Followers

Wednesday, March 31, 2021

நகரத்தார் கோயில் திருப்பணிகள் - ஓர் ஆய்வு


கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி - தமிழ்த்துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் (19.03.2021&20.03.2021) "நகரத்தார் - வாழ்வும் பணியும்" என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு, "நகரத்தார் கோயில் திருப்பணிகள்" என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். அக்கட்டுரையை இங்கே பதிவிட்டுள்ளேன். படித்துப்பார்த்து தங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். 
----------×----------

நகரத்தார் கோயில் திருப்பணிகள்
 
-பழ.கைலாஷ் 

1. முன்னுரை:
பல கோடி மக்கள் வாழும் இந்த பாரத நாட்டில், 'நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்' என்பவர்கள் சிறுபான்மை சமுதாயத்தினரே. இருப்பினும் அவர்தம் கோயில் திருப்பணிகளை கண்டு, பாரத நாடே அவர்களை மெச்சுகிறது. நகரத்தாரின் கோயில் திருப்பணிகளை பற்றி இக்கட்டுரை மூலம் ஆராய்வதே நோக்கம். 

2. நாட்டுக்கோட்டை நகரத்தார்:
'நாட்டுக்கோட்டை நகரத்தார்' என்றும் 'நாட்டுக்கோட்டை செட்டியார்' என்றும் அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாட்டில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 76 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 'நகரத்தார்' என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களின் கோயில் திருப்பணிகளை பற்றி அறிவதற்கு முன் இவர்கள் வரலாற்றை சற்று அறிவது அவசியம். 

பாடுவார் முத்தப்பர் எழுதிய 'நகரவாழ்த்து', 'திருமுகவிலாசம்' ஆகிய நூல்களிலும் 'ஏழு நகரத்தார் பேரில் பள்ளு', 'ஏழு நகரத்தார் பேரில் குழுவநாடகம்', ஆகிய சிற்றிலக்கியங்களிலும் பழனித் தலத்தில் இவர்கள் செய்த அறங்களை விவரிக்கும் நகரத்தார் அறப்பட்டயங்களிலும் இவர்களை பற்றிய வரலாற்று செய்திகள் காணப்படுகின்றன. மேலும் பிற்காலத்தில் தேவகோட்டை வீர.லெ.சிந்நயச் செட்டியாரின் குறிப்புகளை கொண்டு தஞ்சாவூர் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரால் இயற்றப்பட்டு கி.பி1894இல் வெளியான 'தனவைசியராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம்' எனும் புத்தகத்திலும்[1] நகரத்தார் வரலாறு விரிவாக சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் நகரத்தார் வரலாறு ஏறக்குறைய ஒரே மாதிரியாகப் பின்வருமாறு காணப்படுகிறது "நகரத்தார்கள் ஆதியில் நாகநாட்டில் சாந்தியாபுரி எனும் நகரத்தில் இரத்தின வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார்கள், பிறகு அந்நாட்டு அரசனின் கொடுமையால் கலியுகம் 2204ஆம் ஆண்டில் தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகரில் குடியேறினார்கள். அங்கு நெடுங்காலம் வாழ்ந்தார்கள் காஞ்சியை ஆண்ட பிரதாபராஜன் என்னும் மன்னனின் கொடுமையால் கலியுகம் 2312இல் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் குடியேறினார்கள். இங்கு சிம்மக்கொடியுடன் மன் இணை மரியாதைகளோடு மன்னனுக்கு மகுடம் சூட்டும் உரிமை பெற்றவர்களாக மகுட தனவைசியராக வாழ்ந்து வந்தார்கள். சோழநாட்டை ஆண்ட பூவந்தி சோழன் நகரத்தார் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் தங்கள் ஆண் வாரிசுகளை மட்டும் விட்டு விட்டு. அனைத்து நகரத்தார்களும் தத்தம் மனைவியருடன் உயிர் துறந்தனர். நகரத்தார்களுடைய ஆண் பிள்ளைகள் வளர்ந்து ராஜபூஷன சோழனுக்கு முடிசூட்டும் பொருட்டு தங்கள் இனத்தில் பெண்கள் இல்லாததால் வேளாளப் பெண்களை மணந்து கொண்டார்கள். பிறகு தன் நாட்டுக்கு நற்குடி வேண்டும் என்று குலசேகர சவுந்திரபாண்டிய மன்னன் சோழனிடம் கேட்க கலியுகம் 3808இல் பாண்டிய நாடு வந்து வெள்ளாற்றங்கரைக்கு தெற்கே ஓம்காரக்குடியில் தங்கினார்கள். பாண்டிய மன்னன் இவர்களுக்கு இளையாற்றங்குடி கோயிலை வழங்கினான். பின்னர் ஏழு கோயில் பிரிவினராயினர். காலப்போக்கில் ஒன்பது கோயில் பிரிவினராயினர். ஆதிகாலம் தொட்டு சைவ சமயத்தை பின்பற்ற கூடியவர்களாகவும், சிவதர்மம் செய்து வருபவர்களாகவும் விளங்குகின்றனர் " 

