Followers

Wednesday, July 23, 2025

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில் நடைபெற்ற தொல்லியல் கழகத்தின் 33வது ஆண்டு கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் வெளியிடப்பட்டது.



சு .இராசகோபால் அவர்கள் தமிழகத்தின் மூத்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவர். தமிழக அரசின் தொல்லியல் துறையில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டுகள் தொடர்பாக பல நூல்கள் படைத்துள்ளார்.


இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடியவர். தொல்லியல் தொடர்பாகவும் கல்வெட்டுகள் தொடர்பாகவும் யாரேனும் சந்தேகம் கேட்டால் அதை உடனடியாக தீர்த்து வைப்பார். பெரியவர் சிறியவர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. தன் கருத்தே இறுதியானது என்றும் எப்போதும் வற்புறுத்த மாட்டார். அவர் முயற்சியால் வழிகாட்டலால் பல இளம் ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.


பவளவிழா நாயகர் சு.இராசகோபால் ஐயா மற்றும் பவானி ஆச்சியுடன் நான்.



சு.இராசகோபால் அவர்களின் தந்தையார் ஆத்தங்குடி பெ.மு.சுப.சுப்பையா செட்டியார் தீவிர தேசபக்தர், மகாத்மா காந்தி மீது கொண்ட பற்றால் இறுதி காலம் வரை மேற்ச்சட்டை அணியாமல் வாழ்ந்து வந்தார். மூதறிஞர் இராஜாஜியுடன் கொண்ட நட்பால் தன் மகனுக்கு இராசகோபால் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

சு.இராசகோபால் பாலகனாக இருந்தபோது அவர் தந்தையின் நண்பர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் பாலகன் சு.இராசகோபால் மீது பாடிய வாழ்த்துப்பா இது...

"வேலன் முருகன் ஆறுமுகன்

வின்னோர் பெருமான் திருவருளால்

பாலன் ராஜ கோபாலன்

பாரில் என்றும் வாழ்கவே.


அன்னை மதுரை மீனாட்சி

அருளால் ராஜ கோபாலன்

மன்னும் உலகில் நீடூழி

வாழ்க வாழ்க வாழ்கவே.


அன்னை பெரிய நாயகியின்

அருளால் ராஜ கோபாலன்

மன்னும் உலகில் நீடூழி

வாழ்க வாழ்க வாழ்கவே.


அந்தி வண்ணன் பிறைசூடி

ஆடும் பெருமாள் திருவருளால்

மைந்தன் ராஜ கோபாலன்

வாழ்க வாழ்க வாழ்கவே."


பவள விழா நாயகர் ஐயா சு.இராசகோபால் அவர்கள் அடுத்தடுத்து அமுதவிழா, கனகவிழா காண வாழ்த்தி வணங்குகின்றேன்.


- பழ.கைலாஷ்

Friday, July 18, 2025

அழகப்பா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் காமராஜர்

       ழகப்பா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், கல்லூரி நிறுவனர் வள்ளல் அழகப்ப செட்டியார், முருகப்பா குரூப்ஸ் அ.மு.மு.முருகப்ப செட்டியார், கானாடுகாத்தான் C.V.CT.வெங்கடாசலம் செட்டியார் இருக்கும் புகைப்படம்.



கோட்டையூரில் தாம் கட்டிய வீட்டை(ஸ்ரீநிவாஸ்) 1954-ஆம் ஆண்டு மகளிர் கல்லூரியாக மாற்றினார் வள்ளல் அழகப்பர். ஆகையால் "குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்" என்று போற்றப்படுகிறார்.

-பழ.கைலாஷ் 

காரைக்குடி இராமவிலாஸ் பங்களா குருப் புகைப்படம்

        


              காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் அருகேயுள்ள "இராமவிலாஸ்" பங்களாவின் முகப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம். 1930களில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம்.

வலமிருந்து இடது அமர்ந்திருப்பவர்கள் - இராமநாதன், கம்பனடிப்பொடி சா.கணேசன், இராஜாஜி , ஆறு.சொக்கலிங்கம் செட்டியார்(இராமவிலாஸ் வீட்டு உரிமையாளர்), காமராஜர், கிருஷ்ணசாமி நாயுடு.

ஆறு.சொக்கலிங்கம் செட்டியார் காரைக்குடியின் முதல் சட்டமன்ற உறுப்பினர். 

