உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் திருச்சி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் குறிப்பிடத்தக்க சிறந்த கற்சிற்பங்கள் பல உள்ளன. சமீபத்தில் அவற்றுள் ஒரு சிற்பம் இணையத்தில் பேசுபொருளானது. அது அம்மன் கருவறை பின்புறச்சுவரில் உள்ள "மிதிவண்டி சிற்பம்" - ஒரு வாலிபர் மிதிவண்டி ஓட்டுவது போல் சிற்பம் அமைந்துள்ளது. "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் மிதிவண்டியை கண்டுபிடித்துவிட்டான்" என்று இணையத்தில் பலர் பரப்பி கொண்டிருந்தனர். சில செய்தி ஊடகங்களும் இதையே பரப்பினர்.
சில யூ டியூப்பர்கள் தங்களை பெரிய சிற்பவியலாளராக கருதிக்கொண்டு "இந்த சிற்பம் நிச்சயமாக சமீபத்தில் செதுக்கப்பட்டிருக்காது ஏனென்றால் இந்த அம்மன் சன்னதி மிகப் பழமையானது இதில் புதிய சிற்பத்தை செதுக்கினால் கோயிலே சிதைந்து இடிந்துவிழும் ஆகையால் இது கோயில் கட்டிய காலத்தில் அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட சைக்கிள் சிற்பம்" என்று கூறினர். உண்மை என்னவென்றால் அந்த அம்மன் சன்னதி உட்பட கோயிலின் பெரும் பகுதி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நகரத்தாரால் கட்டப்பெற்றது தான். அங்குள்ள சிற்பங்களும் அப்போது உருவாக்கப்பட்டது தான்.
இக்கட்டுரையில் உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயிலில் நகரத்தார் செய்த திருப்பணிகளை பற்றி தெரிந்துகொள்வோம். அதற்கு முன், பஞ்சவர்ணேசுவரர் கோயில் புராண வரலாற்றை பற்றி பார்ப்போம்.
"ஊரெனப்படுவது உறையூரே" என்று போற்றப்பெரும் உறையூருக்கு நடுவே அமைந்துள்ளது இத்திருக்கோயில். இதற்கு 'திருமூக்கீச்சுரம்' என்ற பெயரும் உண்டு. இங்குள்ள மூலவர் சுயம்பு லிங்கமாக உள்ளார்.
இது திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும்.
மூலவர் பெயர் 'மூக்கீச்சுரத்தடிகள்' என திருஞானசம்பந்த பெருமான் தாம் பாடிய பதிகத்தில் உள்ள பதினொறு பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார். சேரர்,சோழர்,பாண்டியர் ஆகிய மூவேந்தர்களையும் இணைய நிறுத்தி அவர்களை வாழவைக்கும் மூலப்பேரரசாக மும்முடி மன்னர்களின் மன்னராக விளங்குபவரே 'மூக்கீச்சுரம்' கோயிலில் இருக்கும் 'மூக்கீச்சுரத்தடிகள்' என்று விளக்கம் அமைத்துள்ளார் திருஞானசம்பந்த பெருமான்.
இத்தலத்தில் உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்களில் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்ததால் 'பஞ்சவர்ணேசுவரர்' என்று சமஸ்கிருதத்திலும் 'ஐவண்ணநாதர்' என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். அம்மையின் பெயர் காந்திமதியம்மை.
வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் ஒரு நாள் பட்டத்து யானை மீது உலா வந்தபோது, யானைக்கு மதம் பிடித்தது, அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் தலையின் மீது தன் மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது என்பதால் இத்தலத்திற்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு. பின்னர் அக்கோழியானது ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது, வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அங்கே சோழன் கோயில் எழுப்பினான் என்கிறது தலபுராண நூல்.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தவர். இவருக்கு இச்சிவாலயத்தில் தனி சன்னதி உள்ளது.
ஆதியில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த சிவாலயமானது காலப்போக்கில் சிதிலமடைந்தது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உறையூர் வாசிகள் சிதிலமடைந்திருந்த கோயிலை சீரமைக்க முடிவு செய்தனர், அக்காலகட்டத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பாடல் பெற்ற தலங்களை தேடித் தேடித் திருப்பணிகள் செய்துவந்தனர், இதனால் உறையூர் வாசிகள் செட்டிநாட்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார் அதிக அளவில் வசிக்கும் ஊரான தேவகோட்டைக்கு சென்று முறையிட்டனர். தேவகோட்டை நகரத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கீழவீட்டைச் சேர்ந்த வீர.இராம.சித.முரு. முருகப்ப செட்டியார் கோவில் கட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆலயத் திருப்பணி கி.பி.1910வாக்கில் தொடங்கப்பெற்றது.
