Followers

Sunday, April 20, 2025

உத்தரகோசமங்கை - நகரத்தார் திருப்பணி

 

- பழ.கைலாஷ் -


"சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்

கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருள்தாளிணை பாடிப்

போரார் வேற்கண்மடவீர் பொன்னூசலாடாமோ"


தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இரவு பள்ளியறை பூஜையில் பாடப்படுவது திருவாசகத்தின் திருப்பொன்னூசல் பதிகம். இது மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் வசிக்கும் காலத்தில் உத்தரகோசமங்கையை நினைத்து பாடியது.


சுவாமியையும் அம்பாளையும் இரவு பள்ளியறையில் ஊஞ்சலில் ஓரு சேர அமர வைத்து ஆராதனை செய்து திருப்பொன்னூசல் பதிகத்தை தாலாட்டாக பாடி பூஜிப்பது தொன்றுதொட்டு வரும் சைவசமய மரபு. நாள் முழுவதும் எத்தனை பூஜைகளை பார்த்தாலும், இரவு பள்ளியறை பூஜையை கண்டு வழிபடுவது மிகுந்த புண்ணியமாக கருதப்படுகின்றது.


எத்தனை சிவாலயங்களில் பள்ளியறை பூஜைகள் பார்த்தாலும் அத்தனையும் விட புண்ணியமாக கருதப்படுவது திருப்பொன்னூசல் பதிகத்தில் குறிப்பிடப்படும் உத்தரகோசமங்கை பள்ளியறை பூஜையே! 


இவ்வளவு சிறப்புவாய்ந்த உத்தரகோசமங்கை பள்ளியறை கல்திருப்பணி செய்தவர்கள் தேவகோட்டை நகரத்தார்கள்.


பாண்டிய நாட்டில் உள்ள சிவதலங்களுள் மிகப்பழமையான தலமாக சைவர்களால் நம்பப்படுவது உத்தரகோசமங்கை. "மண் முந்தியோ மங்கை முந்தியோ" என்பது இத்தலம் குறித்து தொன்று தொட்டு வழங்கிவரும் பழஞ்சொல்.


"மீண்டு வாரா வழியருள் புரிபவன்

பாண்டி நாடே பழம்பதி யாகவும்

பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்

உத்தரகோசமங்கை ஊராகவும்"


எனத் கீர்த்தித் திருஅகவலில் மாணிக்கவாசகர் பாடுகிறார்.

இதன் பொருள், பக்தி செய்கின்ற அடியவர்களுக்கு சிவன் முக்தியைக் கொடுக்கிறான். அத்தகையவன் பாண்டிய நாட்டை தன்னுடைய உறைவிடமாகவும் உத்தரகோசமங்கையை தனது ஊராகக் கொண்டிருக்கிறான்.




இத்தலம் திருவாசகத்தில் 38 இடங்களில் பாடப்பட்டுள்ளது. இது மாணிக்கவாசகர் மனதிற்கு நெருங்கிய தலம். மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் காட்சியளித்து உபதேசித்த சிவபெருமான் மீண்டும் இத்தலத்தில் காட்சியளித்துள்ளார். 


உத்தரகோசமங்கை = உத்தரம்+கோசம்+மங்கை. உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது என்கிறது தலபுராணம்.


இத்திருத்தலத்தில் இறைவனும் இறைவியும் மங்களநாதர் - மங்களேசுவரி என்ற திருப்பெயர்களால் அருள்பாலிக்கின்றனர்.


இங்கு ஐந்தரை அடி உயர மரகதத்திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் அருள்பாலிக்கின்றார். மார்கழித் திருவாதிரையில் சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலம் சிதம்பரத்துக்கு இணையாக போற்றப்படுகிறது. ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகின்றது.


உத்தரகோசமங்கை கோயில் ஆதியில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பெற்றது. பின்னர் நாயக்க மன்னர்கள் மற்றும் சேதுபதி மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப்பெற்றுள்ளது. இது சேதுபதி மன்னர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்.