- பழ.கைலாஷ் 


Wednesday, July 16, 2025

தேவகோட்டை வெள்ளையன் ஊரணி குறித்து ஒரு சுவாரசியமான தகவல்.






தேவகோட்டை "வெள்ளையன் ஊரணி" இன்று ஊர் நடுவே மிகப்பெரிய சாக்கடையாக உள்ளது, சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து கழிவுநீர் ஊரணியில் கலக்கின்றது.

ஒரு காலத்தில் இந்த வெள்ளையன் ஊரணி தேவகோட்டை மக்கள் தாகத்தை தீர்க்கும் குடிதண்ணீர் ஊரணியாக இருந்துள்ளது. பின்னர் குளிக்கும் குளமாக இருந்துள்ளது, அதன்பின்னர் மலம் ஜலம் கழித்துவிட்டு கைகால் கழுவும் இடமாக இருந்தது, தற்போது அதற்கும் லாயக்கற்று இருக்கிறது.

1911ஆம் ஆண்டு வெள்ளையன் ஊரணி கலங்காதகண்ட விநாயகர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த அன்றைய திருவாடானை கோர்ட் நீதிபதி அவர்கள், ஊரணியில் பல் துலக்கிய பெண்கள் இருவரை கண்டித்து அபராதம் விதித்துள்ளார். அபராதம் என்றால் பணம் எதுவும் கட்ட சொல்லவில்லை, அவர்களை பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும்படி செய்துள்ளார். இது அன்றைய வைசியமித்ரன் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது.

வைசியமித்ரன் செய்தி பின்வருமாறு,

"வெள்ளையனூருணி விபரம்,

திருவாடானை நீதிபதியவர்கள் இவ்வூருக்கு வந்த போது, வெள்ளையனூருணியில் வந்திறங்கிப் பல் விளக்கி ஆபாசஞ் செய்தவர்களிருவருக்கு அபராதம் போடும்படி உத்தரவு செய்தார்களாம், பெண்கள் சிலருக்கும் அபராதமாகக் கோயிலுக்குத் தேங்காயுடைக்க செய்தார்களாம். எல்லோருக்கும் இது எச்சரிக்கையும், படிப்பினையுமாகும். இவ்வூருணியின் தண்ணீர் பானத்திற்கே உபயோகப்படுத்துவதாலும், அதன்கரையில் வசிப்போர்கள் காலையில் காவற்காரன் வருவதற்கு முன்னமேயே, அந்நீரில் ஸ்நானம் பண்ணுவதும், புடவைகளை நனைப்பதும், முதலிய அடாத செய்கைகளை விடியுமுன்பே செய்துவிட்டுப் போய் விடுவதாகக் கேள்வியுண்டாகையாலும், இவைகளை யெல்லாம் நிறுத்துவதற்கு, அவ்வூருணிக்கு இப்போது அமைந்திருக்கும் இரும்பு வேலியோடு இரும்பு கதவுகள் போட்டுவிட்டால் வெகு நலமாகும். அன்றியும், பலகைகளில் "ஆபாசஞ் செய்வோர் அபராதத்திற்குள்ளாவர்" என்று அறிவிப்பு எழுதி தொங்கவிடப்பட வேண்டும். இப்படி செய்தால் எவ்வழியும் அவ்வூருணித் தண்ணீருக்கு கெடுதி நேராது."


ஒரு காலத்தில் பல் துலக்கியதற்கும் புடவைகளை நனைத்ததற்கும் அபராதம் விதித்த ஊரணியின் நிலைமை இன்று படுமோசமாக இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

- பழ.கைலாஷ் 

Friday, July 11, 2025

நகரத்தார் கல்வெட்டு

 ன்றைய(11/07/2025) தினத்தந்தி நாளிதழில் நகரத்தார் தொடர்பான 15 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டறியப்பட்ட செய்தி வந்துள்ளது.


