Followers

Thursday, October 16, 2025

செட்டிநாட்டில் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட்

- பழ.கைலாஷ் -


மெட்ராஸ் மாகாணத்தின் புகழ்பெற்ற ஆளுநர்களுள் ஒருவர் லார்ட் பென்ட்லாண்ட். இவர் 1912 முதல் 1919 வரை மெட்ராஸ் ஆளுநராக இருந்தார். மெட்ராஸ் மாகாண வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். புகழ்பெற்ற பாம்பன் ரயில் பாலத்தை 1914ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இவர் ஆளுநராக இருந்த காலம் முதலாம் உலகப் போர் நடந்துவந்த காலம். இவர் "மெட்ராஸ் போர் நிதி"(Madras War Fund) என்ற கட்டளையை நிறுவி பலரிடம் நிதி திரட்டி, "மெட்ராஸ்" என்கிற பெயரில் ஒரு மருத்துவமனைக் கப்பலை(Hospital Ship) உருவாக்கினார். இந்தக் கப்பலில் சுமார் 300 படுக்கைகள், அறுவை சிகிச்சை அரங்குகள், எக்ஸ்ரே கருவிகள், மருந்தகம் என அனைத்து வசதிகளும் இருந்தன. இது போரில் காயமடைந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களுக்கு உதவியது.

கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட்

நாட்டுக்கோட்டை நகரத்தார், பொதுவாக சமூகத்தின் மீது பெரும் அக்கறை கொண்டவர்கள். பொது நலனுக்காக பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவது, குளம் வெட்டுவது, சாலை போடுவது போன்ற பல்வேறு அறப்பணிகள் செய்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் முதலாம் உலகப் போரில் காயமடைந்த வீரர்களை காப்பதற்காக "மெட்ராஸ் போர் நிதி"க்கும் வாரி வழங்கியுள்ளார்கள். பிற்காலத்தில் மகாத்மா காந்தி செட்டிநாடு வந்த பொழுது சுதந்திரப் போராட்ட நிதிக்கும் நகரத்தார் பெருவாரியாக உதவியுள்ளார்கள் இதை காந்தி "யங் இந்தியா" இதழில் குறிப்பிட்டுள்ளார்.

மெட்ராஸ் மருத்துவமனைக் கப்பலை

மெட்ராஸ் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட் போர் நிதி திரட்டுவதற்காக 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செட்டிநாட்டுக்கு வருகை தந்துள்ளார். செட்டிநாட்டுக்கு வந்த முதல் கவர்னர் இவரே. அவரின் செட்டிநாட்டுப் பயணத்தை இக்கட்டுரையில் எழுதியுள்ளேன். இதற்கான சான்றாதாரங்கள் லேடி பென்ட்லாண்ட் தன் கணவர் பற்றி எழுதிய நூலிலும், அன்றைய "தி ஹிந்து" ஆங்கில நாளிதழிலும், தேவகோட்டையில் இருந்து வெளிவந்த "வைசிய மித்திரன்" வார இதழிலும் உள்ளன. அவற்றை கொண்டு இக்கட்டுரையை தொகுத்துள்ளேன்.


ஊட்டி:

1916 செப்டம்பர் 17ஆம் தேதி மாலை கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட் தனது உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஊட்டியிலிருந்து தனி ரயில் மூலம் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மோட்டார் காரில் செட்டிநாட்டுக்கு புறப்பட்டார். 


திருப்பத்தூர்:

