-பழ.கைலாஷ்-
செட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பலர் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள், செட்டிநாட்டு வீடுகளையும் கோயில்களையும் சுற்றிபார்கிறார்கள் புகைப்படம் எடுக்கிறார்கள் பின்னர் அடுத்த சுற்றுலா தலத்திற்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பிரான்ஸ் நாட்டிலிருந்து செட்டிநாட்டுக்கு சுற்றுலா வந்த இருவர் செட்டிநாட்டு வீடுகள் மேல் காதல் கொண்டு கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக செட்டிநாட்டிலேயே வசித்துவருகின்றனர். மேலும் இவர்கள் "செட்டிநாடு" யுனெஸ்கோ(UNESCO)வின் "உலக பாரம்பரிய இடங்கள்-தற்காலிக பட்டியலில்"(Tentative list) இணைய பெரும் பங்காற்றியுள்ளனர்.
நான் கடந்த மாதம் இவர்கள் இருவரையும் கொத்தமங்கலம் "சாரதா விலாஸ்"-ல் ஒரு மதிய வேளையில் சந்தித்தேன். ஒருவர் பெயர் மீஸெல் அட்மென்ட்(Michel Adment) மற்றொருவர் பெயர் பெர்னார்ட் டிராகன்(Bernard Dragon). இந்த "சாரதா விலாஸ்" கி.பி.1905-ஆம் ஆண்டு சி.அ.சு.செல்லப்ப செட்டியாரால் கட்டப்பெற்ற அழகிய மாளிகை. இந்த வீட்டை தற்போது இவர்கள் இருவரும் ஹெரிடேஜ் ஹோட்டலாக(Heritage Hotel) நடத்திவருகின்றனர்.
இவர்களுடன் உணவருந்தி கொண்டு உரையாடலை தொடங்கினேன்...
●தமிழில் பேசுவீர்களா?
நீங்கள் இருவரும் உறவினரா? நண்பர்களா? உங்களை பற்றி கூறுங்கள்?
அட்மென்ட் : நாங்கள் இருவரும் நண்பர்கள், இருவரும் கட்டிடக் கலைஞர்கள்(Architects), இருவரும் பிரான்ஸ் குடிமகன்கள். எங்களுக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. ஆனால் கொஞ்சம் தமிழ் புரியும் பேசவராது.
டிராகன் : எனது சொந்த ஊர் மசாய்ஸ், இது பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ளது. அட்மென்ட் பிறந்தது அல்ஜீரியா அது அப்போது பிரான்ஸின் காலனி நாடு, இரண்டு வயது இருக்கும் போது அவர் குடும்பத்தார் பாரிஸ் வந்துவிட்டனர், அவர் வளர்ந்தது பிரான்ஸில் தான்.
●செட்டிநாடு பற்றி எப்படி தெரியும்? எப்போது இங்கு வந்தீர்கள்?
அட்மென்ட் : அது பெரிய கதை நான் கொஞ்சம் சொல்கிறேன், டிராகன் மீதியை சொல்வார். நாங்கள் இருவரும் பிரான்ஸில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆர்கிடெக்ட்-ஆக பணியாற்றி வந்தோம், உலகம் முழுவதும் பல கட்டிடங்களை வடிவமைத்துள்ளோம். இப்படி 1998 வாக்கில் சீனாவில் தங்கியிருந்து ஒரு பெரிய திட்டத்தில் பணியாற்றி வந்தோம். தினசரி வேலைகள் இருக்கும். ஓய்வு நேரம் மிகக் குறைவு. வேலைப் பளு அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் ஒரு ஆறு மாத காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு, கொஞ்ச காலம் எங்காவது சுற்றுலா செல்லலாம் என யோசித்து, இந்தியா செல்ல முடிவெடுத்தோம்.
