற பசுவானது தனது கன்றுக்குட்டியாகிய இதர இந்தியர்களின் நன்மையின் பொருட்டு இங்கிலாந்துக்குப் போய் பேசிவிட்டு, சிறையிலடைபடுவதற்காக மறுபடியும் திரான்ஸ்வாலுக்கு வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா உத்தியோகஸ்தர்களாகிய புலிகள் அவருடைய மேன்மையை அறியாமல் சிறையிலடைத்தார்கள்"

பத்திரிகையின் உள்ளே உள்ள சித்திர விளக்கமானது: "முற்காலத்தில் நடந்ததாக இந்துக்களின் புராணங்களில் சொல்லியிருக்கும் விஷயம் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு காட்டில் புலியின் வாயிலகப்பட்ட பசுவானது தன்னுடைய கன்றுக் குட்டிக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டபடியால் புலியைப் பார்த்து, 'ஹே பிரபு! இன்று என்னுடைய கடமையைச் செலுத்தாமல் வந்துவிட்டேன். என்னுடைய கன்றுக்குப் பால் கொடுக்கவில்லை. ஆதலால் நான் இப்போழுதே போய் பால் கொடுத்துவிட்டுவந்து உமக்கு இரையாகிவிடுகிறேன். உத்தரவளிக்க வேணும்' என்றது.

'புலி நெடுநேரம் யோசித்து அதனுடைய ஸத்தியத்தைப் பரீட்சிக்கும் பொருட்டு, 'போய் காரியமான உடனே வந்துவிடு' என்று சொல்லி அனுப்பியது.

பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு வந்து, 'என்னுடைய தர்மத்தைச் செய்துவிட்டுவர உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன், என்னைப் புசியும்' என்றது.

இதை கண்ட புலி ஆச்சரியப்பட்டு, 'அம்மா ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீசகதிக்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்' என்று சொல்லிப் பட்டினியிருந்து பிராணனைவிட்டது.

இப்பசுவை போல் நடந்துகொண்ட நமது காந்தி பிரபுவைத் தென் ஆப்பிரிக்கா புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா?

ஒன்றும் தெரியாத புலிகூட நம் இந்துஸ்தானத்தில் தாயினுடைய பிரவாகத்தைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்துப் புலியை பார்க்கிலும் கொடுமையாக,(தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்களை இக் கலிகாலத்தில்தான் காணலாம்".

இந்திய தலைவர்கள் பலர் காந்தியை அறியாதிருந்த காலத்தில்,1909இல் பாரதி இந்த சித்திரத்தையும் விளக்கத்தையும் வெளியிட்டதுதான் ஆச்சரியம்.

பிற்காலத்தில் மகாத்மா காந்தியை "வாழ்க நீ எம்மான்!... புவிக்குள்ளே முதன்மை பெற்றாய்!"(மகாத்மா காந்தி பஞ்சகம்) என்று பாடிப்புகழ்ந்தார் பாரதி.

-Kailash PL


Thursday, April 30, 2020

ஆச்சிமார்கள் பற்றி ஜப்பானிய பெண் எழுதியது!

ஜப்பானை சேர்ந்த பேராசிரியை யூகோ நிஷிமுரா(Yuko Nishimura) அவர்கள், 1998ஆம் ஆண்டு செட்டிநாட்டு ஆச்சிமார்களை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள்.

புத்தகத்தின் தலைப்பு:
Gender, Kinship and Property Rights: Nagarattar Womanhood in South India

யூகோ நிஷிமுரா

Friday, March 27, 2020

அரிக்கேன் விளக்கு

அரிக்கேன் விளக்கை ஏன் அரிக்கேன் விளக்கு என்று அழைக்கிறோம்?


எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு, ஒரு கதை உண்டு.