செப்டம்பர் 18ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9:30மணி அளவில் திருப்பத்தூர் வந்தடைந்தார். திருப்பத்தூரில் போடப்பட்டிருந்த மேடையில் குன்றக்குடி ஆதீனகர்த்தர் அண்ணாமலை தேசிக சுவாமிகள் ஒரு வெள்ளித் தட்டில் 1500ரூ வைத்து போர் நிதிக்கு கொடுத்தார். பின்னர் மேலவட்டகை நகரத்தார்கள் சார்பில் கரு.முத்து.தியாகராஜன் செட்டியாரால் ஒரு உபச்சார பத்திரம் வாசிக்கப்பெற்று வெள்ளிப்பெட்டியில் 21,000ரூ வைத்து கொடுக்கப்பட்டது. உபச்சார பத்திரம் என்பது மதிப்புமிக்க நபருக்கு, ஒரு குழுவினர் தங்கள் மரியாதை மற்றும் கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் சமர்ப்பிக்கும் கடிதம். திருப்பத்தூரில் வாசிக்கப்பட்ட உபச்சார பத்திரத்தில், "நகரத்தார் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து பின் பாண்டிய நாட்டுக்கு வந்த கதையும், தற்போது செய்துவரும் கோயில் திருப்பணிகள் மற்றும் சமூகப்பணிகள் குறித்த செய்திகளும், இலங்கையில் குவாரண்டைன்(Quarantine) விதிகளால் தாங்கள் சந்திக்கும் கஷ்டம் குறித்தும், கிராமங்களில் சூதாட்டத்தை தடுப்பதற்கான சட்டம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்றும், நகரத்தாரில் ஒருவருக்கு எப்போதும் சட்டசபையில் ஒரு இடம் தர வேண்டும்" என்று கவர்னரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு பதிலளித்த கவர்னர், "நகரத்தார் சரித்திரம் மற்றும் தற்பொழுது நீங்கள் செய்து வரும் சமூகப்பணிகள் எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. இலங்கை குவாரண்டைன் குறித்து அந்த அரசாங்கத்திடம் நான் பேசி வருகிறேன் கூடிய விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும். சூதாட்டத்தை தடுப்பதற்கு ஜில்லா மாஜிஸ்திரேட் தக்க ஏற்பாடு செய்வார். நகரத்தாரில் ஒருவர் எப்போதும் சட்டசபையில் இருப்பார் என்று நான் கூற இயலாது, இருப்பினும் தற்போது உள்ளவர்களைப் போன்று ஆற்றலுடையவர்கள் நகரத்தாரில் இருக்கும் வரை அவர்களை உறுப்பினர்களாக நியமிக்க கூடும்".


பின்னர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு மதிய உணவு அருந்தி மாலை 3:30மணிக்கு திருப்பத்தூரை விட்டு புறப்பட்டார்.


மானகிரி:

திருப்பத்தூரிலிருந்து தேவகோட்டை செல்லும் வழியில் மானகிரியில் லெ.அரு.அருணாச்சலம் செட்டியாரால் கவர்னருக்கு மாலை அணிவித்து வரவேற்கப்பெற்றது.


அமராவதிபுதூர்:

மாலை அமராவதிபுதூரில் சிறிது நேரம் கவர்னர் தங்கி இருந்தார். வயிநாகரம் அ.இராமநாதன் செட்டியாரால் ஒரு உபச்சார பத்திரம் வாசிக்கப்பட்டது. அதில் வயிநாகரம் குடும்பத்தார் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல திருத்தலங்களில் செய்திருக்கும் திருப்பணிகளை கூறி, அமராவதிபுதூரில் தபால் இன்ஷூரன்ஸ் வசதி ஏற்படுத்தி தரும்படியும், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, திருமயம், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், காரைக்குடி, அமராவதிபுதூர், தேவகோட்டை, காளையார்கோவில் வழியாக சிவகங்கை வரைக்கும் ரயில் பாதை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கவர்னர், "வயிநாகரம் திருப்பணிகள் குறித்து அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி, தபால் இன்ஷூரன்ஸ் பற்றி ஆலோசிக்கப்படும், தற்போது நிதி பற்றாக்குறை இருப்பதால் ரயில் பாதை அமைக்க முடியாது, யுத்தம் முடிந்த பிறகு ரயில் பாதை அமைத்து தரப்படும்" என்றார்.


கவர்னர் விஜயத்தின் ஞாபகார்த்தமாக உசிலாவடி ஊரணியிலிருந்து அமராவதிபுதூர் செல்லும் சாலைக்கு லார்ட் பென்ட்லாண்ட் சாலை எனப் பெயர் சூட்டப்பட்டது.