சிதைந்திருந்த சிவன் சன்னதியை பிரித்து புதிய கருங்கல்லால் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், சண்டிகேசுவரர் சன்னதி ஆகியன கட்டப்பெற்றன. அந்த சமயத்தில் சிவ லிங்கத்தை பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு, கருவறை திருப்பணி முடிந்த பின் பிரதிஷ்டை செய்யலாம் என எண்ணி லிங்கத்தை எடுப்பதற்காக சுற்றி பதினான்கு அடி வரை தோண்டியும் அசைக்க முடியவில்லை நிலத்தடி நீர் பெருகி வந்துவிட்டது. சுயம்பு லிங்கத்தை அசைக்க முடியாது என்று உணர்ந்து, லிங்கத்தை எடுக்காமல் அதைச் சுற்றி திருப்பணி வேலைகள் நடைபெற்றுள்ளது. சுயம்பு லிங்கம் என்பதால் கருவறை முகப்பு மேல் பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைக்கப்பெற்றுள்ளது.
அர்த்தமண்டபம் மற்றும் கருவறை தேவகோட்டங்களில் முறையே நர்த்தன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், நான்முகன், துர்க்கை ஆகியன சோழர் கால சிலைகளாகவே அமைந்துள்ளன.
சிவன் சன்னதியின் இடப்புறம், தெற்கு முகமாக காந்திமதி அம்மைக்கு புதிய சன்னதி - கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் கட்டப்பெற்றுள்ளது. அதன் அருகே பள்ளியறையும் இவை அனைத்தையும் இணைக்கும் படி முன் மண்டபமும் கட்டப்பெற்றுள்ளது.
காந்திமதி அம்மை சன்னதியில் தான் "மிதிவண்டி சிற்பம்" உள்ளது. மேலும் இந்த சன்னதியின் மேல்புறச் சுவரில் உதங்கமுனிவர் சிவபூசைச் சிற்பமும், கீழ்ப்புறச் சுவரில் யானையை அடக்கிய கோழிச் சிற்பமும் கோயில் புராணத்தை பாமர மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளது.
முற்காலத்தில் கோயில் நுழைவு வாயில் அருகே காந்திமதி அம்மை சன்னதி இருந்துள்ளது. நகரத்தாரால் சிவன் சன்னதி அருகே புதிய அம்மன் சன்னதி கட்டப்பட்ட பின், காந்திமதி அம்மை சிலை பெயர்த்துவந்து புதிய சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போதும் நுழைவு வாயில் அருகே அந்த பழைய அம்மன் சன்னதி உள்ளது, ஆனால் சிலை ஏதும் இல்லை, வழிபாட்டிலும் இல்லை.
சோழர் காலத்தில் கட்டப்பெற்ற கன்னிமூல கணபதி, முருகன், லெட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான சன்னதிகள் நல்ல நிலையில் இருந்ததால் அவற்றை மாற்றாமல், பழுதுபார்த்துள்ளனர்.
அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய தூண்களை கொண்டு துவஜஸ்தம்ப மண்டபம் புதிதாக பெரிய உற்சவ மண்டபமும் மடப்பள்ளியும் கட்டப்பெற்றுள்ளது.
மேலே கூறிய அனைத்து சன்னதியையும் இணைக்கும்படி, இறைவன் இறைவியை மக்கள் வளம் வந்து வழிபட பெரிய திருச்சுற்று மாளிகை கட்டப்பெற்று அதில் அறுபத்து மூவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளன. திருச்சுற்று தூண்களில் உள்ள ஊர்த்துவ தாண்டமூர்த்தி, கரியுரி தாண்டமூர்த்தி, ஏகபாத மூர்த்தி உள்ளிட்ட சிற்பங்களும் துவஜஸ்தம்ப மண்டப சிற்பங்களும் நகரத்தார் சிற்பக்கலைக்கு சான்றாக திகழ்கின்றன.
இத்தல தீர்த்தமாக விளங்கும் "சிவதீர்த்தம்" கல்திருப்பணி செய்யப்பெற்றுள்ளது.
வனப்புமிக்க வண்ண சுதைச் சிற்பங்களுடன் மூன்று நிலை புதிய இராஜகோபுரமும் மதில் சுவரும் என கோயிலில் பெரும் பகுதி(90%) நகரத்தார் திருப்பணியே.
இவை அனைத்தும் நாட்டுக்கோட்டை நகரத்தாருள் மாத்தூர் கோயில் உறையூர் வகுப்பைச் சேர்ந்த தேவகோட்டை கீழவீட்டு வீர.இராம.சித.முரு. முருகப்ப செட்டியாரால் அன்றைய மதிப்பில் நான்கு லட்சம் ரூபாய்(4,00,000) பொருட்செலவில் திருப்பணி செய்யப்பெற்று, துந்துபி வருடம் சித்திரை மாதம் 21-ஆம் நாள்(03/05/1922) திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றுள்ளது.
உறையூர் ஐவண்ணநாதர் ஆலயம் அழியாப்பெருமை வாய்ந்த சிற்பங்களின் திருக்கூடமாக இன்று திகழ்வதற்குக் காரணம் நகரத்தார் திருப்பணியே.
-பழ.கைலாஷ்