இராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்தில் நடந்ததைப் பிற்காலத்தில் எழுதினால் அது புராணம். இதிகாசம் என்பது நடக்கும் பொழுதே எழுதப்படும் சரித்திரமாகும். இராமாயணமும் மகாபாரதமும் இராமரும், பஞ்சபாண்டவர்களும் வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்ட சரித்திரங்கள்.
இரண்டுமே அண்ணன் தம்பி ஒற்றுமையைக் குறிப்பன. இராமாயணம் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக வாழ்ந்ததை உடன்பாடாக (Positive) வர்ணிக்கிறது. மகாபாரதம் எதிர்மறையாக (Negative) வர்ணிக்கிறது.
வடமொழியில் 24,000 சுலோகங்களில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை கி.பி 9ஆம் நூற்றாண்டில் சோழநாட்டில் வாழ்ந்த கம்பர், திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரவால் தமிழில் 12,000 பாடல்களாக பாடி அருளினார்.
இராமாயணம் படிப்பதாலும் கேட்பதாலும் நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அறத்தின் ஆணிவேராக திகழும் இராம பிரான் வரலாறு நம்மை என்றும் வாழ்விக்கும், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் வரிகள் வற்றாத இன்பத்தில் ஆழ்விக்கும்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சைவத்தையும், தமிழையும் போற்றி வளர்த்து வருபவர்கள் என்பதை நாடு நன்கறியும். அதே நேரத்தில் ஆழமான சைவப்பற்றுடைய நகரத்தார்கள் பிற சமய வெறுப்பாளர்கள் அல்லர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தான் நகரத்தார்கள் இடையே வைணவத்தின் தாக்கம் ஊடாடியிருக்கிறது. தாம் வாழும் ஊர்தோறும் நகரச் சிவன் கோயில்களைக் கட்டிய நகரத்தார்களுள் சிலர் தத்தமது ஊர்களில் பெருமாள் கோயில்களைக் கட்டியும், நிருவகித்தும் வருகிறார்கள்.
"செல்வத்து பயனே ஈதல்" என்னும் புறநானூற்று வரிக்கேற்ப, தாம் ஈட்டிய செல்வத்தின் ஒரு பெரும் பகுதியை இறைவன் திருப்பணிகளுக்கும் சமுதாய அறப்பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்புரவு நோக்கம் கொண்டவர்களாகத் தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர்கள் நகரத்தார்கள். அந்த வகையில் சிதிலமடைந்திருந்த எத்தனையோ திருக்கோயில்களை, பாடல்பெற்ற திருத்தலங்களை சீர்திருத்தியுள்ளனர். அதில் வைணவத் திருத்தலங்களும் அடங்கும்.
தில்லையில் கோவிந்தராசப் பெருமாள் கோயில் சிதைந்து இடிந்துவிழும் நிலைமையில் இருந்தபோது சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பழுதுபார்க்கப் படாமல் இருந்தது. ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவ்விரு தரத்தாரையும் அமைதியான முறையில் உடன்படச் செய்து தானே முன்னின்று தமது பெரும் பொருட்செலவில் செம்மையான முறையில் திருப்பணி செய்தார்.
சைவர்களுக்கு கோயில் என்றால் சிதம்பரம், அதுபோல் வைணவர்களுக்கு கோயில் என்றாலே திருவரங்கம். அத்திருத்தலத்தில் அரியக்குடி சித.சா மற்றும் சித.அ குடும்பத்தினர் ஒரு அன்னச்சத்திரம் கட்டி கி.பி1860ஆம் ஆண்டு முதல் இன்று வரை இடைவிடாது நாள்தோறும் அன்னம் பாலித்து வருகின்றனர். "மாசி கருடசேவை காசி சென்றாலும் கிடைக்காது" என்பர், அப்படிப்பட்ட திருவரங்க நம்பெருமாளின் மாசி மாத கருடசேவை நடக்கும் மண்டபமும் மேற்படி குடும்பத்தார் திருப்பணியே.
மேலும் தென்திருப்பதி எனப் போற்றப்படும் அரியக்குடிப் பெருமாள் கோயிலை நகரத்தார்கள் கட்டியதும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற காஞ்சி நிலாத்திங்கள் துண்டம், திருமெய்யம், திருக்கோட்டியூர், திருவில்லிபுத்தூர், திருக்கண்ணபுரம், அழகர்கோவில், கூடலழகர் கோவில் என பல வைணவத் திருத்தலங்களுக்கு நகரத்தார் செய்திருக்கும் திருப்பணிகளும் இராம பிரான் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தியில் செய்திருக்கும் திருப்பணிகளும் நினைக்கத்தக்கது.
