Followers

Sunday, July 25, 2021

'கா.செ வேதாந்த மடம்'


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அமைந்துள்ளது இந்த கா.செ வேதாந்த மடம். 'காளையார் கோவில் செல்லப்ப சுவாமிகள் வேதாந்த மடம்' என்பது முழுப்பெயர்.

கோவிலூர் மடாலயத்தின் நான்காவது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ இராமசாமி ஞானதேசிக சுவாமிகளின் சீடரும், தஞ்சை பால்சாமி மடம், மதுரை குட்டைய சுவாமிகள் மடம் ஆகியவற்றின் மடாதிபதியாக இருந்தவருமான 'ஸ்ரீமத் செல்லப்ப சுவாமிகள்' அவர்களை தேவகோட்டை ஜமீன்தார் அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார் அவர்கள், பாண்டி பதினான்கு தலங்களுள் ஒன்றும், தமது குடும்பத்தினரால் திருப்பணி செய்யப்பெற்று வரும் கோவிலுமான காளையார்கோவிலுக்கு அழைத்து வந்தார்கள்.

கி.பி.1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் அவர்களால் காளையார்கோவில் ஆனைமடு தெப்பக்குளம் சீர்திருத்தப் பெற்று அதன் நடுவே அழகிய நீராழி மண்டபம் ஒன்று புதிதாய் கட்டப்பெற்றது. அது சமயம் தெப்பக்குளத்தின் தென் கரையில், மேலும் சில நாட்டுக்கோட்டை நகரத்தார் மெய்யன்பர்களுடன் இணைந்து மாபெரும் வேதாந்த மடத்தை உருவாக்கினார்கள். இம்மடம் வேதாந்தப்பாடம் கற்பிப்பதற்காகவே நிறுவப்பெற்றதாகும். இவ்வேதாந்த மடத்தின் முதல் மடாதிபதியாக ஸ்ரீமத் செல்லப்ப சுவாமிகள் இருந்து வேதாந்தப்பாடம் கற்பித்து வந்தார்கள். இந்த மடம் அழகிய தோற்றப் பொலிவுடன் அளவில் மிகப்பெரிய மடமாக செட்டிநாட்டு கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது.


தேவகோட்டை ஜமீன்தார் அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார் அவர்கள் துறவு பூண்டு ஸ்ரீமத் அருணாசல சுவாமிகள் என்று திருநாமம் பெற்று இம்மடத்திலேயே இருந்து வேதாந்தத்தில் ஆழ்ந்து மாணவர்களுக்கு வேதாந்த பாடங்களை கற்பித்து வந்தார்கள். இவர்கள் 'ஜமீன்தார் சுவாமிகள்' என்றும் அழைக்கப்பெற்றார்கள். பின்னர் இம்மடத்தின் மடாதிபதியாக அருளாட்சி செய்து கி.பி.1938இல் முக்தியடைந்தார்கள். இவர்களுக்கு இம்மடத்தினுள்ளேயே அதிட்டானம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.

    ஜமீீீன்தார் சுவாமிகள்

கா.செ. வேதாந்த மடத்தின் மடாதிபதியாக இருந்தவர்கள் பட்டியல்:

●ஸ்ரீமத் செல்லப்ப சுவாமிகள் 

●ஸ்ரீமத் உலகம் பட்டி இலக்குண சுவாமிகள் 

●ஸ்ரீமத் நாட்டரசன் கோட்டை மெய்யப்ப சுவாமிகள் 

●ஸ்ரீமத் முத்தையா சுவாமிகள் 

●ஸ்ரீமத் ஜமீன்தார் அருணாச்சல சுவாமிகள் 

●ஸ்ரீமத் தேனிப்பட்டி அருணாச்சல சுவாமிகள்

●ஸ்ரீலஸ்ரீ அரு.இராமநாத ஞானதேசிக சுவாமிகள் 
(இவர்கள் கோவிலூர் மடாலயத்தின் பத்தாவது மடாதிபதியாக இருந்தவர்கள், இவர்கள் காலத்தில் 'க.செ. வேதாந்த மடம்' கோவிலூர் மடாலயத்தின் நேரடிப் பார்வையில் இருந்தது)

●ஸ்ரீமத் சிவாநந்த சுவாமிகள் 

●ஸ்ரீமத் நாராயண சுவாமிகள்

நாராயண சுவாமிகள் முக்தியடைந்த பின், 2003முதல் 'கா.செ வேதாந்த மடம்' கோவிலூர் மடாதிபதியின்  நேரடிப் பார்வையில் இருந்துவருகிறது.

அன்பன் 
பழ.கைலாஷ்

Wednesday, May 26, 2021

பாடுவார் பாடல் தொகுப்பு


" வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பிரான்மலையாம்

தெள்ளார் புனல்வைகை தெற்காகும் - ஒள்ளியசீர்

எட்டிக் கடற்கிழக்காம் இஃதன்றோ நாட்டரசன்சேர் 

செட்டிநாட் டெல்லையெனச் செப்பு".

என்ற பாடலின் மூலம் செட்டிநாட்டு எல்லைக்கு வரையறை வகுத்தவர்  'பாடுவார் முத்தப்பர்'. 


பாண்டிய நாட்டிலே தனவணிகர்களாகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் செட்டிநாட்டிலே திருமதுரைச் சிவல்பட்டி என்று புகழப்படும் 'கீழச்சிவல்பட்டி'யில் கி.பி.1750ஆம் ஆண்டு அழகப்ப செட்டியார் - லெட்சுமி ஆச்சியின் மகனாக கருவிலேயே திருஉடையவராகத் தோன்றி, வரகவியாய் வாழ்ந்து, தனிப்பாடல் இலக்கியத்தில் தனித்ததோர் இடம் பெற்றவர் 'முத்தப்பர்'. இவர் இயல்பாகவே தமிழில் கவிதை பாடும் ஆற்றலுடையவராகவும், பாடும் வாக்குப் பலிக்கும் இறை அருளுடையவராகவும் திகழ்ந்தார். 

இவரது வாக்குப் பலித்து நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகள் பல. அவற்றுள், குன்றக்குடியில் மழைவேண்டி பாட்டுப் பாடி மழைபொழிய செய்ததும், மழை நிற்கப் பாட்டுப் பாடி மழையை நிறுத்த செய்ததும், நெடுமரம் மலையரசி அம்மன் கோவிலிலும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலிலும் மழை வேண்டி பாடி மழைபொழிய செய்ததும், "காட்டுக் கருப்பா மழை காட்டு" என்று பாடி மழைபொழிய செய்ததும், துண்டான ஆட்டின் தலையை பாட்டுப்பாடி ஒட்ட வைத்ததும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

இவர் தனது சமகாலத்தவர்களான மதிலைப்பட்டி வேலுக் கவிராயர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், கோவிலூர் ஆண்டவர் சீர்வளர்சீர் முக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள், பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள், கல்லாப்பேட்டை ஜமீன்தார் முத்துபாலுத் தேவர், செவ்வூர் அழகுப் புலவர், இராங்கியம் முத்து வீரப்பப்பிள்ளை, சிவகங்கை முத்தழகுப்பிள்ளை ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் இவருக்கு 'பாடுவார்' என்று பட்டம் அளித்து அகம் மகிழ்ந்தனர். அன்று முதல் இவர் 'பாடுவார் முத்தப்பர்' என்று எல்லோராலும் அழைக்கப்பெற்றார்.

கோவிலூர் ஆண்டவர் மீதும், துழாவூர் ஆதீனகர்த்தர் மீதும், பாதரக்குடி மடாதிபதி மீதும் குரு வணக்கத் தோத்திரங்கள் பாடியுள்ளார். 

