Followers

Monday, December 14, 2020

வேந்தன்பட்டி நெய்நந்தி

நெய்நந்தி 


வேந்தன்பட்டி நகரச் சிவாலயத்தில்  உள்ள நந்தீஸ்வரர் மிகச்சிறப்பு வாய்ந்தவர், இந்த நந்தீஸ்வரருக்கு சாத்தப்படும் நெய் எத்தனை நாட்களானாலும் ஈ, எறும்பு மொய்ப்பதில்லை. 


இந்ந நந்தி மற்றும் சிவலிங்கம் கொடும்பாளூரிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேந்தன்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, நகரத்தாரால் பிரதிஷ்டை செய்யபட்டு கி.பி1911ஆம் ஆண்டு முதல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. 

Monday, October 5, 2020

ஒ வெ செ மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை.

 ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை.


மண்பானைக்கும், மணக்கும் மல்லிக்கும் பெயர் பெற்ற ஊர் மானாமதுரை. ஊரின் உயிர் நாடி  அதன் நடுவில் ஓடும் வைகை நதி.

மேல் கரையில் ஆனந்தவள்ளி உடனாய சோமநாதர் கோயில், கீழ் கரையில் வீர அழகர் கோயில் ஆகியவை இவ்வூரின் சிறப்பு.

இவ்வூரின் மற்றுமொரு சிறப்பாய் விளங்குவது 'ஒக்கூர் வெள்ளையன் செட்டியார்  மேல்நிலைப்பள்ளி'.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மானாமதுரை மேல்கரையில் கொரட்டி கருப்பண்ணசாமி கோவில் அருகே குப்பண்ண அய்யங்கார் என்பவர் ஹையர் எலிமெண்டரி ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்தார். அதே காலகட்டத்தில் சீனிவாச அய்யங்கார் என்பவர் ஹிந்து செகண்டரி ஸ்கூல் என்ற மிடில் ஸ்கூல் ஒன்றை அதன் அருகே நடத்திவந்தார். இப்பள்ளியை சீனிவாச ஐயங்காரிடம் இருந்து ஒக்கூரை சேர்ந்த சி.கரு.சி.கரு.வெள்ளையன் செட்டியாரின் மூத்த புதல்வர் ராவ்சாகேப் சிந்தாமணி செட்டியார் 1921இல் விலைக்கு வாங்கி "ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் ஹைஸ்கூல்" என்று தம் தந்தையின் பெயரால் நடத்திவந்தார்.

இதே காலகட்டத்தில் மானாமதுரை கீழ்கரையில் "வித்யாபிவிருத்தி சங்கம்" என்ற பெயரில் நடந்துவந்த ஆரம்பப் பள்ளியையும் வாங்கி இவரே நடத்தி வந்தார்.

2 வருடம் கழித்து குப்பண்ண அய்யங்கார் பள்ளி நடத்தப்படாமல் மூடப்பட்டது. அதன் காரணமாக மேல்கரையில் தொடக்கப்பள்ளி இல்லாத குறையைப் போக்க தெற்கு ரதவீதி மேல்கோடியில்  'ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் தொடக்கப்பள்ளி மேற்கு' என்ற பெயரில் மற்றொரு தொடக்கப் பள்ளியைத் துவக்கினார். பிற்பாடு  குப்பண்ண அய்யங்கார் பள்ளிக் கட்டிடம் பயன்படுத்தப் படாமல் இருந்ததால் தொடக்கப் பள்ளி அவ்விடத்திற்கு மாற்றப்பட்டது.

1928 வாக்கில் தற்போதைய மேல்நிலைப்பள்ளி இருக்கும் இடம் வாங்கப்பட்டு ராவ்சாகேப் சி.கரு.சி.கரு.வெ.சிந்தாமணி செட்டியாரின் சகோதரர் சி.கரு.சி.கரு.வெ.ஆதப்ப செட்டியாரால் சுமார் ரூ.87,000 செலவில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 25.4.1935இல் அன்றைய மெட்ராஸ் மாகாண கல்வி அமைச்சர் திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியாரால் திறந்து வைக்கப்பட்டு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

இப்பகுதியிலேயே அழகிலும், அமைப்பிலும் சிறந்ததாக, ஐந்து ஏக்கர் பரப்பளவு உள்ள விளையாட்டு மைதானத்துடன் இப்பள்ளி அமைந்துள்ளது.

அக்காலத்தில் ஒருங்கிணைந்த இராமநாதபுர மாவட்டத்தில் இப்பள்ளியைச் சேர்த்து மொத்தம் 12 உயர்நிலைப் பள்ளிகள்தான் இருந்தன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

1978இல் இது மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.

வரும் 2021இல் நூற்றாண்டு விழா கொண்டாட காத்திருக்கிறது.