சுமார் 130ஆண்டுகளுக்கு முன்,  உத்தரகோசமங்கை கோயிலை சீரமைக்கும் பொறுப்பை மன்னர் பாஸ்கர சேதுபதி நகரத்தாரிடம் கொடுத்துள்ளார்.


தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு. அருணாச்சலம் செட்டியார் 1901-ஆம் ஆண்டு முதல் சில காலம் உத்தரகோசமங்கை கோயிலின் நிர்வாக மேலாளராக இருந்துள்ளார்.¹


தேவகோட்டை அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் தம் பொருட்செலவிலும் மேலும் சில தேவகோட்டை நகரத்தார் பொருட்செலவிலும் சிதிலமடைந்திருந்த உத்தரகோசமங்கை அம்பாள் கோயிலை முழுமையாக பிரித்து, புதிய கருங்கற்களை கொண்டு மங்களேசுவரி அம்பிகைக்கு கருவறை, அர்த்த மண்டபம், அழகிய வேலைப்பாடுடைய பன்னிரண்டு தூண்களுடன் முன்மண்டபம், பன்னிரண்டு தூண்களுடன் திருச்சுற்று மண்டபம், வெள்ளி ஊஞ்சலுடன் சிறப்புமிக்க பள்ளியறை மற்றும் இரண்டுநிலைகள் கொண்ட கோபுரம் கட்டியுள்ளார். முன்மண்டபம் மற்றும் திருச்சுற்றில் கண்ணைக்கவரும் வண்ண ஓவியங்களும் வெளிநாட்டு மின்விளக்குகளும் நிறைந்திருக்கின்றன.



இத்திருப்பணி வேலைகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்திருக்கின்றன.


அம்மன் கோயில் திருப்பணி நிறைவடைந்ததும், சிவன் கோயில் முன்மண்டபத்தை பிரித்துவிட்டு புதிய முன் மண்டபம், பெரிய திருச்சுற்று மண்டபம் மற்றும் மதில்சுவர் கட்டும் திருப்பணிகளை தொடங்கியுள்ளார் இராமசாமி செட்டியார். அப்போது முதலாம் உலகப்போர் ஆரம்பித்து விலைவாசிகள் ஒன்றுக்கு பத்தாக உயர்ந்துள்ளது. விலைவாசிகள் குறைந்து, பழைய நிலைக்கு வந்த பிறகு திருப்பணியை தொடரலாம் என்று காத்திருந்துள்ளார். அந்த சமயம் வயது மூப்பின் காரணமாக 1919-ல் அவர் இறந்துவிட திருப்பணிகள் பாதியில் நின்றுவிட்டன.


அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் 


அக்காலத்தில் நகரத்தார் பொதுவாக திருப்பணி செய்த கோயில்களில் கல்வெட்டுகள் வைப்பதில்லை. அதுபோல் உத்தரகோசமங்கையிலும்  இராமசாமி செட்டியார் செய்த திருப்பணி தொடர்பான கல்வெட்டுகள் ஏதும் இல்லை. அம்மன் கோயில் பெரிய மணியில் மட்டும் "தேவகோட்டை நகரத்தார்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.


இராமசாமி செட்டியார் முன்னின்று திருப்பணிகளை செய்திருந்தாலும் திருப்பணி செலவுகளை அவருடன் தேவகோட்டை நகரத்தார் சிலர் பகிர்ந்துள்ளனர். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் 1953-ல் எழுதிய "நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு" என்ற நூலில்² அழ.சித.லெ.இராமசாமி செட்டியாருடன் திருப்பணி செலவுகளை பகிர்ந்துகொண்ட தேவகோட்டை நகரத்தார் நால்வர் விலாசம் உள்ளது, அது பின்வருமாறு,

1.அரு.அரு.சோம (சத்திரம் சோம)

2.அரு.அரு.இராம (இரட்டை அரு)

3.அழ.அரு (ஜமீந்தார்)