டிராகன் : முதலில் மும்பை வந்திறங்கினோம். மும்பை விமான நிலையத்தில் சென்னைக்கான விமானத்தை தவரவிட்டுவிட்டோம். இப்போது இருப்பது போல் 1998-ல் நிறைய விமானங்கள் இல்லை. மும்பை விமான நிலையத்தில் அடுத்த விமானத்திற்காக காத்திருந்த போது கைடுபுக்கில்(GuideBook) மதுரை கோயில் கோபுரங்களை பார்த்தோம். நேரடியாக மதுரை வந்திறங்கினோம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றோம் இரவு நேரத்தில் விளக்கொளியில் கோயில் மிக அழகாக இருந்தது. சொல்ல வார்த்தையே இல்லை! பின்னர் கேரளா கொச்சின் சென்றோம். அங்கு பழைய மரத்தூண்கள், நாற்காலிகள் வாங்கிக்கொண்டு பிரான்ஸ் சென்றோம், மூன்றே வாரத்தில் அத்தனை பொருட்களையும் விற்றுவிட்டோம் பெரும் லாபம் கிடைத்தது. தொடர்ந்து சில முறை கேரளா வந்து பழைய பொருட்களை வாங்கிச் சென்றோம். அப்படி ஒருமுறை கேரளா வந்தபோது ஒரு மரத்தூணை வாங்கினோம் இது செட்டிநாட்டு தூண் என்றார்கள், செட்டிநாடு என்கிற வார்த்தையை அப்போது தான் கேள்விப்பட்டோம். 2000-ஆவது ஆண்டில் முதன்முதலாக செட்டிநாடு வந்தோம் இந்த பிரமாண்டத்தில் ழூழ்கினோம்! நாங்கள் ஏதோ பத்து இருபது பெரிய வீடுகள் இருக்கும் என நினைத்து வந்தோம், ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான மாளிகைகள் இருப்பதை கண்டு வியந்துபோனோம்.
●செட்டிநாட்டை யுனெஸ்கோ(UNESCO) வரை எடுத்து சென்றது எப்படி? செட்டிநாட்டில் தங்களை எது ஈர்த்தது?
அட்மென்ட் : எங்களை ஈர்த்தது செட்டிநாட்டு கட்டிடக்கலை என்று சொல்வதைவிட இவ்வளவு எண்ணிக்கையிலான பெரிய வீடுகள் தான் ஈர்ப்புக்கு காரணம். உலகில் எங்குமே இதுபோன்ற வீடுகள் ஒரே இடத்தில் இல்லை. நாங்கள் முதன்முதலாக செட்டிநாடு வந்தபோது முதன்முதலில் பார்த்த ஊர் பள்ளத்தூர், தெருக்களின் அழகில் மயங்கினோம். அப்போதெல்லாம் யாரும் தங்கள் வீட்டை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள், இருப்பினும் பள்ளத்தூரில் சில வீடுகளுக்கு உள்ளே நுழைந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சி தந்தது. பிரான்ஸ் சென்றவுடன் நண்பர்களிடம் செட்டிநாட்டு வீடுகள் பற்றி கூறினோம். சிலநாட்களில் மீண்டும் செட்டிநாடு வந்த போது திருமதி.மீனாட்சி மெய்யப்பன், திருமதி.விசாலாட்சி இராமசாமி, திரு.எம்.வி.சுப்பையா செட்டியார் ஆகியோர் உள்ளிட்ட பலரை சந்தித்து செட்டிநாடு கட்டிடக்கலை மற்றும் செட்டியார் வாழ்க்கை முறை பற்றி கேட்டறிந்தோம். எங்களுக்கு முன் 1990கள் இறுதியில் செட்டிநாட்டு வீடுகளையும் செட்டியார்களையும் ராபர்ட் துலாவ்(Robert Dulau) எனும் பிரெஞ்ச்காரர் ஆய்வுசெய்து பிரெஞ்ச் மொழியில் ஆய்வு நூலாக எழுதியிருந்தார். அதை படித்தும் தெரிந்துகொண்டோம்.