பள்ளத்தூர் மனமகிழ்ந்துகண்ட விநாயகர் மீதும், மேகநோய் தீர்க்க கொங்கரத்தி நடுவாற்று மருதம்பிள்ளையார் மீதும் பதிகம் பாடியுள்ளார். 

நேமம் கோவிலில் உறையும் இறைவன் செயங்கொண்ட சோழீசர் மீது நூறு பாடல்கள் கொண்ட 'செயங்கொண்டார் சதகம்' என்ற நூலைப் பாடியுள்ளார். இந்நூல் நூறு வரலாற்று கதைகளையும் அவைகளுக்குரிய பழமொழிகளையும் பாங்குடன் விளக்குகிறது. மேலும் 'செயங்கொண்டார் வணக்க மாலை'யும் பாடியுள்ளார்.

"காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி

வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு

அன்றைக்கு வந்தஎங்கள் அம்மா! இலக்குமியே! 

என்றைக்கும் நீங்கா திரு!" 

எனத் 'திருமகள் அருள் வேட்டல் மாலை' பாடி வேள்வணிகராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லங்களில் இலக்குமியை நிரந்த வாசம் செய்யவைத்தவர் இவரே!

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றை 'திருமுகவிலாசம்', 'நகர வாழ்த்து' ஆகிய நூல்களில் பாடியுள்ளார். மேலும் 'செட்டிமார் வரலாறு' என்றொரு நூல் இவர் இயற்றியதாக சொல்லப்படுகிறது ஆனால் அந்நூல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 

இவரை வரவேற்று மகிழ்ந்தவர்களை வாயார வாழ்த்துவதும், வரவேற்க மறந்தவர்களை வசை பாடுவதும் இவர் தமிழின் தனித்தன்மையாக உள்ளது.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாடு முழுவதும் அம்மை நோய் பரவி மக்களை வாட்டி வதைத்தபோது, உச்சினி மாகாளி மீது 108 வரிகள் கொண்ட 'உச்சினி மாகாளியம்மன் கும்மி'ப்பாட்டை பாடி அம்மை நோய் நீங்க செய்துள்ளார். மேகநோய் நீங்க கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் மீது தோத்திரம் பாடியுள்ளார். 

குன்றக்குடி முருகன் மீதும், பழநியாண்டவர் மீதும், புதுக்கோட்டை பிரகதாம்பாள் மீதும், பாகனேரி புல்வநாயகி அம்மன் மீதும், இராங்கியம் அங்காள பரமேஸ்வரி மீதும் பதிகம் பாடியுள்ளார். வைணவ கடவுளான வேங்கடாசலபதி மீதும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

தனது குலதெய்வமான இராங்கியம் கருப்பர் மீது 'திருத்தாண்டகம்', 'குதிரையடி விருத்தம்' மற்றும் பல பாடல்கள் பாடியுள்ளார். 

தமிழ் எனும் தெய்வசத்திபெற்ற வீரிய மொழியால் தான் சீரிய பேரருட்திறம் இருந்தது என்பதைப் பாடுவார் முத்தப்பர் பாடல்கள் காலகாலத்திற்கும் உணர்த்துவன.

இவர் பாடிய 'செயங்கொண்டார் சதகம்' முதன் முதலில் கி.பி.1890 வாக்கில் கீழச்சிவல்பட்டி ஆ.பெ.அரு.பழநியப்ப செட்டியார் மற்றும் அரு.அ.சிமு.சின்னமுத்தப்ப செட்டியார் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கி.பி. 1900 வாக்கில் 'திருமுகவிலாசம்' தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 1954ஆம் ஆண்டு பி.அளகாபுரி இராம.மு.க.மு.நாராயணன் செட்டியாரால் முத்தப்பரின் தனிப் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பி.அளகாபுரி இளங்கோவன் பாடுவார் முத்தப்பர் வரலாறு முதலிய சில நூல்களை இயற்றியுள்ளார். பின்னர் நீண்ட கால இடைவெளிகளில் சிலர் முத்தப்பரின் பாடல்களை மறு பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். இருப்பினும் பாடுவார் முத்தப்பரின் பாடல்கள் அனைத்தும் அடங்கிய பதிப்பு ஒன்று இல்லாததால், தமிழ் கூறும் நல்லோர் மத்தியில் இருந்துவந்த ஏக்கத்தை தீர்க்கும் முகமாக இளைய தமிழ்க்கடல் தேவகோட்டை இராமநாதன் அவர்களால் 'வேள்வணிகர் வரலாறு' எனும் நூல் படைக்கப்பட்டுள்ளது. இதில் பாடுவார் முத்தப்பர் பாடிய பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது.


பள்ளிப்பருவம் முதல் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு, தனது நகைச்சுவை பேச்சாலும் வெண்கலக்குரலாலும் கேட்போர் மனதில் இடம்பிடித்து, பல பரிசுகளை பெற்றவர் தேவகோட்டை இராமநாதன். சன் தொலைக்காட்சியின் 'அரட்டை அரங்கம்', 'அசத்தப்போவது யாரு?'., ராஜ் தொலைக்காட்சியின் 'சிரிப்போம் சிந்திப்போம்', 'அகடவிகடன்'., விஜய் தொலைக்காட்சியின் 'கலக்கப்போவது யாரு?', 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நாவாற்றலால் உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்று 'அசத்தல் மன்னன்' எனும் பட்டம் பெற்றவர். 

1997 முதல் தற்போது வரை பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் முன்னிலையில் உரையாற்றி உலகப் புகழ்பெற்று, 2018ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 'இளைய தமிழ்க்கடல்' என்ற பட்டம் பெற்றார். மேலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக பங்காற்றியுள்ளார். காசி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாக்களில் வர்ணனையாற்றி வர்ணனை வேந்தராகவும் திகழ்கிறார்.


இவர் கல்லூரி மாணவனாகப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற போது "பாடுவார் முத்தப்பர் நாவன்மைப் பேச்சுப்போட்டி"யில் முதல் பரிசாக வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இதுவே பாடுவார் முத்தப்பர் பாடல் தொகுப்பு உருவாகுவதற்கு அடிநாதமாய் அமைந்துள்ளது.

பாடுவார் முத்தப்பர் பாடல்களின் பழைய பதிப்புகள் அத்தனையும் அரிதின் முயன்று திரட்டி, அவர் பாடிய ஆலயங்களுக்கு நேரில் சென்று அவரின் பாடல்களை பாடி, இதுவரை பதிப்பில் வராத பாடல்களையும் தேடித் திரட்டி இந்நூலில் தொகுத்தளித்துள்ளார். மேலும் பாடுவார் குறித்து சான்றோர்கள் பலர் பாடிய பாடல்களையும் இந்நூலில் இணைத்துள்ளார்.

தேனூர் வரகவி வே.செ.சொக்கலிங்கனார், முருகனடியார்கள் 78 பேரைத் தொகுத்துச் 'சேய்த்தொண்டர் புராணம்' எனும் நூலை இயற்றியுள்ளார். அதில் ஒருவராக பாடுவார் முத்தப்பரை இணைத்து "முத்தப்பர்க்கு அடியேன்!" என்ற வரிகளால் 'முத்தப்ப நாயனார் புராணம்' பாடியுள்ளார். அதையும் இந்நூலில் இணைத்துள்ளார்.

'வேள்வணிகர் வரலாறு' எனும் இந்நூல் பாடுவார் முத்தப்பர் பாடல்களின் கலைக்களஞ்சியமாக திகழ்கிறது. 

இந்நூல் வெளிவரப் பேருதவி செய்த மேலைச்சிவபுரி 'தொழில்மாமணி' கரு.செல்லராமு செட்டியார் - இராஜாமணி ஆச்சி அவர்களின் 70ஆம் ஆண்டு பீமரத சாந்தி விழாவில் 22.11.2017இல் முதல் பதிப்பு மலர்ந்தது. 