4.அழ.சுப.சு


பாண்டிய மன்னரால் கட்டப்பெற்ற மங்களநாதர் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் நல்ல கருங்கற்களால் ஆனது. பின்னர் கட்டப்பெற்ற மண்டபங்கள் மற்றும் அம்பாள் கோயில் உள்ளிட்டவை கடற்பாறை கற்களால் ஆனது. கடற்பாறை என்பது கட‌ற்கரை பகுதியில் கிடைக்கக்கூடியது. அது எளிதில் சிதையும் தன்மை கொண்டது. ஆகையால் தான் கடற்பாறைகளால் கட்டப்பெற்று சிதிலமடைந்திருந்த பகுதிகளை நகரத்தார் கருங்கற்களால் மறுகட்டுமாணம் செய்துள்ளனர். இந்த உத்தரகோசமங்கை திருப்பணிக்காக அம்பாசமுத்திரம் அருகேயிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.


இராமசாமி செட்டியார் திருப்பணி வேலைகளை உத்தரகோசமங்கையிலேயே தங்கியிருந்து பார்த்துவந்துள்ளார். அதற்காக தெற்கு ரத வீதியில் ஒரு பங்களா கட்டியுள்ளார், அது திருப்பணி பங்களா என்று அழைக்கப்படுகின்றது. 


மேலும் இராமசாமி செட்டியாரால் மேற்கு ரத வீதியில் ஒரு பசுமடமும், பெரிய நந்தவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. நந்தவனத்தின் உள்ளே பூக்கட்டும் மடமும் அருகே இரண்டு பிள்ளையார் கோயில்களும் கட்டப்பெற்றுள்ளன.


பின்னர் 1959-ஆம் ஆண்டு மன்னர் பாஸ்கர சேதுபதியின் பேரர் மன்னர் ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி தலைமையில் தேவகோட்டை இரட்டை அரு குடும்பத்தார் திருப்பணி குழுவினராக இருந்து, இராமசாமி செட்டியாரின் மூத்த மகன் வழிப்பேரர் அழ.சித.லெ.இராம.இராம. லெட்சுமணன் செட்டியார் திருப்பணி செயலாளராக இருந்து மீண்டும் திருப்பணிகள் தொடங்கப்பெற்றுள்ளது.³ அதற்கு அடிக்கல் நாட்டிய கல்வெட்டு ஒன்று அங்குள்ளது. அப்போது மங்களநாதர் சந்நதி முன் மண்டபம், மதில் சுவர் மற்றும் திருச்சுற்று மாளிகை கட்டும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. லெட்சுமணன் செட்டியார் மறைந்ததும், மீண்டும் திருப்பணி பாதியில் நின்று விட்டது.



அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் பேரர் அரு.இராமசாமி செட்டியார் கூறுகையில்⁴ "எங்கள் ஐயா இராமசாமி செட்டியார் வலையபட்டியில் பிறந்தவர்கள், எங்கள் பாட்டையா லெட்சுமணன் செட்டியாருக்கு ஆண் வாரிசு இல்லாததால் இராமசாமி செட்டியாரை பிள்ளைகூட்டி கொண்டார்கள். உத்தரகோசமங்கை கோயிலை சீரமைக்கும் பொறுப்பை மன்னர் பாஸ்கர சேதுபதி தேவகோட்டை சத்திரம் அருணாசலம் செட்டியாரிடம் கொடுத்தார்கள். அருணாசலம் செட்டியாரின் மகள் உண்ணாமலை ஆச்சியை எங்கள் ஐயா திருமணம் செய்திருந்தார்கள். மேலும் எங்கள் ஐயாவுக்கு இராமநாதபுரத்தில் தொழில் இருந்தது கடைகள் இருந்தன. ஆகையால் உத்தரகோசமங்கை திருப்பணி பொறுப்பை அருணாசலம் செட்டியார், தனது மாப்பிள்ளையான எங்கள் ஐயாவிடம் ஒப்படைத்தார்கள். எங்கள் ஐயாவும் சிறப்புற திருப்பணி செய்தார்கள்."


