Followers

Tuesday, April 1, 2025

கோட்டையூர் க.வீ.சொ.வீ.அழகப்ப ஐயா

- பழ.கைலாஷ் -


கோட்டையூர், இது கோயில் திருப்பணிகளும் கல்வி அறப்பணிகளும் நிரம்ப செய்த பெருமக்கள் பிறந்த புண்ணிய பூமி. இவ்வூர் மெ.க வகையார் செய்த திருப்பணிகளை இக்கட்டுரையிலோ அல்லது ஒரு புத்தகத்திலோ அடக்கிவிட முடியாது, மெ.க வகையார் திருவண்ணாமலை கோயில் உள்ளிட்ட எண்ணற்ற திருப்பணிகள் செய்த பெருமான்கள்.


இந்த மெ.க வகையில் பிறந்த "வள்ளல் இராம.அழகப்ப செட்டியார்" ஆற்றியிருக்கும் அரும்பணிகள் அனைவரும் அறிந்ததே. காரைக்குடியை கல்விக்குடியாக்கிய பெருமைக்குரியவர். கோட்டையூரில் உள்ள தனது இல்லத்தையே 1954-ஆம் ஆண்டு மகளிர் கல்லூரியாக மாற்றியவர், ஆகையால் "குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்" என்று போற்றப்படுகிறார்.


வள்ளல் க.வீ.அழ.இராம.அழகப்ப செட்டியாருக்கே முன்னுதாரணமாக இருந்தவர் இதே மெ.க வகையில் பிறந்த "க.வீ.சொ.வீ.அழகப்ப செட்டியார்". இவர் தாம் பிறந்த பூர்வீக வீட்டில் உள்ள அனைத்து பங்குகளையும் வாங்கி 1940-ஆம் ஆண்டே "சனாதன தர்ம வித்யாலய" என்ற பெயரில் பள்ளிக்கூடமாக மாற்றியவர்.


இவரைப் பற்றி அறிந்துகொள்ளும் முன் இவரின் முன்னோர்களை பற்றி தெரிந்துகொள்வோம். 


சொக்கப்ப ஐயா.


அழகப்பையாவின் பாட்டனார் பெயர் க.வீ.சொக்கலிங்கம் செட்டியார். இவர் பெரும் தனவணிகர். பல திருப்பணிகள் செய்துள்ளார். கோவிலூர் மடாலயத்தின் இரண்டாவது மடாதிபதியான துறவு ஆண்டவர் என்னும் சீர்வளர்சீர் அருணாச்சல ஞானதேசிக சுவாமிகளிடமும் மூன்றாவது மடாதிபதி சீர்வளர்சீர் சிதம்பர ஞானதேசிக சுவாமிகளிடமும் முதன்மை சீடராக இருந்து, வேதாந்தப் பாடம் பயின்றும், பலருக்கு பயிற்றுவித்தும் வந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தமக்கு வேதாந்தத்தில் சந்தேகம் வருகின்றபோதெல்லாம் இவரிடம் கேட்டுத் தெளிவுபெற்றுள்ளார்.


கோவிலூர் மடாலயத்தில் வேதாந்தம் கற்று காவி உடையணிந்து துறவு பூண்டவரை "சுவாமிகள்" என்றும், வேதாந்தம் கற்று காவி அணியாமல் வெள்ளை உடையிலேயே இல்லறத்தில் இருந்து வருபவர்களை "ஐயா" என்றும் அக்காலத்தில் அழைத்துள்ளனர். சொக்கலிங்கம் செட்டியார் வேதாந்தம் கற்று இல்லறத்தில் இருந்துவந்ததால் "சொக்கப்பையா" என்னும் திருப்பெயரால் அழைக்கப்பெற்றுள்ளார்.


சொக்கப்பையா, துறவு ஆண்டவரின் சீடராக சிதம்பரத்தில் வாழும் காலத்தில் தம் சொந்த செலவில் இளமையாக்கினார் கோயிலில் சில திருப்பணிகள் செய்தும், சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பல சுவாமிகள் மடமும், அருகே துறையூரில் உள்ள மடமும் நிலையாக நடந்திட வழிவகை செய்துள்ளார்.


