Followers

Wednesday, April 24, 2024

விலாசம் மூலம் நகரத்தாரை இணைக்கும் பாலம் - "NA Tree"

 

       கரத்தாரிடம் உள்ள தனி சிறப்பம்சங்களுள் இரண்டு "விலாசம்" மற்றும் "புள்ளி".


நம் கடந்த தலைமுறையினரை அறிந்துகொள்ளவும், நாம் யார் என்று நம்மவர்களிடையே அறிமுகப்படுத்துவதும் நம் விலாசமே. நாம் பெயருக்கு முன் பயன்படுத்தும் நீளமான முன்னெழுத்து விலாசம் பிற சமூகத்தினரை பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. அதுபோல் நம் மக்கள் தொகையை அறிந்துகொள்ள பயன்படுவது புள்ளிக்கணக்கு.


பொதுவாக நம் நகரத்தார்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் சொந்தமாக இருப்போம். நம் ஊரில் ஒரு திருமண விழாவில் சந்திக்கும்போது ஒருவரை மற்றொருவரிடம் அறிமுகப்படுத்துகையில் "இவர் எங்க சின்ன ஐயா பேரனின் இரண்டாவது மாப்பிள்ளையின் தம்பி"., "இவர் எங்க மகமுண்டியின் பெரியப்பச்சி பேரன்"., "இவர் எங்க பங்காளி சேவுகன்செட்டியின் சகலை மகன்"., "இவர் எங்க பெரிய ஆயா மகள்வீட்டு பேத்தியின் மகன்" என்று ஒரேவரியில் உறவுமுறையை கூறிவிடுவர். இவை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது, காரணம் உறவினர்கள் ஒவ்வொருவரும் உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருவதால் பங்காளி வீட்டு விசேஷங்களில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தங்கள் வளவுக்குள் நடக்கும் திருமணங்களிலே மட்டும் கலந்துகொள்கின்றனர். அதிலும் பணி நிமித்தமாக சிலருக்கு கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைவதில்லை.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நவீன காலத்தில் வாழ்ந்து வரும் குழந்தைகளுக்கு தங்கள் வளவுக்குள் உள்ள உறவினர்களையே சரியாக தெ‌ரிவதில்லை. இனி வரக்கூடிய சந்ததியினரையும் இங்கு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 


உறவுமுறைகள் விட்டுப்போகாமல் மறக்காமல் இருக்க என தான் தீர்வு? நமக்கு ஒரு சந்தேகம் என்றால் வீட்டில் உள்ள பெரியவரிடம் கேட்போம் அவர் விபரமாக யார் யாருக்கு எந்த வகையில் சொந்தம் என்பதை எடுத்து கூறுவார். அவர் அதை வம்சாவளி விளக்கப்படமாக வரைந்து வைத்தால் அவர் காலத்திற்கு பிறகும் அந்த விளக்கப்படம் உதவும். இதுபோல் பங்காளிகள் அனைவருக்குமான வம்சாவளி விளக்கப்படத்தை உருவாக்கலாம். ஏற்கெனவே நம்மவர்கள் பலர் தங்கள் "வம்சாவளி விளக்கப்படம்"(Family Tree) வைத்துள்ளனர். சிலர் அதை புத்தகமாக அச்சிட்டு பங்காளிகள் ஒவ்வொருவருக்கும் ஒன்று என வழங்கியுள்ளனர். சிலர் தற்போது தான் தங்கள் முன்னெழுத்து விலாசத்தை வைத்து வம்சாவளி விளக்கப்படம் வரைந்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க பங்காளிகளை தாண்டி மற்ற உறவினர்களை அறிந்துகொள்வது எப்படி.


நீங்களும் வள்ளல் அழகப்ப செட்டியாரும் உறவினரான இருப்பீர்கள். நீங்களும் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரும் உறவினரான இருப்பீர்கள். நிச்சயம் இருப்பீர்கள். நான் முன்னரே குறிப்பிட்ட படி நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் சொந்தமாகத்தான் இருப்போம். காரணம் நாம் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட சமூகம். அதே நேரத்தில் ஒன்பது நகரக்கோவில் பிரிவுகள், அதில் உட்பிரிவுகள், புள்ளிகள், விலாசங்கள் என ஒரு நேர்த்தியான கட்டமைப்பை கொண்ட சமூகம். இந்த நேர்த்தியான கட்டமைப்பை வைத்து இருவருக்குமான உறவுமுறையை கண்டுபிடித்து விடலாம். இதை எளிதில் கண்டுபிடிக்க உதவும் புதிய கருவியாக இருக்கிறது www.natree.org என்னும் இணையதளம்.