அரும்பாடுபட்டு பாடுவார் முத்தப்பர் பாடல்களை திரட்டி நூலாக வெளியிட்டிருக்கும் தேவகோட்டை இராமநாதன் அவர்களின் பணி காலந்தோறும் பாராட்டத்தக்கது.

வாழிய தமிழ்!
வாழிய பாடுவார் முத்தப்பர் புகழ்!

அன்பன் 
பழ.கைலாஷ்

பாடுவார் முத்தப்பர் கட்டிய கோயில்


18ஆம் நூற்றாண்டில் அருட்கவியாய் வாழ்ந்த 'பாடுவார் முத்தப்பர்' சிறந்த வணிகராகவும் திகழ்ந்து பொருளீட்டி பல அறப்பணிகள் செய்து வந்துள்ளார். இளையாற்றங்குடி அருகேயுள்ள  சேவினிப்பட்டி எனும் ஊரில் மக்களின் தாகம் தீர்க்க குடிதண்ணீர் குளம் ஒன்றை வெட்டி, அதன் மேல்கரையில் கருங்கற்களைக் கொண்டு பிள்ளையார் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். கோவிலினுள் பாடுவார் முத்தப்பருக்கு சிலை உள்ளது. கோவில் இருக்கும் சாலை 'பாடுவார் முத்தப்பர் சாலை' என்றும் குளம் 'செட்டியா(ர்) ஊருணி' என்றும் அழைக்கப்படுகிறது. 

பாடுவார் முத்தப்பர் பாடிய விநாயகர் துதி:

" காட்டுவழி போனாலும் கள்ளர்பய மானாலும் 

கேட்டுவழிக் காலகனார் கிட்டிலும் -  நாட்டமுடன் 

நம்பிக்கை யாக நமக்கு வினாயகனின் 

தும்பிக்கை உண்டே துணை".

புகைப்படங்கள்: சேவினிப்பட்டியில் (சிவகங்கை மாவட்டம்) 'பாடுவார் முத்தப்பர்' கட்டிய பிள்ளையார் கோவில் மற்றும் ஊருணி.

Sunday, May 16, 2021

பெய்யனப் பெய்யும் மழை!


"ல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்பது ஔவை கூற்று. "நடக்காத ஒன்று நடந்தால் மழைபெய்யும்" என்றும் "அத்திபூத்தால் ஆறு பெருகிவிடும்" என்றும் "புண்ணியவான் பெய்யென்றால் மழை பெய்யும்" என்றும் சொற்றொடர்கள் நம்மிடையே வழங்கப் பெருகின்றன. மழை பற்றிய விஞ்ஞானக் கருத்துக்கள் வேறாக இருப்பினும் மக்களின் நல்லெண்ணத்திற்கும் செயலுக்கும் ஏற்றபடியே மழை பெய்யும் என்பது நம் முன்னோர்கள் கருத்து.

18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றி, வரகவியாய் வாழ்ந்து, தனிப்பாடல் இலக்கியத்தில் தனித்ததோர் இடம் பெற்றவர் 'பாடுவார் முத்தப்பர்'.


பாண்டிய நாட்டிலே தனவணிகர்களாகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் செட்டிநாட்டில் திருமதுரைச் சிவல்பட்டி என்று புகழப்படும் 'கீழச்சிவல்பட்டி'யில் கி.பி1750ஆம் ஆண்டு தனவணிக குலத்தில் அழகப்ப செட்டியார் - லெட்சுமி ஆச்சியின் மகனாக கருவிலேயே திருஉடையவராகத் தோன்றினார் முத்தப்பர். இயல்பாகவே தமிழ்க்கவிதை பாடும் ஆற்றலுடையவராய் விளங்கினார். கவிபாடும் ஆற்றலோடு, பாடும் வாக்குப் பலிக்கும் இறை அருளுடையவராகவும் திகழ்ந்தார். எனவே இவறை அனைவரும் 'பாடுவார் முத்தப்பர்' என்று அழைத்தனர்.


இவர் தனது சமகாலத்தவர்களான மதிலைப்பட்டி கவிராயர், கோவிலூர் ஆண்டவர் சீர்வளர்சீர் முக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள், பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள், கல்லாப்பேட்டை ஜமீன்தார், செவ்வூர் அழகுப் புலவர் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார்.


பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள் குன்றக்குடி சண்முகநாதருக்கு ஒரு வெள்ளி மயில் வாகனம் செய்து வைத்தார். நல்லதொரு நாளில் குன்றக்குடியில் திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருவிழா அன்று முருகப்பெருமான் புது வெள்ளி மயில் வாகனத்தில் ஏறி பவனி வந்தார். முன்வரிசையில் முத்தப்பரும் சேனாபதியடிகளும் சென்று கொண்டிருந்தனர். நீண்ட நாட்களாக மழையில்லாமல் ஊர் வறட்சியடைந்திருந்த காலம் அது.

சேனாபதியடிகள் கேட்டார் "முத்தப்பா! நீண்ட நெடுங்காலமாக மழையே இல்லாமல் நாடு வறண்டு கிடக்கிறது, நாட்டு மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நீ தான் உன் பாடலால், இறையருளால் மழை பொழிய செய்ய வேண்டும்".

"நான் பாடுகிறேன் இறையருளால் மழை பொழியும்" என்றார் முத்தப்பர்.

பின்னர் தெற்கு ரத வீதிக்கு சென்றதும் சுவாமியை கீழே இறக்கி வைத்தார்கள்.

"பாடு" என்று சேனாபதியடிகள் கூற முத்தப்பர் பாடினார்;

"அள்ளிநிதி யங்கொடுக்கும் புலன்வயற்சே

          னாபதிஎன் ஐயன் குன்றை

வள்ளிமண வாளனுக்கு வெள்ளிமயில்

          செய்துவைத்த மகிமை பாரீர்!

வெள்ளியறி யாமல்மழை பெய்கிறதே

          என்றமொழி மெய்தான்; வெள்ளிப்

புள்ளிமயி லேறிமுரு கன்பவனி

          வரக்கண்டு பொழிந்த வாறே!"

பாட்டு முடியவில்லை. அதற்குள்ளாக மழை 'சோ'வென்று கொட்டத் தொடங்கியது. நெடு நேரமாகியும் நிற்கவில்லை. மனமகிழ்ந்த சேனாபதியடிகள் "போதும்! முத்தப்பா போதும்! குன்றக்குடி கழனிகள் செழிக்க தேவையான அளவு நீர் நிரம்பிவிட்டது" என்றார்.

மழைபொழிய பாடிய வள்ளல் மழையை நிறுத்தவும் பாடினார்;

"வந்து மழைபொழியும் வானேவெஞ் சூர்தடிந்த

கந்தர் திருவிழாக் காலத்தில் - தொந்தரையாய்

நீர்த்துளியை ஊற்றிவிடல் நேர்த்தியல; மாற்றிவிடு!

கீர்த்திவரும்; நாட்டன்மொழி கேள்."

பாட்டும் நின்றது! மழையும் நின்றது!

குன்றக்குடியில் மழை பொழியவும் நிற்கவும் பாடிய முத்தப்பர் "ஏழை எளியோர்களின் குடி ஈடேறும் படிக்கு" என்ற தன் வாக்குப்படி பலமுறை மழை பொழிய பாட்டு பாடி மழைபொழிய செய்து மக்களின் உழைப்புக்குப் பலன் கிடைக்கச் செய்திருக்கிறார். நெடுமரம் மலையரசி கோயிலிலும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலிலும் மழை வேண்டி முத்தப்பர் பாடியுள்ளார்.

குன்றக்குடியில் முத்தப்பர் மழை வேண்டி பாடியதின் நினைவாக அங்கே அவருக்கு ஒரு சிலை எழுப்பப்பட்டுள்ளது.