11/07/2025 தினத்தந்தி

இந்த கல்வெட்டு கண்டறியப்பட்ட "துவார்" என்னும் ஊரில் ஒரு காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வசித்துவந்தனர் என்று பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர் இங்கு வாழ்ந்த நகரத்தார்கள் வேறு சில ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர். இவ்வூர் நகரத்தார் வாழ்ந்த பழைய ஊர்கள் பட்டியலில் உள்ளது. இன்றும் இவ்வூரில் உள்ள வள்ளிலிங்கம் ஐயனாரை நகரத்தார் பலர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலுக்குள் அடைக்கம்மை ஆச்சி என்பவர் அடைக்கலம் ஆகியுள்ளார் அவருக்கு தனி சன்னதி உள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு மூலமாக தெரிய வருவது என்னவென்றால் 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் இங்கு வாழ்ந்து வந்த நகரத்தார் ஒருவர் வள்ளிக்கண்மாய் அருகே ஒரு ஊருணியை ஏற்படுத்தி உள்ளார். அதில் கல்வெட்டில், அவர் பெயரை பதிவு செய்துள்ளார். கல்வெட்டின் படி அவர் இளையாத்தங்குடி கோவில் கழனிவாசல் பிரிவை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் சிவந்தகாலழகியார் என்றும் தெரியவருகிறது.

- பழ.கைலாஷ்

Sunday, April 20, 2025

உத்தரகோசமங்கை - நகரத்தார் திருப்பணி

 

- பழ.கைலாஷ் -


"சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்

கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருள்தாளிணை பாடிப்

போரார் வேற்கண்மடவீர் பொன்னூசலாடாமோ"


தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இரவு பள்ளியறை பூஜையில் பாடப்படுவது திருவாசகத்தின் திருப்பொன்னூசல் பதிகம். இது மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் வசிக்கும் காலத்தில் உத்தரகோசமங்கையை நினைத்து பாடியது.


சுவாமியையும் அம்பாளையும் இரவு பள்ளியறையில் ஊஞ்சலில் ஓரு சேர அமர வைத்து ஆராதனை செய்து திருப்பொன்னூசல் பதிகத்தை தாலாட்டாக பாடி பூஜிப்பது தொன்றுதொட்டு வரும் சைவசமய மரபு. நாள் முழுவதும் எத்தனை பூஜைகளை பார்த்தாலும், இரவு பள்ளியறை பூஜையை கண்டு வழிபடுவது மிகுந்த புண்ணியமாக கருதப்படுகின்றது.


எத்தனை சிவாலயங்களில் பள்ளியறை பூஜைகள் பார்த்தாலும் அத்தனையும் விட புண்ணியமாக கருதப்படுவது திருப்பொன்னூசல் பதிகத்தில் குறிப்பிடப்படும் உத்தரகோசமங்கை பள்ளியறை பூஜையே! 


இவ்வளவு சிறப்புவாய்ந்த உத்தரகோசமங்கை பள்ளியறை கல்திருப்பணி செய்தவர்கள் தேவகோட்டை நகரத்தார்கள்.


பாண்டிய நாட்டில் உள்ள சிவதலங்களுள் மிகப்பழமையான தலமாக சைவர்களால் நம்பப்படுவது உத்தரகோசமங்கை. "மண் முந்தியோ மங்கை முந்தியோ" என்பது இத்தலம் குறித்து தொன்று தொட்டு வழங்கிவரும் பழஞ்சொல்.


"மீண்டு வாரா வழியருள் புரிபவன்

பாண்டி நாடே பழம்பதி யாகவும்

பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்

உத்தரகோசமங்கை ஊராகவும்"


எனத் கீர்த்தித் திருஅகவலில் மாணிக்கவாசகர் பாடுகிறார்.

இதன் பொருள், பக்தி செய்கின்ற அடியவர்களுக்கு சிவன் முக்தியைக் கொடுக்கிறான். அத்தகையவன் பாண்டிய நாட்டை தன்னுடைய உறைவிடமாகவும் உத்தரகோசமங்கையை தனது ஊராகக் கொண்டிருக்கிறான்.




இத்தலம் திருவாசகத்தில் 38 இடங்களில் பாடப்பட்டுள்ளது. இது மாணிக்கவாசகர் மனதிற்கு நெருங்கிய தலம். மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் காட்சியளித்து உபதேசித்த சிவபெருமான் மீண்டும் இத்தலத்தில் காட்சியளித்துள்ளார். 


உத்தரகோசமங்கை = உத்தரம்+கோசம்+மங்கை. உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது என்கிறது தலபுராணம்.


இத்திருத்தலத்தில் இறைவனும் இறைவியும் மங்களநாதர் - மங்களேசுவரி என்ற திருப்பெயர்களால் அருள்பாலிக்கின்றனர்.