'அபிதான சிந்தாமணி' நகரத்தார்களை பற்றி கூறுகையில் "சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரை, திருக்காளத்தி முதலிய பல சிவாலயங்களைப் புதுக்கிய திருப்பணி வியக்கத் தக்கது இவர்களைத் தமிழ்நாட்டரசின் மாறிய பிறப்பெனவே புகழலாம். இவர்கள் தேச,மத, கல்வியின் பொருட்டு ஏற்படுத்தியுள்ள கலாசாலைகள் இவர்களுடைய புண்ணிய நிலைமைக்கு அறிகுறியாம். இவர்கள் உலக நன்றி எக்காலத்தும் மறக்கத் தக்கதன்று " என்று கூறுகிறது.[2] 

"பெரிய பெரிய அறச் செயல்களை ஒரு சமூகத்தினருள் யாராவது ஓரிருவர் செய்திருக்கிறார்கள் ஆனால் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருமே அறப்பணிகளை தனியாகவோ, குடும்பமாகவோ, கூட்டாகவோ செய்திருப்பதை நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில் மட்டுமே காணலாம்" என்கிறார் நகரத்தாரியல் ஆய்வாளர் முனைவர் நா.வள்ளி.[3]

3. திருக்கோயில் திருப்பணியில் ஈடுபட காரணம்:
பல விதமான அறப்பணிகளில் நகரத்தார்கள் ஈடுபட்டிருந்தாலும் அதிக அளவில் கோயில் திருப்பணிகளே செய்துள்ளார்கள். இந்து சமயத்தின் தூண்களாக விளங்குபவை கோயில்களே. நகரத்தார்கள் இந்து சமயத்தின் பாதுகாவலராக இருந்ததை பின்வரும் கும்மிப் பாடல் காட்டுகிறது.
"வேறு மதத்தில் விழாதபடி நம்மை 
வேலியைப் போல் நின்று கோலிடுவார் 
நீட்ட மேனியர் செல்வக் குபேரர்கள் 
நீதி வணிகரைப் பாருங்கடி"[4] 

எனவே தான் "கோயில் பழுதானால் கூப்பிடு செட்டியாரை" என்பது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பெறும் பழமொழியாகும். 

நகரத்தார்கள் பாண்டிய நாட்டிற்கு வந்தடைந்த கி.பி 8ஆம் நூற்றாண்டு முதலே பல கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தாலும். கி.பி 15ஆம் நூற்றாண்டு முதல் நகரத்தார் செய்த கோயில் திருப்பணிகள் குறித்த கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றிளுள் கி.பி 18ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சுமார் 200 ஆண்டு காலத்தில் நகரத்தார் செய்த கோயில் திருப்பணிகளே மிகுதி. 

பாட்டனார் நந்தவனம் அமைத்து, பாடசாலை கட்டி, ஊருணி வெட்டி, கோயில்கள் கட்டி, தடையின்றி உணவு படைத்த தருமங்களைக் கூறி அதை தன் மகனும் தொடர்ந்திட இளம் வயதிலேயே தாலாட்டின் மூலம் மனதில் பதிய வைக்க முயலும் ஆர்வம் நகரத்தார் குல பெண்களான ஆச்சிமார்களிடையே காணப்படுகிறது. 

"நந்தவனம் கண்திறந்து 
நாலுவகை பூவெடுத்து 
பூ எடுத்து பூஜை பண்ணும் 
புண்ணியவார் பேரனோ! 

மலர் எடுத்து பூஜை பண்ணும் 
மகாராஜா பேரனோ!
அரும்பு எடுத்து பூஜை பண்ணும் 
அர்சுணவார் பேரனோ! 

வித்தகசாலைக் கட்டும் 
வீமருட பேரனோ!
பாடகசாலை கட்டும் 
பாண்டியனார் பேரனோ! 