அன்பன்
பழ.கைலாஷ்

Tuesday, September 15, 2020

மங்கநாதன் குளம்

 மங்கநாதன் குளம், திருவாடானை 


19ஆம் நூற்றாண்டு இறுதியில் தேவகோட்டை பெரி.லெ.வெ குடும்பத்தார் இந்த குளத்தையும்  பிள்ளையார் கோயிலையும் கட்டியுள்ளனர்.


தற்போது குளத்தின் வட கரையில் "திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி" அமைந்துள்ளது, இது காண்போரை கவரும் வண்ணம் ரம்மியமாக உள்ளது.


Wednesday, July 22, 2020

அமராவதிபுதூர் மகளிர் கல்லூரி:



செட்டிநாட்டின் சீர்திருத்த செம்மல் என்று போற்றப்படும் 'சொ.முருகப்பனார்'1893இல் காரைக்குடியில் சொக்கலிங்கம் செட்டியார்-விசாலாட்சி ஆச்சி இணையருக்கு மகனாக பிறந்தார்.

சொ.முருகப்பனார் 1917இல் காரைக்குடியில் "இந்து மதாபிமான சங்கம்" எனும் அமைப்பை மூத்தோர் சிலருடன் சேர்ந்து தோற்றுவித்தார். இச்சங்கத்திற்கு 1919இல் வருகை தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார், இச்சங்கத்தின் மீது வாழ்த்து பாக்கள் பாடியுள்ளார். பின்னர் இரண்டாவது முறையாக 1920இல் பாரதி இச்சங்கத்திற்கு வருகை தந்த போது சங்கத்தினருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இங்கு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக் கொண்டதாக நமக்கு கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு புகைப்படம் 1920இல் இங்கே எடுக்கப்பட்டது.

பின்னர் அதே 1920ஆம் ஆண்டு "தனவைசிய ஊழியன்" எனும் பத்திரிகையை உருவாக்கினார். இப்பத்திரிக்கை பின்னர் 'தமிழ் கடல்'இராய.சொ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு "ஊழியன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.

சொ.முருகப்பனார் 1923இல் "காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தை" தொடங்கினார் . அதன் சார்பில் அதே ஆண்டு "குமரன்" எனும் இதழை தொடங்கி 35 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தார்.

சீர்திருத்த சிந்தனையாளரான இவர் ஒரு முறை பட்டுக்கோட்டையில் கைம்பெண் மறுமணம் குறித்து ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த 'மரகதவல்லி' என்ற கைம்பெண் "நான் ஒரு விதவை பெண், என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ள தயாரா?" என்றார். உடனே இவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இவர்கள் திருமணம் 29/06/1923இல் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. அக்காலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வது என்பதே பெரும் புரட்சி. இவர் சாதி மறுப்பு மற்றும் விதவை மறுமணம் செய்துள்ளார். இதை பார்த்தது தமிழ்நாடே வியந்தது.

1937இல் நாட்டுக்கோட்டை நகரத்தாரில் முதல் விதவை மறுமணம் நடந்தது, இதை முன்நின்று நடத்தி வைத்தவர் சொ.முருகப்பனார் ஆவார்.

இப்படியாக அவரை எல்லோரும் "சீர்திருத்த செம்மல்" என்று அழைத்துவந்தனர்.



காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் சொ.முருகப்பனாரும் அவர் மனைவி மரகதவல்லி அம்மையாரும் இணைந்து மகளிர் இல்லம் ஒன்றை நிறுவினர். இளம் கைம்பெண்களுக்கு கல்வி கற்பித்து கைத்தொழில்கள் பயிற்றுவித்து மறுமணம் செய்து வைக்கும் நோக்கத்துடன் 10/04/1938இல் பல ஏக்கர் பரப்பளவில் தோற்றுவிக்கப்பட்டது. இதன் சார்பில் மரகதவல்லி அம்மையாரை ஆசிரியராக கொண்டு "மாதர் மறுமணம்" எனும் இதழ் வெளிவந்து. பின்னர் இவ்வளாகத்தில் மழலையர் பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது.

சொ.முருகப்பனார் 1956இல் மறைந்தார். சொ.முருகப்பனார் மறைந்த பின்னரும் மரகதவல்லி அம்மையாரால் மகளிர் இல்லம் நடத்தப்பட்டு வந்தது. அம்மையாரின் மறைவுக்கு பின்னர் பள்ளத்தூர் பழ.லெ.பழனியப்ப செட்டியார் குடும்பத்தினரால் தொடர்ந்து நல்ல முறையில் நடத்தப்பட்டு வந்தது மற்றும் இக்குடும்பத்தினர் பள்ளத்தூரில் நடத்தி வந்த "ஸ்ரீ சாரதா சேவாசிரமம்" என்கிற மகளிர் சேவை நிறுவனம் இவ்வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வளாகத்தினுள் சாரதா தேவி கோவில்( ஸ்ரீ சாரதா தேவி மந்திர்) ஒன்று இவர்களால் பல லட்சம் ரூபாய் செலவில் 1992இல் கட்டப்பட்டது.