நகரத்தார்கள் சோழ தேசம் விட்டு பாண்டிய தேசம் வந்தடைந்து முதன் முதலில் குடியேறிய ஊர் "இளையாத்தக்குடி" என்று வரலாற்று நூல்கள் செப்புகின்றன. இளையாத்தக்குடி நகரக் கோயில் அருகே கழனிவாசற்குடியார் வகுப்பினருக்கு தனியாக ஒரு பெருமாள் கோயில் உள்ளது மேலும் இளையாத்தக்குடியில் ஓட்டைப் பெருமாள் கோயில் என்னும் சிதைந்துபோன வைணவக்கோயில் ஒன்றும் உள்ளது. இவை ஆதியிலிருந்தே நகரத்தாருக்கும் வைணவத்திற்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது. இரணியூரிலும் நகரக்கோயிலின் அருகே நகரத்தார் நிர்வாகத்தில் பெருமாள் கோயில் உள்ளது. தேவகோட்டையில் பி.எஸ்.எஸ்.சாத்தப்ப செட்டியார் தம் வீட்டின் தோட்டத்திலேயே ஒரு பெருமாள் கோயிலை அமைத்து அதனருகே பூசகர்களுக்கும் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறார்.
நகரத்தார்களிடையே இருக்கும் இந்த வைணவத் தாக்கத்தின் மற்றொரு மிக முக்கியமான வெளிப்பாடாக அமைவது "இராமாயணம் படித்தல்" என்னும் பழக்கமாகும்.
இராமபிரானுடைய வரலாற்றை எளிய உரை நடையும், இடையிடையே நாட்டுப்பாடல் அமைப்பில் பாடல்களும், ஆங்காங்கே கம்பராமாயணச் செய்யுள்களும் கலந்த தமிழில் எழுதிவைத்த ஓலைச் சுவடிகள், செட்டிநாட்டில் பல குடும்பங்களில் புனிதமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வீட்டின் திண்ணை, மேல் பட்டாலை அல்லது சாமி அறை ஆகிய இவற்றுள் ஒரு இடத்தில் இராமர் பட்டாபிசேக படத்தை வைத்து, அதன் முன், மக்கள் கூடியிருக்கும் அவையில் இந்த ஓலைச்சுவடி, குடும்பத்தினர் ஒருவரால் அல்லது ஆசிரியர் ஒருவரால் படிக்கப்படும். இவ்வாறு முதல் தேதி தொடங்கி முப்பது நாட்கள் படிப்பதும் உண்டு. அல்லது ஒரு வாரமோ பதினைந்து நாட்களோ படிப்பதும் உண்டு.
இவ்வாறு படிக்கும் குடும்பத்திற்குக் குழந்தைச் செல்வமும் பிற நலங்களும் பெருகும் என்ற நம்பிக்கை நகரத்தார்களிடையே நிலவுகிறது. கால மாற்றத்திற்கேற்ப சிலர் பழைய ஓலைச்சுவடிகளை காகிதங்களில் கையெழுத்துப் படியாகவும், அச்சுப் புத்தகங்களாகவும் மாற்றிவிட்டனர். இந்த இராமாயணம் புத்தக வடிவில் இருந்தாலும் இன்றும் 'ஏடு' என்றே வழங்கப் பெறுகிறது.
நகரத்தார்கள் தங்கள் படைப்பு வீடுகளில் படைப்புக்குரிய பேழையை எவ்வாறு புனிதமாகப் பாதுகாத்து வைத்திருப்பரோ அவ்வாறே இந்த இராமாயண ஏடும் புனிதமாக இராமாயணம் படிப்போர் வீடுகளில் பாதுகாக்கப்படுகிறது.
புரட்டாசி மாதம் ஒன்றாம் தேதியோ, முதல் சனிக்கிழமையோ 'ஏடு எடுப்பது' என்பது ஒரு புனிதச் சடங்கு போலவே நிகழ்த்தப்படுகிறது. ஏடு எடுத்த நாளிலிருந்து, படித்து முடித்து, ஏடு மீண்டும் வைக்கப்படும் வரை இராமாயணம் படிக்கும் வீட்டைச் சேர்ந்தவர்கள் துர்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.