குளிக்க குளம் வெட்டி
கும்பிடவும் கோயில் கட்டி 
அசராமல் அன்னமிடும் 
அர்சுணவார் பேரனோ!"[5] 

காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சுவாமிகள் "ஒரு நாட்டிற்கு கோட்டைக் காப்பு வீரர்கள் இருப்பதைப்போல இந்து மதம் என்னும் கோட்டைக்குத் தனவணிக நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோட்டை காப்பு வீரர்களாக இருந்து வருகிறார்கள்" என்று நகரத்தார்களை பாராட்டியுள்ளார்.[6] 

கி.பி 19ஆம் நூற்றாண்டில் நகரத்தார்களை அதிக அளவில் கோயில் திருப்பணிகளில் ஈடுபடுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மூவர். அவர்கள் கோவிலூர் ஆண்டவர் 'ஸ்ரீலஸ்ரீ முத்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள்', மதுரை குட்டைய சுவாமிகள் மடத்தைச் சேர்ந்த 'மெய்யப்ப சுவாமிகள்', கோவிலூர் மடாலயத்தின் ஐந்தாவது ஆதீனகர்த்தரான திருக்களர் ஆண்டவர் என்கிற 'ஸ்ரீலஸ்ரீ வீரசேகர ஞானதேசிக சுவாமிகள்' ஆவர். 

நகரத்தார்கள் தங்களுடைய ஒன்பது கோயில்களைப் பேணியும், பாடல் பெற்ற பல தலங்களைப் புதுப்பித்தும், புதிய கோயிகள் பல கட்டியும் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டதற்கு. அவர்கள் சிவனை மறவாத சிந்தையர்களாக இருந்ததை. நாம் பிரதான காரணமாக கருதலாம். 

4. கோயில் இல்லாமல் ஊர் இல்லை:
சங்க காலத்தில் இயற்கையை மட்டுமே வழிபட்ட மக்கள், பின்னர் ஐவகை நிலங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வந்தனர். குறிஞ்சி நிலத்திற்கு முருகனையும், முல்லை நிலத்திற்கு திருமாலையும், பாலை நிலத்திற்குக் கொற்றவையையும், மருத நிலத்திற்கு இந்திரனையும், நெய்தல் நிலத்திற்கு வருணனையும் வழிபட்டனர். உருவ வழிபாடு விரிவடைந்த பிறகு தமிழ்நாட்டை ஆண்ட அரசர்கள் கோயில்களை விரிவுபடுத்தியும் வழிபாட்டு முறைகளை வகுத்தும் செம்மைப்படுத்தினர். செங்கலாலும் மரத்தாலும் கோயில் கட்டப்பட்டு வந்த காலத்தில் முதன் முதலில் பல்லவர்கள் குடைவரைக் கோயில்களை உருவாக்கினர், பின்னர் ஒற்றை கற்றளி கோயிகள், கட்டக் கோயில்கள் போன்ற புதிய வடிவிலான கோயில்களைக் கட்டினர். இவர்களுக்கு பின் சோழர்கள் மாபெரும் கோயிலைக்கட்டியும் வின்னை முட்டும் விமானங்களை எழுப்பியும் கோயில்களுக்கு என பல கிராமங்களை வழங்கி வந்தனர் . இவர்களுக்கு பின் பாண்டியர்களும் மாபெரும் கோயில்களை கட்டி முகப்பு வாயிலில் வானுயர கோபுரங்கள் எழுப்பிக் கோயில் கலைப்பாணியில் புதிய முறையைப் புகுத்தினர். இவர்களுக்கு பிறகு வந்த விஜயநகரர், நாயக்கர், குறு நில மன்னர்கள் ஆகியோர் மூவேந்தர்கள் கட்டிய பல கோயில்களை விரிவுபடுத்தியும் பல்வேறு மண்டபங்களை புதிதாக கட்டியும் புதுப்பித்தும் வந்தனர். 

இவர்களுக்கு பிறகு, 'நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்', மன்னர்கள் கட்டிய பலநூறு கோயில்களை புதுப்பித்தும் சிதிலமடைந்திருந்த கோயில்களை பழமை மாறாமல் பிரித்து புதிய வெள்ளைக்கல்லால் மறு கட்டுமானம் செய்தும், புதிய கோயிகள் பல கட்டியும் இறைவனுக்கு பல திருப்பணிகள் செய்தும் மக்களிடயே இறை பக்தியை வளர்த்துவந்துள்ளனர். மேலும் "கோவில் இல்லா ஊரில் குடியிருக்காதே" என்ற ஔவையின் மொழிக்கேற்ப, தாங்கள் வசிக்கும் ஊர்கள் தோறும் புதிதாக பல கோயில்களை கட்டியுள்ளனர். 