அன்பன்
பழ.கைலாஷ்

Saturday, April 17, 2021

சுப்பிரமணியஞ் செட்டியார் குருகுலம்.

சுப்பிரமணியஞ் செட்டியார் குருகுலம், அமராவதிபுதூர், சிவகங்கை மாவட்டம் 

1937ஆம் ஆண்டு காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் இருக்கும் சுப்பிரமணியன் செட்டியார் குருகுலத்தாரால் வெளியிடப்பட்ட சிறிய கையேடு.

அக்காலத்தில் இப்படி ஒரு சட்டமா?


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்,   தேவகோட்டை யூனியன் ஆபிசில் 1911ஆம் ஆண்டு பழ.ப.பிச்சப்ப செட்டியார் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள 'குழந்தை வேலன் செட்டி தெரு'வில் 30 அடி நீளத்திற்கும் 3அடி அகலத்திற்கும் உரிய இடத்தில் 31நாட்களுக்கு கட்டிட சாமான்களை வீதியில் போட்டு எடுத்துக் கொள்வதற்கு உரிமம் பெற்றுள்ளார். "கட்டிட சாமான்களை வீதியில்ப்போட்டு எடுத்துக்கொள்வதற்கு லைசென்சு" என்ற தலைப்பில் தேவகோட்டை யூனியன் ஆபிஸ் அக்கிராசனாதிபதி (தலைவர்) சில நிபந்தனைகளுடன் 26/07/1911அன்று உரிமம் வழங்கியுள்ளார். அதாவது மக்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கட்டிட சாமான்களை தெருவில் போட்டுக் கொள்ளளாம், இரவில் மக்கள் நடமாட போதுமான வெளிச்சம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதை தவறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் இப்படி ஒரு சட்டம் இருந்திருக்கிறது என்பது அனைவரையும் வியப்படைய செய்கிறது.

110 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட உரிமம்.

Wednesday, March 31, 2021

நகரத்தார் கோயில் திருப்பணிகள் - ஓர் ஆய்வு


கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி - தமிழ்த்துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் (19.03.2021&20.03.2021) "நகரத்தார் - வாழ்வும் பணியும்" என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு, "நகரத்தார் கோயில் திருப்பணிகள்" என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். அக்கட்டுரையை இங்கே பதிவிட்டுள்ளேன். படித்துப்பார்த்து தங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். 
----------×----------

நகரத்தார் கோயில் திருப்பணிகள்
 
-பழ.கைலாஷ் 

1. முன்னுரை:
பல கோடி மக்கள் வாழும் இந்த பாரத நாட்டில், 'நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்' என்பவர்கள் சிறுபான்மை சமுதாயத்தினரே. இருப்பினும் அவர்தம் கோயில் திருப்பணிகளை கண்டு, பாரத நாடே அவர்களை மெச்சுகிறது. நகரத்தாரின் கோயில் திருப்பணிகளை பற்றி இக்கட்டுரை மூலம் ஆராய்வதே நோக்கம். 

2. நாட்டுக்கோட்டை நகரத்தார்:
'நாட்டுக்கோட்டை நகரத்தார்' என்றும் 'நாட்டுக்கோட்டை செட்டியார்' என்றும் அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாட்டில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 76 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 'நகரத்தார்' என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களின் கோயில் திருப்பணிகளை பற்றி அறிவதற்கு முன் இவர்கள் வரலாற்றை சற்று அறிவது அவசியம். 

பாடுவார் முத்தப்பர் எழுதிய 'நகரவாழ்த்து', 'திருமுகவிலாசம்' ஆகிய நூல்களிலும் 'ஏழு நகரத்தார் பேரில் பள்ளு', 'ஏழு நகரத்தார் பேரில் குழுவநாடகம்', ஆகிய சிற்றிலக்கியங்களிலும் பழனித் தலத்தில் இவர்கள் செய்த அறங்களை விவரிக்கும் நகரத்தார் அறப்பட்டயங்களிலும் இவர்களை பற்றிய வரலாற்று செய்திகள் காணப்படுகின்றன. மேலும் பிற்காலத்தில் தேவகோட்டை வீர.லெ.சிந்நயச் செட்டியாரின் குறிப்புகளை கொண்டு தஞ்சாவூர் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரால் இயற்றப்பட்டு கி.பி1894இல் வெளியான 'தனவைசியராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம்' எனும் புத்தகத்திலும்[1] நகரத்தார் வரலாறு விரிவாக சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் நகரத்தார் வரலாறு ஏறக்குறைய ஒரே மாதிரியாகப் பின்வருமாறு காணப்படுகிறது "நகரத்தார்கள் ஆதியில் நாகநாட்டில் சாந்தியாபுரி எனும் நகரத்தில் இரத்தின வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார்கள், பிறகு அந்நாட்டு அரசனின் கொடுமையால் கலியுகம் 2204ஆம் ஆண்டில் தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகரில் குடியேறினார்கள். அங்கு நெடுங்காலம் வாழ்ந்தார்கள் காஞ்சியை ஆண்ட பிரதாபராஜன் என்னும் மன்னனின் கொடுமையால் கலியுகம் 2312இல் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் குடியேறினார்கள். இங்கு சிம்மக்கொடியுடன் மன் இணை மரியாதைகளோடு மன்னனுக்கு மகுடம் சூட்டும் உரிமை பெற்றவர்களாக மகுட தனவைசியராக வாழ்ந்து வந்தார்கள். சோழநாட்டை ஆண்ட பூவந்தி சோழன் நகரத்தார் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் தங்கள் ஆண் வாரிசுகளை மட்டும் விட்டு விட்டு. அனைத்து நகரத்தார்களும் தத்தம் மனைவியருடன் உயிர் துறந்தனர். நகரத்தார்களுடைய ஆண் பிள்ளைகள் வளர்ந்து ராஜபூஷன சோழனுக்கு முடிசூட்டும் பொருட்டு தங்கள் இனத்தில் பெண்கள் இல்லாததால் வேளாளப் பெண்களை மணந்து கொண்டார்கள். பிறகு தன் நாட்டுக்கு நற்குடி வேண்டும் என்று குலசேகர சவுந்திரபாண்டிய மன்னன் சோழனிடம் கேட்க கலியுகம் 3808இல் பாண்டிய நாடு வந்து வெள்ளாற்றங்கரைக்கு தெற்கே ஓம்காரக்குடியில் தங்கினார்கள். பாண்டிய மன்னன் இவர்களுக்கு இளையாற்றங்குடி கோயிலை வழங்கினான். பின்னர் ஏழு கோயில் பிரிவினராயினர். காலப்போக்கில் ஒன்பது கோயில் பிரிவினராயினர். ஆதிகாலம் தொட்டு சைவ சமயத்தை பின்பற்ற கூடியவர்களாகவும், சிவதர்மம் செய்து வருபவர்களாகவும் விளங்குகின்றனர் " 

'அபிதான சிந்தாமணி' நகரத்தார்களை பற்றி கூறுகையில் "சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரை, திருக்காளத்தி முதலிய பல சிவாலயங்களைப் புதுக்கிய திருப்பணி வியக்கத் தக்கது இவர்களைத் தமிழ்நாட்டரசின் மாறிய பிறப்பெனவே புகழலாம். இவர்கள் தேச,மத, கல்வியின் பொருட்டு ஏற்படுத்தியுள்ள கலாசாலைகள் இவர்களுடைய புண்ணிய நிலைமைக்கு அறிகுறியாம். இவர்கள் உலக நன்றி எக்காலத்தும் மறக்கத் தக்கதன்று " என்று கூறுகிறது.[2] 