இராமாயணம் படிக்கும் நாட்களில் தொடக்க நாள், சீதை திருமணம் படிக்கப்படும் நாள், இராமன் அயோத்தி திரும்பும் வழியில் பரத்துவாசர் ஆசிரமத்தில் விருந்துண்ணும் நிகழ்ச்சி படிக்கப்படும் நாள், நிறைவாக இராமன் முடி சூட்டிக் கொள்ளுதல் (பட்டாபிசேகம்) படிக்கப்படும் நாள் ஆகிய நான்கு நாட்களும் மிகச் சிறப்புடைய நாட்களாக கருதப்படுகின்றது. இந்நாட்களில் வீடு விழாக்கோலம் கொள்ளும்.
குடும்பப் பெரியவர் இல்லாமல், அறிஞர் ஒருவர் இராமாயணம் படிப்பாரேயானால், நிறைவாக பட்டாபிசேகம் படிக்கப்படும் நாளில், அவருக்கு அக்குடும்பத்தினரால் சிறப்புச் செய்யப்படும்.
இப்பழக்கம் நகரத்தார் ஊர்கள் அனைத்திலும் சில பல குடும்பத்தினரால் தத்தமது இல்லங்களில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. சில ஊர்களில் நகரத்தார் பொதுச் செலவில் பெருமாள் கோயிலிலோ அல்லது வேறு பொது இடத்திலோ நடைபெறுகிறது.
எவ்வளவு காலமாக "இராமாயணம் படித்தல்" நிகழ்ந்து வருகிறது என திட்டமாகக் கூற இயலவில்லை. ஆயினும் கோனாப்பட்டில் மு.கி குடும்பத்தார் எட்டாவது தலைமுறையாக இன்றும் தங்கள் வீட்டில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர் மற்றும் நற்சாந்துபட்டியில் சாமியாடிச் செட்டியார் குடும்பத்தார் தங்கள் வீட்டில் கி.பி.1843 முதல் இன்று வரை ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர் என்பது ஆதாரத்துடன் கூடிய உண்மை.
கோனாபட்டை சேர்ந்த மு.கிருஷ்ணப்பச் செட்டியார் என்பவர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வணிகத்தின் பொருட்டு பாய்மரக் கப்பலில் வெளிதேசம் சென்று திரும்புகையில் நடுக் கடலில் பெரும் புயலில் சிக்கிக்கொண்டார், கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது, என்ன செய்வதென்று அறியாதிருந்தபோது, அவர் மட்டும் "ராம,ராம,ராம.." என இரண்டெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஓதிக்கொண்டிருந்தார்,
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்"
என்னும் கம்பனின் கவிக்கேற்ப "ராம" என்னும் இரண்டெழுத்து மந்திரத்தின் உயர்ந்த பலனால், நடுக் கடலில் திடீரென எங்கிருந்தோ வந்த வானரம் ஒன்று பாய்மரத்தின் ஒருபக்க கயிற்றை பிடித்து இழுக்க மற்றொரு பக்க கயிற்றை செட்டியார் கெட்டியாக பிடித்துக்கொண்டார். மூன்று நாட்கள் அக்கயிற்றை விடாது பிடித்துக்கொண்டு கரை ஒதுங்கினார்.
ஊர் திரும்பியதும் "உன்னை காப்பாற்றியது அந்த அனுமன் தான், இராமனின் ஆணைக்கிணங்க இராமனின் சீடனான அனுமன் தான் உன்னை காத்து அருளியுள்ளான். இராமபிரானின் பூரண அருளை பெற்ற நீ, உமது இல்லத்தில் இராமாயணம் படித்துவர அனைத்து நலமும் செல்வமும் பெருகும்" என்று ஊர்ப் பெரியவர்கள் கூற. அன்று தொடங்கி கிருஷ்ணப்பச் செட்டியார், தமது வீட்டில் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வரலானார். தாம் புதிதாக கட்டிவந்த வீட்டை நான்கு பங்குகளாக பிரித்து தமது மூன்று புதல்வர்களுக்கு தலா ஒரு பங்கும், இராமபிரானுக்கு ஒரு பங்குமாக வைத்து கட்டிமுடித்தார்.
இன்றும் அந்த வீட்டில் அம்மூன்று புதல்வர்களின் வழிமுறையினர் - எட்டாவது தலைமுறையினர் தொடா்ந்து வருடம்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர், இதில் சர்வ மக்களும் கலந்துகொண்டு இராமனின் பரிபூரண அருளை பெற்று வருகின்றனர். இவர்கள் வீடு "இராமாயணகார வீடு" என்று அழைக்கப்படுகிறது, இவ்வீட்டில் உள்ள இராம ஆவதார சிற்பங்கள் வனப்புமிக்கவை.