"என் ஏ ட்ரீ" (NA Tree) என்னும் "நகரத்தார் வம்சாவளி"(Nagarathar Ancestral Tree) அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு. இதை நிறுவியவர்கள் விசுவநாதன் அருணாச்சலம், சுப்பையா சுந்தரம் மற்றும் இளங்கோ இராமநாதன். இவர்கள் மூவரும் அமெரிக்காவில் வசித்துவருகின்றனர். 

விசுவநாதன் அருணாசலம்

இளங்கோ இராமநாதன் 

சுப்பையா சுந்தரம் 


விசுவநாதன் அருணாச்சலம், தேவகோட்டை பிலிகுளத்தார் வீட்டைச்சேர்ந்தர். அமெரிக்காவில் பட்டயக் கணக்காளராக உள்ளார். "என் ஏ ட்ரீ" இணையதலம் பற்றி கூறுகையில் 

" www.natree.org என்னும் இணையதளம் முழுவதும் இலவசமானது, இலாப நோக்கமற்றது. தற்போது இது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது, வருங்காலத்தில் தமிழ்ப்படுத்தும் எண்ணமும் எங்களுக்கு உள்ளது. சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக "என் ஏ ட்ரீ" உருவாக்கத்தில் நாங்கள் மூவரும், மேலும் சிலர் ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறோம். விலாசம் மூலம் நகரத்தார் அனைவரையும் இணைப்பதே எங்கள் நோக்கம். இந்த இணையதளத்தின் உள் சென்று நீங்கள் முதலில் "காண்டாக்ட் அஸ்"-ல்(Contact us) உங்கள் பெயர், விலாசம், ஊர், கோவில் பிரிவு ஆகியவற்றோடு உங்கள் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல்(e-mail) முகவரியை தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். பின்னர் நாங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அழைப்பானை இணைப்பு(Invite link) அனுப்புவோம். அதன் மூலம் நீங்கள் புகுபதிகை(Login) செய்து கடவுச்சொல்லை(Password) வைத்துக்கொள்ளலாம். பின்னர் அதனுள்ளே வம்சாவளி வரைபடத்திற்கான இடத்தில் உங்கள் ஆத்தா-அப்பச்சி, ஐயா-அப்பத்தா, பாட்டையா-பாட்டி, அவர்களுக்கு மூதாதையர் மற்றும் உங்கள் குழந்தைகள் பெயர்களை பதிவு செய்யவேண்டும். தந்தை வழி மட்டுமல்லாது தாய் வழி முன்னோர்களையும் இங்கு பதிவு செய்ய முடியும் என்பது மற்றொரு சிறப்பு. இதுகுறித்தான விரிவான விளக்கக் காணொளி எங்கள் "NA Tree" யூடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். அதைப் பார்த்து பயன்பெற வேண்டுகிறோம்".


இளங்கோ இராமநாதன், சொந்த ஊர் மதகுபட்டி. அமெரிக்காவில் NASA நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நகரத்தார் விலாசங்களை சேகரித்து வருகிறார் என் ஏ ட்ரீ இணையதளம் பற்றி கூறுகையில்

"இந்த இணையதளம் நகரத்தார்களுக்கு நான்கு வகையில் பயன் அளிக்கக்கூடியது...

ஒன்று : 'வம்சாவளி வரைபடம்'(Family Tree) இதில் நாம் அனைவரும் நமது குடும்பத்தினர் மற்றும் மூதாதையர் பெயர்களை பதிவு செய்வது மூலம் நம் வருங்கால சந்ததியினர் பயன் பெறுவர். இங்கேயுள்ள Find Relation பகுதியில் ஒரு நகரத்தாருக்கும் மற்றொரு நகரத்தாருக்கும் உள்ள உறவுமுறையை எளிமையாக கண்டு பிடிக்கலாம். இதன் இணைநிறுவனர்களான நாங்கள் மூவரும் எங்கள் குடும்ப விலாசத்தின் மூலம் வம்சாவளி வரைபடத்தை உருவாக்கியுள்ளோம். இதன் பின்னர் தான் நாங்கள் மூவரும் எந்த வகையில் உறவினர்கள் என்பது அறிந்துகொண்டோம். சமீபத்தில் நான், இதிலுள்ள Find Relation பகுதிக்கு சென்று எனது பேத்திக்கும் சுப்பையா சுந்தரம் மகளுக்குமான உறவை விளக்கப்படமாக எடுத்து பேத்தியிடம் காட்டினேன் அவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோனாள். இது போல் நம் அனைவரின் விலாசமும் இங்கு இணையும் போது யார் யாருக்கு எந்த வகையில் சொந்தம் என்பதை அறிந்துவிடலாம். 