தேவகோட்டை:

மாலை 5:30மணிக்கு தேவகோட்டை சிலம்பணி வந்தடைந்தார். ஜமீன்தார் அழ.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார், யூனியன் சேர்மன் சி.சுந்தரம் ஐயர் மற்றும் நகரத்தார் பலர் மாலை அணிவித்து வரவேற்றனர். பேண்ட்வாத்தியங்கள், மேளத்தாளங்கள், குடை, கொடி, ஆளவட்டம் முதலிய எடுபிடிகளுடன் யானை முன் செல்ல கவர்னர் பரிவாரங்களுடன் மோட்டார் வாகனத்தில் மெதுவாக நகரை சுற்றி வந்து நகரச்சிவன்கோயில் எதிரே போடப்பட்டிருந்த அலங்கார பந்தலை அடைந்தார். வழி நெடுக மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்து மக்கள் கவர்னரை காண வந்திருந்தனர். விஸ்தாரமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் நகரத்தார் பலர் கூடியிருந்தனர், தேவகோட்டை நகரத்தார் சார்பில் ராவ்பகதூர் பெரி.சோமசுந்தரம் செட்டியாரால் உபச்சார பத்திரம் வாசிக்க பெற்று மெட்ராஸ் மருத்துவமனைக்கப்பல் செலவுக்காக ஒரு வெள்ளிப்பெட்டியில் 23,000 ரூபாய்க்கான உண்டியல் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. அந்த உபச்சார பத்திரத்தில் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைக்கப்பட்டது, நகரத்தார் சமூகத்தில் ஒருவருக்கு விலங்கு மாட்டப்பட்டால் அவர் ஜாதியை விட்டு நீக்கி வைக்கப்படுவார் என்னும் கொள்கை வெகு நாட்களாக இருந்து வருவதால், நகரத்தாரில் குற்றவாளிகளாக கருதப்படுபவர் நீதிமன்ற முடிவு தெரியும் வரை விலங்கு போடாதிருக்கும்படி ஒரு உத்தரவு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு பதிலளித்த கவர்னர், "இவ்வாறு ஒரு ஜாதிக்காக எல்லோருக்கும் பொதுவான சட்டத்தில் விளக்கு ஏற்படுத்த முடியாது ஆகையால் நகரத்தார் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டு விலங்கு போட்டவர்களை ஜாதியை விட்டு நீக்காத படி செய்து கொள்வது அவசியமானது" என்று கூறினார்.


மேலும் யூனியன் பிரதிநிதிகளின் சார்பாக சி. சுந்தரம் ஐயர் ஒரு உபச்சார பத்திரம் வாசித்தார் அதில் "தேவகோட்டையில் சகல மக்களும் பயில ஒரு ஹை ஸ்கூல் வேண்டும், ஸ்கூல் கட்ட தேவையான நிதியில் ஒரு பாதியை ஜமீன்தார் தருவதாகவும், மீதியை பெரி.சோமசுந்தரம் செட்டியார் உள்ளிட்ட நகரத்தார் சிலர் தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்கள், இதற்கு அரசு அனுமதி தர வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது ஆகையால் குழாய் மூலம் குடிநீர் ஏற்படுத்தி தர வேண்டும், அதற்குத் தேவையான தொகையில் ஒரு பாதியை நகரத்தார்கள் தருவதாகவும் , மீதி தொகைக்கு யூனியன் கூடுதலாக வரி வசூலிக்க அனுமதி தர வேண்டும். இந்த ஊருக்கு ஒரு முனிசிப்கோர்ட் வேண்டும். இந்த ஊருக்கு வருவதற்கு நல்ல சாலை வசதியும் புதிய ரயில் பாதை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்." என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு கவர்னர், "ஸ்கூல் கட்ட நகரத்தார்களே நிதி தருவதானால் கலெக்டருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும், குடிநீர் குழாய் விஷயத்தில் தற்பொழுது உள்ள சட்டப்படி யூனியனால் அதிக வரி விதிக்க முடியாது இருப்பினும் விரைவில் நல்ல வழி ஏற்படும் என நம்புகிறேன்.