மின் விளக்குகள் பிரபலமாகாத காலத்தில், பிரிட்டன் நிறுவனம் ஒன்று கண்ணாடி பொருத்தப்பட்ட மண்ணெண்ணெய் விளக்கை(Kerosene lamp) இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. அப்போது "இந்த விளக்கு சாதாரணக் காற்றில் மட்டுமல்ல ஹரிக்கேன் காற்றிலும் கூட அணையாது." என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஹரிக்கேன்(Hurricane) என்றால் சூறாவளி எனப் பொருள்.
இந்த விளம்பரத்தின் வெற்றியால்தான் நாம் மண்ணெண்ணெய் விளக்கை 'அரிக்கேன் விளக்கு' என்று அழைத்து வருகிறோம்.

Kailash PL

Wednesday, February 5, 2020

அழகப்பரின் பம்பாய் ஓட்டல்கள்

வள்ளல் அழகப்ப செட்டியாரின் பம்பாய் ஓட்டல்கள்.


அழகப்ப
செட்டியார்
ரு முறை வணிக பயணமாக பம்பாய் சென்றிருந்த வள்ளல் அழகப்ப செட்டியார், பம்பாய் 'சர்ச் கேட்'டில் இருந்த "ரிட்ஸ்" ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்காக சென்றிருந்த பொழுது அவர் மற்றொரு புதிய வணிகத்தை ஆரம்பிக்க நேர்ந்தது.



ஓட்டலுக்கு தன் உதவியாளர்களுடன் சென்று அறைகள் வேண்டுமென்று கேட்டார். வரவேற்பாளர் அழகப்பர் முகத்திலுள்ள தழும்புகளைப் பார்த்துவிட்டு அறைகள் நிரம்பிவிட்டது உங்களுக்கு இல்லை என்றார். அழகப்ப செட்டியாரும் அவர் உதவியாளர்களும் முகப்பு வரவேற்பு அறையில் அமர்ந்து மாற்று வழி பற்றி பேசிக் கொண்டிருந்தனர், பின்னர் ஒரு தளத்தில் உள்ள அத்தனை அறைகளையும் தான் எடுத்து கொள்வதாக சொன்னார். வரவேற்பாளர் மீண்டும் அறைகள் இல்லை என்பதையே கூறினார்.

ஓட்டலின் மேலாளர் ஒரு ஐரோப்பியர், அவர் அழகப்ப செட்டியாரை அவமதிக்கும் விதமாக "இங்கு ஒரு அறை கிடைப்பதற்கு நீ இந்த ஓட்டலையே விலைக்கு வாங்க வேண்டியிருக்கும்" என்றார்.

இதை சவாலாக ஏற்றுக்கொண்டு அன்றே தன் நண்பர்கள் மூலமாக ரிட்ஸ் ஓட்டல் உரிமையாளரைக் கண்டுபிடித்தது ஓட்டலை விலைக்கு வாங்கினார்.

அடுத்த நாள் ரிட்ஸ் ஓட்டல் உரிமையாளராக உள்ளே சென்ற அழகப்ப செட்டியார் "நான் இப்பொழுது இந்த ஓட்டலின் உரிமையாளர் எனக்கு ஒரு அறை கிடைக்குமா?"என்றார். செட்டியாரின் கேள்வியைக் கேட்டு அதிர்ந்து போன வரவேற்பாளரையும் மேலாளரையும் மன்னித்து, அறிவுரை கூறி தங்கள் பணியை தொடர சொன்னார்.
இப்படியாக உயர்தர வசதிகளுடனும் நற்பெயருடனும்  ஐரோப்பிய பாணியில் செயல்பட்டு வந்தது ரிட்ஸ் ஓட்டல்.

அழகப்ப செட்டியார் மனதில்
சாமானிய நடுத்தர மக்கள் தங்கும் வகையில் பம்பாயில் ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக
'சர்ச் கேட்டி'லிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள "மரைன்லைன்ஸ்"அருகில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தை வாங்கி "ஓட்டல் வெஸ்ட் என்ட்" என்ற புதிய ஓட்டலை உருவாக்கினார்.



ஒரு ஓட்டலில் அறை மறுக்கப்பட்டதால் அந்த ஓட்டல் உட்பட இரண்டு ஓட்டல்களின் அதிபரானார் அழகப்ப செட்டியார் என்பது ஆச்சரியமான தகவல்.

