Followers

Showing posts with label நகரத்தார் கோயில் திருப்பணிகள். Show all posts
Showing posts with label நகரத்தார் கோயில் திருப்பணிகள். Show all posts

Wednesday, September 17, 2025

"மணிமகுடத்தில் ஒரு மாணிக்கம்!" காசி - இராமேஸ்வரம் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்

- பழ.கைலாஷ் -


முதல்வர் திரிவேணித்தீர்த்தத்தை வழங்கும் காட்சி
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுடன் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞானதேசிக சுவாமிகள், C.RM.அருணாச்சலம் செட்டியார், விஸ்வ பூஷன் மிஸ்ரா.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் பாரத தேசத்தில் வடக்கே காசி முதல் தெற்கே சேது வரை பற்பல புண்ணிய தலங்களில் பற்பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. நகரத்தார் செய்த மற்றும் செய்து வரும் திருப்பணிகளுள் மணிமகுடமாய் திகழ்வது காசி திருத்தலத்தில் காசிவிஸ்வநாதருக்கு நாள்தோறும் மூன்று வேளை செய்து வரும் பூஜையே! இது சுமார் 250 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகவி பாடுவார் முத்தப்பர்,

"காசியிலும் சேதுவிலும் கனகத் தருமமிட்டு

வாசமுள்ள ஈசர் பதம் மனம் பணிந்தார்"

என்று அன்றே நகரத்தார் வாரணாசியிலும் இராமேஸ்வரத்திலும் செய்த திருப்பணிகளை குறிப்பிட்டு பாடியுள்ளார்.


இன்று நகரத்தார்(ஏஎல்.ஏஆர் கட்டளை) சார்பில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள புனிதநீர் பரிமாற்றம், மணி மகுடத்தில் ஒரு மாணிக்கமாக திகழ்கின்றது.


காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் கோடித்தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கையில் நீராடி மணலை கரைத்து, காசி விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பிரயாகையில் திரிவேணி தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை நிறைவுசெய்வார்கள்.


விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.


கடந்த பல ஆண்டுகளாக தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தாரின் ஏஎல்.ஏஆர் கட்டளை(AL.AR Trust) சார்பில் இராமேஸ்வரத்தில் இராமநாதருக்கு தினம்தோறும் மாலை திரிவேணித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தற்போது இதன் புதிய முகமாக காசியில் காசிவிஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யும் மரபு ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளையுடன் ஏஎல்.ஏஆர் கட்டளை இணைந்து திரிவேணி மற்றும் கோடித்தீர்த்தத்தை பரிமாறிக்கொள்ளும் ஆன்மீக வழிபாட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை 28ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயிலில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாண்புமிகு யோகி ஆதித்யநாத் அவர்களால் திரிவேணித்தீர்த்தம் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள் முன்னிலையில் ஏஎல்.ஏஆர் கட்டளையின் பிரதிநிதி சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார் அவர்களிடம் வழங்கப்பட்டது.


ஆகஸ்ட் 9ஆம் தேதி காசி விஸ்வநாதருக்கு இராமேஸ்வரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட கோடித்தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வில், இதற்கு மிகமுக்கிய காரணகர்த்தராக திகழ்ந்த கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள், ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வ பூஷன் மிஸ்ரா, ஏஎல்.ஏஆர் கட்டளையின் பிரதிநிதி சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார், வாரணாசி ஆட்சியாளர் இராஜலிங்கம் இ.ஆ.ப மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோடித்தீர்த்தத்தை காசி விஸ்வநாதர் கோயிலில் ஒப்படைக்கும் காட்சி..

கோடித்தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் காட்சி.


தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தார் பெரும் திருப்பணியாளர்கள். சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் தேவகோட்டை ஜமீந்தார் செய்திருக்கும் திருப்பணிகள் ஏராளம்.


19-ஆம் நூற்றாண்டு இறுதியில் இராமேஸ்வரம் கோயில் திருப்பணியை தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு.இராமசாமிச் செட்டியார் தொடங்கினார், அவருக்கு பின் அவரது மகன்களால் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றது, பழுதடைந்திருந்த இராமநாத சுவாமி சந்நிதியின் மஹா மண்டபம், முதல் திருச்சுற்று, இரண்டாம் திருச்சுற்றின் பெரும்பகுதி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதி ஆகியன முற்றிலுமாக பிரித்து புதிய கருங்கற்களால் கட்டப்பெற்றது. இடிந்து கிடந்த கிழக்கு கோபுரம் மீண்டும் எழுப்பப்பெற்றது, மேலும் கோயில் முழுமையும் பழுதுபார்த்து கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது.


தற்போது தேவகோட்டை ஜமீந்தாரின் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் காசியில் தொடங்கியிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்த சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார் கூறுகையில் "கடந்த ஏப்ரல் மாதம் கோவிலூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த காசி விஸ்வநாதர் கோயில் சி.ஈ.ஓ விஸ்வ பூஷன் மிஸ்ரா, கோவிலூர் சுவாமிகளுடன் இராமேஸ்வரம் வந்து நம் நகரவிடுதியில் தங்கியிருந்த போது, கோவிலூர் சுவாமிகள் என்னை மிஸ்ரா அவர்களிடம் அறிமுகப்படுத்திவைத்தார்கள். நான் எங்கள் குடும்பத்தார் இராமநாதசுவாமி கோவிலில் செய்திருக்கும் திருப்பணிகளையும், எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை பற்றியும் திரிவேணித்தீர்த்தத்தால் நாங்கள் அபிஷேகம் செய்துவருவது குறித்தும் கோடித்தீர்த்தம் குறித்தும் எடுத்து கூறினேன். பின்னர் நான் கோடித்தீர்த்தத்தையும் விபுதி பிரசாதத்தையும் மிஸ்ரா அவர்களிடம் கொடுத்தேன். அன்புடன் பெற்றுக்கொண்ட அவர் காசி சென்றதும், காசி விஸ்வநாதருக்கு அந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, அதன் வீடியோ காட்சியை முகநூல் உள்ளிட்ட சமூகவலைதலங்களில் பகிர்ந்து செய்திக்குறிப்பில் கோடித்தீர்த்தத்தின் விஷேசம் குறித்தும், விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்யும் மரபு முன்பு இருந்தது குறித்தும் எழுதியிருந்தார். அவரின் ஆர்வம் என்னை வியக்கவைத்தது. இராமேஸ்வரத்தில் நாம் செய்வது போல் காசியிலும் புதிதாய் தொடங்கலாமே என சிந்தித்து கோவிலூர் சுவாமிகள் மூலமாக மிஸ்ரா அவர்களை அணுகினேன். எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் காசி விஸ்வநாதருக்கு தினம்தோறும் ஒருவேளை கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய அனுமதி வேண்டி மிஸ்ரா அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். உடனே அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்து அவர்கள் எங்களுக்கு திரிவேணி தீர்த்தத்தை அனுப்புவதாகவும் நாங்கள் அவர்களுக்கு கோடித்தீர்த்தத்தை அனுப்ப வேண்டியும் விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்யும் மரபை மீண்டும் தொடங்குவோம் என ஒப்புதல் கடிதம் அனுப்பினார்கள்." என்றார்