கோவிலூர் மடாதிபதியின் நேரடி நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளார் சொக்கப்பையா. அதற்கு ஒரு உதாரணம் கோவிலூர் மடாலயத்தின் பெயரில் வாங்கும் சொத்துகளுக்கு சாட்சி கையெழுத்திட்டு வந்துள்ளார்.


கோவிலூர் மடாலயத்திற்கு சொந்தமான "களத்தூர்" என்னும் கிராமத்தில் பர்வதவர்த்தனி உடனமர் இராமநாதசுவாமி கோயிலை தம் சொந்த பொருட் செலவில் புதிதாய் கட்டி சிதம்பர ஞானதேசிக சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்து அதன் அருகே ஒரு மடத்தை நிறுவி பலருக்கும் வேதாந்தம் பயிற்றுவித்து வந்துள்ளார் சொக்கப்பையா. இந்த கோயிலில் நித்திய பூஜைகள் சிறப்பாக நடந்திட செட்டிவயல் என்னும் கிராமத்தை எழுதி வைத்துள்ளார். இதை நமக்கு கீழ்கண்ட பாடல் விளக்குகிறது.


"தலமலிந்த களத்தூரில் பர்வதவர்த்தனி என்னுந்

தாயி னோடு

கலமலிந்த இராமனாதப் பெருமான் பூசையென்றும்

நடத்தற் காக

வலமலிந்த செட்டிவயல் எனும்கிராமம் வாங்கிவைத்து வளமை செய்து

பலமலிந்த பெரியோன்தன் பெரும்புகழை அரும்புலவர்

பகர்வர் மாதோ!"


இப்படியாக பல திருப்பணிகளை செய்து வேதாந்த நூல்களை பயிற்றுவித்து வந்த சொக்கப்பையா கி.பி.1889ஆம் ஆண்டு சித்தியடைந்தார். இவரது சமாதி கோவிலூர் மடாலய நந்தவனத்தில் உள்ளது.



வீரப்ப செட்டியார். 


அழகப்பையாவின் தந்தை க.வீ.சொ.வீரப்ப செட்டியார். இவர் தம் தந்தை சொக்கப்பையாவை பின்பற்றி இளமையாக்கினார் கோயிலை காரைக்குடி பெரி.க குடும்பத்தாருடன் இணைந்து முழுக்கோயிலையும் புதிய கல்திருப்பணி செய்து கி.பி.1900-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


மேலும் சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் மடத்தையும், துறையூர் மடத்தையும் விரிவுபடுத்தி கட்டியுள்ளார்.



அழகப்ப ஐயா(1875-1946).


க.வீ.சொ.வீரப்ப செட்டியாரின் மகனாக கி.பி.1875-ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாள் பிறந்தார் அழகப்ப செட்டியார். பர்மா, இலங்கை, மலே‌சியா ஆகிய நாடுகளில் பெரும் வணிகம் செய்து வந்தார். தன் பாட்டனாரை பின்பற்றி கோவிலூர் மடாலயத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.


கோவிலூர் மடாலய ஐந்தாவது மடாதிபதி சீர்வளர்சீர் வீரசேகர ஞானதேசிக சுவாமிகளிடம் வேதாந்த பாடம் கேட்டு, சுவாமிகளின் அன்புக்குரிய சீடராக இருந்தார்.


தனது பாட்டனார் போல் வேதாந்தம் கற்று இல்லறத்தில் இருந்துவந்ததால் அழகப்ப செட்டியார் "ஐயா" என்ற பட்டம் பெற்று "அழகப்பையா" என்னும் திருப்பெயரால் அழைக்கப்பெற்றார்.


சொக்கப்பையா கட்டிய "களத்தூர்" இராமநாத சுவாமி கோயிலை அழகப்பையா அன்றைய மதிப்பில் 10,000ரூபாய் செலவில் சீர்திருத்தி வீரசேகர சுவாமிகள் தலைமையில் கி.பி.1908-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


கோ.அளகாபுரி அருகேயுள்ள "கல்லாங்குடி" திருப்பாகதீஸ்வரா் கோயிலை 50,000ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டி கி.பி.1922-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