இரண்டு : இதை நீங்கள் முகநூல் போலவும் பயன் படுத்தலாம். நம் நகரத்தார் தொடர்பான அரிய புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை பதிவு செய்யலாம்.

மூன்று : NADU(Nagarathar Data Unification) என்னும் 'நகரத்தார் ஒருங்கிணைந்த தகவல் மையம்' இதில் நம் நகரத்தார் புள்ளிகள் விபரம் ஊர் வாரியாக கோவில் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரத்தார் புள்ளிகள் தொடர்பான விபரங்களை தெரிந்துகொள்ளலாம். இது 2020-ஆம் ஆண்டு கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் நல்லாசியுடன் தொடங்கப்பெற்றது. "நகரத்தார் நலன்" அமைப்பினரின் உதவியுடன் இதுவரை 31 ஊர் நகரத்தார் புள்ளிகள் விபரங்களை பதிவு செய்துள்ளோம் விரைவில் மீதமுள்ள ஊர் புள்ளிகளையும் பதிவு செய்வோம். மேற்படி மூன்றையும் காண ஒருவர் நிச்சயம் புகுபதிகை(login) செய்ய வேண்டும். நகரத்தார் மட்டுமே புகுபதிகை செய்யமுடியும். இங்கு உள்ள அனைத்து தகவல்களும் மிகவும் பாதுகாப்பானது.

நான்கு : 'நகரத்தார் திருப்பணிகள்' 1953-ஆம் ஆண்டு வந்த 'நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு' புத்தகத்தில் உள்ள திருப்பணி தகவல்களை இங்கு டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதை மட்டும் புகுபதிகை செய்யாமல் அனைவரும் பார்க்க முடியும். நகரத்தாரால் திருப்பணி செய்யப்பெற்ற கோவில்கள், சமய மற்றும் கல்வி நிறுவனங்கள் அதன் இருப்பிடம்(Google Map Location), திருப்பணி செய்யப்பெற்ற ஆண்டு, திருப்பணி செய்தோர் பெயர், ஊர், விலாசம் என அனைத்தும் தெள்ளத் தெளிவாக இங்கே காணலாம். மிகுந்த சவாலான இதை பதிவேற்ற தேவகோட்டையை சேர்ந்த பழ.கைலாஷ் எங்களுக்கு உதவிகரமாக இருந்தார்."


மேலும் "என் ஏ ட்ரீ" உடனான தனது பயணத்தை திரு.இளங்கோ கூறுகையில் 

 "பொதுவாக நம்மவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் கோவில் திருப்பணி, கல்வி அறப்பணி என்று தங்களை ஈடுபடுத்திக்கொள்வது வழக்கம். அதையே நான் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு 'என் ஏ ட்ரீ'-இல் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றேன். இதுவும் ஒரு திருப்பணி தான். அந்த காலத்தில் கோவில்கள் கட்டியது அவரவர் வணங்குவதற்காக மட்டுமல்ல பிற்காலத்தில் வரக்கூடிய மக்கள் வழிபடுவதற்காகவும் தான். அதுபோல தான் இந்தப் பணியும்"


சுப்பையா சுந்தரம் தேவகோட்டை நா.லெ.வீர(N.L.VR) வீட்டைச்சேர்ந்தர். அமெரிக்காவில் HYCU Inc. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். என் ஏ ட்ரீ உருவான விதம் பற்றி கூறுகையி்ல் 

" சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நாள் மாலை நானும் விஸ்வநாதன் அருணாச்சலமும் நம் நகரத்தார் விலாசங்கள் பற்றி பேசிக்கோட்டிருந்தோம் அன்று உதித்தது தான் இந்த "என்