செட்டிநாட்டில் உள்ள 76 ஊர்களிலும் கோயில்கள் உள்ளன. இவற்றுள் 43 ஊர்களில் அவ்வூர் நகரத்தார்கள் பொதுவில் சிவன் கோயில்களை கட்டியுள்ளனர், அவை நகரச் சிவன் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. 10 ஊர்களில் தனிப்பட்ட நகரத்தார் குடும்பத்தினர் 11 சிவன் கோயில்களை கட்டியுள்ளனர். 3 ஊர்களில் நகரத்தார்கள் பொதுவிலும் 15 ஊர்களில் தனிப்பட்ட நகரத்தார் குடும்பத்தினர் 20 பெருமாள் கோயில்களைக் கட்டியுள்ளனர். இவைதவிர செட்டிநாடு முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களையும் முருகன் கோயில்களையும் இருநூறுக்கும் மேற்பட்ட பிள்ளையார் கோயில்களையும் கட்டியுள்ளனர் மற்றும் தங்கள் ஊர்களில் சிதிலமடைந்திருந்த பெருவாரியான புராதன கோயில்களை புதுப்பித்தும், பழமை குன்றாமல் மறு கட்டுமானம் செய்தும் தினசரி பூஜைகள் நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.[7] 

5. ஊர்தோறும் ஊருணிகள்:
நீரின்றி அமையாது உலகு, எனவேதான் வள்ளுவ பெருந்தகை மழைநீரை அமிழ்தம் எனப் போற்றுகிறார். உலகிலேயே அதிகமாக ஊருணிகள் செட்டிநாட்டு பகுதியில் தான் அமைந்துள்ளது. இவை ஊராரால் உண்ணப்படும் குடிநீரை வழங்குவதால் ஊருணி என்று பெயர் பெற்றன. செட்டிநாட்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்து வரும் 76 ஊர்களிலும், அதை சுற்றி உள்ள பல ஊர்களிலும், செட்டிநாட்டு பகுதியில் இதற்கு முன்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்தவந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், பாடல் பெற்ற தலங்கள் பலவற்றிலும், புராதன தலங்கள் பலவற்றிலும் நகரத்தார்களால் ஆயிரக்கணக்கான ஊருணிகள் வெட்டப்பட்டுள்ளது. 

"ஊருணிகள் கூபமிவை உண்டுபண்ணி மிக்கதர்மம்
தாரணியில் செய்திட்ட சத்புருஷர்"
என நகரத்தார்களின் ஊருணி திருப்பணியைத் தமது திருமுக விலாசத்தில் பாடுவார் முத்தப்பர் பாராட்டியுள்ளார்.[8] 

நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முதல் கோயிலான இளையாற்றங்குடியில் உள்ள ஏழு பிரிவினரும் தமக்கென ஒரு ஊருணியை ஏற்படுத்தியுள்ளனர். அவை பிரளய ஊருணி, மணிக்குளம், செங்குளம், கல்யாணதீர்த்தம் எனும் மண்குளம், பட்டணசாமி ஊருணி, பிடாரிகுளம், கருவேலம்பள்ளம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. பொதுவாக நகரத்தார்களால் அமைக்கப்படும் ஊருணிகளின் கட்டமைப்பு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
ஊருணியை வெட்டி அப்படியே மண்ணூருணியாக விட்டுவிடாமல் அதைச் சுற்றி வெள்ளைக்கல் அல்லது செம்பராங்கலால் மதில்சுவர் எழுப்பி படித்துறைகள் கட்டுவர். யாளியின் வாய் போன்று அமைக்கப்பட்டிருக்கும் உள்வாய்ப் பகுதி வழியாக ஊருணியை சுற்றியுள்ள பூமியின் மீது விழும் மழைநீரை ஊருணியை வந்து சேரும் வண்ணம் அமைத்திருப்பர். சுற்று மதில் சுவரில் கார்த்திகையின் போது தீபங்கள் ஏற்றிவைக்க அழகிய விளக்கு மாடங்கள் அமைத்திருப்பர். அருகில் பிள்ளையார், முருகன், நடராஜர், கருப்பர் போன்ற தெய்வங்களை சிறிய மாடங்களில் செதுக்கியிருப்பர். ஒரு ஊருணியின் நீர் நிரம்பியவுடன் அருகேயுள்ள நீர்நிலைகளுக்கு உபரிநீர் செல்ல மடை அமைத்திருப்பர். 

மன்னர் திருமலை நாயக்கரால் கி.பி1645 இல் கட்டப்பட்ட மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமும் அதன் மையத்தில் உள்ள நீராழிமண்டபமும் காலப்போக்கில் சிதிலமடைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்தை கி.பி1860கள் வாக்கில் வயிநாகரம் நாகப்ப செட்டியார் சீர்படுத்தி, நீராழி மண்டபத்தை பிரித்து திருத்தியுள்ளார்[9] மற்றும் இந்த தெப்பக்குளத்தைப் பார்த்து வியந்த தேவகோட்டை ஜமீன்தார் அள.அரு.இராம.அருணாசலம் செட்டியார், இதே போல் தம் குடும்பத்தார் திருப்பணி செய்து வரும் காளையார் கோயிலில் உள்ள ஆனைமடு தெப்பக்குளத்தின் நடுவே அழகுற ஒரு நீராழி மண்டபத்தை கட்டியுள்ளார்.[10] தமிழகத்தின் மிகப் பெரிய குளங்களுள் ஒன்றான திருவாரூர் கமலாலய திருக்குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தை சக்கந்தி உல.க.கண குடும்பத்தார் மறு கட்டுமானம் செய்துள்ளனர்.[11] மேலும் கோவிலூர் தெப்பக்குள நீராழி மண்டபம், அரிமழம் பொற்கொடையான் ஊருணி நீராழி மண்டபம் ஆகியன நகரத்தார் ஊருணி கட்டிடக் கலைக்கு சான்றாக திகழ்கின்றன. 