இவை அனைத்தும் 1996இல் "ஸ்ரீ சாரதா நிகேதன் சமிதி அறக்கட்டளை " யிடம் இலவசமாக ஒப்படைக்கப்பட்டது. இந்த சாரதா நிகேதன் சமிதி அறக்கட்டளை மூலம் 1998இல் சிலர் நன்கொடையில், புதிதாக "ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி" ஒன்று தொடங்கப்பட்டது. சொ.முருகப்பனாரும் மரகதவல்லி அம்மையாரும் கண்ட கனவை ஸ்ரீ சாரதா நிகேதன் சமிதி அறக்கட்டளை திறம்பட செய்துவருகின்றனர். அனைத்து சமயப் பெண்களும் இங்கு பயின்று வருகின்றனர். பெண்கள் முன்னேற்றத்துக்காக இடைவிடாது செயல்பட்டு வருகிறது இந்த அமராவதிபுதூர் மகளிர் கல்லூரி.


- Kailash PL

ஆறு முகங்களுக்கும் ஆறு படிமங்கள்!


திருப்புகழ - ஏறுமயிலேறி (திருவருணை)

"ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே"
- அருணகிரிநாதர்.








புகைப்படங்கள்: அறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய " ஆறுமுகமான பொருள்” நூல்.

Monday, June 29, 2020

காளையார் கோயில் அரிய புகைப்படம்.

காளையார் கோயில் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது. 
நாட்டுக்கோட்டை நகரத்தார் திருப்பணியின் போது 1800கள் இறுதியில் எடுக்கப்பட்டது.


பாண்டிய நாட்டிலுள்ள தேவாரப் பதிகம் பெற்ற தலங்கள் பதினான்கினுள்  "திருக்கானப்பேர்" எனும் "காளையார்கோயில்" ஒன்று.

அதி அற்புதமான இத்தலத்தில் மூன்று இறைவனும் மூன்று  இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லி

சோமேசர் - சவுந்தரவல்லி

சுந்தரேசுவரர் - மீனாட்சி

பலநூறு ஆண்டுகட்கு முன் பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இக்கோயில், பின்னர் பலராலும் திருப்பணிகள் செய்யப்பெற்றும் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது.

பாண்டியனால் கட்டப்பட்ட 5 நிலைகளைக் கொண்ட 90அடி உயர ராஜ கோபுரமும் அதன் அருகே 18ஆம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் கட்டப்பட்ட 9 நிலைகளைக் கொண்ட 155 1/2அடி உயர இராஜகோபுரமும் உள்ளன.

இத்தலத்தில் நாம் காணும் சுந்தரேசுவரர் - மீனாட்சி கோயில், நூறுகால் மண்டபம் நீங்கலாக ஏனைய சோமேசர்-சவுந்தரவல்லி கோவில், சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி கோவில் நகரத்தாரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டும், புதிதாக மண்டபங்களும் சுற்று பிரகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
1800கள் மத்தியில் தொடங்கி 1900கள் தொடக்கம் வரை திருப்பணிகள் நடந்துள்ளது.

காளையார் கோவில்- ஆனைமடு


இந்த புகைப்படம் 1900கள் தொடக்கத்தில் குளம் கட்டப்பட்ட புதிதில் எடுக்கப்பட்டது.



காளையார் கோயில் தெப்பக்குளம் - கஜபுஷ்கரணி எனும் ஆனைமடு குளம்.

புராண கதைப்படி, "இந்திரனின் வாகனமான ஐராவத யானை மகரிஷி ஒருவர் கொடுத்த சாபம் நீங்க இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டதாகவும், அப்போது தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாகவும், அந்த யானை உண்டாக்கிய பள்ளமே ஆனைமடு என்று சொல்லப்படுகிறது".

இக்குளம் பலநூறு ஆண்டுகட்கு முன் வெட்டப்பட்டது.

1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் "அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார்" அவர்கள் கல் திருப்பணி செய்து, மேலும் அழகு சேர்க்கும் வகையில் மதுரை வண்டியூர் தெப்பக்குளம் நீராழி மண்டபத்தை ஒத்து இக்குளத்தின் நடுவில் மிக அற்புதமான நீராழி மண்டபம் ஒன்றை புதிதாக நிறுவியுள்ளார்கள்.

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...