மேலும் அருணாச்சலம் செட்டியார் கூறுகையில் "கடந்த ஜூலை 28ஆம் தேதி காசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் கோவிலூர் சுவாமிகளுடன் நான் எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் திரிவேணித்தீர்த்தத்தை பெற்றுக்கொண்டேன். பின்னர் ஆகஸ்ட் 1ஆம் தேதி இராமேஸ்வரம் கோயிலில் கோடித்தீர்த்தத்தை வைத்து பூஜை செய்து, கோவிலூர் சுவாமிகள் உதவியுடன் காசிக்கு அனுப்பினோம். காசியில் கோவிலூர் சுவாமிகள் நடத்தி வரும் அன்னஷேத்திரத்தில் தீர்த்தத்தை பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஆகஸ்ட் 9ஆம் தேதி தீர்த்தத்தை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துவந்து கோவிலூர் சுவாமிகளுடன் நான், விஸ்வ பூஷன் மிஸ்ரா, வாரணாசி கலெக்டரான தமிழர் இராஜலிங்கம் ஆகியோர் கோடித்தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தோம்." என்றார்.




நமது செட்டிநாடு இதழ் - Aug 2025



Tuesday, April 1, 2025

கோட்டையூர் க.வீ.சொ.வீ.அழகப்ப ஐயா

- பழ.கைலாஷ் -


கோட்டையூர், இது கோயில் திருப்பணிகளும் கல்வி அறப்பணிகளும் நிரம்ப செய்த பெருமக்கள் பிறந்த புண்ணிய பூமி. இவ்வூர் மெ.க வகையார் செய்த திருப்பணிகளை இக்கட்டுரையிலோ அல்லது ஒரு புத்தகத்திலோ அடக்கிவிட முடியாது, மெ.க வகையார் திருவண்ணாமலை கோயில் உள்ளிட்ட எண்ணற்ற திருப்பணிகள் செய்த பெருமான்கள்.


இந்த மெ.க வகையில் பிறந்த "வள்ளல் இராம.அழகப்ப செட்டியார்" ஆற்றியிருக்கும் அரும்பணிகள் அனைவரும் அறிந்ததே. காரைக்குடியை கல்விக்குடியாக்கிய பெருமைக்குரியவர். கோட்டையூரில் உள்ள தனது இல்லத்தையே 1954-ஆம் ஆண்டு மகளிர் கல்லூரியாக மாற்றியவர், ஆகையால் "குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்" என்று போற்றப்படுகிறார்.


வள்ளல் க.வீ.அழ.இராம.அழகப்ப செட்டியாருக்கே முன்னுதாரணமாக இருந்தவர் இதே மெ.க வகையில் பிறந்த "க.வீ.சொ.வீ.அழகப்ப செட்டியார்". இவர் தாம் பிறந்த பூர்வீக வீட்டில் உள்ள அனைத்து பங்குகளையும் வாங்கி 1940-ஆம் ஆண்டே "சனாதன தர்ம வித்யாலய" என்ற பெயரில் பள்ளிக்கூடமாக மாற்றியவர்.


இவரைப் பற்றி அறிந்துகொள்ளும் முன் இவரின் முன்னோர்களை பற்றி தெரிந்துகொள்வோம். 


சொக்கப்ப ஐயா.


அழகப்பையாவின் பாட்டனார் பெயர் க.வீ.சொக்கலிங்கம் செட்டியார். இவர் பெரும் தனவணிகர். பல திருப்பணிகள் செய்துள்ளார். கோவிலூர் மடாலயத்தின் இரண்டாவது மடாதிபதியான துறவு ஆண்டவர் என்னும் சீர்வளர்சீர் அருணாச்சல ஞானதேசிக சுவாமிகளிடமும் மூன்றாவது மடாதிபதி சீர்வளர்சீர் சிதம்பர ஞானதேசிக சுவாமிகளிடமும் முதன்மை சீடராக இருந்து, வேதாந்தப் பாடம் பயின்றும், பலருக்கு பயிற்றுவித்தும் வந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தமக்கு வேதாந்தத்தில் சந்தேகம் வருகின்றபோதெல்லாம் இவரிடம் கேட்டுத் தெளிவுபெற்றுள்ளார்.


கோவிலூர் மடாலயத்தில் வேதாந்தம் கற்று காவி உடையணிந்து துறவு பூண்டவரை "சுவாமிகள்" என்றும், வேதாந்தம் கற்று காவி அணியாமல் வெள்ளை உடையிலேயே இல்லறத்தில் இருந்து வருபவர்களை "ஐயா" என்றும் அக்காலத்தில் அழைத்துள்ளனர். சொக்கலிங்கம் செட்டியார் வேதாந்தம் கற்று இல்லறத்தில் இருந்துவந்ததால் "சொக்கப்பையா" என்னும் திருப்பெயரால் அழைக்கப்பெற்றுள்ளார்.


சொக்கப்பையா, துறவு ஆண்டவரின் சீடராக சிதம்பரத்தில் வாழும் காலத்தில் தம் சொந்த செலவில் இளமையாக்கினார் கோயிலில் சில திருப்பணிகள் செய்தும், சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பல சுவாமிகள் மடமும், அருகே துறையூரில் உள்ள மடமும் நிலையாக நடந்திட வழிவகை செய்துள்ளார்.


கோவிலூர் மடாதிபதியின் நேரடி நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளார் சொக்கப்பையா. அதற்கு ஒரு உதாரணம் கோவிலூர் மடாலயத்தின் பெயரில் வாங்கும் சொத்துகளுக்கு சாட்சி கையெழுத்திட்டு வந்துள்ளார்.