நகரத்தார்களால் அமைக்கப்படும் ஊருணிகளை சார்ந்து உறுதியாக ஒரு பிள்ளையார் கோயில் கட்டப்பட்டிருக்கும். சிவன் கோயில் அல்லது பெருமாள் கோயிலை சார்ந்து ஊருணி அமைந்திருந்தாலும், ஊருணிக்கென தனி பிள்ளையார் கோயிலை கட்டியிருப்பர். இதுபோன்று ஊருணிகள் அமைப்பதன் வாயிலாகவும் கோயில் திருப்பணி செய்து மக்களிடையே இறைபக்தியை வளர்த்து வந்துள்ளனர். 

இவ்வாறு "கோயில் சார்ந்த ஊருணி - ஊருணி சார்ந்த கோயில்" என்பது நகரத்தார்களின் இறைபக்தியில் எழுந்த சமுதாய சிந்தனையை குறிக்கிறது. 

6. பாடல் பெற்ற தலங்களில் நகரத்தார் திருப்பணிகள்:
நகரத்தார் கோயில் திருப்பணிகள் குறித்து கவியரசு கண்ணதாசன் 'இன்று விழித்துவிட்டோம்' என்கிற கவிதையில் பின்வருமாறு கூறுகிறார் 

"வண்ணக் கலைவளர்த்தோம்; வரலாறே நாம் சமைத்தோம்;
எண்ணத் தொலையாத எத்தனையோ கோயில்களை(க்)
கண்ணில் இருத்திக் கலையோடு காத்துவந்தோம்
காசி நகரத்துக் கடவுளரைப் பேச வைத்தால்
காவிரிப்பூம் பட்டினத்தார் கலை உணர்ச்சி தோன்ற வரும்!
மாசற்ற பொன்னும் மணிவயிரம் இரத்தினமும்
தூசென்று எண்ணி தூக்கி கொடுத்துவந்தோம்
பண்டைத் தமிழ் மரபைப் பண்போடு காத்துவந்தோம்
அண்டை நிலங்களில்நம் ஆண்டவனை ஊன்றிவைத்தோம்
காசி விசாலாட்சி கவிமதுரை மீனாட்சி
கட்டியுள்ள ஆடைகளும் கழுத்திலுள்ள பொன்னகையும்
சுற்றியுள்ள மண்டபமும் தூக்கிவரும் வாகனமும்
முற்றும் அழியாத மொட்டை கோபுரத்தழகும்
அண்ணாமலையில் அமர்ந்து இருக்கும் பேரழகும்
ஆக்கிக் கொடுத்தவர்கள் அமர்ந்திருந்து காத்தவர்கள்
நாட்டுகோட்டை வளர்த்த நகரத்தார் அல்லேமோ!"[12] 

காசி முதல் இராமேஸ்வரம் வரை புகழ்பெற்ற கோயில்கள், நாயன்மார்கள் - ஆழ்வார்களால் பாடல் பெற்ற திருக்கோயில்கள் பெரும்பாலானவற்றில் நகரத்தார்கள் திருப்பணி செய்துள்ளார்கள். இவ்வகையில் திருத்தலங்களில் நகரத்தார் செய்துள்ள திருப்பணிகள் குறித்த விபரமும் அவற்றுக்காகச் செலவிடப்பட்ட பொருள் அளவும் வயிநாகரம் அ.இராமநாதன் செட்டியாரால் தொகுக்கப்பட்டு பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாரால் திருத்தப்படு 'நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு' என்ற பெயரில் மேயர் இராமநாதன் செட்டியாரால் 1953இல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் செட்டிநாட்டில் நகரத்தார்கள் வாழ்கின்ற ஊர்களிலும், அண்மையில் உள்ள தலங்களிலும், வடமாநிலங்களிலும், சோழநாட்டில் 78 தலங்களிலும், பாண்டிய நாட்டில் 20 தலங்களிலும், கொங்கு நாட்டில் 9 தலங்களிலும், நடு நாடு, தொண்டை நாட்டுத் தலங்கள் ஒவ்வொன்றிலும் 11 இடங்களிலும் என நகரத்தார் திருப்பணி செய்த கோயில்கள் குறித்த விபரங்கள் உள்ளன மற்றும் 1953ஆம் ஆண்டின் கணக்குப்படி நகரத்தார்கள் திருப்பணிக்காக செலவு செய்த தொகை ஏறத்தாழ 10,64,40,700 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[13] 

