Followers

Saturday, August 19, 2023

கோவிலூர் - 16ஆம் நூற்றாண்டு நகரத்தார் கல்வெட்டு

கோவிலூர்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் அருகே அமைந்துள்ள அழகிய ஊர் கோவிலூர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இது "கழனிவாயில்" என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கே பழுதடைந்திருந்த திருநெல்லை நாயகி உடனாய கொற்றவாளீசுவரர் திருக்கோயிலை கி.பி1818-ல் கோவிலூர் ஆண்டவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ முக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள் சீர்திருத்தி, வேதாந்த மடாலயத்தை நிறுவி தமிழில் வேதாந்த நூல்களையும் ஞான வாசிட்டம் முதலியவற்றையும் கற்பிக்கத் தொடங்கினார். கோவிலை மையமாக வைத்து ஊர் உருவானதால் அது முதல் இது கோவிலூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. 

கொற்றவாளீசுவரர் கோயில்:
"திருநெல்லை நாயகி உடனாய கொற்றவாளீசுவரர் திருக்கோயில்" ஒரு அற்புத கலைப்பொக்கிஷம். எந்தப்பக்கம் திருப்பினாலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடைய புடைப்பு சிறப்பங்களும், வண்ணமிகு மூலிகை ஓவியங்களும், வனப்புமிக்க கற்தூண்களும், நீண்ட நெடிய திருச்சுற்று மாளிகையும், கண்ணைக்கவரும் கரும் பளிங்கு கல்லாலான சுவர்களும், அழகிய நீராழி மண்டபத்துடனான ஊருணியும் என இந்த அழகைக் காண கண்கோடி வேண்டும். இந்த கோயில் ஆதியில் பிற்காலபாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் தற்போது நாம் காணும் கோயிலின் பெரும்பகுதி 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் கோவிலூர் மடாதிபதிகளின் அறிவுரைப்படி நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப்பெற்றது. சிவன் கருவறை, அர்த்த மண்டபம், நடராஜர் சன்னிதி ஆகியன பாண்டிய மன்னர் திருப்பணி. இவை நீங்கலாக ஏனைய பகுதிகள் அனைத்தும் ஊருணி உட்பட நகரத்தாரால் புதிதாக கட்டப்பெற்றவையே. இந்த கோயில் தற்போது சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்து வருகிறது.

கல்வெட்டுகள்:
1962-63ஆம் ஆண்டில் இங்குள்ள எட்டு கல்வெட்டுகள் இந்திய அரசின் கல்வெட்டு துறையினரால் படியெடுக்கப்பட்டு அவற்றின் ஆங்கிலக் குறிப்புகள் அவ்வாண்டு கல்வெட்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர் ஆத்தங்குடி சு.ராஜகோபால் தொகுத்தளித்திருக்கும் "கோவிலூர்க் கல்வெட்டுகளும் அவற்றின் செய்திகளும்" எனும் நூலில் கோவிலூரில் உள்ள 37 கல்வெட்டுகள் குறித்த செய்திகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுகளில் இவ்வூர் "தேனாற்றுப் போக்கு கழனிவாசலான சீவல்லபபுரம்" என்றும் "தேனாற்றுப் போக்கு கழனிவாசல்ப் பற்று கழனிவாசல்" என்றும் "கழனிவாசல்" என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்திய அரசின் கல்வெட்டுப் பிரிவினால் படியெடுக்கப்பட்ட எட்டு கல்வெட்டுகள், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்கால பாண்டியர், விஜயநகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த விஜயநகர மன்னர்கள், சூரைக்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சூரைக்குடி அரசு என்னும் குரிசில்கள், நியமத்தைத்(நேமம்) தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர்கள் ஆகியோர் காலத்தவையாகும். இவை 13ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரையானது. இந்த எட்டு கல்வெட்டுகளும் கொற்றவாளீசுவரர் கருவறை சுவற்றை சுற்றி பொறிக்கப்பட்டுள்ளன. இதில் நாட்டுக்கோட்டை நகரத்தார் பற்றிய கல்வெட்டானது கருவறை மேற்கு சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது(A.R.NO.B.527 OF 1962-63).