கோவிலூர் மடாலயத்திற்கு சொந்தமான "களத்தூர்" என்னும் கிராமத்தில் பர்வதவர்த்தனி உடனமர் இராமநாதசுவாமி கோயிலை தம் சொந்த பொருட் செலவில் புதிதாய் கட்டி சிதம்பர ஞானதேசிக சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்து அதன் அருகே ஒரு மடத்தை நிறுவி பலருக்கும் வேதாந்தம் பயிற்றுவித்து வந்துள்ளார் சொக்கப்பையா. இந்த கோயிலில் நித்திய பூஜைகள் சிறப்பாக நடந்திட செட்டிவயல் என்னும் கிராமத்தை எழுதி வைத்துள்ளார். இதை நமக்கு கீழ்கண்ட பாடல் விளக்குகிறது.


"தலமலிந்த களத்தூரில் பர்வதவர்த்தனி என்னுந்

தாயி னோடு

கலமலிந்த இராமனாதப் பெருமான் பூசையென்றும்

நடத்தற் காக

வலமலிந்த செட்டிவயல் எனும்கிராமம் வாங்கிவைத்து வளமை செய்து

பலமலிந்த பெரியோன்தன் பெரும்புகழை அரும்புலவர்

பகர்வர் மாதோ!"


இப்படியாக பல திருப்பணிகளை செய்து வேதாந்த நூல்களை பயிற்றுவித்து வந்த சொக்கப்பையா கி.பி.1889ஆம் ஆண்டு சித்தியடைந்தார். இவரது சமாதி கோவிலூர் மடாலய நந்தவனத்தில் உள்ளது.



வீரப்ப செட்டியார். 


அழகப்பையாவின் தந்தை க.வீ.சொ.வீரப்ப செட்டியார். இவர் தம் தந்தை சொக்கப்பையாவை பின்பற்றி இளமையாக்கினார் கோயிலை காரைக்குடி பெரி.க குடும்பத்தாருடன் இணைந்து முழுக்கோயிலையும் புதிய கல்திருப்பணி செய்து கி.பி.1900-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


மேலும் சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் மடத்தையும், துறையூர் மடத்தையும் விரிவுபடுத்தி கட்டியுள்ளார்.



அழகப்ப ஐயா(1875-1946).


க.வீ.சொ.வீரப்ப செட்டியாரின் மகனாக கி.பி.1875-ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாள் பிறந்தார் அழகப்ப செட்டியார். பர்மா, இலங்கை, மலே‌சியா ஆகிய நாடுகளில் பெரும் வணிகம் செய்து வந்தார். தன் பாட்டனாரை பின்பற்றி கோவிலூர் மடாலயத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.


கோவிலூர் மடாலய ஐந்தாவது மடாதிபதி சீர்வளர்சீர் வீரசேகர ஞானதேசிக சுவாமிகளிடம் வேதாந்த பாடம் கேட்டு, சுவாமிகளின் அன்புக்குரிய சீடராக இருந்தார்.


தனது பாட்டனார் போல் வேதாந்தம் கற்று இல்லறத்தில் இருந்துவந்ததால் அழகப்ப செட்டியார் "ஐயா" என்ற பட்டம் பெற்று "அழகப்பையா" என்னும் திருப்பெயரால் அழைக்கப்பெற்றார்.


சொக்கப்பையா கட்டிய "களத்தூர்" இராமநாத சுவாமி கோயிலை அழகப்பையா அன்றைய மதிப்பில் 10,000ரூபாய் செலவில் சீர்திருத்தி வீரசேகர சுவாமிகள் தலைமையில் கி.பி.1908-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


கோ.அளகாபுரி அருகேயுள்ள "கல்லாங்குடி" திருப்பாகதீஸ்வரா் கோயிலை 50,000ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டி கி.பி.1922-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


அக்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பாடல்பெற்ற திருத்தலங்களை தேடித் தேடித் திருப்பணி செய்து வந்தார்கள். சிதம்பரம் அருகே திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற திருநெல்வாயில் என்னும் "சிவபுரி" உச்சிநாதர் கோயில் சிதிலமடைந்திருந்ததை கண்டு வருத்தமடைந்த அழகப்பையா. தன்னுடன் க.வீ.மு.ப.கதிரேசன் செட்டியார் மற்றும் காரைக்குடி முத்து.அரு.மு.அருணாச்சலம் செட்டியார் ஆகியோரை இணைத்து கோயில் திருப்பணிகளை தொடங்கினார். பழைய கோயிலை முற்றிலுமாக பிரித்து, அன்றைய மதிப்பில் 3,27,500ரூபாய் செலவில் புதிய கருங்கற்களால் இராஜகோபுரத்துடன் பெரிய கோயிலாக கட்டி கி.பி.1928-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தார். தொடர்ந்து அழகப்பையாவின் வம்சாவளியினரால் 1957, 1982, 2008 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பெற்று, அன்று முதல் இன்று வரை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அழகப்பையாவால் சிவபுரியில் அழகிய திருக்குளம், நந்தவனம், பசுமடம், தண்ணீர்ப்பந்தல், அக்ரஹார வீடுகள் ஆகியன உருவாக்கப் பெற்றுள்ளன.


கும்பகோணம் அருகேயுள்ள பாடல்பெற்ற தலமான "அவளிவநல்லூர்" சாட்சிநாதர் கோயிலும் சிவபுரி போல் சிதிலமடைந்திருந்துள்ளது. அழகப்பையா தன் பெரும்முயர்சியில் காரைக்குடி மெ.மெ.மெய்யப்ப செட்டியார் மற்றும் நேமத்தான்பட்டி மு.பெ.காசி செட்டியார் ஆயியோருடன் இணைந்து பழைய கோயிலை பிரித்து, புதிய கருங்கற்களால் சுமார் 1,00,000ரூபாய் செலவில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


வேதாந்தப்பாடம் மூலம் தம் வாழ்வில் ஒளி ஏற்றிய கோவிலூர் மடத்திற்கு மின்சார ஒளி வசதி ஏற்படுத்தியுள்ளார் அழகப்பையா.


தனது குரு வீரசேகர ஞானதேசிக சுவாமிகளால் கல்திருப்பணி செய்யப்பெற்று கி.பி1911-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பெற்ற "திருக்களர்" பாரிஜாதவனேசுவரர் கோயிலின் அறங்காவலராக இருந்து பல திருப்பணிகள் செய்து கி.பி1933-ஆம் ஆண்டு மகாதேவ ஞானதேசிக சுவாமிகள் தலைமையில் இரண்டாவது கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


திருவண்ணாமலை அருகே "பழங்கோயில்" எனும் ஊரில் உள்ள பலக்ராதீஸ்வரர் கோயில் சிதிலமடைந்திருந்ததை கண்ட அழகப்பையா அக்கோயிலை 20,000 ரூபாய் செலவில் சீர்திருத்தி விரிவுபடுத்திக் கட்டி கி.பி.1933-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார். மேலும் கோயிலில் தினசரி பூஜைகள் நடந்திட எலத்தூர் என்னும் கிராமத்தை வாங்கி கோயிலுக்கு எழுதிவைத்துள்ளார். நில விபரங்களை சர்வே எண்ணுடன் கோயிலில் கல்வெட்டாக பொறித்துவைத்துள்ளார். இன்றும் அதை நாம் காணலாம்.


