- பழ.கைலாஷ்
![]() |
| கவனர் பென்ட்லாண்ட் |
காரைக்குடி:
1916 செப்டெம்பர் 20ஆம் தேதி காலை 07:30 மணியளவில் காரைக்குடி வந்தடைந்தார் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட். காரைக்குடி யூனியன் மெம்பர்களாலும் நகரத்தாராலும் வரவேற்கப்பெற்று அ.மு.க.முத்தையா செட்டியார், க.வெ.சித.கரு.கருப்பன் செட்டியார் ஆகியோரால் மாலை அணிவிக்கப்பட்டது. இரண்டு உபச்சார பத்திரங்கள் வாசித்து அளிக்கப்பட்டன.
1913ஆம் ஆண்டு முத்த.வெ.வெள்ளையன் செட்டியாரால் தொடங்கப்பெற்ற "ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வித்தியாசாலை"-க்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க திவான்பகதூர் ஆ.வி.பழ.சிதம்பரம் செட்டியாரால் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடிக்கல் நாட்டுவதற்காக கவர்னர் காரைக்குடி நகரச்சிவன் கோயிலின் தென்கரையில் போடப்பட்டிருந்த அலங்காரக் கொட்டகைக்கு சென்றார்.
பள்ளி முதல்வர் ஜி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் வரவேற்புரை வாசித்தார். ஆ.வி.ப.முரு.மு.முருகப்ப செட்டியார், அ.வீர.ராம.சொக்கலிங்கம் செட்டியார், சா.லெ.செட்டியப்ப செட்டியார், வெ.மு.லெ.லெட்சுமணன் செட்டியார், வயி.வீர.இராமசாமி செட்டியார், வெ.பெரி.சா.சாமிநாதன் செட்டியார், இராம.வீர.மு.வீரப்ப செட்டியார், மெ.யெ.மெ.ஆவிச்சி செட்டியார் உள்ளிட்ட நகரத்தார் பலர் கவர்னருக்கு மாலை அணிவித்து அறிமுகமாகிக் கொண்டார்கள். மேலும் அலங்காரக் கொட்டகையில் இராமநாதபுரம் மன்னர், சிவகங்கை மன்னர், பாப்பநாட்டு ஜமீன்தார், பூண்டி வாண்டையார் என பல பெரும்புள்ளிகள் இருந்தனர்.
கவர்னர் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய உடன் ஆ.வி.பழ.சிதம்பரம் செட்டியார் புத்திரரும் மேற்படி பள்ளி மாணவருமான நடேசனால் பூச்செண்டு கொடுக்கப்பட்டு மாணவர் அனைவராலும் வாழ்த்து பாடப்பட்டது.
பின்னர் இந்த பள்ளி அருகே மெ.செ.மெ.மெ.சொக்கலிங்கம் செட்டியாரால் கட்டப்பெறும் பெண்கள் பாடசாலை கட்டிட வளாகத்துக்கு சென்றார்.
மெ.செ.செ.முத்துராமன் செட்டியார் கவர்னரை வரவேற்று மாலை அணிவித்தார். மெ.செ.மெ.மெ. சொக்கலிங்கம் செட்டியாரால் வரவேற்புரை வாசிக்கப்பட்டது.
மெ.செ.சொக்கலிங்கம் செட்டியார், மெ.ப.சு.காசிச்செட்டியார், மெ.செ.அ.வெ.அண்ணாமலை செட்டியார், மெ.செ.சா.மு.சிதம்பரம் செட்டியார், அ.ரெங்கசாமி ஐயங்கார் ஆகியோர் கவர்னருக்கு மாலை அணிவித்து அறிமுகமாகிக் கொண்டார்கள்.
கட்டிடத்திற்கு கவர்னர் அடிக்கல் நாட்டிய உடன் போர்டு பெண்கள் பாடசாலை மாணவி சா.இராம.அரு. பொற்கொடியாள் பூச்செண்டு கொடுக்க சகமாணவிகளால் வாழ்த்து பாடப்பட்டது.
