Followers

Thursday, February 11, 2021

சோமலெ நூற்றாண்டு


தமிழ்கூறும் நல்லுலகால் 'சோமலெ' என்று மதிப்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் சோம.இலக்குமணன், சிவகங்கை மாவட்டம் 'நெற்குப்பை'யில் பெரி.சோமசுந்தரம் செட்டியார் - நாச்சம்மை ஆச்சி இணையருக்கு ஆறாவது குழந்தையாக 11.02.1921இல் பிறந்தார்.



சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து 1941ஆம் ஆண்டு பி.ஏ., பட்டம் பெற்றார். பின்னர் பம்பாயில் உள்ள ஹாரிமன் இதழியல் கல்லூரியில் படித்து 1947ஆம் ஆண்டு இதழியல் துறையில் நிறைசான்றிதழ் பெற்றார். தமது பதினாறாவது வயதில் ஆ.தெக்கூரை சேர்ந்த நாச்சம்மையை வாழ்க்கை துணையாக ஏற்றார்.



தம் குடும்பத்தினர் நடத்திவந்த ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்தின் காரணமாக 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி வரை ஆறு மாத காலம்  வெளிநாடுகளில் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரிட்டன், சுவீடன், ஜெர்மன், பிரான்ஸ், அயர்லாந்து, அமெரிக்கா, ஹவாய்த் தீவுகள், ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய பல நாடுகளில் 65,000 கிலோமீட்டருக்கும் மேலாக பயணம் மேற்கொண்டார். இந்த உலகச் சுற்றுப் பயணம் இவருக்குள் இருந்த எழுத்தாற்றலை வெளிக் கொணர்ந்தது என்றால் அது மிகையாகாது. "வணிகனாகச் சென்றேன், எழுத்தாளனாகத் திரும்பி வந்தேன்" என அவரே குறிப்பிடுவது போல, இந்த உலகச் சுற்றுப் பயணம் இவருள் இருந்த தகவல் சேகரிக்கும் ஆற்றல், அவற்றை வகைப்படுத்தி, முறை படுத்தி நூலாக்கும் ஆய்வுத்திறன் ஆகியவற்றை வெளிக் கொணர்ந்தது.

தொடக்கத்தில் சோம.இலக்குமணன் என்ற பெயரில் சில கட்டுரைகளையும், சில நூல்களையும் எழுதிவந்தார் நாளடைவில் சோமலெ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார், இப்பெயரே இலக்கிய உலகில் நிலைத்து நின்றது. " 'சோமலெ என்றால் தெரியலே' என்று தமிழ்நாட்டில் யாரும் சொல்ல மாட்டார்கள்" என்று 'ஆனந்த விகடன்' இவருக்கு அணி சூட்டியது.

'அமெரிக்காவைப் பார்' என்பது இவர் எழுதிய முதல் பயண இலக்கிய நூல். தொடர்ந்து 'நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்', 'ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம்', 'என் பிரயாண நினைவுகள்', 'இமயம் முதல் குமரி வரை', 'நமது தலைநகரம்' என அவரது பயண நூல்கள் பல வெளிவந்தன. பயண இலக்கியத்தைச் சுவையுடனும் பிறருக்கு பயன்படும் செய்திக் களஞ்சியமாகவும் எழுதுவதில் 'சோமலெ'வுக்கு இணை வேறு யாரும் இல்லை.

"சோமலெயின் பயண நூல்களைப் படித்த பின்னர் தான் எனக்கு அமெரிக்க போக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது" என எம்.எஸ். உதயமூர்த்தி குறிப்பிடுவது சோமலெயில் பயண இலக்கியத்திற்கு ஒரு நற்சான்றிதழ் ஆகும்.



சோமலெ மிக எளிமையானவர், தன் வாழ்நாள் முழுவதும் தனது வேட்டி, சட்டை மற்றும் உள்ளாடைகளை தானே துவைத்து உடுத்தும் வழக்கம் கொண்டிருந்தார். புன்னகையை தவிர வேறு எந்த நகையையும் அணிந்து கொள்வதில்லை. எங்கு சென்றாலும் கையில் ஒரு துணிப்பையுடன் செல்வார், அதில் சிறிய குறிப்பு நோட்டு, பேனா, தனது முகவரி,தனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை வைத்திருப்பார். இவரது நற்குணங்களைக் கண்ட பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் "நெற்குப்பை பெற்றுத் தந்த நிறைகுடம் சோமலெ" எனப் புகழாரம் சூட்டுகிறார்.