"குருநாதர்" என்று அழைக்கப்பெற்ற ஸ்ரீ யோகானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் தம் இறுதிகாலத்தில் கோட்டையூரில் தங்கியிருந்து சமாதியானார்கள். அவர்களுக்கு அழகப்பையா கோட்டையூர் நகரத்தார் பொருளுதவியுடன் அழகிய அதிஷ்டான ஆலயம் எழுப்பி, அதன் முன்பு தம் சொந்த பொருட்செலவில் அலங்கார மண்டபம் கட்டி, கி.பி.1937-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார். அலங்கார மண்டப கல்தூண்களில் அழகப்பஐயாவும் அவர்தம் மனைவி அலமேலு ஆச்சியும் சதாசேவிப்பு சிற்பமாக காட்சியளிக்கின்றனர். இந்த ஆலயம் அழகப்பையாவின் வம்சாவளியினரால் 1994 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பெற்று சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற திருநாரையூர் சுயம்பிரகாசர் கோயிலில் காரைக்குடி பழ.இராம. லெட்சுமணன் செட்டியாரால் 1930களில் திருப்பணிகள் தொடங்கப்பெற்றது. இக்கோயில் பற்றி தெரிந்துகொண்ட அழகப்பையா, திருப்பணியில் இணைந்துகொண்டார். தம் சொந்த பொருட்செலவில் சுவாமி கோயிலின் திருச்சுற்று திருமாளிகை, தெட்சிணாமூர்த்தி மண்டபம், லெட்சுமி சந்நிதி, உள் இராஜகோபுரம், உள் மதில்சுவர் மற்றும் தீர்த்தப்படித்துறைகள் ஆகியவற்றை கட்டிக்கொடுக்க, கி.பி.1943-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.


தாம் பிறந்த மெ.க வகையாருக்கு விருப்பத்திற்குரிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் கி.பி.1944-ல் நடைபெற்ற போது அக்கோயில் அறங்காவலராக இருந்தார் அழகப்பையா. 


மேலும் தமது குலதெய்வ கோயிலான மூலங்குடி பொய்சொல்லா மெய்யர் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


அழகப்பையா, கோயில்கள் திருப்பணி செய்யும் காலத்தில் அக்கோயில்கள் தொடர்பான புராண நூல்கள் மற்றும் வரலாற்று நூல்கள் பல வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க நூல்கள் "சொர்ணபுரீஸ்வரர் சௌந்தரிய நாயகி அந்தாதி-1917", "செல்வவிநாயகர் செம்பொன்மாலை-1917", "சிவபுரி புராணம்-1923", "கோவிலூர் நால்வர் நான்மணிமாலை-1930", "திருநாரையூர்ப்புராணம்-1935", "ஆன்மானான்ம விவேகம்-1938", "திருவண்ணாமலை வரலாறு-1940", "வினாவிடை மணிமாலை-1943".


அழகப்பையா ஆன்மீக பணிகள் மட்டுமல்லாது கல்வி பணிகளும் செய்துள்ளார். மலேசியா கோலப்பிலா-வில் வணிகம் செய்து வந்த போது, மலேசிய பல்கலைக்கழகத்திற்கு கி.பி.1940களில் 200அமெரிக்க டாலர் நிதியுதவி செய்துள்ளார்.


கோட்டையூரில் தாம் பிறந்து வளர்ந்த பூர்வீக வீட்டில் உள்ள அனைவ‌ரின் பங்குகளையும் விலைக்கு வாங்கி அப்பெரிய வீட்டை 1940ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் "சனாதன தர்ம வித்யாலய" என்ற பெயரில் பள்ளிக்கூடமாக உருவாக்கினார். இன்றும் இவரது வம்சாவளியினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


அழகப்பையாவின் அறுபது வயது பூர்த்தி மணிவிழா கோவிலூரில் 1935-ஆம் ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது கோட்டையூர் வித்வான் சுப்பிரமணிய ஐயரால் "கல்யாண சிறப்பு" என்னும் செய்யுள் இயற்றப்பட்டுள்ளது. அச்செய்யுள் அழகப்பையாவின் வரலாற்றை கூறுவதாக அமைந்துள்ளது.


பற்பல கோயில் திருப்பணிகள் மற்றும் கல்விப்பணிகள் செய்துவந்த அழகப்பையா தமது 71வது அகவையில் கி.பி.1946ஆம் ஆண்டு சித்தியடைந்தார். இவரது சமாதி கோவிலூர் மடாலய நந்தவனத்தில் உள்ள சொக்கப்பையா சமாதியின் எதிரில் உள்ளது. சொக்கப்பையா லிங்கமாகவும் அழகப்பையா நந்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். வருடம் தோறும் வைகாசி மாதம் சொக்கப்பையாவுக்கும் சித்திரை மாதம் அழகப்பையாவுக்கும் குருபூஜைகள் நடைபெற்று வருகின்றன.

Sunday, January 5, 2025

இராமேஸ்வரம் கிழக்கு இராஜகோபுரம் அன்றும்! இன்றும்!



இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலின் நுழைவு வாயிலில் இராஜகோபுரம் இல்லாத குறையை நீக்க கி.பி.1630களில் தளவாய் சேதுபதி மன்னர் எழுநிலை கோபுரம் ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டினார். ஆனால் கி.பி.1639இல் சேதுநாட்டின் மீது மிகப்பெரிய படையெடுப்பை மேற்கொண்ட மதுரை திருமலை நாயக்க மன்னரால் அது தடைப்பட்டது. பின்னர் வந்த சேதுபதி மன்னர்கள் பலர் கோயிலை விரிவுபடுத்தி வரும் சமயம் இந்த கோபுரத்தை எழுப்பும் பணியையும் மேற்கொண்டனர். ஆயினும் இது முடிவடையவில்லை. சுமார் இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாஸ்கர சேதுபதி ஆட்சி காலத்தில் தேவகோட்டை ஜமீன்தார் "அள.அரு" குடும்பத்தினரால் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.