காரைக்குடி நகரத்தாரால் மெட்ராஸ் மருத்துவமனைக் கப்பலுக்காக கவர்னரிடம் 15,000ரூபாய் நிதி கொடுக்கப்பட்டது. மேலும் இங்கு கவர்னருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் அனைத்தும் தங்க ஜரிகை மாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டையூர்:
காரைக்குடியிலிருந்து கோட்டையூர் சென்றார். நகரத்தார் சார்பிலும் கண்டனூர் யூனியன் பஞ்சாயத்தார் சார்பிலும் இரண்டு உபச்சார பத்திரங்கள் வாசிக்கப்பட்டது. அதில் "இலங்கையில் குவாரண்டைன் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் மற்றும் அறந்தாங்கியிலிருந்து காரைக்குடிக்கு இரும்புப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கவர்னர் "இலங்கை குவாரண்டைன் குறித்து அந்த அரசாங்கத்திடம் நான் பேசி வருகிறேன் கூடிய விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் திருச்சிராப்பள்ளியில் இருந்து இராமநாதபுரம் இரும்புப்பாதை போடும்போது இங்கேயும் இரும்புப்பாதை போடப்படும்" எனக்கூறினார்.
பின்னர் நகரத்தார் சார்பில் போர்நிதிக்கு 15,000ரூபாய் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது.
பள்ளத்தூர்:
கோட்டையூரிலியிருந்து பள்ளத்தூர் சென்றார். நகரத்தார் சார்பில் வரவேற்று உபச்சார பத்திரம் வாசிக்கப்பெற்றது. அதில் "வருமான வரியை பொருத்தவரை மெட்ராஸ் மாகாணத்திலேயே இந்த ஜில்லாவில் தான் அதிக வரி செலுத்துபவர்கள் இருக்கிறார்கள், ஆனால் நகரத்தார்கள் பழைய வழக்கப்படி பனைஓலைகளில் கணக்கு எழுதி வருவதால், ஆங்கில அரசு அலுவலர் அல்லாத, இந்த கணக்குகளை சரி பார்க்கத்தெரிந்த ஒரு பெரியவரை கௌரவ பொறுப்பில் நியமிக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கவர்னர் "அரசு அலுவலர் அல்லாத ஒருவரை கணக்கு பரிசோதகராக நியமிப்பது குறித்து ஏற்கனவே நமது அரசாங்கத்தால் ஆலோசிக்கப்பட்டு கைவிடப்பட்டது. சென்ற ஆண்டு செட்டிநாட்டு கணக்கு முறைகளை நன்கு பழகிய மூன்று அரசு அலுவலர்களை நியமித்துள்ளோம். இவர்களின் செயல்பாடுகளை பார்த்து அது சரிபட்டுவருமானால் தொடர்ந்து அரசு அலுவலர் நியமிக்கப்படுவார்கள் இல்லையென்றால் ஆலோசிக்கப்படும்" என்று கவர்னர் கூறினார்.
பள்ளத்தூர் நகரத்தார் சார்பில் போர்நிதிக்கு 6000ரூபாய் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. மேலும் உ.அ.உ.க.இராமநாதன் செட்டியாரால் 1500ரூபாய் மருத்துவமனைக் கப்பலுக்காக கொடுக்கப்பட்டது.
கானாடுகாத்தான்:
காலை 10 மணி அளவில் கானாடுகாத்தான் சென்றடைந்தார் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில் நகரத்தாரால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்தியன் வங்கி நிறுவனர் திவான்பகதூர் இராமசாமி செட்டியாரால் உபச்சார பத்திரம் ஒன்று வாசிக்கப்பெற்றது. அதில் "இனி வரும் கவர்னர்கள் தங்கள் பயணத்தில் செட்டிநாட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நகரத்தாரில் ஒருவருக்கு எப்போதும் சட்டசபையில் ஒரு இடம் தர வேண்டும்" எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பின்னர் கவர்னர், ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மாளிகையில் மத்திய விருந்து உண்டு ஓய்வெடுத்தார். அந்த மாளிகை அப்போது தான் புதிதாக கட்டப்பட்டிருந்தது. அந்த மாளிகையில் தங்கிய முதல் கவர்னர் இவர் தான். பின்னர் லார்ட் வெல்லிங்டன், லார்ட் கோஷென், லார்ட் ஆர்ச்சிபால்ட் நை உள்ளிட்ட கவர்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் அந்த மாளிகையில் தங்கியுள்ளார்கள்.
