Followers

Sunday, February 14, 2021

காலக்கணிதம்

கவியரசு கண்ணதாசன் 'காலக்கணிதம்' என்ற தலைப்பில் எழுதிய கவிதை.

"கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!

உண்டாயின் பிறர் உண்ணத் தருவேன்;
இல்லாயின் எமர் இல்லம்  தட்டுவேன்!

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!

கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!"
- கவியரசு கண்ணதாசன் 

படம்: கவியரசர் சிலை, சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...