மற்றொரு பேரர் அரு.சிதம்பரம் செட்டியார் கூறுகையில்⁵ "உத்தரகோசமங்கை திருப்பணிக்காக தேவகோட்டை சத்திரம் சோம குடும்பத்தார் 250ரூபாயும், இரட்டை அரு குடும்பத்தார் 250ரூபாயும், ஜமீந்தார் அழ.அரு குடும்பத்தார் 250 ரூபாயும், அழ.சுப.சு குடும்பத்தார் 125ரூபாயும் எங்கள் ஐயா அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் 125ரூபாயும் என மொத்தமாக மாதத்திற்கு 1000ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். வருடத்திற்கு 12,000ரூபாய். 10வருடங்கள் திருப்பணி நடந்துள்ளது. மொத்த திருப்பணிச் செலவு 1,20,000ரூபாய். திருப்பணியை எங்கள் ஐயா முன்னின்று மிகவும் சிக்கனமாக நடத்தியுள்ளார்கள். 


ஒருமுறை தேவகோட்டையில் இருந்து உத்தரகோசமங்கைக்கு மாட்டு வண்டியில் எங்கள் ஐயாவும் அப்பத்தாவும் செல்கையில் ஒரு திருடன் வண்டியை பின் தொடர்ந்து இருக்கிறான். அப்பத்தா 'திருடன் நம்மை தொடர்கிறான்' என்று சொல்ல, ஐயா 'அடி பைத்தியக்காரி அது திருடன் அல்ல மங்களநாதர் நமக்கு துணைக்கு வருகிறார்' என்று சொல்ல, அதைக் கேட்டு திருடனும் ஓடிவிட்டானாம். ஐயா எப்போதும் 'மங்களநாதா! மங்களநாதா!' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். உத்தரகோசமங்கை மங்களநாதர் மீது அளவுகடந்த பக்தி உடையவராய் இருந்தார்கள்."


 உத்தரகோசமங்கையில் திருப்பணி செய்ததின் காரணமாக தேவகோட்டையில் அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் வீட்டை உத்திரகோசமங்கை செட்டியார் வீடு என்று அழைக்கின்றனர். 


உத்தரகோசமங்கையில் இராமசாமி செட்டியாரால் தொடங்கப்பெற்ற சிவன் கோயில் திருப்பணி நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது கோவையை சேர்ந்த இரா.வசந்த குமார் அவர்களால் திருச்சுற்று மாளிகை முழுமையாக கட்டப்பெற்று திருப்பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரன்பணி அறக்கட்டளை குழுவினரால் கோயிலின் மற்ற பகுதிகள் பழமை குன்றாதவாறு சிறந்த முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இராமநாதபுர சமஸ்தான ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் அவர்கள் தலைமையில் வெகுசிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கும்பாபிஷேகத்தன்று சிதம்பரம் நகர விடுதி ட்ரஸ்ட் உடன் உத்திரகோசமங்கை செட்டியார் வீட்டில் "டென்னிஸ்அரு" குடும்பம் இணைந்து அவர்களின் பசுமடத்தில் அன்னதானம் செய்தார்கள்.■



மேற்கோள்கள்:


1. INDIAN STREAMS RESEARCH JOURNAL, Volume-7 Issue-3 - April 2017 - "Tourism Potential in Sculptures Art and Architecture of Uthirakosamangai Temple - A study" - Dr.R.Muthu and Mr.M.Syed Ibrahim


2. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - 1953 - பண்டிதமணி கதிரேசன் செட்டியார் - பக் 252


3. கல்வெட்டு சிவன் சந்நிதி முன்பு உள்ளது.


4. அரு.இராமசாமி செட்டியார் என்கிற சோமன் செட்டியார் 01/02/2025 அன்று இக்கட்டுரை ஆசிரியரிடம் கூறியது.


5.அரு.சிதம்பரம் செட்டியார் 12/01/2025 அன்று இக்கட்டுரை ஆசிரியரிடம் கூறியது.







"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...