கல்வெட்டு வாசகம்:
1. சகாத்தம் 1481ன் மேல் செல்லா நின்ற சித்தாற்தி
2. வருசம் ஆவணி மாதம் 6உ ஆதித்தவாரத்து அத்தமும் ....யும் பெற்ற நாள்
3. கழனிவாசலான ....த்து உடையார் திருக்கொ ...முடையா
4. ர் சன்னதியில் ஆதிசண்டேசுரதேவர் அருளிச் செய்தபடிக்கு தக்கார்க்
5. குத்தக்கான் இராகுத்த மிண்டந் படை கண்ட இரா
6. சர் மி சொரிமன்னர் சூரியன் சூரைக்குடிய் அரசு வி
7. னை தீர்த்த விசையாலை தேவர் குமாரர் பெத்தப்ப விசியாலை
8. ய தேவன் கோயில் தானத்தாரும் மாத்தூரான வீ
9. ரபாண்டிய புரத்து நகரத்தாற்குப் பிடிபாடு பண்
10. ணிக்குடுத்தபடி இன் நயினார் கோயில் கெற்
11. ப கிறகம் அத்தமண்டப மாகாமண்டபஞ் சோபா
12. னந் தட்டோடு சாந்து காறை இவர்கள் தன்ம
13. ...வற் செல் ...க்கும்
14. ...கைவழக்கத்தி ...த்துக்
15. ...ஒடுக்கு திருகார்த்திக்கைக்கு
16. ...ம் பெற்ற அஞ்சாந் திருநாளும் ந
17. ...ன வந்தான் என்று திருச்சின்ன
18. ...ம் இப்படிக்கு பெற்றப்ப விசைய
19. ...பிராமாதராயர் எழுத்து இப்
20. ...எழுத்து ...
21. ...லை தேவ
22. ...தில்லையாளி பட்ட...
23. ...இந்த கல்வெட்டு...
24. மாத்தூர் இலுப்பை
25. பக்குடி நகரத்தார்
26. தன்மம் இப்படி
27. இராசப்ப விசை
28. யாலைய தேவர் எழுத்து.

கல்வெட்டு செய்தி:
மழை பொழியும் போது கோயில் மண்டப விதானங்களின் இடைவெளிகளில் நீர் கசிவு ஏற்படா வண்ணம் விதானங்களின் மேற்பகுதியில் தட்டோடுகள் பரப்பப்பட்டு சுண்ணாம்பு கலவை கொண்டு பூசப்படுவது வழக்கம். கி.பி 1559-ஆம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்த சூரைக்குடி அரசு விசையாலய தேவர் மகன் பெத்தப்ப விசையாலைய தேவர் சிவன் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றுக்கு தட்டோடு வேய்ந்து காறை சாந்து பூசும் திருப்பணியை மாத்தூர் மற்றும் இலுப்பைக்குடி கோவில் நகரத்தார்களுக்கு கொடுத்துள்ளார். அதன்படி நகரத்தார்கள் தட்டோடு வேய்ந்துள்ளனர் இதற்காக இவர்களுக்கு திருக்கார்த்திகைத் திருவிழாவின்போது ஐந்தாம் நாள் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை விசையாலய தேவர் என்ற அலுவலரால் எழுதி கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை மாத்தூர் மற்றும் இலுப்பைக்குடி கோயில் நகரத்தார்கள் பெற்றுக்கொண்டு கல்வெட்டாகப் பொறித்துள்ளனர்.

தெரியவரும் செய்தி:
கி.பி 1818-ல் கோவிலூர் ஆண்டவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ முத்துராமலிங்க ஞானதேசிக சுவாமிகள் இக்கோயிலை சீர்திருத்துவதற்கு முன்பே நகரத்தாருக்கும் கோவிலூருக்கும் தொடர்பு இருந்திருக்கின்றது. சிவகங்கை சமஸ்தானம் உருவாவதற்கு இரு நூற்றாண்டுக்கு முன்பே நகரத்தார் கோவிலூரில் திருப்பணி செய்துள்ளனர். மேலும் இன்றிலிருந்து சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பே கோயில் திருப்பணியில் ஈடுபட்டுள்ளதைக்கொண்டு, "நாட்டுக்கோட்டை நகரத்தார் இன்று நேற்று அல்ல காலம் காலமாக இறைப்பணி செய்து வரும் சமூகத்தார்" என்பதற்கு தக்க சான்றாக விளங்குகிறது இந்த கல்வெட்டு.

-பழ.கைலாஷ்
















துதிக்கையில்லா கரிமுகன்

  நடுவாற்று மருதம் பிள்ளையார் சி வகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர் கண்டரமாணிக்கம் . இவ்வூரையடுத்த கொங்கரத்தியில் மணிமுத்தாற்றின் ...