நாட்டரசன்கோட்டையில் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் சுப.இராமன் செட்டியார் என்றொரு இராம பக்தர் வாழ்ந்து வந்தார், அவரின் இராம பக்திக்கு சான்றாக அவர் கட்டிய வீட்டின் முகப்பு நிலையின் கருட பகவான் சிற்பமும், திண்ணையில் திருமாலின் திரு அவதார சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளதை இன்றும் நாம் காணலாம்.
இராமன் செட்டியார் தமது வீட்டில் வருடத்தின் 365நாட்களும் வைணவப் பெரியோர்களை கொண்டு தமிழ் மற்றும் வடமொழியில் இராம மந்திரங்களும் இராமாயணமும் படித்துவந்துள்ளார்.ஒருநாள் திருக்கோட்டியூரிலிருந்து வந்த ஐயங்கார் ஒருவர், கம்பராமாயணத்தில் கங்கைப் படலத்தில் வரும் கீழ்கண்ட பாடலை பாடினார்
"வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யோ எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் -
மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ! இவன் வடிவென்பதோர்
அழியா அழகு உடையான்"
இப்பாடலில் இராமனின் அழகை வருணிக்கும் கம்பன், ஒரு கட்டத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் "ஐயோ!, இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்" என்று முடிக்கிறார்.
இப்பாடலை கேட்டு வியந்த இராமன் செட்டியார், ஐயங்காரை மீண்டும் ஒருமுறை பாடச்சொன்னார், அவர் மீண்டும் பாடினார். "இராமன் என்ன அவ்வளவு அழகானவனா?" என்று கேட்டு மீண்டும் ஒருமுறை பாடச்சொன்னார். செட்டியார் மீண்டும் மீண்டும் கேட்க ஐயங்கார் மீ்ண்டும் மீண்டும் பாடினார், இறுதியாக கோபமுற்ற ஐயங்கார் "நீங்கள் எவ்வளவு முறை இந்த பாடலைக் கேட்டாலும் இராமனின் அழகை உங்களால் அனுபவிக்க இயலாது, இராமனின் சிலையை வடித்து ஒரு கோயில் கட்டி, பிரதிட்டை செய்து வழிபட்டால் தான் நீங்கள் அவனின் பேரழகை அனுபவிக்க முடியும்" என்றார்.
இதை சவாலாக ஏற்றுக்கொண்ட செட்டியார் சிற்பியை அழைத்து இராமனின் சிலையை செதுக்கச் சொன்னார். இது ஒருபுறமிருக்க உள்ளூரில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உரிய வேங்கடேசப்பெருமாள் கோயில் மிகுந்த சிதிலமடைந்திருந்தது. இதை கண்டு வறுத்தமடைந்த செட்டியார், கோயிலை புனரமைக்க தொடங்கினார், திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்கவிருந்த போது, சிவகங்கை சமஸ்தான பிரதிநிதிகளிடம் இருந்து ஒரு செய்தி வந்தது "கோயிலிலிருந்த பழைய பெருமாள் சிலையை மாற்றி இராமர் சிலையை வைக்கக்கூடாது" என்று அதில் எழுதியிருந்தது. நீதிமன்றத்திற்கு சென்றார் செட்டியார், நீதிபதியும் பழைய பெருமாள் சிலையை மாற்றக்கூடாது என்று தீர்ப்பு வழங்கினார். எல்லாம் அவன் செயல் இறைவனின் விருப்பம் அதுவாயின் அப்படியே நடக்கட்டும் என்று இராமன் சிலையை பிரதிட்டை செய்யாமல், புதிதாக எழுப்பிய கற்கோயிலில் வேங்கடேசப்பெருமாளுக்கு கி.பி 1899-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தார் இராமன் செட்டியார். பின்னர் அவரின் வம்சாவளியினர் ஒரு புதிய மனையில் கோயிலை எழுப்பி அங்கு இராமன் சிலையை பிரதிட்டை செய்து கல்யாணராமர் என்று திருப்பெயரிட்டு கும்பாபிஷேகம் செய்தனர். மேற்படி பழைய கோயில் சீர் செய்யப்பெற்றதற்கும் புதியதோர் கோயில் அமைக்கப்பெற்றதற்கும் கம்பன் இயற்றிய ஒரு பாடல் தான் காரணம் என்றால் அது மிகையல்ல!