"பெரிய பெரிய அறச் செயல்களை ஒரு சமூகத்தினருள் யாராவது ஓரிருவர் செய்திருக்கிறார்கள் ஆனால் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருமே அறப்பணிகளை தனியாகவோ, குடும்பமாகவோ, கூட்டாகவோ செய்திருப்பதை நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில் மட்டுமே காணலாம்" என்கிறார் நகரத்தாரியல் ஆய்வாளர் முனைவர் நா.வள்ளி.[3]

3. திருக்கோயில் திருப்பணியில் ஈடுபட காரணம்:
பல விதமான அறப்பணிகளில் நகரத்தார்கள் ஈடுபட்டிருந்தாலும் அதிக அளவில் கோயில் திருப்பணிகளே செய்துள்ளார்கள். இந்து சமயத்தின் தூண்களாக விளங்குபவை கோயில்களே. நகரத்தார்கள் இந்து சமயத்தின் பாதுகாவலராக இருந்ததை பின்வரும் கும்மிப் பாடல் காட்டுகிறது.
"வேறு மதத்தில் விழாதபடி நம்மை 
வேலியைப் போல் நின்று கோலிடுவார் 
நீட்ட மேனியர் செல்வக் குபேரர்கள் 
நீதி வணிகரைப் பாருங்கடி"[4] 

எனவே தான் "கோயில் பழுதானால் கூப்பிடு செட்டியாரை" என்பது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பெறும் பழமொழியாகும். 

நகரத்தார்கள் பாண்டிய நாட்டிற்கு வந்தடைந்த கி.பி 8ஆம் நூற்றாண்டு முதலே பல கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தாலும். கி.பி 15ஆம் நூற்றாண்டு முதல் நகரத்தார் செய்த கோயில் திருப்பணிகள் குறித்த கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றிளுள் கி.பி 18ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சுமார் 200 ஆண்டு காலத்தில் நகரத்தார் செய்த கோயில் திருப்பணிகளே மிகுதி. 

பாட்டனார் நந்தவனம் அமைத்து, பாடசாலை கட்டி, ஊருணி வெட்டி, கோயில்கள் கட்டி, தடையின்றி உணவு படைத்த தருமங்களைக் கூறி அதை தன் மகனும் தொடர்ந்திட இளம் வயதிலேயே தாலாட்டின் மூலம் மனதில் பதிய வைக்க முயலும் ஆர்வம் நகரத்தார் குல பெண்களான ஆச்சிமார்களிடையே காணப்படுகிறது. 

"நந்தவனம் கண்திறந்து 
நாலுவகை பூவெடுத்து 
பூ எடுத்து பூஜை பண்ணும் 
புண்ணியவார் பேரனோ! 

மலர் எடுத்து பூஜை பண்ணும் 
மகாராஜா பேரனோ!
அரும்பு எடுத்து பூஜை பண்ணும் 
அர்சுணவார் பேரனோ! 

வித்தகசாலைக் கட்டும் 
வீமருட பேரனோ!
பாடகசாலை கட்டும் 
பாண்டியனார் பேரனோ! 

குளிக்க குளம் வெட்டி
கும்பிடவும் கோயில் கட்டி 
அசராமல் அன்னமிடும் 
அர்சுணவார் பேரனோ!"[5] 

காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சுவாமிகள் "ஒரு நாட்டிற்கு கோட்டைக் காப்பு வீரர்கள் இருப்பதைப்போல இந்து மதம் என்னும் கோட்டைக்குத் தனவணிக நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோட்டை காப்பு வீரர்களாக இருந்து வருகிறார்கள்" என்று நகரத்தார்களை பாராட்டியுள்ளார்.[6] 

கி.பி 19ஆம் நூற்றாண்டில் நகரத்தார்களை அதிக அளவில் கோயில் திருப்பணிகளில் ஈடுபடுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மூவர். அவர்கள் கோவிலூர் ஆண்டவர் 'ஸ்ரீலஸ்ரீ முத்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள்', மதுரை குட்டைய சுவாமிகள் மடத்தைச் சேர்ந்த 'மெய்யப்ப சுவாமிகள்', கோவிலூர் மடாலயத்தின் ஐந்தாவது ஆதீனகர்த்தரான திருக்களர் ஆண்டவர் என்கிற 'ஸ்ரீலஸ்ரீ வீரசேகர ஞானதேசிக சுவாமிகள்' ஆவர். 

நகரத்தார்கள் தங்களுடைய ஒன்பது கோயில்களைப் பேணியும், பாடல் பெற்ற பல தலங்களைப் புதுப்பித்தும், புதிய கோயிகள் பல கட்டியும் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டதற்கு. அவர்கள் சிவனை மறவாத சிந்தையர்களாக இருந்ததை. நாம் பிரதான காரணமாக கருதலாம். 

4. கோயில் இல்லாமல் ஊர் இல்லை:
சங்க காலத்தில் இயற்கையை மட்டுமே வழிபட்ட மக்கள், பின்னர் ஐவகை நிலங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வந்தனர். குறிஞ்சி நிலத்திற்கு முருகனையும், முல்லை நிலத்திற்கு திருமாலையும், பாலை நிலத்திற்குக் கொற்றவையையும், மருத நிலத்திற்கு இந்திரனையும், நெய்தல் நிலத்திற்கு வருணனையும் வழிபட்டனர். உருவ வழிபாடு விரிவடைந்த பிறகு தமிழ்நாட்டை ஆண்ட அரசர்கள் கோயில்களை விரிவுபடுத்தியும் வழிபாட்டு முறைகளை வகுத்தும் செம்மைப்படுத்தினர். செங்கலாலும் மரத்தாலும் கோயில் கட்டப்பட்டு வந்த காலத்தில் முதன் முதலில் பல்லவர்கள் குடைவரைக் கோயில்களை உருவாக்கினர், பின்னர் ஒற்றை கற்றளி கோயிகள், கட்டக் கோயில்கள் போன்ற புதிய வடிவிலான கோயில்களைக் கட்டினர். இவர்களுக்கு பின் சோழர்கள் மாபெரும் கோயிலைக்கட்டியும் வின்னை முட்டும் விமானங்களை எழுப்பியும் கோயில்களுக்கு என பல கிராமங்களை வழங்கி வந்தனர் . இவர்களுக்கு பின் பாண்டியர்களும் மாபெரும் கோயில்களை கட்டி முகப்பு வாயிலில் வானுயர கோபுரங்கள் எழுப்பிக் கோயில் கலைப்பாணியில் புதிய முறையைப் புகுத்தினர். இவர்களுக்கு பிறகு வந்த விஜயநகரர், நாயக்கர், குறு நில மன்னர்கள் ஆகியோர் மூவேந்தர்கள் கட்டிய பல கோயில்களை விரிவுபடுத்தியும் பல்வேறு மண்டபங்களை புதிதாக கட்டியும் புதுப்பித்தும் வந்தனர். 

இவர்களுக்கு பிறகு, 'நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்', மன்னர்கள் கட்டிய பலநூறு கோயில்களை புதுப்பித்தும் சிதிலமடைந்திருந்த கோயில்களை பழமை மாறாமல் பிரித்து புதிய வெள்ளைக்கல்லால் மறு கட்டுமானம் செய்தும், புதிய கோயிகள் பல கட்டியும் இறைவனுக்கு பல திருப்பணிகள் செய்தும் மக்களிடயே இறை பக்தியை வளர்த்துவந்துள்ளனர். மேலும் "கோவில் இல்லா ஊரில் குடியிருக்காதே" என்ற ஔவையின் மொழிக்கேற்ப, தாங்கள் வசிக்கும் ஊர்கள் தோறும் புதிதாக பல கோயில்களை கட்டியுள்ளனர். 