அக்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பாடல்பெற்ற திருத்தலங்களை தேடித் தேடித் திருப்பணி செய்து வந்தார்கள். சிதம்பரம் அருகே திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற திருநெல்வாயில் என்னும் "சிவபுரி" உச்சிநாதர் கோயில் சிதிலமடைந்திருந்ததை கண்டு வருத்தமடைந்த அழகப்பையா. தன்னுடன் க.வீ.மு.ப.கதிரேசன் செட்டியார் மற்றும் காரைக்குடி முத்து.அரு.மு.அருணாச்சலம் செட்டியார் ஆகியோரை இணைத்து கோயில் திருப்பணிகளை தொடங்கினார். பழைய கோயிலை முற்றிலுமாக பிரித்து, அன்றைய மதிப்பில் 3,27,500ரூபாய் செலவில் புதிய கருங்கற்களால் இராஜகோபுரத்துடன் பெரிய கோயிலாக கட்டி கி.பி.1928-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தார். தொடர்ந்து அழகப்பையாவின் வம்சாவளியினரால் 1957, 1982, 2008 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பெற்று, அன்று முதல் இன்று வரை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அழகப்பையாவால் சிவபுரியில் அழகிய திருக்குளம், நந்தவனம், பசுமடம், தண்ணீர்ப்பந்தல், அக்ரஹார வீடுகள் ஆகியன உருவாக்கப் பெற்றுள்ளன.


கும்பகோணம் அருகேயுள்ள பாடல்பெற்ற தலமான "அவளிவநல்லூர்" சாட்சிநாதர் கோயிலும் சிவபுரி போல் சிதிலமடைந்திருந்துள்ளது. அழகப்பையா தன் பெரும்முயர்சியில் காரைக்குடி மெ.மெ.மெய்யப்ப செட்டியார் மற்றும் நேமத்தான்பட்டி மு.பெ.காசி செட்டியார் ஆயியோருடன் இணைந்து பழைய கோயிலை பிரித்து, புதிய கருங்கற்களால் சுமார் 1,00,000ரூபாய் செலவில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


வேதாந்தப்பாடம் மூலம் தம் வாழ்வில் ஒளி ஏற்றிய கோவிலூர் மடத்திற்கு மின்சார ஒளி வசதி ஏற்படுத்தியுள்ளார் அழகப்பையா.


தனது குரு வீரசேகர ஞானதேசிக சுவாமிகளால் கல்திருப்பணி செய்யப்பெற்று கி.பி1911-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பெற்ற "திருக்களர்" பாரிஜாதவனேசுவரர் கோயிலின் அறங்காவலராக இருந்து பல திருப்பணிகள் செய்து கி.பி1933-ஆம் ஆண்டு மகாதேவ ஞானதேசிக சுவாமிகள் தலைமையில் இரண்டாவது கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


திருவண்ணாமலை அருகே "பழங்கோயில்" எனும் ஊரில் உள்ள பலக்ராதீஸ்வரர் கோயில் சிதிலமடைந்திருந்ததை கண்ட அழகப்பையா அக்கோயிலை 20,000 ரூபாய் செலவில் சீர்திருத்தி விரிவுபடுத்திக் கட்டி கி.பி.1933-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார். மேலும் கோயிலில் தினசரி பூஜைகள் நடந்திட எலத்தூர் என்னும் கிராமத்தை வாங்கி கோயிலுக்கு எழுதிவைத்துள்ளார். நில விபரங்களை சர்வே எண்ணுடன் கோயிலில் கல்வெட்டாக பொறித்துவைத்துள்ளார். இன்றும் அதை நாம் காணலாம்.