சோமலெ தன் மகன் சோமலெ.சோமசுந்தரத்துக்கு எழுதிய கடிதங்கள், நேரு தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்திற்கு ஒப்பானது. அக்கடிதங்கள் பொது வாழ்வு, உலக நடப்புகள், தமிழகத்தின் நிலை, உலக அரங்கில் இந்தியாவின் நிலை எனப் பல செய்திகளை உள்ளடக்கியிருக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களைப் பற்றி நூல்கள் எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் சோமலெ மனதில் ஏற்பட, 1961க்கும் 1980க்கும் இடைப்பட்ட இருபது ஆண்டுக் காலத்தில் தமிழ்நாட்டு மாவட்டங்களுள் 10 மாவட்டங்களை பற்றி வரிசை நூல்களாக 10 நூல்கள் எழுதியுள்ளார். இந்த நூல்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாவட்டத்தின் கலைக்களஞ்சியமாக திகழ்கின்றது. இந்நூல்கள் இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் சுரங்கங்களாக இருந்து உதவி வருகின்றன.



பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஆகியோர் வாழ்க்கை வரலாற்றை நூல்களாக எழுதியுள்ளார்.


சென்னை பல்கலைகழக வெளியீடான 'தமிழ் இதழ்கள்' என்னும் இவரது நூல் இதழியலில் சோமலெ பெற்றிருந்த ஆழ்ந்த அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.


1984ஆம் ஆண்டு சோமலெ 'செட்டிநாடும் செந்தமிழும்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் செட்டிநாட்டின் வரலாறு, செட்டிநாட்டின் அமைப்பு, செட்டிநாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கை, செட்டிநாட்டிலுள்ள கோயிகள், செட்டிநாட்டில் வாழ்ந்து வரும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் கோயில் திருப்பணிகள், கல்விப்பணிகள், அறப்பணிகள், தமிழ்வளர்ச்சிப் பணிகள் ஆகியவை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்நூல் சோமலெயின் வாழ்கை சாதனையாகும்.



சோமலெ தம் தந்தையின் நினைவாக, தம் சொந்த செலவில் மதுரை மேலூர் அருகேயுள்ள 'பேப்பனையம்பட்டி'யில் அருள்மிகு சோமசுந்தர விநாயகர் கோயிலை கட்டியுள்ளார். கோயில் கட்டிய விபரம் அனைத்தையும் கல்வெட்டாக பதிவு செய்து வைத்துள்ளார். இது இவரது ஆவணச் சான்று வழங்கும் திறனுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.

"கும்பாபிஷேக மலர் வெளியிட வேண்டுமா? கூப்பிடுங்கள் சோமலெயை" என்று சொல்லும் அளவுக்கு, கோயில் குடநீராட்டு விழா மலர் என்றாலே அதனைச் சிறப்பாகப் பதிப்பிக்கும் திறனாளராக இவர் இனம் காணப்பட்டார். திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சிபுரம், காசி, இராமேஸ்வரம் உள்ளிட்ட 12 ஆலயங்களின் கும்பாபிஷேக மலர்களை வெளியிட்டுள்ளார் மற்றும் பிறந்த நாள் விழா மலர், நினைவு நாள் விழா மலர் எனப் பல மலர்களை சிறப்பாக பதிப்பித்து 'மலர் மன்னன்' எனப் பாராட்டப் பெற்றார். 




நெய்வேலி நிலக்கரித் திட்டம் பற்றி தமிழில் முதன் முதலில் நூல் எழுதியவர் இவரே. இவரது நூல்கள் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

சோமலெ தம் வாழ்நாள் முழுவதும் சுதந்திரப் பறவையாகவே வாழ்ந்தார். எனினும் 1955 முதல் 1958 வரை அண்ணாமலை பல்கலைகழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராகவும், 1958 முதல் 1960 வரை அண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியின் நிருவாகியாகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முதுநிலை ஆய்வாளராகவும், சாகித்திய அக்காதமிக்காக தமிழ் நூல்களின் பட்டியல் தயாரிக்கும் ஆய்வாளராகவும், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும்(1966) பணியாற்றியுள்ளார்.

‘‘எல்லா நாடும் தன் நாடாய், எங்கும் சுற்றி ஆராய்ந்து
நல்லார் பலரின் கருத்தையெலாம் நாளும் தேடித் தமிழ்மக்கள்
பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என்நண்பன்
சொல்லால் அமுதை வெற்றிடுவோன் சோம இலக்கு மணன்வாழ்க’’
என்று 'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை' சோமலெயை பாராட்டுகிறார். 



சோமலெ இம்மண்ணுலகில் நல்ல வண்ணம் 65ஆண்டுகள் வாழ்ந்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 80க்கும் அதிகமான நூல்களை எழுதி அழியாப் புகழ் பெற்று 03.11.1986இல் அமரரானார்.

வாழிய சோமலெ புகழ்!

அன்பன்
பழ.கைலாஷ்
தேவகோட்டை.
11.02.2021(சோமலெ நூற்றாண்டு நிறைவு நாள்)

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...