மாலை 03:30 மணிக்கு கானாடுகாத்தானில் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் நிதி உதவியில் கட்டப்பெறும் "லேடி பென்ட்லாண்ட் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை"க்கு அடிக்கல் நாட்டினார். நம் நாட்டு மருத்துவத்தில் அதிக நன்மைகள் இருந்த போதிலும், மேநாட்டு நவீன வைத்திய முறைகள் விரைவில் குணப்படுத்தக்கூடியதாக இருப்பதாலும் பிரசவத்திற்கு ஏற்றதாக இருப்பதாலும் இந்த மருத்துவமனையை தாம் நிறுவ முன் வந்திருப்பதாக அண்ணாமலை செட்டியார் கூறினார்.
![]() |
| லேடி பென்ட்லாண்ட் மருத்துவமனை, கானாடுகாத்தான் |
மாலை 05:00 மணிக்கு C.V.CT.கருப்பன் செட்டியாரால் கட்டப்பெறும் "மீனாட்சி பெண்கள் பாடசாலை"க்கு அடிக்கல் நாட்டினார்.
கானாடுகாத்தான் அருகே பெரியகோயில் என்று அழைக்கப்பெறும் சௌந்தரநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலுக்கு சென்று சுற்றிப் பார்த்தார், மேலும் நகைகள் மற்றும் வாகனங்களையும் பார்த்தார். இந்தக்கோயில் ஆதியில் பாண்டிய மன்னனால் கட்டப்பெற்று காலப்போக்கில் சிதலமடைந்தபின் கானாடுகாத்தான் மற்றும் நேமத்தம்பட்டி நகரத்தார்களால் அழகிய வடிவமைப்புடன் மீண்டும் கட்டப்பட்டது.
கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட் இந்து மதத்தின் மீதும், இந்திய கலாச்சாரத்தின் மீதும், கோயில் கட்டிடக்கலை மீதும் அதீத ஆர்வம் கொண்டவர். ஆகையால் அவர் இதை சுற்றிப்பார்த்ததில் வியப்பு ஏதுமில்லை.
பின்னர் கோயில் அருகே நடத்தப்பட்ட தோட்டக் கச்சேரிக்கு சென்றார் அங்கு ரம்மியமான ஊரணி கரையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அங்கு நகரத்தார் சார்பில் திவான்பகதூர் இராமசாமி செட்டியாரால் மருத்துவமனைக் கப்பலுக்காக 10,000ரூபாய் கொடுக்கப்பட்டது.
அந்த ஊரணியில் மிதந்து கொண்டிருந்த தெப்பத்தை கண்டு மகிழ்ந்தார்.
இரவு ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மாளிகைக்கு திரும்பினார். மருத்துவமனை கப்பலுக்காக ராஜா சர் அண்ணாமலை செட்டியார் 15,000 ரூபாய்க்கான காசோலை கொடுத்தார். பிறகு ஆங்கில முறைப்படி கவர்னருக்கு விருந்து நடைபெற்றது. மாளிகையின் மேல்தலத்திலிருந்து வான வேடிக்கைகளை கண்டுகளித்தார். அங்கேயே இரவு தங்கினார். அடுத்த நாள் காலை 06:30 மணியளவில் கானாடுகாத்தானை விட்டுபுறப்பட்டார்.
கோவிலூர்:
கானாடுகாத்தானிலிருந்து மதுரை நோக்கி செல்லும் வழியில் காலையில் கோவிலூரில் சிறிது நேரம் இளைப்பாறினார். அங்கு நகரத்தாரால் கட்டப்பட்டிருக்கும் அற்புத சித்திர வேலைப்பாடுகள் உடைய கொற்றவாளீஸ்வரர் கோவிலை சுற்றிப் பார்த்தார். கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அண்ணாமலை ஞான தேசிக சுவாமிகளால் போர் நிதிக்காக கவர்னரிடம் 50 பவுன் தங்கம் கொடுக்கப்பட்டது.
மூன்று நாள் செட்டிநாட்டு பயண ஞாபகார்த்தத்துடன் கோவிலூரிலிருந்து புறப்பட்டார். காலை 11 மணிக்கு மதுரை சென்று, அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஊட்டி மாளிகைக்கு சென்றடைந்தார்.
---முற்று---
நமது செட்டிநாடு நவம்பர் 2025

.jpg)


.jpg)