மற்றொரு உண்மைச் சம்பவம், திருமலை சமூத்திரம் என்னும் நற்சாந்துபட்டியில் வசித்துவந்த சாமியாடி செட்டியார் என்கிற ஆண்டியப்ப செட்டியாரின் இரண்டாவது குமாரரான சின்னக்கருப்பஞ் செட்டியார், திருமால் மீது மிகுந்த பக்தி உடையவராய் திகழ்ந்தவர், இவர் காவிரியில் தீர்த்தமாட சென்ற போது, நீரில் மிதந்து வந்த ஓலைச்சுவடிகளை கண்டு அவற்றை எடுத்து தம் வேட்டியில் கட்டிக்கொண்டு ஊர் திரும்பினார். கோவில்பட்டியை சேர்ந்த அய்யாச்சாமி என்பவரை வரவழைத்து சுவடிகளை காட்டினார், அவர் இவை இராமாயண சுவடிகள் என்பதை உறுதிசெய்தார். பின்னர் அவர் மூலமாக இவற்றை புதிய ஏட்டில் படியெடுக்கச் செய்து, கி.பி.1843 ஆம் ஆண்டு முதல் தமது இல்லத்தில் வருடந்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வரலானார் சின்னக்கருப்பன் செட்டியார். இச்செய்தியை நாம் அந்தச் சுவடியிலுள்ள அடிகண்ட பாடலால் அறிந்துகொள்ளலாம்.
"செல்வனாம் தொட்டியச் சின்னானூராளியை
நல் மனதாகப் போற்றும் நமது ஆண்டியப்பவேள்
சொல் மறவாத புத்ரன் சுமுகனுக்கய்யாச்சாமி
கல்விசேர் புகழும் சின்னக்கருப்பனுக் கெழுதினேனே"
சோபகிருது ௵ அற்பிசி ௴ 7௳ (1843)
இவ்வாறு இராமாயணம் படித்துவரும் காலத்தில் சின்னக்கருப்பஞ் செட்டியார் வாழ்ந்த வீட்டில் எதிர்பாராத விதமாக கூரையில் தீப்பிடித்தது, வீடே தீக்கிரையான போது இராமாயண ஓலைச்சுவடிகள் மட்டும் எவ்வித சிதைவும் ஏற்படாமல் இருந்தன. நூற்றெண்பது ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை அந்த ஓலைச்சுவடிகள் பத்திரமாக காக்கப்பட்டு வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப நூல்ளாக மாற்றப்பட்டு அவர் தம் வழிமுறையினர்களால் தொடர்ந்து இன்றுவரை வருடந்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படிக்கப்பட்டு வருகிறது. அதே ஊரில் உள்ள கம்பன் செட்டி குடும்பத்தார் சாமியாடி செட்டியார் குடும்பத்தாரிடம் இருந்த ஓலைச்சுவடிகளை படியெடுத்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக வருடந்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர்.
நெற்குப்பை ந.பழ குடும்பத்தார் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கொழும்பிலிருந்து கொண்டுவந்த அடர் நீல வண்ண இராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்து அதன் முன் வருடாவருடம் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்துவருகின்றனர்.
இது போல் செட்டிநாடு முழுவதிலுமுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தத்தமது வீடுகளில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இராமாயணம் படித்து வருகின்றனர். எண்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இராமாயணம் படித்து வருகின்றனர். (பட்டியலின் நீளம் கருதி இங்கு வெளியிடவில்லை)
கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள், தம் இல்லத்தில், தாம் சிறுவனாக இருக்கும் பொழுது, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், இராமாயணம் படிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றமையே, தமது கம்பராமாயண ஆர்வத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். உலகிலுள்ள கம்பன் கழகங்கள் அத்தனைக்கும் தாய் கழகமான "காரைக்குடி கம்பன் கழகம்" கி.பி.1939ஆம் ஆண்டு கம்பனடிப்பொடியால் தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல் சுமார் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை கம்பராமாயணத்தைப் பரவலாக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்து வருகிறது.
மேலும் செட்டிநாட்டவர் பலர் தாங்கள் வாழும் ஊர்களிலும்,வெளிதேசங்களிலும் இராமாயணம் படித்து வருகின்றனர்.
"யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்" என்றாற்போல, இராமாயணம் படிப்பதன் மூலமும், கேட்பதன் மூலமும் எல்லோரும் நலம் பெற்று வாழவேண்டும் என்ற தர்ம சிந்தனையுடன் நகரத்தார்கள் இராமாயணம் படித்துவருகின்றனர்.
- பழ.கைலாஷ்.