பாடல் பெற்ற தலங்கள் பலவற்றில் திருப்பணி செய்ய சமய உணர்வே காரணம். ஏதொ பெருமைக்காக தங்கள் பெயரை ஊரார் அறியவேண்டும் என்ற நோக்கில் செய்யவில்லை. இவர்கள் திருப்பணி செய்த பெரும்பாலான தலங்களில் கல்வெட்டுகளே வைத்துக்கொள்ளவில்லை. தாங்கள் செய்யும் திருப்பணி கடவுளுக்கு தெரிந்தால் போதும், ஊரார் அறிய வேண்டியதில்லை என்று எண்ணியுள்ளனர். ஒவ்வொரு நகரத்தார் குடும்பத்திற்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். அதில் சிலருக்கு தாங்கள் திருப்பணி செய்த கோயில் உள்ள ஊரில் பெயரே அமைந்திருக்கும் உதாரணமாக திருச்சுழியல் கோயிலில் திருப்பணி செய்த குடும்பத்தார் 'திருச்சுழியார் வீடு' என்றும் திருப்புணவாசலில் திருப்பணி செய்தவர்கள் திருப்புணவாசலார் வீடு என்றும் அழைக்கப்படுகின்றனர். 

7. நகரத்தார் கோயிற் கலைப்பாணி:
பல்லவர், சோழர், பாண்டியர், போன்ற அரச மரபினரால் தோற்றுவிக்கப்பட்ட கோயிற் கலைமரபுகள். பல்லவர் கலைப்பாணி, சோழர் கலைப்பாணி, பாண்டியர் கலைப்பாணி என அழைக்கப்படுகிறது. பிற்காலப் பாண்டியரை தொடர்ந்து வந்த விஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் பண்டைக்காலக் கோயில்கள் விரிவாக்கம் பெற்றன. குதிரை மண்டபங்கள், கல்யாண மண்டபங்கள், நூறுகால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எனப் பல பகுதியாகக் கோயில்கள் விரிவாக்கம் பெற்றன. இவர்களுக்கு பின், 'மன்னர் பின்னோர்' எனப் புகழாரம் சூட்டப்படும் நகரத்தார் நம்நாட்டில் கங்கைக்கரை வரை பல பகுதிகளையும் வாணிபம் காரணமாகச் சுற்றிப் பார்த்தபோது பல்வேறு வடநாட்டுக் கோயில் அமைப்புகளையும் கூர்ந்து நோக்கியுள்ளனர். பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் காலச் சிற்பக்கலைப் பாணிகளில் குறைகளை விடுத்து நிறைகளை ஏற்றுக்கொண்டு தமக்கெனத் தனிப்பாணியை வகுத்துக்கொண்டு கோயில்களை கட்டியுள்ளனர்.[14] இது 'நகரத்தார் கோயிற் கலைப்பாணி' என்று அழைக்கப்படுகிறது. 

நகரத்தார் கோயிகளும், சிற்பங்களும் செட்டிநாட்டுச் சிற்பிகளால் உருவாக்கப்பட்டவை. இவர்கள் பிள்ளையார்பட்டி, அருணாசலபுரம், தேவகோட்டை, எழுவங்கோட்டை, வைரவன்பட்டி ஆகிய ஊர்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள். நகரத்தார் கோயில் சிற்பங்கள் வாஸ்து சாஸ்திரம், மயமதம், மானசாரம், சகளாதிகாரம், காசியப சிற்ப சாஸ்திரம், ஸ்ரீ தத்துவநிதி ஆகிய சிற்ப நூல்கள் கூறுகின்ற இலக்கணப்படி காணப்படுகின்றன. 

கோயிலுள் நுழைந்ததும் கொடிமரம், நந்திமேடை, பலிபீடம், முகமண்டபம், பள்ளப் பிரகாரம், திருமாளிகை திருச்சுற்று, பரிவார தெய்வங்கள் சன்னதிகள், வாகன அறை, உற்சவர் அறை, கருவூலம், யாகசாலை, மடைப்பள்ளி, மலர்மேடை, கோயில் கிணறு, அலங்கார மண்டபம், மேல் திருச்சுற்றில் மகாமண்டபமும், அதனுள் நடராஜர் சபை, அர்த்த மண்டபம், கருவறை என இறைவன் சன்னதி கிழக்கு நோக்கியும், இறைவி சன்னதி தெற்கு நோக்கியும், இறைவி சன்னதி அருகே பள்ளியறை, வைரவர் சன்னதி என நகரத்தார் கோயில் அமைப்பு அமைந்திருக்கும். 