அழகப்பா பல்கலைக்கழகம்

பின்னர் 1953ல் அவருடைய கல்வி நிறுவனங்களுக்கான கட்டிடங்களுக்கு நிதி தேவைப்பட்டதால் இரண்டு ஓட்டல்களையும் விற்றுவிட்டார்.

Kailash PL

Saturday, December 7, 2019

இந்தியாவின் முதல் காந்தி சிலை-காரைக்குடி.

ஆட்கொண்டநாதர் திருக்கோவில்.
இரணியூர்.
சிவகங்கை மாவட்டம்.

இந்தியாவிலேயே முதன்முதலில் மகாத்மா காந்தி அவர்களுக்கு சிற்பம் செதுக்கப்பட்ட இடம் காரைக்குடி அருகேயுள்ள இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி திருக்கோவில்.

நாட்டுக்கோட்டை நகரத்தாரின் ஒன்பது கோவில்களுள் ஒன்றான இரணியூர் கோவிலில் 1944ஆம் ஆண்டு பிரகார கல்தடித்தூண் திருப்பணி நடந்த போது பாரத மாதா, மகாத்மா காந்தி, இராட்டை சிற்பங்கள் கோவில் பிரகார விதானத்தில் எழுவங்கோட்டை சிற்பிகளை கொண்டு நகரத்தாரால் அமைக்கப்பெற்றது.

டெல்லியில் உள்ள ஜண்டேவாளன் மந்திர் எனும் கோவிலில் சுதந்திரப்போராட்ட காலத்தில் தேசியக் கொடியை ஏற்றுவார்கள் இது மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. பம்பாயில் விநாயகர் சதுர்த்தி தேசிய எழுச்சிக்குப் பயன்பட்டது. அது போல் இரணிக் கோவிலில் பாரத மாதா, மகாத்மா காந்தி சிற்பங்கள் தமிழக மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Friday, November 8, 2019

பெருமை மிகு காரைக்குடி



ன்றிலிருந்து சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் அதாவது 1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காரைக்குடிக்கு வருகை புரிந்திருந்தார்.

இன்று(09.11.2019) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காரைக்குடிக்கு வந்ததின் நூற்றாண்டு நிறைவு நாள்.

 பாரதியார் தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்கு கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு புகைப்படங்கள் காரைக்குடியில் எடுக்கப்பட்டது.



அதில் ஒன்று காரைக்குடி இந்துமதாபிமான சங்க குழுவினர்கள் அ.மு.க.மு.க.ரெங்கநாதன் செட்டியார், இராய.சொக்கலிங்கம், சொ.முருகப்பர், கி.நாராயணன் செட்டியார், மு.நடராஜன் உடன்
சுப்பிரமணிய பாரதியார் இருக்கும் புகைப்படம். பின்னாளில் ஒரு பத்திரிகை பேட்டியில் இராய.சொ கூறுகையில் "பாரதியைப் படம் பிடிக்க விரும்பினோம். எதற்கும் அவரை இணக்குவது முடியாத காரியம். அவருக்கே மனம் வந்ததால்தான் படம் பிடிக்க ஒப்புக் கொண்டார். வேண்டிய எல்லாம் தயார் செய்யப்பெற்றன. பாரதியாரை உட்காரவைத்தோம். ஒரு தடிக் கம்பைத் தூக்கிக் கையிலே தலைக்குமேலே கம்பு தோன்றும்படி நிறுத்திக்கொண்டார். அம்மாதிரிப் படம் பிடிக்கப் படம்பிடிப்பவருக்குச் சம்மதமில்லை. அவர் எவ்வளவோ சொல்லியும் பாரதி கேட்கவில்லை பிறகு அப்படியே எடுக்கச் செய்தோம்''.