செட்டிநாட்டில் உள்ள 76 ஊர்களிலும் கோயில்கள் உள்ளன. இவற்றுள் 43 ஊர்களில் அவ்வூர் நகரத்தார்கள் பொதுவில் சிவன் கோயில்களை கட்டியுள்ளனர், அவை நகரச் சிவன் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. 10 ஊர்களில் தனிப்பட்ட நகரத்தார் குடும்பத்தினர் 11 சிவன் கோயில்களை கட்டியுள்ளனர். 3 ஊர்களில் நகரத்தார்கள் பொதுவிலும் 15 ஊர்களில் தனிப்பட்ட நகரத்தார் குடும்பத்தினர் 20 பெருமாள் கோயில்களைக் கட்டியுள்ளனர். இவைதவிர செட்டிநாடு முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களையும் முருகன் கோயில்களையும் இருநூறுக்கும் மேற்பட்ட பிள்ளையார் கோயில்களையும் கட்டியுள்ளனர் மற்றும் தங்கள் ஊர்களில் சிதிலமடைந்திருந்த பெருவாரியான புராதன கோயில்களை புதுப்பித்தும், பழமை குன்றாமல் மறு கட்டுமானம் செய்தும் தினசரி பூஜைகள் நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.[7] 

5. ஊர்தோறும் ஊருணிகள்:
நீரின்றி அமையாது உலகு, எனவேதான் வள்ளுவ பெருந்தகை மழைநீரை அமிழ்தம் எனப் போற்றுகிறார். உலகிலேயே அதிகமாக ஊருணிகள் செட்டிநாட்டு பகுதியில் தான் அமைந்துள்ளது. இவை ஊராரால் உண்ணப்படும் குடிநீரை வழங்குவதால் ஊருணி என்று பெயர் பெற்றன. செட்டிநாட்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்து வரும் 76 ஊர்களிலும், அதை சுற்றி உள்ள பல ஊர்களிலும், செட்டிநாட்டு பகுதியில் இதற்கு முன்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்தவந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், பாடல் பெற்ற தலங்கள் பலவற்றிலும், புராதன தலங்கள் பலவற்றிலும் நகரத்தார்களால் ஆயிரக்கணக்கான ஊருணிகள் வெட்டப்பட்டுள்ளது. 

"ஊருணிகள் கூபமிவை உண்டுபண்ணி மிக்கதர்மம்
தாரணியில் செய்திட்ட சத்புருஷர்"
என நகரத்தார்களின் ஊருணி திருப்பணியைத் தமது திருமுக விலாசத்தில் பாடுவார் முத்தப்பர் பாராட்டியுள்ளார்.[8] 

நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முதல் கோயிலான இளையாற்றங்குடியில் உள்ள ஏழு பிரிவினரும் தமக்கென ஒரு ஊருணியை ஏற்படுத்தியுள்ளனர். அவை பிரளய ஊருணி, மணிக்குளம், செங்குளம், கல்யாணதீர்த்தம் எனும் மண்குளம், பட்டணசாமி ஊருணி, பிடாரிகுளம், கருவேலம்பள்ளம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. பொதுவாக நகரத்தார்களால் அமைக்கப்படும் ஊருணிகளின் கட்டமைப்பு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
ஊருணியை வெட்டி அப்படியே மண்ணூருணியாக விட்டுவிடாமல் அதைச் சுற்றி வெள்ளைக்கல் அல்லது செம்பராங்கலால் மதில்சுவர் எழுப்பி படித்துறைகள் கட்டுவர். யாளியின் வாய் போன்று அமைக்கப்பட்டிருக்கும் உள்வாய்ப் பகுதி வழியாக ஊருணியை சுற்றியுள்ள பூமியின் மீது விழும் மழைநீரை ஊருணியை வந்து சேரும் வண்ணம் அமைத்திருப்பர். சுற்று மதில் சுவரில் கார்த்திகையின் போது தீபங்கள் ஏற்றிவைக்க அழகிய விளக்கு மாடங்கள் அமைத்திருப்பர். அருகில் பிள்ளையார், முருகன், நடராஜர், கருப்பர் போன்ற தெய்வங்களை சிறிய மாடங்களில் செதுக்கியிருப்பர். ஒரு ஊருணியின் நீர் நிரம்பியவுடன் அருகேயுள்ள நீர்நிலைகளுக்கு உபரிநீர் செல்ல மடை அமைத்திருப்பர். 

மன்னர் திருமலை நாயக்கரால் கி.பி1645 இல் கட்டப்பட்ட மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமும் அதன் மையத்தில் உள்ள நீராழிமண்டபமும் காலப்போக்கில் சிதிலமடைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்தை கி.பி1860கள் வாக்கில் வயிநாகரம் நாகப்ப செட்டியார் சீர்படுத்தி, நீராழி மண்டபத்தை பிரித்து திருத்தியுள்ளார்[9] மற்றும் இந்த தெப்பக்குளத்தைப் பார்த்து வியந்த தேவகோட்டை ஜமீன்தார் அள.அரு.இராம.அருணாசலம் செட்டியார், இதே போல் தம் குடும்பத்தார் திருப்பணி செய்து வரும் காளையார் கோயிலில் உள்ள ஆனைமடு தெப்பக்குளத்தின் நடுவே அழகுற ஒரு நீராழி மண்டபத்தை கட்டியுள்ளார்.[10] தமிழகத்தின் மிகப் பெரிய குளங்களுள் ஒன்றான திருவாரூர் கமலாலய திருக்குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தை சக்கந்தி உல.க.கண குடும்பத்தார் மறு கட்டுமானம் செய்துள்ளனர்.[11] மேலும் கோவிலூர் தெப்பக்குள நீராழி மண்டபம், அரிமழம் பொற்கொடையான் ஊருணி நீராழி மண்டபம் ஆகியன நகரத்தார் ஊருணி கட்டிடக் கலைக்கு சான்றாக திகழ்கின்றன. 

நகரத்தார்களால் அமைக்கப்படும் ஊருணிகளை சார்ந்து உறுதியாக ஒரு பிள்ளையார் கோயில் கட்டப்பட்டிருக்கும். சிவன் கோயில் அல்லது பெருமாள் கோயிலை சார்ந்து ஊருணி அமைந்திருந்தாலும், ஊருணிக்கென தனி பிள்ளையார் கோயிலை கட்டியிருப்பர். இதுபோன்று ஊருணிகள் அமைப்பதன் வாயிலாகவும் கோயில் திருப்பணி செய்து மக்களிடையே இறைபக்தியை வளர்த்து வந்துள்ளனர். 

இவ்வாறு "கோயில் சார்ந்த ஊருணி - ஊருணி சார்ந்த கோயில்" என்பது நகரத்தார்களின் இறைபக்தியில் எழுந்த சமுதாய சிந்தனையை குறிக்கிறது. 

6. பாடல் பெற்ற தலங்களில் நகரத்தார் திருப்பணிகள்:
நகரத்தார் கோயில் திருப்பணிகள் குறித்து கவியரசு கண்ணதாசன் 'இன்று விழித்துவிட்டோம்' என்கிற கவிதையில் பின்வருமாறு கூறுகிறார் 

"வண்ணக் கலைவளர்த்தோம்; வரலாறே நாம் சமைத்தோம்;
எண்ணத் தொலையாத எத்தனையோ கோயில்களை(க்)
கண்ணில் இருத்திக் கலையோடு காத்துவந்தோம்
காசி நகரத்துக் கடவுளரைப் பேச வைத்தால்
காவிரிப்பூம் பட்டினத்தார் கலை உணர்ச்சி தோன்ற வரும்!
மாசற்ற பொன்னும் மணிவயிரம் இரத்தினமும்
தூசென்று எண்ணி தூக்கி கொடுத்துவந்தோம்
பண்டைத் தமிழ் மரபைப் பண்போடு காத்துவந்தோம்
அண்டை நிலங்களில்நம் ஆண்டவனை ஊன்றிவைத்தோம்
காசி விசாலாட்சி கவிமதுரை மீனாட்சி
கட்டியுள்ள ஆடைகளும் கழுத்திலுள்ள பொன்னகையும்
சுற்றியுள்ள மண்டபமும் தூக்கிவரும் வாகனமும்
முற்றும் அழியாத மொட்டை கோபுரத்தழகும்
அண்ணாமலையில் அமர்ந்து இருக்கும் பேரழகும்
ஆக்கிக் கொடுத்தவர்கள் அமர்ந்திருந்து காத்தவர்கள்
நாட்டுகோட்டை வளர்த்த நகரத்தார் அல்லேமோ!"[12] 