தூண் சிற்பங்களிலும் நகரத்தாரின் தனித்தன்மையை காணலாம். கோயில் தூண் வகைகளை வைத்தே இது எந்தப் கலைப்பாணியில் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பதை அறிய முடியும். தூணை உத்திரத்துடன் இணைக்கும் பகுதியை போதிகை என்பர். இப்போதிகை ஒவ்வொரு மன்னர் காலத்திலும் வேறுவேறு மாற்றங்களைப் பெற்று வந்தது என்றாலும் நகரத்தார்கள் கட்டிய கோயில்களில் போதிகையின் கீழ் ஒரு சிங்கத்தின் சிற்பம் கூடுதலாகக் காணப்படுகிறது. இது நகரத்தார்கள் சிங்கக் கொடியினை உடையவர்கள் என்பதைக் குறிப்பதாக ஏற்றுக்கொள்ளாம். போதிகையில் உள்ள பூமுனை ஒரே கல்லில் செதுக்காமல் தனியாகச் செய்து, காடி கொடுத்து கையால் திருகிப் பொருத்துமாறு அமைந்துள்ளமை நகரத்தாரின் கலைப்பாணியைத் தனியாக எடுத்துக் காட்டுகிறது.[15] 

கோயில் அமைப்பில் 'பள்ளப்பத்தி' என்பது நகரத்தார் கலைப்பாணியின் தனிச்சிறப்பாகும். கோயில் மண்டபங்களையும், மூலவர், பரிவார தெய்வங்கள் சன்னதிகள் ஆகியவற்றை உயர்த்தி கட்டித் திருச்சுற்றினை பள்ளமாக அமைத்துக் கட்டுவது பள்ளப்பத்தி என்னும் திருமாளிகை திருச்சுற்றாகும். 

8. அயல்நாட்டில் நகரத்தார் கோயில் திருப்பணிகள்
தென்கிழக்கு ஆசிய நாடுகள் எங்கும் இந்து மதம் நிலைத்திருக்க நகரத்தார்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றால் அது மிகையாகாது. அங்கு இவர்கள் கட்டிய கோயில்கள் தென்னிந்தியச் சிற்பக்கலை மரபை ஒட்டிக் கட்டப்பட்டவை. பெரும்பாலான கோயில்கள் 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டவையாகும். "கொண்டுவிற்கப் போன நாட்டில் கோயில் கட்டும் தூயர் " என்று கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு நகரத்தார்களின் இயல்பை பாராட்டுகிறார். 

தாயகத்தில் சிவ பெருமானுக்கு முக்கியத்துவம் கொடுத்த நகரத்தார்கள் தாங்கள் வணிகம் செய்யச் சென்ற நாடுகளில் முருகப் பெருமானை தண்டாயுதபாணிக் கோலத்தில் வழிபடுவதில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினர். 

இலங்கையில் சுமார் அறுபது கோயில்களை நகரத்தார் கட்டியுள்ளனர். அவற்றில் கொழும்பு நகரில் செட்டியார் தெருவில் உள்ள பழைய கதிரேசன் கோயில், புதிய கதிரேசன் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கது மற்றும் பாடல் பெற்ற ஈல தேச தலங்களான திருக்கேதீச்சுரத்திலும் திரிகோணமலையிலும் பெரும் பொருள் செலவிட்டு திருப்பணிகள் செய்துள்ளார்கள்.[16] பர்மாவில் நகரத்தார்கள் 59ஊர்களில் 62கோயில்களையும் மடங்களையும் கட்டியுள்ளனர். இக்கோயில்களை கவனிப்பதற்காகவே இரங்கூனிலும் மோல்மேனிலும் 'நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் கோயில்கள் தர்ம பரிபாலன சபை' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.[17] 