- பழ.கைலாஷ் 

உலகின் மிகப்பெரிய இடப வாகனம்

லகின் மிகப்பெரிய இடப வாகனம் - அண்ணாமலையாரின் வெள்ளி இடப வாகனமே! 
இது சுமார் 120ஆண்டுகளுக்கு முன் கோட்டையூர் மெ.க குடும்பத்தினரால் செய்து வைக்கப்பட்டது.(இந்த கோட்டையூர் மெ.க குடும்பத்தில் பிறந்தவர் தான் வள்ளல் அழகப்ப செட்டியார்)

- பழ.கைலாஷ் 



Wednesday, January 1, 2025

ஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள் திருக்கோயில், மதுரை.

அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தார் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி செய்ய தூண்டுதலாக இருந்தவர் காரைக்குடி மெய்யப்ப சுவாமிகள். மெய்யப்ப சுவாமிகள் மறைந்த பின் வயிநாகரம் குடும்பத்தார் 1886-ல் மதுரை மணிநகரம் பகுதியில் அதிஷ்டான கோயில் (சமாதி) எழுப்பியுள்ளனர். இது மணிநகரம் மங்கையர்க்கரசி பள்ளியின் பின்புறம் அமைந்துள்ளது. வயிநாகரம் குடும்ப நிர்வாகத்தில் உள்ளது.

நான் இன்று மாலை சென்று வழிபட்டு வந்தேன். நகரத்தின் மையத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

-பழ.கைலாஷ்
01/01/2025
புதன்கிழமை 


Thursday, December 19, 2024

"உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்" - நகரத்தார் திருப்பணி


          றையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் திருச்சி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் குறிப்பிடத்தக்க சிறந்த கற்சிற்பங்கள் பல உள்ளன. சமீபத்தில் அவற்றுள் ஒரு சிற்பம் இணையத்தில் பேசுபொருளானது. அது அம்மன் கருவறை பின்புறச்சுவரில் உள்ள "மிதிவண்டி சிற்பம்" - ஒரு வாலிபர் மிதிவண்டி ஓட்டுவது போல் சிற்பம் அமைந்துள்ளது. "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் மிதிவண்டியை கண்டுபிடித்துவிட்டான்" என்று இணையத்தில் பலர் பரப்பி கொண்டிருந்தனர். சில செய்தி ஊடகங்களும் இதையே பரப்பினர்.


சில யூ டியூப்பர்கள் தங்களை பெரிய சிற்பவியலாளராக கருதிக்கொண்டு "இந்த சிற்பம் நிச்சயமாக சமீபத்தில் செதுக்கப்பட்டிருக்காது ஏனென்றால் இந்த அம்மன் சன்னதி மிகப் பழமையானது இதில் புதிய சிற்பத்தை செதுக்கினால் கோயிலே சிதைந்து இடிந்துவிழும் ஆகையால் இது கோயில் கட்டிய காலத்தில் அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட சைக்கிள் சிற்பம்" என்று கூறினர். உண்மை என்னவென்றால் அந்த அம்மன் சன்னதி உட்பட கோயிலின் பெரும் பகுதி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நகரத்தாரால் கட்டப்பெற்றது தான். அங்குள்ள சிற்பங்களும் அப்போது உருவாக்கப்பட்டது தான்.

இக்கட்டுரையில் உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயிலில் நகரத்தார் செய்த திருப்பணிகளை பற்றி தெரிந்துகொள்வோம். அதற்கு முன், பஞ்சவர்ணேசுவரர் கோயில் புராண வரலாற்றை பற்றி பார்ப்போம்.

"ஊரெனப்படுவது உறையூரே" என்று போற்றப்பெரும் உறையூருக்கு நடுவே அமைந்துள்ளது இத்திருக்கோயில். இதற்கு 'திருமூக்கீச்சுரம்' என்ற பெயரும் உண்டு. இங்குள்ள மூலவர் சுயம்பு லிங்கமாக உள்ளார்.

இது திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும்.

மூலவர் பெயர் 'மூக்கீச்சுரத்தடிகள்' என திருஞானசம்பந்த பெருமான் தாம் பாடிய பதிகத்தில் உள்ள பதினொறு பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார். சேரர்,சோழர்,பாண்டியர் ஆகிய மூவேந்தர்களையும் இணைய நிறுத்தி அவர்களை வாழவைக்கும் மூலப்பேரரசாக மும்முடி மன்னர்களின் மன்னராக விளங்குபவரே 'மூக்கீச்சுரம்' கோயிலில் இருக்கும் 'மூக்கீச்சுரத்தடிகள்' என்று விளக்கம் அமைத்துள்ளார் திருஞானசம்பந்த பெருமான். 

இத்தலத்தில் உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்களில் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்ததால் 'பஞ்சவர்ணேசுவரர்' என்று சமஸ்கிருதத்திலும் 'ஐவண்ணநாதர்' என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். அம்மையின் பெயர் காந்திமதியம்மை.

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் ஒரு நாள் பட்டத்து யானை மீது உலா வந்தபோது, யானைக்கு மதம் பிடித்தது, அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் தலையின் மீது தன் மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது என்பதால் இத்தலத்திற்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு. பின்னர் அக்கோழியானது ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது, வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அங்கே சோழன் கோயில் எழுப்பினான் என்கிறது தலபுராண நூல்.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தவர். இவருக்கு இச்சிவாலயத்தில் தனி சன்னதி உள்ளது.

ஆதியில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த சிவாலயமானது காலப்போக்கில் சிதிலமடைந்தது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உறையூர் வாசிகள் சிதிலமடைந்திருந்த கோயிலை சீரமைக்க முடிவு செய்தனர், அக்காலகட்டத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பாடல் பெற்ற தலங்களை தேடித் தேடித் திருப்பணிகள் செய்துவந்தனர், இதனால் உறையூர் வாசிகள் செட்டிநாட்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார் அதிக அளவில் வசிக்கும் ஊரான தேவகோட்டைக்கு சென்று முறையிட்டனர். தேவகோட்டை நகரத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கீழவீட்டைச் சேர்ந்த வீர.இராம.சித.முரு. முருகப்ப செட்டியார் கோவில் கட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆலயத் திருப்பணி கி.பி.1910வாக்கில் தொடங்கப்பெற்றது. 

சிதைந்திருந்த சிவன் சன்னதியை பிரித்து புதிய கருங்கல்லால் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், சண்டிகேசுவரர் சன்னதி ஆகியன கட்டப்பெற்றன. அந்த சமயத்தில் சிவ லிங்கத்தை பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு, கருவறை திருப்பணி முடிந்த பின் பிரதிஷ்டை செய்யலாம் என எண்ணி லிங்கத்தை எடுப்பதற்காக சுற்றி பதினான்கு அடி வரை தோண்டியும் அசைக்க முடியவில்லை நிலத்தடி நீர் பெருகி வந்துவிட்டது. சுயம்பு லிங்கத்தை அசைக்க முடியாது என்று உணர்ந்து, லிங்கத்தை எடுக்காமல் அதைச் சுற்றி திருப்பணி வேலைகள் நடைபெற்றுள்ளது. சுயம்பு லிங்கம் என்பதால் கருவறை முகப்பு மேல் பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைக்கப்பெற்றுள்ளது. 