சிவில் கோர்ட் அமைக்க யோசனை இருக்கிறது, இது குறித்து ஜில்லா நீதிபதியிடம் நீங்கள் எழுதி கேட்டுக் கொள்ளுங்கள். போக்குவரத்து வசதி, ரயில் பாதை வசதி எல்லாம் யுத்தம் முடிந்த பிறகு கவனிக்கப்படும்." என்று கூறினார். பின்னர் நகரத்தார் ஒவ்வொருவராக கவர்னரிடம் அறிமுகமாகி கொண்டனர். இரவு "சொர்ணவல்லி விலாஸ்"-ல் தங்கினார். கவர்னரின் வருகைக்காகவே இந்த சொர்ணவல்லி விலாஸ் என்னும் பிரம்மாண்ட மாளிகை தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் கட்டப்பட்டிருந்தது.

சொர்ணவல்லி விலாஸ்

மறுநாள் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8மணிக்கு பெரி.சோமசுந்தரம் செட்டியாரால் கட்டப்பெறும் "லேடி பென்ட்லாண்ட் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை"க்கு வெள்ளிக்கரண்டியால் கவர்னர் அடிக்கல் நாட்டினார். மருத்துவமனை குறித்து சோமசுந்தரம் செட்டியார் கவர்னரிடம் எடுத்துக் கூறுகையில் "சுற்றி 50மைல் தொலைவில் எங்குமே பெண்களுக்கு என பிரத்தியேக மருத்துவமனை இல்லை, இந்த மருத்துவமனை தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் வசதிபடைத்த பெண்கள் என அனைவருக்கும் உதவிகரமாக இருக்கப்போகிறது. நல்ல சிறந்த ஆங்கில பெண் மருத்துவச்சி அதிக சம்பளம் கொடுத்து வரவழைக்கப்பட உள்ளார். இதற்கான நிர்வாக செலவை நகரத்தாரே ஏற்றுகொள்வார்கள். கவர்னரின் மனைவி லேடி பென்ட்லாண்ட் இந்திய பெண்கள் மேல் காட்டும் அபிப்பிராயத்தின் காரணமாக இந்த மருத்துவமனைக்கு அவர்களின் பெயர் சூட்டப்படும்" என்றார். கவர்னர் பேசுகையில், இந்த ஜில்லாவிலேயே இது போன்ற ஒரு பெண்கள் நல மருத்துவமனை இல்லை என்று அந்தக்குறையை நீக்கிய பெரி.சோமசுந்தரம் செட்டியாரை வெகுவாக பாராட்டி பேசினார். (இந்த மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டு 1919ஆம் வருடம் திறக்கப்பட்டு நீண்ட காலம் தேவகோட்டையில் செயல்பட்டுவந்தது.)

லேடி பென்ட்லாண்ட் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை

அடிக்கல் நாட்டிய பிறகு கவர்னர் இங்கிருந்து புறப்பட்டு "சத்திரம் சோமசுந்தரம் செட்டியார்" வீட்டுக்கு சென்றார். வாசலில் வந்து வெள்ளி பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சோமசுந்தரம் செட்டியார், கவர்னரை தனது அழகிய மாளிகை போன்ற வீட்டுக்குள் அழைத்து சென்று சுற்றி காட்டினார். கவர்னர் வீட்டின் உள்வாசலில் அமைக்கப்பட்டிருந்த பூப்பந்தலின் கீழ் அமர்ந்து செட்டியாரின் வியாபாரம் குறித்தும் புதல்வர்கள் குறித்தும் பரிவுடன் கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் செட்டியார் மருத்துவமனைக்கப்பலுக்காக 7000 ரூபாய் உண்டியலை வெல்வெட்டுப் பையில் வைத்து கொடுத்தார், மேலும் யுத்த நிதிக்காக 10,000 இறாத்தல்(Ib) அரிசி கொடுப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு நகரச்சிவன் கோயில் அருகே உள்ள கீழவீட்டுக்கு சென்று சித.முருகப்ப செட்டியாரை சந்தித்து விட்டு மீண்டும் சொர்ணவல்லி விலாஸ் வந்தடைந்தார். மத்திய விருந்துக்கு பின் நகரத்தார் சிலருடன் வியாபாரம் தொடர்பான ஆலோசனைகளை நடத்தினார். 