டிராகன் : பிரான்ஸில் யுனெஸ்கோ அமைப்பினரை சந்தித்து செட்டிநாடு பற்றி கூறினோம். அவர்கள் டெல்லியில் உள்ள யுனெஸ்கோவின் இந்திய தலைமையகத்திற்கு எங்களை அறிமுகப் படுத்தினார்கள். டெல்லியில் ஒரு பெண்மணி தான் யுனெஸ்கோ தலைமை பொறுப்பில் இருந்தார்கள், அவர்கள் உள்ளிட்ட அங்குள்ள யாருக்கும் செட்டிநாடு பற்றி தெரியவில்லை. நான் செட்டிநாடு பற்றி புகைப்படங்களுடன் செய்திகளை எடுத்து கூறிய பின் 2006-ல் Revive Chettinad Campain என்னும் திட்டத்தை கொண்டுவந்தார்கள். அதில் எங்களுடன் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., அமைச்சர், அண்ணா பல்கலைக்கழக ஆர்கிடெக்ட் மாணவர்கள், செட்டியார்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இது காரைக்குடியில் நடைபெற்றது. இத்திட்டத்தின் நோக்கம் செட்டிநாட்டு வீடுகளை அழிவிலிருந்து மீட்டெடுப்பது. பின்னர் 2008-ல் பிரான்ஸ் நாட்டு ஆர்கிடெக்ட் மாணவர்கள் மற்றும் இந்திய ஆர்கிடெக்ட் மாணவர்களுடன் சேர்ந்து நாங்கள் கொத்தமங்கலம், லெட்சுமிபுரம், கானாடுகாத்தான், பள்ளத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள செட்டியார் வீடுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய தொடங்கினோம். வீடுவீடாக சென்று செய்திகளை சேகரித்தோம். வீடுகள் கட்டிய காலங்களை கணக்கிட முகப்பு தோற்றம் மற்றும் வீட்டின் வடிவமைப்பை கொண்டு வகைப்படுத்தினோம்.
ஊரின் வரைபடம் அதில் தெருக்கள், பழைய வீடுகள், வடிகால் அமைப்புகள், ஊருணிகள், கோயில்கள் ஆகியவற்றை அளந்து வரைந்தோம். செட்டிநாட்டின் புவியியல், பொருளாதாரம், செட்டியார்களின் வரலாறு மற்றும் மக்களின் இன்றைய வாழ்க்கை முறையை பதிவுசெய்தோம். பின்னர் 2010-ல் யுனெஸ்கோ சார்பில் நாங்கள் "Chettinad Village Clusters of Tamil Merchants" என்னும் தலைப்பில் இவற்றை புத்தகமாக எழுதி ஆங்கிலத்தில் வெளியிட்டோம். அந்த புத்தகத்தை 2012-ல் பிரெஞ்ச் மொழியிலும் யுனெஸ்கோ சார்பில் வெளியிட்டோம். இப்படியாக தொடங்கிய எங்கள் பயணம் பல கட்ட பணிக்கு பின், 2014 ஏப்ரல் மாதம் செட்டிநாட்டை "உலக பாரம்பரிய இடங்கள்-தற்காலிக பட்டியலில்" இணைத்தது யுனெஸ்கோ.
●இந்த ஹெரிடேஜ் ஹோட்டல் தொடங்கியது எப்படி?
