-பழ.கைலாஷ் -
அழ.அரு.இராமசாமி செட்டியார் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். இராமநாதபுரம் ஜமீன் நீதிமன்ற நிர்வாகத்தில் இருந்தபோது, மைனர் பாஸ்கரசேதுபதிக்கு தேவையான பொழுதெல்லாம் பண உதவி செய்துள்ளார். சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் வரை 1880கள் வாக்கில் கடன் கொடுத்திருக்கிறார்.
![]() |
அழ.அரு.இராமசாமி செட்டியார் |
பாஸ்கர சேதுபதி மேஜரானபோது அவருடைய உறவினர் ஒருவர், "பாஸ்கர சேதுபதி பெரிய செலவாளி, தேவகோட்டை இராமசாமி செட்டியாரிடம் பல லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். எனவே அவரிடம் ராஜியத்தை ஒப்படைக்கக்கூடாது" என்று தடை உத்தரவு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அந்தவழக்கில் செட்டியார் சாட்சியாக விசாரிக்கப்பட்ட பொழுது, “ராஜாவை உபசரிப்பது எங்கள் கடமை. அவரை என்றும் உபசரித்து வருவோம் நாங்கள் அவருக்குக் கடன் எதுவும் கொடுக்கவில்லை" என்று கூறியதோடு அதற்கு ஆதாரமாக தம்முடைய கணக்குப் புத்தகங்களையும் நீதி மன்றத்தில் காட்டினார், அதில் பாஸ்கர சேதுபதியிடம் கொடுத்த தொகைகள் மன்னரது பெயரில் பற்று வைக்கப்படாமல், "இராம தனது பற்று" என்று இராமசாமி செட்டியார் பெயரிலேயே பற்று வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாஸ்கர சேதுபதியிடமே ராஜியம் ஒப்படைக்கப்பட்டது.
ராஜியம் கிடைக்க காரணமாக இருந்த தேவகோட்டை அழ.அரு.இராமசாமி செட்டியாருக்கு தேவகோட்டையை சுற்றியுள்ள 22 1/2 கிராமங்களை வழங்கி "தேவகோட்டை ஜமீன்" என்கிற அந்தஸ்த்தை வழங்கினார் மன்னர் பாஸ்கர சேதுபதி.
![]() |
லெட்சுமி விலாஸ் (தேவகோட்டை ஜமீன்தார் மாளிகை) |
தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தார் பெரும் திருப்பணியாளர்கள். உப்பூர், இராமேஸ்வரம், உத்திரகோசமங்கை, காளையார்கோயில், ஆவுடையார்கோயில், பெரியநயினார்கோயில், திருப்பாண்டிக்கொடுமுடி, வைகல், மதுரை, திருப்பரங்குன்றம், தேவகோட்டை, காரைக்குடி மற்றும் கோவிலூர் என தேவகோட்டை ஜமீந்தார் திருப்பணி செய்திருக்கும் தலங்கள் ஏராளம்.
தேவகோட்டையின் முதல் ஜமீன்தாரான அழ.அரு.இராமசாமி செட்டியாரால் 1890களில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் திருப்பணி தொடங்கப்பட்டது. அவருக்கு பின் அவரின் நான்கு மகன்கள் அருணாச்சலம் செட்டியார், சொக்கையா செட்டியார், வெள்ளையன் செட்டியார், நாரயணன் செட்டியார் ஆகியோரால் தொடர்ந்து திருப்பணிகள் செய்ப்பட்டுள்ளன.
இராமேஸ்வரம் கோயிலில் தேவகோட்டை ஜமீந்தார் செய்திருக்கும் திருப்பணி மிக விரிவானது. இவர்களால் கோயிலின் பெரும் பகுதி சீர்திருத்தப்பட்டுள்ளது, இராமநாதசுவாமி சன்னிதியை சுற்றி பழுதடைந்திருந்த பழைய முதல்பிரகாரம் முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிதாக பெரிய முன்மண்டபத்துடன் முதல்பிரகாரம் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது, பர்வதவர்த்தினி அம்மன் பழைய சன்னிதி முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிய கருவறை அர்த்தமண்டபம் மஹாமண்டபத்துடன் பிரகாரம் கட்டப்பட்டுள்ளது, கோயிலின் இரண்டாம்பிரகாரத்தின் பெரும்பகுதி கட்டப்பட்டுள்ளது, சேது மாதவர் சன்னிதி உள்ளிட்ட சில சன்னிதிகள் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளன, கோயிலின் பல பகுதிகளில் தலவரிசைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
![]() |
ஜமீன்தார் திருப்பணிக்கு முன் சுவாமி சன்னதி முதல் பிரகாரம் |
மேலும் கோயிலின் கிழக்கு கோபுரம் முழுமையாக கட்டப்படாமல் இருந்துள்ளது. இந்த கோபுரம் கி.பி.1630களில் தளவாய் சேதுபதி மன்னரால் கட்டத் தொடங்கப்பட்டது. ஆனால் அது தடைப்பட்டது. பின்னர் வந்த சேதுபதி மன்னர்கள் பலர் கோயிலை விரிவுபடுத்தி வரும் சமயம் இந்த கோபுரத்தை எழுப்பும் பணியையும் மேற்கொண்டனர். ஆயினும் இது முடிவடையவில்லை. சுமார் இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் கிழக்கு கோபுரம் முழுமையாக ஒன்பதுநிலை கோபுரமாக கட்டிமுடிக்கப்பட்டது.
![]() |
கிழக்கு கோபுரம் முழுமையடைந்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம் |
கோயில் திருப்பணிக்கு வேண்டியகற்கள் அம்பாசமுத்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இரயில் வசதி இல்லாத அக்காலத்தில் மண்டபம் பகுதி இஸ்லாமியர் உதவியுடன் "இராமநாதர்" மற்றும் "பர்வதவர்த்தினி" என்ற பெயருடைய இரண்டு படகுகள் மூலம் கற்களைக் கொண்டு வந்து இராமேஸ்வரத்தில் சேர்த்துள்ளனர்.
தேவகோட்டை ஜமீந்தார் இராமேஸ்வரம் கோயில் திருப்பணிகள் செய்து வந்த காலத்தில், கோயில் நிர்வாகம் தொடர்பாக பாஸ்கர சேதுபதி மன்னருக்கும் பண்டாரத்திற்கும் வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அப்போது 1901ஆம் ஆண்டு நீதிமன்றம் ஜமீந்தார் அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியாரை கோயில் மேலாளராக நியமித்தது. பின்னர் 1912ஆம் ஆண்டு அரசாங்க போட்ட ஸ்கீம் படி கோயில் நிர்வாகத்தை இராமநாதபுர சேதுபதி மன்னருடன் தேவகோட்டை ஜமீன்தாரும் இணைந்து பார்த்து வந்துள்ளனர்.
இராமேஸ்வரம் கோயிலுக்காக தேவகோட்டை ஜமீன்தார் பற்பல நகைகளும் வாகணங்களும் செய்து கொடுத்துள்ளனர்.
கி.பி 1901 மற்றும் கி.பி 1947ஆம் ஆண்டுகளில் சேதுபதி மன்னர்கள் தலைமையில் தேவகோட்டை ஜமீந்தாரால் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுள்ளது.
×-×-×
No comments:
Post a Comment