Followers

Friday, February 26, 2021

தமிழ்த்தாய் கோயில்

தமிழ்த்தாய் கோயில், காரைக்குடி.

[இன்று உலகத்தாய் மொழி தினம் (பிப்ரவரி 21)]


"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"

என பாரதி பாடிய மூவரின் சிலையும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவிலிலுள்ளது. 


உலகிலேயே மொழியைத் தெய்வமாக்கிக் கோயில் கட்ட வேண்டும் என்ற இலட்சியம் ஒரு தமிழரின் சிந்தனையின்தான் முதன் முதலில் தோன்றியது என்றால் அது மிகையாகாது, அவர் காரைக்குடியை சேர்ந்த கம்பன் அடிப்பொடி சா.கணேசன்.  முதன் முதலில் கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு விழா எடுத்து கம்பன் கழகத்தை தோற்றுவித்தவரும் அவரே.

இன்று உலகம் முழுவதும் பல கம்பன் கழகங்கள் கம்பன் புகழ் பாடி வருகின்றன, அவை அனைத்தும் காரைக்குடி கம்பன் கழகத்தையே தங்கள் தாய்க்கழகமாக மதித்துப் போற்றுகின்றன.


தமிழ்த்தாய் கோயிலானது கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்கள் சிந்தனையில் உருவாகி, கம்பன் அறநிலையாலும் தமிழக அரசாலும் செயல்வடிவம் பெற்று, காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தினுள் கட்டப்பட்டுள்ளது. 

தமிழ்த்தாய் கோயிலுக்கு 1975இல் கால்கோள் நாட்டிய அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழக அரசின் சார்பில் கோயில் திருப்பணிகளுக்காக ரூபாய் ஐந்து லட்சம் வழங்கியுள்ளார்.

ஆறுபட்டை, ஆறுநிலை, ஆறுவிமானங்கள் கொண்ட கோயிலாக இது கம்பன் மணிமண்டபத்திற்கு வலப்புறம் அமைந்துள்ளது. இதன் நடுவிமானத்தின் கீழ் தமிழ்த்தாய் வடக்கு நோக்கி மணிமண்டபத்தைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறாள். வலப்புறம் அகத்தியரும் இடதுபுறம் தொல்காப்பியரும் இடம்பெற்றுள்ளனர். சுற்றுக் கோயில்களாக வடகீழ்க்கோடியில் வள்ளுவர், தென்கோடியில் இளங்கோ, வடமேற்கோடியில் கம்பர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். மேல் வலது கையில் சுடரும் இடது கையில் யாழும் உள்ளன. கீழ் வலது கையில் உருத்திராட்ச மாலையும், இடது கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பெற்றுள்ளன. தமிழ்த்தாய் வலது கால் கீழே தொங்கியவாறும், இடது கால் மடித்த நிலையிலும் வீற்றிருக்கிறாள். கால்களில் சிலம்பும், தண்டையும் அணிந்திருக்கிறாள்.




தமிழ்த்தாய் கோயிலைக் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் மற்றும் சிற்ப கலாசாரம் ம.வைத்தியநாத ஸ்தபதி ஆகிய இருவரும் இணைந்து வடிவமைத்துள்ளனர். கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சோழர் காலத்திய ஞான சரஸ்வதி சிற்பத்தின் வடிவத்தை முன்மாதிரியாக கொண்டே இங்குள்ள தமிழ்த்தாய் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


சிற்ப கலாசாரம் ம.வைத்தியநாத ஸ்தபதியால் தொடங்கப்பெற்ற கோயில் கட்டுமானப் பணியானது, அவர் மகனும் மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி முன்னாள் முதல்வருமான வை.கணபதி ஸ்தபதியால் நிறைவு செய்யப்பெற்று. இக்கோயிலுக்கு கால்கோள் நாட்டிய கலைஞர் மு.கருணாநிதியால் 16/04/1993இல் திறந்து வைக்கப் பெற்றுள்ளது.

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

அன்பன்
பழ.கைலாஷ்
21/02/2021

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...