ஏ ட்ரீ" யோசனை. நூறு ஆண்டுகளுக்கு முன் விலாசம் மூலமே ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். விலாசம் மூலமே வியாபாரம் செய்துவந்தனர். அன்றைவிட இன்று நம்மவர்கள் நன்றாக படித்துள்ளனர், உலகில் பல்வேறு இடங்களில் உள்ளனர் ஆனால் விலாசம் பற்றி பலரும் அறியாமல் உள்ளனர். வளரும் இளம் தலைமுறையினர் நிச்சயமாக தங்கள் விலாசங்களை அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் உருவானது தான் 'என் ஏ ட்ரீ'. இதில் பின்னர் எங்கள் இருவருடன் இளங்கோ அவர்களும் இணைந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் 'என் ஏ ட்ரீ' இணையதளத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞானதேசிக சுவாமிகள் முன்னிலையில் "என் ஏ ட்ரீ 2.0"(NA Tree 2.0)-வை சில திருத்தங்களுடன் வெளியிட்டோம். என்.ஏ ட்ரீ உருவானதில் பலருக்கு பங்கு உள்ளது, முன்னர் என் ஏ ட்ரீ-யில் வழிகாட்டியாக இருந்த மறைந்த ஆய்வாளர் எஸ்.முத்தையா அவர்கள்., தற்போது வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர் முத்துக்கருப்பன் அவர்கள்., இந்த மென்பொருளை உருவாக்கித்தந்த காரைக்குடி WBCமென்பொருள் ஆய்வகம் பழனியப்பன் இராமையா மற்றும் நகரத்தார் நலன் அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகள்".



தற்போது நாம் என்ன செய்ய வேண்டும்? www.natree.org இணையதலத்திற்கு சென்று நமது பெயர், விலாசம், ஊர், கோவில் பிரிவு ஆகியவற்றோடு நமது தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சலை(e-mail) தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். பின்னர் நம் மின்னஞ்சலுக்கு அழைப்பானை இணைப்பு(Invite link) வரும். அதன் மூலம் நாம் புகுபதிகை(Login) செய்து கடவுச்சொல்லை(Password) வைத்துக்கொள்ளலாம். 

இதற்கு கண்ணி கூட தேவையில்லை ஸ்மாட் அழைபேசி இருந்தால் போதும். கண்ணி மற்றும் அழைபேசி பயன் படுத்த தெரியாதவர்கள் அல்லது வயதானவர்கள் தங்கள் மகன்,மகள் அல்லது பேரன் பேத்திகள் மூலம் இதை செய்யலாம். இதில் நம் வம்சாவளி படத்தை பதிவுசெய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். இது குறித்தான விளக்கக் காணொளி யூடியூப்-ல் உள்ளது. இதில் ஏதேனும் குழப்பம், சந்தேகம் இருந்தால் info@natree.org என்னும் மின்னஞ்சல் வழியாக இவர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதில் நம் விலாசத்தை மட்டும் பதிவேற்றம் செய்து விட்டுவிடாமல் இந்த இணையதளம் குறித்து மற்றவர்களிடமும் பகிறவேண்டிது நம் கடமை.

- பழ.கைலாஷ் 

ஏப்ர‌ல் 2024











Friday, April 19, 2024

இஸ்லாமியர் பாடிய முருகன் பாடல்.

எங்கள் மூதாதையரான தேவகோட்டை தி.இராம.பழனியப்ப செட்டியார், குழந்தை பாக்கியம் வேண்டி பல புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபட்டுவந்துள்ளார், ஒருமுறை மேலக்கொடுமளூர் பற்றி அறிந்து, அங்கு சென்று முருகனை வழிபட்டுள்ளார். அப்போது பதிகம் பாட எண்ணிய பழனியப்ப செட்டியார் சேது சமஸ்தான கவிஞர் ஜவாது புலவரை அனுகியுள்ளார். இஸ்லாமியரான ஜவாது புலவர் அவர்கள், பழனியப்ப செட்டியாரின் விருப்பத்திற்கிணங்க கொடுமளூர் குமரன் பெயரில் "கொடுமளூர் குமரகுருபர முருகன் பதிகம்" எனும் செய்யுளை படைத்துள்ளார். அதனை கொடுமளூர் குமரன் சன்னிதியில் பாடிய பழனியப்ப செட்டியாருக்கு ஆறுமுகன் அருளால் ஆறு ஆண் குழந்தைகள்  பிறந்தனர். அவரின் வம்சாவளியினர் இன்று தேவகோட்டையில் நாங்கள் நானூறுக்கும் அதிகமான புள்ளிகள்(குடும்பங்கள்) வாழ்ந்துவருகிறோம்.

ஜவாது புலவர் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழில்(The Hindu 19/04/24) வந்த கட்டுரையை இங்கு பகிர்ந்துள்ளேன்.

- பழ.கைலாஷ்

துதிக்கையில்லா கரிமுகன்

  நடுவாற்று மருதம் பிள்ளையார் சி வகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர் கண்டரமாணிக்கம் . இவ்வூரையடுத்த கொங்கரத்தியில் மணிமுத்தாற்றின் ...