மற்றொன்று பாரதியாரின் மிக புகழ் பெற்ற புகைப்படமான கருப்பு கோட் அணிந்து தலைப்பாகையுடன் கையில் கோல் கொண்டு நாற்காலியில் வீற்றிருக்கும் அவரின் அழகிய புகைப்படம். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்து பலநூறு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது பல சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

-Kailash PL

Wednesday, October 23, 2019

அழகப்பா கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட கதை



காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் பிறந்த
'தமிழ்கடல்' இராய.சொ என்கின்ற இராய.சொக்கலிங்கம் செட்டியார் 1939ஆம் ஆண்டு காரைக்குடி நகரவையின் தலைவராகப் பொறுப்பு வகித்தபோது "காந்தி மாளிகை" என்னும் பெயரில் நகரவைக் கட்டிடம் ஒன்றை கட்டினார் திறப்பு விழாவுக்கு வருகை தந்த அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சி முதல்வர் இராஜாஜி "இது ஒரு நகராட்சிக்கு மிகவும் நல்லது, ஒரு நாள் இந்த கட்டிடம் ஒரு கல்லூரியாகவோ மருத்துவமனையாகவோ மாறும் என்று நம்புகிறேன்" என்றார்.




இராஜாஜியின் வாக்கு உண்மையானது வள்ளல் இராம.அழகப்ப செட்டியார் அவர்களால் ஆகஸ்ட் 11 1947ஆம் ஆண்டு காந்தி மாளிகை கட்டிடத்தில் மாத வாடகை 2400ரூபாய்க்கு "அழகப்பா கலை கல்லூரி" தொடங்கப்பட்டது பின்பு
1948ல் கல்லூரி புது கட்டிடத்து மாற்றப்பட்டது.


தற்போது காந்தி மாளிகை கட்டிடம் அரசு மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது.

-Kailash PL

Source : Alagappa A Beautiful Mind
BOOK by Dr.Ramanathan Vairavan.

Sunday, August 25, 2019

சென்னை தினம் கொண்டாட இவர் தான் காரணம்.!

Madras Day 


S Muthiah 

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள்.
இந்நாள் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முழு காரணகர்த்தாவாக இருந்தவர் மறைந்த வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா.

எஸ்.முத்தையா

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் 1930 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை என்.எம்.சுப்பையா செட்டியார் சிலோன் இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் இலங்கையில் கொழும்பு மாநகர மேயராக இருந்தார். முத்தையா தனது பள்ளி கல்வியை இந்தியாவிலும் பின் கொழும்புவிலும் முடித்தார். ஐக்கிய அமெரிக்காவில் தந்தையின் விருப்பத்தின் பேரில் கட்டடப் பொறியியலும், தன் விருப்பத்திற்காக அரசியல் அறிவியலிலும்(political science) முதுகலை பட்டம் பெற்றார்.1951 இல் இலங்கை திரும்பிய பின் டைம்ஸ் ஒஃப் சிலோன் (Times of Ceylon) பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணி புரிந்து இறுதியில் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். இலங்கையில்1968 ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டம் இறுக்கமான போது தனது பதவியைத் துறந்து இந்தியா திரும்பினார்.

முத்தையா மெட்ராஸ் நகரில் குடியேறியபின்பு 1981ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரின் சுற்றுலா வழிகாட்டிகளைத் தயாரிக்க அவர் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மெட்ராஸ் டிஸ்கவர்ட் (Madras Discovered)என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார்.
இலங்கை, சென்னை, செட்டிநாடு கட்டடக் கலை வரலாறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களை தன் வாழ்நாளில் எழுதி சாதனைபடைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தன் 89வயதில் காலமானார்.

Kailash PL




Sunday, August 11, 2019

உப்பு - சீனப் புராண கதை.




உப்பு எப்படி வந்தது என்பதுக்கு சீனாவில் ஒரு புராண கதை இருக்கிறது.


வானத்திலிருந்து விசித்திரமான பறவை ஒன்று பூமிக்கு தரையிறங்கி வந்து மண்ணை கொத்தி கொண்டிருந்தது. அந்த பக்கம் சென்ற மீனவன் ஒருவன் அந்த விசித்திரமான பறவையை பிடிக்க முயலுகிறான் ஆனால் பறவை பறந்து சென்று விடுகிறது. பறவை கொத்திய இடத்தில் சாம்பல் நிறத்தில் சிறு சிறு கட்டிகளாக ஏதோ கிடந்தன. அதை புதையல் என்று நினைத்து எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு சென்றான். மீனவன் மனைவி இதை புதையல் என்று நம்ப மறுக்கிறாள்.