மாலை 4 மணிக்கு ராவ்பகதூர் பெரி.சோமசுந்தரம் செட்டியாரின் அழைப்பை ஏற்று கள்ளிக்கோட்டையார் வீட்டுக்கு சென்று தேநீர் அருந்திவிட்டு, தேவகோட்டை - கண்டதேவி சாலையில் ஜமீன்தாரால் கட்டப்பெறும் கால்நடை மருத்துவமனைக்கு வெள்ளிக்கரண்டியால் அடிக்கல் நாட்டினார். ஜமீன்தாரின் சகோதரர் சொக்கலிங்கம் செட்டியார் மருத்துவமனை குறித்து கவர்னரிடம் எடுத்துரைத்தார். கவர்னர் பேசுகையில், ஜமீன்தார் குடும்பத்தார் வாயில்லாப் பிராணிகள் மீது காட்டும் உருக்கம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது போல் ஜில்லாவில் பல இடங்களில் மருத்துவமனை உருவாக வேண்டும் என்று கூறினார்.

கால்நடை மருத்துவமனை கல்வெட்டு

பிறகு மாலை 5:30மணிக்கு கவர்னர், வைசியசிவானந்த சபையால் நடத்தப்பெற்ற தோட்டக் கச்சேரிக்கு சென்றார். சபையின் தலைவர் இராம.மெ.சித.வைரவன் செட்டியார் தங்கமாலை அணிவித்து வரவேற்றார். வைசிய மித்திரன் பெண்கள் பாடசாலை மாணவிகள் இராஜ வாழ்த்து பாடினர். உள்ளூர் சங்கீத வித்வான் பிர்மஸ்ரீ சங்கர ஐயர் ஹார்மோனியத்தில் ஆங்கில மெட்டு பாடல்கள் வாசித்தார். மாணவிகள் நடனமாடினர். பின்னர் கோலாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம், பூசாரியாட்டம் ஆகியவற்றை கண்டு கொண்டே சிற்றுண்டி அருந்தினார். (இந்த நேரத்தில் கவர்னருடன் குழுப்புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் குறித்த செய்திகள் மட்டுமே உள்ளன தவிர புகைப்படம் கிடைக்கவில்லை.)


மாலை 6:30 மணிக்கு ஜமீன்தாரின் பழைய வீட்டுக்குச்சென்று சேது சமஸ்தான சங்கீத வித்வான் பிர்மஸ்ரீ சேதுராம ஐயரின் சங்கீத கச்சேரியை கண்டு களித்தார். அன்று ஒரே நாளில் தேவகோட்டை நகரத்தார் பலர் போர் நிதிக்காக 46,000ரூபாய் அளித்திருந்தார்கள்.


இரவு 7:30மணிக்கு ஜமீன்தாரின் புதிய பங்களாவான சொர்ணவல்லி விலாஸுக்கு சென்று இரவு விருந்து அருந்தி, வானவேடிக்கைகளை கண்டு களித்துவிட்டு மீண்டும் இரவு அங்கேயே தங்கினார். அன்று(19/09/1916) இரவு அவர் எழுதிய கடிதத்தில் "இன்று காலை முதல் இரவு 11 மணி வரை பட்டாசுகள் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் இசையுடன் மகிழ்ச்சியாக தேவகோட்டையை சுற்றி வந்தோம், இது எனக்கு கிலாஸ்கோவிற்கு அருகேயுள்ள லென்சி நகரை(ஸ்காட்லாந்து) வெகுவாக நினைவுபடுத்துகிறது. இன்று மட்டும் போர் நிதிக்காக 46,000 ரூபாய் கிடைத்துள்ளது இது உண்மையிலேயே மிக மிக பெரிய தொகை." 


மறுநாள் காலை மனோகரமான ஞாபகார்த்தத்துடன் தேவகோட்டையை விட்டு புறப்பட்டார் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட்.


- தொடரும்...


நமது செட்டிநாடு October 2025





செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...