கல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில் நடைபெற்ற தொல்லியல் கழகத்தின் 33வது ஆண்டு கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் வெளியிடப்பட்டது.
சு .இராசகோபால் அவர்கள் தமிழகத்தின் மூத்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவர். தமிழக அரசின் தொல்லியல் துறையில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டுகள் தொடர்பாக பல நூல்கள் படைத்துள்ளார்.
இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடியவர். தொல்லியல் தொடர்பாகவும் கல்வெட்டுகள் தொடர்பாகவும் யாரேனும் சந்தேகம் கேட்டால் அதை உடனடியாக தீர்த்து வைப்பார். பெரியவர் சிறியவர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. தன் கருத்தே இறுதியானது என்றும் எப்போதும் வற்புறுத்த மாட்டார். அவர் முயற்சியால் வழிகாட்டலால் பல இளம் ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
![]() |
பவளவிழா நாயகர் சு.இராசகோபால் ஐயா மற்றும் பவானி ஆச்சியுடன் நான். |
சு.இராசகோபால் அவர்களின் தந்தையார் ஆத்தங்குடி பெ.மு.சுப.சுப்பையா செட்டியார் தீவிர தேசபக்தர், மகாத்மா காந்தி மீது கொண்ட பற்றால் இறுதி காலம் வரை மேற்ச்சட்டை அணியாமல் வாழ்ந்து வந்தார். மூதறிஞர் இராஜாஜியுடன் கொண்ட நட்பால் தன் மகனுக்கு இராசகோபால் எனப் பெயர் சூட்டியுள்ளார்.
சு.இராசகோபால் பாலகனாக இருந்தபோது அவர் தந்தையின் நண்பர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் பாலகன் சு.இராசகோபால் மீது பாடிய வாழ்த்துப்பா இது...
"வேலன் முருகன் ஆறுமுகன்
வின்னோர் பெருமான் திருவருளால்
பாலன் ராஜ கோபாலன்
பாரில் என்றும் வாழ்கவே.
அன்னை மதுரை மீனாட்சி
அருளால் ராஜ கோபாலன்
மன்னும் உலகில் நீடூழி
வாழ்க வாழ்க வாழ்கவே.
அன்னை பெரிய நாயகியின்
அருளால் ராஜ கோபாலன்
மன்னும் உலகில் நீடூழி
வாழ்க வாழ்க வாழ்கவே.
அந்தி வண்ணன் பிறைசூடி
ஆடும் பெருமாள் திருவருளால்
மைந்தன் ராஜ கோபாலன்
வாழ்க வாழ்க வாழ்கவே."
பவள விழா நாயகர் ஐயா சு.இராசகோபால் அவர்கள் அடுத்தடுத்து அமுதவிழா, கனகவிழா காண வாழ்த்தி வணங்குகின்றேன்.
- பழ.கைலாஷ்