"குருநாதர்" என்று அழைக்கப்பெற்ற ஸ்ரீ யோகானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் தம் இறுதிகாலத்தில் கோட்டையூரில் தங்கியிருந்து சமாதியானார்கள். அவர்களுக்கு அழகப்பையா கோட்டையூர் நகரத்தார் பொருளுதவியுடன் அழகிய அதிஷ்டான ஆலயம் எழுப்பி, அதன் முன்பு தம் சொந்த பொருட்செலவில் அலங்கார மண்டபம் கட்டி, கி.பி.1937-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார். அலங்கார மண்டப கல்தூண்களில் அழகப்பஐயாவும் அவர்தம் மனைவி அலமேலு ஆச்சியும் சதாசேவிப்பு சிற்பமாக காட்சியளிக்கின்றனர். இந்த ஆலயம் அழகப்பையாவின் வம்சாவளியினரால் 1994 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பெற்று சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற திருநாரையூர் சுயம்பிரகாசர் கோயிலில் காரைக்குடி பழ.இராம. லெட்சுமணன் செட்டியாரால் 1930களில் திருப்பணிகள் தொடங்கப்பெற்றது. இக்கோயில் பற்றி தெரிந்துகொண்ட அழகப்பையா, திருப்பணியில் இணைந்துகொண்டார். தம் சொந்த பொருட்செலவில் சுவாமி கோயிலின் திருச்சுற்று திருமாளிகை, தெட்சிணாமூர்த்தி மண்டபம், லெட்சுமி சந்நிதி, உள் இராஜகோபுரம், உள் மதில்சுவர் மற்றும் தீர்த்தப்படித்துறைகள் ஆகியவற்றை கட்டிக்கொடுக்க, கி.பி.1943-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.


தாம் பிறந்த மெ.க வகையாருக்கு விருப்பத்திற்குரிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் கி.பி.1944-ல் நடைபெற்ற போது அக்கோயில் அறங்காவலராக இருந்தார் அழகப்பையா. 


மேலும் தமது குலதெய்வ கோயிலான மூலங்குடி பொய்சொல்லா மெய்யர் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


அழகப்பையா, கோயில்கள் திருப்பணி செய்யும் காலத்தில் அக்கோயில்கள் தொடர்பான புராண நூல்கள் மற்றும் வரலாற்று நூல்கள் பல வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க நூல்கள் "சொர்ணபுரீஸ்வரர் சௌந்தரிய நாயகி அந்தாதி-1917", "செல்வவிநாயகர் செம்பொன்மாலை-1917", "சிவபுரி புராணம்-1923", "கோவிலூர் நால்வர் நான்மணிமாலை-1930", "திருநாரையூர்ப்புராணம்-1935", "ஆன்மானான்ம விவேகம்-1938", "திருவண்ணாமலை வரலாறு-1940", "வினாவிடை மணிமாலை-1943".


அழகப்பையா ஆன்மீக பணிகள் மட்டுமல்லாது கல்வி பணிகளும் செய்துள்ளார். மலேசியா கோலப்பிலா-வில் வணிகம் செய்து வந்த போது, மலேசிய பல்கலைக்கழகத்திற்கு கி.பி.1940களில் 200அமெரிக்க டாலர் நிதியுதவி செய்துள்ளார்.


கோட்டையூரில் தாம் பிறந்து வளர்ந்த பூர்வீக வீட்டில் உள்ள அனைவ‌ரின் பங்குகளையும் விலைக்கு வாங்கி அப்பெரிய வீட்டை 1940ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் "சனாதன தர்ம வித்யாலய" என்ற பெயரில் பள்ளிக்கூடமாக உருவாக்கினார். இன்றும் இவரது வம்சாவளியினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


அழகப்பையாவின் அறுபது வயது பூர்த்தி மணிவிழா கோவிலூரில் 1935-ஆம் ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது கோட்டையூர் வித்வான் சுப்பிரமணிய ஐயரால் "கல்யாண சிறப்பு" என்னும் செய்யுள் இயற்றப்பட்டுள்ளது. அச்செய்யுள் அழகப்பையாவின் வரலாற்றை கூறுவதாக அமைந்துள்ளது.


பற்பல கோயில் திருப்பணிகள் மற்றும் கல்விப்பணிகள் செய்துவந்த அழகப்பையா தமது 71வது அகவையில் கி.பி.1946ஆம் ஆண்டு சித்தியடைந்தார். இவரது சமாதி கோவிலூர் மடாலய நந்தவனத்தில் உள்ள சொக்கப்பையா சமாதியின் எதிரில் உள்ளது. சொக்கப்பையா லிங்கமாகவும் அழகப்பையா நந்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். வருடம் தோறும் வைகாசி மாதம் சொக்கப்பையாவுக்கும் சித்திரை மாதம் அழகப்பையாவுக்கும் குருபூஜைகள் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment

THE DEVAKOTTAI ZAMINDAR

- Kailash PL -            T he Devakottai Zamindar family is considered one of the most notable among the Nattukottai Nagarathars. AL.AR. Ra...