வங்காள தேசத்தில் உள்ள அக்யாப் நகரம் அக்காலத்தில் அரிக்கன் என்று அழைக்கப்பட்டது. அங்கே அரிசி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நகரத்தார்கள் 19ஆம் நூற்றாண்டில் அங்கு ஒரு முருகன் கோயிலும் சத்திரமும் கட்டியுள்ளனர். தாய்லாந்து தேசத்தில் வணிகம் செய்வது வந்த நகரத்தார்கள் அங்கு ஒரு மாரியம்மன் கோயிலை கட்டியுள்ளனர். தெற்கு வியட்நாம் தேசத்தில் உள்ள செய்கோன் நகரில் வியாபாரம் செய்து வந்த நகரத்தார்கள் அங்கு சில கோயில்களை கட்டியுள்ளனர். அதில் அழகிலும் அமைப்பிலும் சிறந்ததாக விளங்கும் சுப்பிரமணியசுவாமி கோயில் குறிப்பிடத்தக்கது. அக்கோயிலில் உள்ள வெள்ளித்தேரானது செட்டிநாட்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொண்டு செல்லப்பட்டது. இந்தோனேஷியாத் தீவுகளில் முக்கியமானது சுமத்திரா தீவு. இத்தீவின் தலைநகரான மைடான் தில்லியில் நகரத்தார்கள் தண்டாயுதபாணி கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். மொரீசியஸ் நாட்டில் தலைநகரான போர்ட்லூயி என்னும் நகரத்திற்கு, வியாபாரம் செய்யச் சென்ற நகரத்தார்கள் அங்கு மீனாட்சி உடனாய சொக்கலிங்கம் திருக்கோயிலை கட்டியுள்ளனர்.[18]
மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் இந்து ஆலயங்கள் அமைவதற்கு நகரத்தார்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். 

9. முடிவுரை:
இச்சிறிய கட்டுரையில் நகரத்தார் திருப்பணி செய்த அத்தனை கோயில்களையும் பட்டியல்யிட இடம் போதாது. எண்ணிலடங்கா கோயில் திருப்பணிகள் புரிந்த இவர்கள், கோயில்களில் தினசரி வழிபாடுகள் முறையாகவும் சிறப்பாகவும் நடக்கப் பல அறக்கட்டளைகளை ஏற்படுத்தியுள்ளனர். திருவிழா, திருப்பணிச் செலவுகளுக்காகச் சேமநிதிகள் ஏராளமாக வைத்ததோடு பல கிராமங்களையும் கொடையாகக் கொடுத்துள்ளனர். தற்போதும் நகரத்தார்கள் நிர்வாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அவைகளை சீரும் சிறப்புமாக நிர்வகித்து வருகின்றனர். 

அடிக்குறிப்புகள் :
1. ' தனவைசியராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம் ' (1894) - சதாவதானம் சுப்பிரமணிய ஐயர்
2. ' அபிதான சிந்தாமணி ' (1982) - சிங்காரவேலு முதலியார் - பக்: 960
3. ' நகரத்தார் அறப்பணிகள் ' (2001) - முனைவர் நா.வள்ளி - பக்:52
4. ' சிங்கப்பூர் தெண்டாயுதபாணி பத்து தோத்திரமஞ்சரி ' (1912) - க.வி. சந்தானகிருஷ்ண நாயுடு - பக்: 19
5. ' நகரத்தார் மரபும் பண்பாடும் ' (2007) - மா.சத்திரமூர்த்தி- மணிவாசகர் பதிப்பகம் - பக்: 441
6. ' நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு ' (1970) - வானதி பதிப்பகம் - பக்: XVII
7. ' நகரத்தார் கலைக்கலஞ்சியம் ' (1998) - மெய்யப்பன் பதிப்பகம் - பக்: 246-248
8. ' வேள் வணிகர் வரலாறு ' (2017) - தேவகோட்டை எஸ்.இராமநாதன் - தமிழ்க்கடல் பதிப்பகம் - பக்:197
9. ' மதுரை கும்பாபிடேக மலர் ' (1963) - மதுரையில் வயிநாகரம் திருப்பணி - பாலகவி வயிநாகரம் வே.இராமநாதன் செட்டியார் - பக்: 89
10. ' Town Planning In Madras ' (1918) - H.V. Lanchester - Picture-I
11. ' நகரத்தார் கலைக்கலஞ்சியம் ' (1998) - மெய்யப்பன் பதிப்பகம் - பக்:160
12. ' ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர நூற்றாண்டு மலர் ' (1963) - சோமலெ - பக்:20
13. ' நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு ' (1953) - பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் 
14. ' நகரத்தார் வளர்த்த சிற்பக்கலை ' (2005) - வ. தேனப்பன் - தமிழப்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்
15. ' நகரத்தார் மரபும் பண்பாடும் ' (2007) - மா. சத்திரமூர்த்தி - மணிவாசகர் பதிப்பகம் 
16. ' அலைகடலுக்கு அப்பாலும் நகரத்தார்களின் ஆலயப் பணிகள் ' (1979) - சோமலெ - சோமு நூலக வெளியீடு - பக்: 62
17. மேலது - பக்: 54
18. மேலது - பக்: 112- 120
--------------×----------------

No comments:

Post a Comment

துதிக்கையில்லா கரிமுகன்

  நடுவாற்று மருதம் பிள்ளையார் சி வகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர் கண்டரமாணிக்கம் . இவ்வூரையடுத்த கொங்கரத்தியில் மணிமுத்தாற்றின் ...