அர்த்தமண்டபம் மற்றும் கருவறை தேவகோட்டங்களில் முறையே நர்த்தன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், நான்முகன், துர்க்கை ஆகியன சோழர் கால சிலைகளாகவே அமைந்துள்ளன.  

சிவன் சன்னதியின் இடப்புறம், தெற்கு முகமாக காந்திமதி அம்மைக்கு புதிய சன்னதி - கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் கட்டப்பெற்றுள்ளது. அதன் அருகே பள்ளியறையும் இவை அனைத்தையும் இணைக்கும் படி முன் மண்டபமும் கட்டப்பெற்றுள்ளது. 

காந்திமதி அம்மை சன்னதியில் தான் "மிதிவண்டி சிற்பம்" உள்ளது. மேலும் இந்த சன்னதியின் மேல்புறச் சுவரில் உதங்கமுனிவர் சிவபூசைச் சிற்பமும், கீழ்ப்புறச் சுவரில் யானையை அடக்கிய கோழிச் சிற்பமும் கோயில் புராணத்தை பாமர மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளது.

முற்காலத்தில் கோயில் நுழைவு வாயில் அருகே காந்திமதி அம்மை சன்னதி இருந்துள்ளது. நகரத்தாரால் சிவன் சன்னதி அருகே புதிய அம்மன் சன்னதி கட்டப்பட்ட பின், காந்திமதி அம்மை சிலை பெயர்த்துவந்து புதிய சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போதும் நுழைவு வாயில் அருகே அந்த பழைய அம்மன் சன்னதி உள்ளது, ஆனால் சிலை ஏதும் இல்லை, வழிபாட்டிலும் இல்லை.

சோழர் காலத்தில் கட்டப்பெற்ற கன்னிமூல கணபதி, முருகன், லெட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான சன்னதிகள் நல்ல நிலையில் இருந்ததால் அவற்றை மாற்றாமல், பழுதுபார்த்துள்ளனர். 

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய தூண்களை கொண்டு துவஜஸ்தம்ப மண்டபம் புதிதாக பெரிய உற்சவ மண்டபமும் மடப்பள்ளியும் கட்டப்பெற்றுள்ளது.

மேலே கூறிய அனைத்து சன்னதியையும் இணைக்கும்படி, இறைவன் இறைவியை மக்கள் வளம் வந்து வழிபட பெரிய திருச்சுற்று மாளிகை கட்டப்பெற்று அதில் அறுபத்து மூவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளன. திருச்சுற்று தூண்களில் உள்ள ஊர்த்துவ தாண்டமூர்த்தி, கரியுரி தாண்டமூர்த்தி, ஏகபாத மூர்த்தி உள்ளிட்ட சிற்பங்களும் துவஜஸ்தம்ப மண்டப சிற்பங்களும் நகரத்தார் சிற்பக்கலைக்கு சான்றாக திகழ்கின்றன.
இத்தல தீர்த்தமாக விளங்கும் "சிவதீர்த்தம்" கல்திருப்பணி செய்யப்பெற்றுள்ளது.

வனப்புமிக்க வண்ண சுதைச் சிற்பங்களுடன் மூன்று நிலை புதிய இராஜகோபுரமும் மதில் சுவரும் என கோயிலில் பெரும் பகுதி(90%) நகரத்தார் திருப்பணியே.

இவை அனைத்தும் நாட்டுக்கோட்டை நகரத்தாருள் மாத்தூர் கோயில் உறையூர் வகுப்பைச் சேர்ந்த தேவகோட்டை கீழவீட்டு வீர.இராம.சித.முரு. முருகப்ப செட்டியாரால் அன்றைய மதிப்பில் நான்கு லட்சம் ரூபாய்(4,00,000) பொருட்செலவில் திருப்பணி செய்யப்பெற்று, துந்துபி வருடம் சித்திரை மாதம் 21-ஆம் நாள்(03/05/1922) திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றுள்ளது.

உறையூர் ஐவண்ணநாதர் ஆலயம் அழியாப்பெருமை வாய்ந்த சிற்பங்களின் திருக்கூடமாக இன்று திகழ்வதற்குக் காரணம் நகரத்தார் திருப்பணியே.

-பழ.கைலாஷ்

நமது செட்டிநாடு -  டிசம்பர்2024

Friday, January 5, 2024

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்



                    இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து இராமேசுவரம் செல்லும் வழியில் 15கி.மீ தொலைவில் கிழக்கு கட‌ற்கரை சாலையில் உள்ள ஊர் உப்பூர் சத்திரம் என்னும் உப்பூர். இங்கு இராமநாதபுர சமஸ்தான தேவஸ்தானத்திற்குரிய அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் உள்ளது.

அருள்மிகு வெயிலுகந்த விநாயகர்


இராமேசுவரம் புனித யாத்திரை செல்லும் மெய்யன்பர்கள் உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கி செல்வது நியதி. இதுபோல் காசி யாத்திரை செல்லும் மெய்யன்பர்களும் இங்கிருந்து தான் தொடங்குவார்கள். உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கி, தேவிப்பட்டிணம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி தரிசித்து பின்னர் இராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி மண் எடுத்துக் கொண்டு அலகாபாத் திருவேணி சங்கமத்தில் தீர்த்தமாடி காசி அடைவார்கள். 

சீதையை மீட்க வானர சேனைகளுடன் சேதுக்கரை நோக்கி இராமர் செல்கையில் உப்பூர் வன்னிமரத்தடியில் அமைதியான சூழலில் வீற்றிருந்த விநாயகரை வணங்கி சென்றுள்ளார் என்கிறது தலபுராணம்.

மேலும் இக்கோவில் குறித்த பல்வேறு கதைகள் தலபுராணத்தில் உள்ளன அதில் ஒன்று சிவபெருமானால் சாபம் பெற்ற சூரியன், பரிகாரம் தேட முற்பட்டு வன்னி மந்தார வனம்(உப்பூர்) என்ற ஊரில் உள்ள விநாயகரை நோக்கி தவத்தில் ஈடுபட்டார். சூரியனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். வெய்யோன் தவத்தை விநாயகர் உகந்ததால் (ஏற்றுக்கொண்டதால்) "வெயில் உகந்த விநாயகர்" என்ற பெயர் நிலைத்தது. இவ்வாறு பல புராண கதைகள் இருந்தாலும் வரலாற்று படி பார்த்தோமேயானால்.
 