அடுத்த நாள் காலை மீனவன் புதையலை அரசரிடம் கொடுத்து தக்க சன்மானம் பெறப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு அரண்மனை நோக்கி செல்கிறான்.
அரண்மனை தர்பாரில் இருந்த அரசர் அந்த சாம்பல் நிற மண்கட்டி போன்ற பொருளை பார்த்து "இதை எதற்காக கொண்டு வந்தாய்?" என்று கேட்க, "இது ஒரு புதையல்! அரசே"என்றான் மீனவன். அரசருக்கு பயங்கரமாக கோபம் வர "இந்த மண்கட்டியை தூக்கி எறிந்துவிட்டு, இவனை சிறையில் அடையுங்கள்" என்றார். மீனவனை சிறையில் அடைத்துவிட்டு அந்த மண்கட்டியை ஒரு வீரன் தூக்கி எறிந்தான் அதில் கொஞ்சம் தவறி சமைத்துக்கொண்டு இருந்த உணவில் விழுந்துவிடுகிறது. அந்த உணவை உண்ட அரசர் "இப்படி ஒரு ருசியான உணவை நான் ஒரு போதும் சாப்பிட்டதில்லை" என்று புகழ்ந்து தள்ள. சமையல்காரன் நடந்த உண்மையை சொல்கிறான். உடனே அரசர் அந்த மீனவனை விடுவித்து "எந்த இடத்தில் இந்த மண்கட்டி கிடைத்தது?" என்று கேட்டு, வீரர்களை அனுப்பி சேகரித்து வர செய்கிறார். அப்படி ஒரு விசித்திரமான பறவை காட்டிக்கொடுத்த பொருள் தான் உப்பு! என்று முடிகிறது சீனக் கதை.

-kailash PL 



Tuesday, August 6, 2019

இலவசம் என்பதை ஏன் ஓசி என்கிறோம்?

ஓசி = இலவசம்

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த போது தபால் துறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது இருப்பதை போலவே அப்போதும் தபால் உறையில் தபால் தலை ஒட்டும் வழக்கம் இருந்தது. தபால் தலைக்கு கட்டணம் உண்டு.

ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனி தொடர்பான தபால்களை இலவசமாக அனுப்ப தபாலின் உறையில் OCS(On Company Service) என்று சுருக்கமாக எழுதி அனுப்புவார்கள்.

OCS என்பது நாளடைவில் நம் வாழ்க்கையில் இரட்டுற கலந்து OC ஆக மருவி போனது. பின் இலவசம் என்பதற்கு ஓசி என்ற பெயரும் நிலைத்துப் போனது. இன்று காரணம் தெரியாமலே பெரும்பாலான மக்கள் இலவசம் என்பதற்கு ஓசி என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர்.



Monday, July 15, 2019

மறந்து போன தமிழ்


குறிப்பாக குளிர் காலங்களில் என் அப்பத்தா சொல்லும் வாக்கியம் இது
"வளவுல படுக்காத அப்பச்சி வாட காத்தடிக்கும் அறைக்குள்ள போய் ஒறங்கு"



இந்த வாட காத்துக்கு(வாடை காற்றுக்கு)என்ன அர்த்தமென்று அப்பதெரியாது.
இன்று ஒரு புத்தகத்தின் மூலம் இதன் அர்த்தம் விளங்கியது.

அதாவது
இரவு நேரத்தில்
வடக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் வாடை. இது குளுமையாக இருக்கும்.

அதேபோல்
மேற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் கச்சான்.

கிழக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் கொண்டல்.

தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் சோழகம்.

இதே மாலை நேரத்தில்
தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் தென்றல் இது மென்மையாக இருக்கும். இதை தான் இளையராஜா " தென்றல் வந்து தீண்டும் போது......" என பாடினாரோ என்னமோ.

வாடை, கச்சான், கொண்டல், சோழகம்,
இந்த வார்த்தைகளெல்லாம் பண்டைய காலங்களில் கடலோடிகளும் தன வணிகர்களும் கப்பலில் செல்லும் போது காற்றை குறிக்க பயன்படுத்திய தமிழ்  வார்த்தைகள் ஆகும்.


- Kailash PL

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...