Followers

Sunday, May 10, 2020

காந்திப் பசு

காந்திப் பசு

பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
(மகாத்மா காந்தியின் இளம் தோற்றம் )



தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் நலனுக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மேன்மையை உணர்ந்த, "இந்தியா" பத்திரிகையின் ஆசிரியர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தம் பத்திரிகை வாயிலாக காந்தியை வெகுவாகப் பாராட்டி வந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டத்துக்காக நிதி வசூல் செய்து, தாமே ஐந்து ரூபாய் போட்டு, பணத்தைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளார் பாரதி.

1909இல் காந்தி தென் ஆப்பிரிக்க இந்தியர் சார்பில் லண்டனுக்கு தூது சென்று திரும்பிய சமயம் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் காந்தியை கைது செய்தது.

இதைப் பற்றி பாரதி "இந்தியா" பத்திரிகையில் 1909இல் டிசம்பர் மாதம் ஒரு சித்திரம் மூலமாகவும் சித்திர விளக்கம் மூலமாகவும் தம் கருத்தை தெரிவித்துள்ளார்.

1909ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'இந்தியா' பத்திரிகையில் வந்த கார்ட்டூன்.


அந்த சித்திரத்தின் கீழுள்ள குறிப்பானது "ஸ்ரீ காந்தியென்ற பசுவானது தனது கன்றுக்குட்டியாகிய இதர இந்தியர்களின் நன்மையின் பொருட்டு இங்கிலாந்துக்குப் போய் பேசிவிட்டு, சிறையிலடைபடுவதற்காக மறுபடியும் திரான்ஸ்வாலுக்கு வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா உத்தியோகஸ்தர்களாகிய புலிகள் அவருடைய மேன்மையை அறியாமல் சிறையிலடைத்தார்கள்"

பத்திரிகையின் உள்ளே உள்ள சித்திர விளக்கமானது: "முற்காலத்தில் நடந்ததாக இந்துக்களின் புராணங்களில் சொல்லியிருக்கும் விஷயம் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு காட்டில் புலியின் வாயிலகப்பட்ட பசுவானது தன்னுடைய கன்றுக் குட்டிக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டபடியால் புலியைப் பார்த்து, 'ஹே பிரபு! இன்று என்னுடைய கடமையைச் செலுத்தாமல் வந்துவிட்டேன். என்னுடைய கன்றுக்குப் பால் கொடுக்கவில்லை. ஆதலால் நான் இப்போழுதே போய் பால் கொடுத்துவிட்டுவந்து உமக்கு இரையாகிவிடுகிறேன். உத்தரவளிக்க வேணும்' என்றது.

'புலி நெடுநேரம் யோசித்து அதனுடைய ஸத்தியத்தைப் பரீட்சிக்கும் பொருட்டு, 'போய் காரியமான உடனே வந்துவிடு' என்று சொல்லி அனுப்பியது.

பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு வந்து, 'என்னுடைய தர்மத்தைச் செய்துவிட்டுவர உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன், என்னைப் புசியும்' என்றது.

இதை கண்ட புலி ஆச்சரியப்பட்டு, 'அம்மா ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீசகதிக்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்' என்று சொல்லிப் பட்டினியிருந்து பிராணனைவிட்டது.

இப்பசுவை போல் நடந்துகொண்ட நமது காந்தி பிரபுவைத் தென் ஆப்பிரிக்கா புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா?

ஒன்றும் தெரியாத புலிகூட நம் இந்துஸ்தானத்தில் தாயினுடைய பிரவாகத்தைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்துப் புலியை பார்க்கிலும் கொடுமையாக,(தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்களை இக் கலிகாலத்தில்தான் காணலாம்".

இந்திய தலைவர்கள் பலர் காந்தியை அறியாதிருந்த காலத்தில்,1909இல் பாரதி இந்த சித்திரத்தையும் விளக்கத்தையும் வெளியிட்டதுதான் ஆச்சரியம்.

பிற்காலத்தில் மகாத்மா காந்தியை "வாழ்க நீ எம்மான்!... புவிக்குள்ளே முதன்மை பெற்றாய்!"(மகாத்மா காந்தி பஞ்சகம்) என்று பாடிப்புகழ்ந்தார் பாரதி.

-Kailash PL


No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...