அட்மென்ட் : கிட்டத்தட்ட யுனெஸ்கோ பணி கதையும் சாரதா விலாஸ் கதையும் ஒரே இடத்தில் தொடங்கியது தான். 2007-ல் நான் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆர்கிடெக்ட்-ஆக பணியில் சேர்ந்தேன், அதேநேரம் டிராகன் செட்டிநாட்டில் யுனெஸ்கோ பணியை தொடர்ந்து வந்தார். அப்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் நீம்ரானா ஹோட்டல்ஸ்(Neemrana Hotels) உரிமையாளருமான பிரான்சிஸ் வக்சியார்க்(Francis Wacziarg) மூலம் சாரதா விலாஸ் எங்களுக்கு அறிமுகமானது. அவர் "நாம் மூவரும் இணைந்து சாரதா விலாஸை ஹெரிடேஜ் ஹோட்டலாக நடத்துவோம்" என்றார். ஆனால் அவர் சில காரணங்களால் விலகிக்கொண்டார். பின்னர் நாங்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து "Adment & Dragon Tourism & Cultural Development P.Ltd." எனும் நிறுவனத்தை இந்தியாவில் பதிவு செய்தோம். அதன்பின்னர் 2009-ல் சாரதா விலாஸ் உரிமையாளரான திரு.செல்லப்பன் அவர்களிடம் ஒப்பந்தம் செய்து இந்த வீட்டை குத்தகைக்கு எடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை புனரமைக்க தொடங்கினோம். இனிமேல் தான் பெரிய கதையே இருக்கு!
டிராகன் : ஆமாம்! இந்த வீட்டை புனரமைப்பது மிகுந்த சவாலான பணியாக இருந்தது. முதலில் வீட்டின் பல இடங்களில் ஒழுகியது, ஆகையால் வீட்டில் உள்ள நாட்டு ஓடுகளை பிரித்து பின் மீண்டும் அதே நாட்டு ஓடுகளை பரப்பினோம். அதில் சில ஓடுகள் உடைந்திருந்தது அவற்றுக்கு பதிலாக வீட்டின் மாட்டு கொட்டகையில் இருந்த நாட்டு ஓடுகளை பயன்படுத்தினோம். இப்போது யாரும் நாட்டு ஓடுகளை பழுதுபார்ப்பதில்லை. சீமை ஓடுகள் மற்றும் சீட் மூலம் நாட்டு ஓடுகளை மாற்றி அமைக்கின்றனர். ஆனால் நாங்கள் பழமை குன்றாதவாறு வீட்டை சீரமைக்க எண்ணினோம். அப்படியே செய்தோம். வீட்டின் சுவர்களில் பெயிண்ட் அடிப்பதை முடிந்த வரை தவிர்த்தோம், பிரான்ஸில் இருந்து வாங்கி வந்த பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தி சுவற்றில் உள்ள அழுக்குகளை நீக்கினோம். மேலும் பிற்காலத்தில் அடிக்கப்பட்டிருந்த கெமிக்கல் பெயிண்ட்ஸை நீக்கி அதன் உள்ளே இருந்த ஒரிஜினல் ஓவியங்களை மீட்டெடுத்தோம். எங்குமே புதிய கிரானைட் கற்களை பயன்படுத்தவில்லை, பழைய தரைதலத்தில் தேவைப்படும் இடத்தில் மட்டும் ஆத்தங்குடி பூக்கல் பயன்படுத்தினோம். வீட்டின் வெளிப்புறம் இருந்த சுதை சிற்பங்கள் எல்லாம் முற்றிலுமாக சிதைந்திருந்தது. அவற்றை அதற்கான கலைஞர்களை கொண்டு புதிதாக செய்தோம். 2010 முதல் சிறப்பாக ஹோட்டலை நடத்தி வருகிறோம். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து எங்கள் ஹோட்டலில் தங்குகின்றனர்.
●நீங்கள் செட்டிநாட்டவர்களுக்கு சொல்ல விரும்புவது?
நாங்கள் இருவரும் ஒரே வரியில் சொல்ல விரும்புவது "Revive Chettinad". செட்டிநாட்டை மீட்டெடுங்கள். யாரும் பழையவீட்டை இடிக்காதீர்கள். புனரமைக்கும் போதும் பழமை குன்றாதவாறு புனரமையுங்கள். தற்போது யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் உள்ள செட்டிநாட்டை நிரந்தர பட்டியலுக்கு கொண்டுவர சேர்ந்து முயர்ச்சிப்போம்.■
நமது செட்டிநாடு
பிப்ரவரி 2025