காசி முதல் இராமேஸ்வரம் வரை புகழ்பெற்ற கோயில்கள், நாயன்மார்கள் - ஆழ்வார்களால் பாடல் பெற்ற திருக்கோயில்கள் பெரும்பாலானவற்றில் நகரத்தார்கள் திருப்பணி செய்துள்ளார்கள். இவ்வகையில் திருத்தலங்களில் நகரத்தார் செய்துள்ள திருப்பணிகள் குறித்த விபரமும் அவற்றுக்காகச் செலவிடப்பட்ட பொருள் அளவும் வயிநாகரம் அ.இராமநாதன் செட்டியாரால் தொகுக்கப்பட்டு பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாரால் திருத்தப்படு 'நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு' என்ற பெயரில் மேயர் இராமநாதன் செட்டியாரால் 1953இல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் செட்டிநாட்டில் நகரத்தார்கள் வாழ்கின்ற ஊர்களிலும், அண்மையில் உள்ள தலங்களிலும், வடமாநிலங்களிலும், சோழநாட்டில் 78 தலங்களிலும், பாண்டிய நாட்டில் 20 தலங்களிலும், கொங்கு நாட்டில் 9 தலங்களிலும், நடு நாடு, தொண்டை நாட்டுத் தலங்கள் ஒவ்வொன்றிலும் 11 இடங்களிலும் என நகரத்தார் திருப்பணி செய்த கோயில்கள் குறித்த விபரங்கள் உள்ளன மற்றும் 1953ஆம் ஆண்டின் கணக்குப்படி நகரத்தார்கள் திருப்பணிக்காக செலவு செய்த தொகை ஏறத்தாழ 10,64,40,700 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[13] 

பாடல் பெற்ற தலங்கள் பலவற்றில் திருப்பணி செய்ய சமய உணர்வே காரணம். ஏதொ பெருமைக்காக தங்கள் பெயரை ஊரார் அறியவேண்டும் என்ற நோக்கில் செய்யவில்லை. இவர்கள் திருப்பணி செய்த பெரும்பாலான தலங்களில் கல்வெட்டுகளே வைத்துக்கொள்ளவில்லை. தாங்கள் செய்யும் திருப்பணி கடவுளுக்கு தெரிந்தால் போதும், ஊரார் அறிய வேண்டியதில்லை என்று எண்ணியுள்ளனர். ஒவ்வொரு நகரத்தார் குடும்பத்திற்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். அதில் சிலருக்கு தாங்கள் திருப்பணி செய்த கோயில் உள்ள ஊரில் பெயரே அமைந்திருக்கும் உதாரணமாக திருச்சுழியல் கோயிலில் திருப்பணி செய்த குடும்பத்தார் 'திருச்சுழியார் வீடு' என்றும் திருப்புணவாசலில் திருப்பணி செய்தவர்கள் திருப்புணவாசலார் வீடு என்றும் அழைக்கப்படுகின்றனர். 

7. நகரத்தார் கோயிற் கலைப்பாணி:
பல்லவர், சோழர், பாண்டியர், போன்ற அரச மரபினரால் தோற்றுவிக்கப்பட்ட கோயிற் கலைமரபுகள். பல்லவர் கலைப்பாணி, சோழர் கலைப்பாணி, பாண்டியர் கலைப்பாணி என அழைக்கப்படுகிறது. பிற்காலப் பாண்டியரை தொடர்ந்து வந்த விஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் பண்டைக்காலக் கோயில்கள் விரிவாக்கம் பெற்றன. குதிரை மண்டபங்கள், கல்யாண மண்டபங்கள், நூறுகால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எனப் பல பகுதியாகக் கோயில்கள் விரிவாக்கம் பெற்றன. இவர்களுக்கு பின், 'மன்னர் பின்னோர்' எனப் புகழாரம் சூட்டப்படும் நகரத்தார் நம்நாட்டில் கங்கைக்கரை வரை பல பகுதிகளையும் வாணிபம் காரணமாகச் சுற்றிப் பார்த்தபோது பல்வேறு வடநாட்டுக் கோயில் அமைப்புகளையும் கூர்ந்து நோக்கியுள்ளனர். பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் காலச் சிற்பக்கலைப் பாணிகளில் குறைகளை விடுத்து நிறைகளை ஏற்றுக்கொண்டு தமக்கெனத் தனிப்பாணியை வகுத்துக்கொண்டு கோயில்களை கட்டியுள்ளனர்.[14] இது 'நகரத்தார் கோயிற் கலைப்பாணி' என்று அழைக்கப்படுகிறது. 

நகரத்தார் கோயிகளும், சிற்பங்களும் செட்டிநாட்டுச் சிற்பிகளால் உருவாக்கப்பட்டவை. இவர்கள் பிள்ளையார்பட்டி, அருணாசலபுரம், தேவகோட்டை, எழுவங்கோட்டை, வைரவன்பட்டி ஆகிய ஊர்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள். நகரத்தார் கோயில் சிற்பங்கள் வாஸ்து சாஸ்திரம், மயமதம், மானசாரம், சகளாதிகாரம், காசியப சிற்ப சாஸ்திரம், ஸ்ரீ தத்துவநிதி ஆகிய சிற்ப நூல்கள் கூறுகின்ற இலக்கணப்படி காணப்படுகின்றன. 

கோயிலுள் நுழைந்ததும் கொடிமரம், நந்திமேடை, பலிபீடம், முகமண்டபம், பள்ளப் பிரகாரம், திருமாளிகை திருச்சுற்று, பரிவார தெய்வங்கள் சன்னதிகள், வாகன அறை, உற்சவர் அறை, கருவூலம், யாகசாலை, மடைப்பள்ளி, மலர்மேடை, கோயில் கிணறு, அலங்கார மண்டபம், மேல் திருச்சுற்றில் மகாமண்டபமும், அதனுள் நடராஜர் சபை, அர்த்த மண்டபம், கருவறை என இறைவன் சன்னதி கிழக்கு நோக்கியும், இறைவி சன்னதி தெற்கு நோக்கியும், இறைவி சன்னதி அருகே பள்ளியறை, வைரவர் சன்னதி என நகரத்தார் கோயில் அமைப்பு அமைந்திருக்கும். 

தூண் சிற்பங்களிலும் நகரத்தாரின் தனித்தன்மையை காணலாம். கோயில் தூண் வகைகளை வைத்தே இது எந்தப் கலைப்பாணியில் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பதை அறிய முடியும். தூணை உத்திரத்துடன் இணைக்கும் பகுதியை போதிகை என்பர். இப்போதிகை ஒவ்வொரு மன்னர் காலத்திலும் வேறுவேறு மாற்றங்களைப் பெற்று வந்தது என்றாலும் நகரத்தார்கள் கட்டிய கோயில்களில் போதிகையின் கீழ் ஒரு சிங்கத்தின் சிற்பம் கூடுதலாகக் காணப்படுகிறது. இது நகரத்தார்கள் சிங்கக் கொடியினை உடையவர்கள் என்பதைக் குறிப்பதாக ஏற்றுக்கொள்ளாம். போதிகையில் உள்ள பூமுனை ஒரே கல்லில் செதுக்காமல் தனியாகச் செய்து, காடி கொடுத்து கையால் திருகிப் பொருத்துமாறு அமைந்துள்ளமை நகரத்தாரின் கலைப்பாணியைத் தனியாக எடுத்துக் காட்டுகிறது.[15] 

கோயில் அமைப்பில் 'பள்ளப்பத்தி' என்பது நகரத்தார் கலைப்பாணியின் தனிச்சிறப்பாகும். கோயில் மண்டபங்களையும், மூலவர், பரிவார தெய்வங்கள் சன்னதிகள் ஆகியவற்றை உயர்த்தி கட்டித் திருச்சுற்றினை பள்ளமாக அமைத்துக் கட்டுவது பள்ளப்பத்தி என்னும் திருமாளிகை திருச்சுற்றாகும். 