அக்காலத்தில் தென்னிந்திய மக்கள் மட்டுமில்லாது வட இந்திய பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் ஆண்டுதோறும் இராமேசுவரத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டு வந்துள்ளனர். மழையிலும் பனியிலும் நனைந்து வெய்யிலிலே உலர்ந்து வருடத்தின் பல மாதங்கள் கால்நடையாகவே நடந்து இராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர். இதை கண்ட தேவகோட்டை இராம.அழகப்ப செட்டியார் கி.பி1800கள் தொடக்கத்தில் உப்பூரில் ஒரு அன்னதான சத்திரம் நிறுவி, ஊருணி அமைத்து நாள்தோறும் யாத்திரிகர்களுக்கு பருக நீரும், உண்ண உணவும், இளைப்பாறுவதற்கு உறைவிடமும் வழங்கி வந்தார். இதே கால கட்டத்தில் இவரின் உறவினரான வீர.இராமநாதன் செட்டியார் தனுஷ்கோடியில் ஒரு அன்னச்சத்திரம் நிறுவி அன்னம் பாலித்து வந்தார்(1964-ல் தனுஷ்கோடி சத்திரம் புயலில் அழிந்துவிட்டது)

உப்பூர் சத்திரம்
       

உப்பூரில் அழகப்ப செட்டியார் சத்திரம் நிறுவியதாலேயே இவ்வூர் "உப்பூர் சத்திரம்" என்று பொதுவாக யாத்திரிகர்களால் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு மரத்தடியில் இருந்த விநாயகரை பக்தர்கள் வணங்கி சென்றுள்ளனர்.

அழகப்ப செட்டியாருக்கு நான்கு புதல்வர்கள், அதில் மூன்றாம் மற்றும் நான்காம் புதல்வர்களான அழ.அருணாசலம் செட்டியார் மற்றும் அழ.சிதம்பரம் செட்டியார் ஆகிய இருவரும் தொடர்ந்து அன்னச்சத்திரத்தை நிர்வகித்து வந்தனர். 

மூன்றாம் புதல்வரான அருணாசலம் செட்டியார் உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு கி.பி1862-ல் கல்குறடு(கல்மேடை) அமைத்து, தினசரி பிராமணர்களை கொண்டு விநாயகருக்கு பூசைகள் நடத்த தொடங்கினார். இச்செய்திகள் கோயிலிலே கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் அழ.அருணாசலம் செட்டியார் நாட்டுக்கோட்டை நகரத்தார் சிலருடன் சேர்ந்து கோவிலூர் கொற்றவாளீசுவரர் கோவில் மதில் சுவரை எழுப்பியுள்ளார். 

உப்பூர் பிள்ளையார் கோயில் கல்வெட்டு
    

பின்னர் அழ.அருணாசலம் செட்டியாரின் ஒரே புதல்வரான அழ.அரு.இராமசாமி செட்டியார் தற்போது நாம் காணும் கற்கோயிலை எழுப்பினார். பரிவார தெய்வங்களுக்கான சன்னிதிகளையும் அமைத்தார். சேதுபதி மன்னருக்கும் தமது மூதாதையர்களுக்கும் சதா சேவிப்பு சிலைகள் வைத்தார்.


 அழ.அருணாச்சலம் செட்டியார்
   

அழ.சிதம்பரம் செட்டியார்
   

அழ.அரு.இராமசாமி செட்டயார்
    
 
இராமசாமி செட்டியார் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நெருங்கிய நண்பராக இருந்தார்.  இவர் ஒருமுறை பாஸ்கர சேதுபதிக்கு செய்த பேருதவியால் சேதுபதி மன்னர் இவருக்கு 22 1/2 கிராமங்களை கொடுத்து தேவகோட்டை ஜமீந்தாராக ஆக்கினார். ஜமீந்தார் அழ.அரு.இராமசாமி செட்டியார் சிவப்பெருஞ்செல்வராக வாழ்ந்து இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில், காளையார்கோவில், திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேசுவரர் கோயில் ஆகிய கோயில்களுக்கு செம்மையான திருப்பணி செய்தார்.

அழ.அரு.இராமசாமி செட்டியார் கட்டிய உப்பூர் விநாயகர் கோயிலின் உள்ளே வெயில் வருவதற்கான வழி இல்லாமல் முழுவதும் அடைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது. சில மாதங்களில் கோயிலில் விநாயகரை சுற்றியுள்ள மேற்கூரை தாமாக இடிந்துவிழுந்தது. இக்காலத்தில் வயது மூப்பு காரணமாக ஜமீந்தார் அழ.அரு.இராமசாமி செட்டியாரும் இறந்துவிட அவரின் மூத்த மகனான அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியார் கோயில் முழுமையும் புனரமைத்து விநாயகர் மேல் வெயில் படும்படி அமைத்து 10.02.1905-ல் இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்தார்.

அதை தொடர்ந்து தமது சகோதரர்களுடன் இணைந்து அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியார் ஆவணி மாத பத்து நாள் திருவிழாவை தொடங்கிவைத்தார். விநாயகருக்கு வெள்ளியில் பெருச்சாளி, மயில், இடபம், காமதேனு, குதிரை, சிம்மம், யானை,கேடகம், ரதம் ஆகிய வாகனங்களும் உற்சவ மூர்த்திகளும் நகைகளும் அழ.அரு மற்றும் அழ.சித குடும்பத்தினரால் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் சொன்ன புராண கதைகள் "லவணபுரம் என்னும் உப்பூர் புராணம்" என்கிற தலபுராண நூலில் உள்ளன. இது தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயரால் கி.பி1918-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு ஜமீந்தார் அழ.அரு. இராம.அருணாசலம் செட்டியாரால் வெளியிடப்பட்டுள்ளது. சொர்ணநாதபுரம் பழனியப்ப ஐயா "வெயிலுகந்த விநாயகர் பதிகம்" இயற்றியுள்ளார்.

உப்பூர்ப்புராணம்
    

வெயிலுகந்த விநாயகர் பதிகம்
    

இன்றுவரை சுமார் 180 ஆண்டுகளுக்கு மேலாக உப்பூர் சத்திரம் சிறப்பாக இயங்கிவருகிறது. தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு மற்றும் அழ.சித குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

விநாயகருக்கு தினசரி நான்கு வேளைகள் பூசை நடக்கின்றன. அதில் இரண்டு வேளை இராமநாதபுரம் சமஸ்தானமும் இரண்டு வேளை தேவகோட்டை ஜமீந்தாரும் நடத்தி வருகின்றனர்.