8. அயல்நாட்டில் நகரத்தார் கோயில் திருப்பணிகள்
தென்கிழக்கு ஆசிய நாடுகள் எங்கும் இந்து மதம் நிலைத்திருக்க நகரத்தார்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றால் அது மிகையாகாது. அங்கு இவர்கள் கட்டிய கோயில்கள் தென்னிந்தியச் சிற்பக்கலை மரபை ஒட்டிக் கட்டப்பட்டவை. பெரும்பாலான கோயில்கள் 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டவையாகும். "கொண்டுவிற்கப் போன நாட்டில் கோயில் கட்டும் தூயர் " என்று கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு நகரத்தார்களின் இயல்பை பாராட்டுகிறார். 

தாயகத்தில் சிவ பெருமானுக்கு முக்கியத்துவம் கொடுத்த நகரத்தார்கள் தாங்கள் வணிகம் செய்யச் சென்ற நாடுகளில் முருகப் பெருமானை தண்டாயுதபாணிக் கோலத்தில் வழிபடுவதில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினர். 

இலங்கையில் சுமார் அறுபது கோயில்களை நகரத்தார் கட்டியுள்ளனர். அவற்றில் கொழும்பு நகரில் செட்டியார் தெருவில் உள்ள பழைய கதிரேசன் கோயில், புதிய கதிரேசன் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கது மற்றும் பாடல் பெற்ற ஈல தேச தலங்களான திருக்கேதீச்சுரத்திலும் திரிகோணமலையிலும் பெரும் பொருள் செலவிட்டு திருப்பணிகள் செய்துள்ளார்கள்.[16] பர்மாவில் நகரத்தார்கள் 59ஊர்களில் 62கோயில்களையும் மடங்களையும் கட்டியுள்ளனர். இக்கோயில்களை கவனிப்பதற்காகவே இரங்கூனிலும் மோல்மேனிலும் 'நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் கோயில்கள் தர்ம பரிபாலன சபை' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.[17] 

வங்காள தேசத்தில் உள்ள அக்யாப் நகரம் அக்காலத்தில் அரிக்கன் என்று அழைக்கப்பட்டது. அங்கே அரிசி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நகரத்தார்கள் 19ஆம் நூற்றாண்டில் அங்கு ஒரு முருகன் கோயிலும் சத்திரமும் கட்டியுள்ளனர். தாய்லாந்து தேசத்தில் வணிகம் செய்வது வந்த நகரத்தார்கள் அங்கு ஒரு மாரியம்மன் கோயிலை கட்டியுள்ளனர். தெற்கு வியட்நாம் தேசத்தில் உள்ள செய்கோன் நகரில் வியாபாரம் செய்து வந்த நகரத்தார்கள் அங்கு சில கோயில்களை கட்டியுள்ளனர். அதில் அழகிலும் அமைப்பிலும் சிறந்ததாக விளங்கும் சுப்பிரமணியசுவாமி கோயில் குறிப்பிடத்தக்கது. அக்கோயிலில் உள்ள வெள்ளித்தேரானது செட்டிநாட்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொண்டு செல்லப்பட்டது. இந்தோனேஷியாத் தீவுகளில் முக்கியமானது சுமத்திரா தீவு. இத்தீவின் தலைநகரான மைடான் தில்லியில் நகரத்தார்கள் தண்டாயுதபாணி கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். மொரீசியஸ் நாட்டில் தலைநகரான போர்ட்லூயி என்னும் நகரத்திற்கு, வியாபாரம் செய்யச் சென்ற நகரத்தார்கள் அங்கு மீனாட்சி உடனாய சொக்கலிங்கம் திருக்கோயிலை கட்டியுள்ளனர்.[18]
மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் இந்து ஆலயங்கள் அமைவதற்கு நகரத்தார்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். 

9. முடிவுரை:
இச்சிறிய கட்டுரையில் நகரத்தார் திருப்பணி செய்த அத்தனை கோயில்களையும் பட்டியல்யிட இடம் போதாது. எண்ணிலடங்கா கோயில் திருப்பணிகள் புரிந்த இவர்கள், கோயில்களில் தினசரி வழிபாடுகள் முறையாகவும் சிறப்பாகவும் நடக்கப் பல அறக்கட்டளைகளை ஏற்படுத்தியுள்ளனர். திருவிழா, திருப்பணிச் செலவுகளுக்காகச் சேமநிதிகள் ஏராளமாக வைத்ததோடு பல கிராமங்களையும் கொடையாகக் கொடுத்துள்ளனர். தற்போதும் நகரத்தார்கள் நிர்வாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அவைகளை சீரும் சிறப்புமாக நிர்வகித்து வருகின்றனர். 

அடிக்குறிப்புகள் :
1. ' தனவைசியராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம் ' (1894) - சதாவதானம் சுப்பிரமணிய ஐயர்
2. ' அபிதான சிந்தாமணி ' (1982) - சிங்காரவேலு முதலியார் - பக்: 960
3. ' நகரத்தார் அறப்பணிகள் ' (2001) - முனைவர் நா.வள்ளி - பக்:52
4. ' சிங்கப்பூர் தெண்டாயுதபாணி பத்து தோத்திரமஞ்சரி ' (1912) - க.வி. சந்தானகிருஷ்ண நாயுடு - பக்: 19
5. ' நகரத்தார் மரபும் பண்பாடும் ' (2007) - மா.சத்திரமூர்த்தி- மணிவாசகர் பதிப்பகம் - பக்: 441
6. ' நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு ' (1970) - வானதி பதிப்பகம் - பக்: XVII
7. ' நகரத்தார் கலைக்கலஞ்சியம் ' (1998) - மெய்யப்பன் பதிப்பகம் - பக்: 246-248
8. ' வேள் வணிகர் வரலாறு ' (2017) - தேவகோட்டை எஸ்.இராமநாதன் - தமிழ்க்கடல் பதிப்பகம் - பக்:197
9. ' மதுரை கும்பாபிடேக மலர் ' (1963) - மதுரையில் வயிநாகரம் திருப்பணி - பாலகவி வயிநாகரம் வே.இராமநாதன் செட்டியார் - பக்: 89
10. ' Town Planning In Madras ' (1918) - H.V. Lanchester - Picture-I
11. ' நகரத்தார் கலைக்கலஞ்சியம் ' (1998) - மெய்யப்பன் பதிப்பகம் - பக்:160
12. ' ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர நூற்றாண்டு மலர் ' (1963) - சோமலெ - பக்:20
13. ' நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு ' (1953) - பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் 
14. ' நகரத்தார் வளர்த்த சிற்பக்கலை ' (2005) - வ. தேனப்பன் - தமிழப்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்
15. ' நகரத்தார் மரபும் பண்பாடும் ' (2007) - மா. சத்திரமூர்த்தி - மணிவாசகர் பதிப்பகம் 
16. ' அலைகடலுக்கு அப்பாலும் நகரத்தார்களின் ஆலயப் பணிகள் ' (1979) - சோமலெ - சோமு நூலக வெளியீடு - பக்: 62
17. மேலது - பக்: 54
18. மேலது - பக்: 112- 120
--------------×----------------

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...