ஆவணி சதுர்த்தி திருவிழாவில் விநாயகர் திருமணம் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தினரால் கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு இராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் முன்னிலையில் கும்பாபிஷேம் செய்யப்பெற்றது.

- பழ.கைலாஷ்

Sunday, October 15, 2023

தில்லை கோவிந்தராஜர் கோவில் நகரத்தார் திருப்பணிக்கு முன்!

அரிய புகைப்படம்.
தில்லை "கோவிந்தராஜப்பெருமாள் கோவில்" நகரத்தார் திருப்பணிக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்.

             சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் நடராஜர் கோவில் மிகுந்த சிதிலமடைந்த நிலையில் இருந்து, அந்த காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்(செட்டியார்கள்) பாடல்பெற்ற தலங்களை தேடித்தேடி திருப்பணி செய்துவந்தார்கள். கோவிலூர் மடத்தின் 4-வது மடாதிபதி சீர்வளர்சீர் இராமசாமி ஞானதேசிக சுவாமிகளின் தூண்டுதலில் கானாடுகாத்தான் சா.இராம.முத்தையா செட்டியார் மற்றும் சா.இராம.சிதம்பரம் செட்டியார் ஆகிய இருவரும் தம் பொருள் கொண்டும், மேலும் சில நாட்டுக்கோட்டை நகரத்தார் பொருளுதவி கொண்டும் சிதம்பரம் கோவில் திருப்பணியை கி.பி.1879ஆம் ஆண்டு தொடங்கினர். முதலில் சிதிலமடைந்திருந்த முக்குறுணி பிள்ளையார் கோவிலை பிரித்து புதிதாக கட்டினர். பின்னர் சிற்சபையை கரும்பளிங்கி கற்களால் புதுப்பித்து புதிய பொன் ஓடுகள் வேய்ந்தனர் மற்றும் சிதைந்துபோன சுற்று மண்டபங்களை பிரித்து புதிதாக கட்டி, இரண்டாம் திருச்சுற்றில் விசாலமான அணியொட்டிக் கால்மண்டபம் நாற்புறங்களிலும் புதிதாக கட்டி, திருமூலட்டானம் சுவாமி கோவில், சிவகாமி அம்மை கோவில் ஆகியவற்றை பிரித்து புதிதாய்க்கட்டி, சிவகெங்கைத் திருக்குளம், படித்துறைகள், மண்டபம் ஆகியவற்றை விரிவுபடுத்தி கட்டி, உற்சவமண்டபம், வாகன மண்டபம் அமைத்து, இராச கோபுரங்கள், ஆயிரக் கால் மண்டபம் என கோவில் முழுவதும் பழுது பார்த்து, திருத்தேர்கள், திருவாபரணங்கள், வாகனங்கள் பல செய்துவைத்து அன்றைய மதிப்பில் ரூபாய் முப்பது லட்சம் (30,00,000) பொருட் செலவில் திருப்பணி முடித்து. கி.பி.1891-ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு செய்வித்தனர். 

ஆனால் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இருந்த சில முரண்பாடுகள் காரணமாக கோவிந்தராஜப் பெருமாள் கோவில் மட்டும் பழுதுபார்க்கப்படாமல் இடிந்துவிழும் நிலைமையில் இருந்தது. அப்போது மேற்படி திருப்பணியாளர் சா.இராம.முத்தையா செட்டியாரின் மகனான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்கள், சைவர்கள் மற்றும் வைணவர்களை அமைதியான முறையில் உடன்படச் செய்து தானே முன்னின்று தமது பொருட்செலவில் செம்மையான முறையில் திருப்பணி செய்து கி.பி.1934-ஆம் ஆண்டு சம்புரோட்சணை செய்தார்.

இன்று நாம் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் முன் மண்டபத்தில் இருந்து ஒரே நேரத்தில் கோவிந்தராஜரையும் நடராஜரையும் தரிசிக்க முடியும் என்றால் அது நகரத்தார் திருப்பணியால் தான்.

- பழ.கைலாஷ்

Saturday, October 14, 2023

தேவகோட்டை ஜமீந்தார் திருப்பணிக்கு முன் இராமேஸ்வரம்!

தேவகோட்டை ஜமீந்தார் திருப்பணிக்கு முன் இராமேஸ்வரம் கோவிலின் அரிய புகைப்படம் இது.



இன்று நாம் நின்று இராமநாதரை வணங்கும் பிரமாண்ட முன்மண்டபம் அக்காலத்தில் இல்லை! முதல் திருச்சுற்று மண்டபமும் இல்லை! விஸ்வநாதர் சந்நிதி அருகேயே மக்கள் தீர்த்தமாடுவதையும் படத்தில் காணலாம். இந்தப் புகைப்படம் 19-ஆம் நூற்றாண்டு இறுதியில் திருப்பணி வேலைகள் நடக்கும் போது எடுக்கப்பட்டது.

தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு.இராமசாமி செட்டியார், நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் வந்தவர். இவர் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நெருங்கிய நண்பர். இவர் பாஸ்கர சேதுபதிக்கு செய்த பேருதவியால், சேதுபதி இவருக்கு 26 1/2 கிராமங்களை கொடுத்து தேவகோட்டை ஜமீந்தாராக ஆக்கினார்.

19-ஆம் நூற்றாண்டு இறுதியில் இராமேஸ்வரம் கோயில் திருப்பணியை அழ.அரு.இராமசாமி செட்டியார் தொடங்கினார், அவருக்கு பின் அவரது மகன்களால் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றது, சுவாமி சந்நிதியின் மஹா மண்டபம், முதல் திருச்சுற்று, இரண்டாம் திருச்சுற்றின் பெரும்பகுதி ஆகியன புதிதாக கட்டப்பெற்றது. சிதிலமடைந்திருந்த பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதி பிரித்து பெரிதாக கட்டப்பெற்றது. இடிந்து கிடந்த கிழக்கு கோபுரம் மீண்டும் எழுப்பப்பெற்றது, மேலும் கோயில் முழுமையும் பழுதுபார்த்து கும்பாபிஷேகம் செய்தனர். 

மேலும் தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தினர் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், காளையார்கோவில், திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேசுவரர் கோயில் ஆகிய திருத்தலங்களில் திருப்பணிகள் செய்துள்ளனர்.

-பழ.கைலாஷ்

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...