இங்கு ஐந்தரை அடி உயர மரகதத்திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் அருள்பாலிக்கின்றார். மார்கழித் திருவாதிரையில் சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலம் சிதம்பரத்துக்கு இணையாக போற்றப்படுகிறது. ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகின்றது.


உத்தரகோசமங்கை கோயில் ஆதியில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பெற்றது. பின்னர் நாயக்க மன்னர்கள் மற்றும் சேதுபதி மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப்பெற்றுள்ளது. இது சேதுபதி மன்னர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்.


சுமார் 130ஆண்டுகளுக்கு முன்,  உத்தரகோசமங்கை கோயிலை சீரமைக்கும் பொறுப்பை மன்னர் பாஸ்கர சேதுபதி நகரத்தாரிடம் கொடுத்துள்ளார்.


தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு. அருணாச்சலம் செட்டியார் 1901-ஆம் ஆண்டு முதல் சில காலம் உத்தரகோசமங்கை கோயிலின் நிர்வாக மேலாளராக இருந்துள்ளார்.¹


தேவகோட்டை அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் தம் பொருட்செலவிலும் மேலும் சில தேவகோட்டை நகரத்தார் பொருட்செலவிலும் சிதிலமடைந்திருந்த உத்தரகோசமங்கை அம்பாள் கோயிலை முழுமையாக பிரித்து, புதிய கருங்கற்களை கொண்டு மங்களேசுவரி அம்பிகைக்கு கருவறை, அர்த்த மண்டபம், அழகிய வேலைப்பாடுடைய பன்னிரண்டு தூண்களுடன் முன்மண்டபம், பன்னிரண்டு தூண்களுடன் திருச்சுற்று மண்டபம், வெள்ளி ஊஞ்சலுடன் சிறப்புமிக்க பள்ளியறை மற்றும் இரண்டுநிலைகள் கொண்ட கோபுரம் கட்டியுள்ளார். முன்மண்டபம் மற்றும் திருச்சுற்றில் கண்ணைக்கவரும் வண்ண ஓவியங்களும் வெளிநாட்டு மின்விளக்குகளும் நிறைந்திருக்கின்றன.



இத்திருப்பணி வேலைகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்திருக்கின்றன.


அம்மன் கோயில் திருப்பணி நிறைவடைந்ததும், சிவன் கோயில் முன்மண்டபத்தை பிரித்துவிட்டு புதிய முன் மண்டபம், பெரிய திருச்சுற்று மண்டபம் மற்றும் மதில்சுவர் கட்டும் திருப்பணிகளை தொடங்கியுள்ளார் இராமசாமி செட்டியார். அப்போது முதலாம் உலகப்போர் ஆரம்பித்து விலைவாசிகள் ஒன்றுக்கு பத்தாக உயர்ந்துள்ளது. விலைவாசிகள் குறைந்து, பழைய நிலைக்கு வந்த பிறகு திருப்பணியை தொடரலாம் என்று காத்திருந்துள்ளார். அந்த சமயம் வயது மூப்பின் காரணமாக 1919-ல் அவர் இறந்துவிட திருப்பணிகள் பாதியில் நின்றுவிட்டன.


அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் 


அக்காலத்தில் நகரத்தார் பொதுவாக திருப்பணி செய்த கோயில்களில் கல்வெட்டுகள் வைப்பதில்லை. அதுபோல் உத்தரகோசமங்கையிலும்  இராமசாமி செட்டியார் செய்த திருப்பணி தொடர்பான கல்வெட்டுகள் ஏதும் இல்லை. அம்மன் கோயில் பெரிய மணியில் மட்டும் "தேவகோட்டை நகரத்தார்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.


இராமசாமி செட்டியார் முன்னின்று திருப்பணிகளை செய்திருந்தாலும் திருப்பணி செலவுகளை அவருடன் தேவகோட்டை நகரத்தார் சிலர் பகிர்ந்துள்ளனர். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் 1953-ல் எழுதிய "நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு" என்ற நூலில்² அழ.சித.லெ.இராமசாமி செட்டியாருடன் திருப்பணி செலவுகளை பகிர்ந்துகொண்ட தேவகோட்டை நகரத்தார் நால்வர் விலாசம் உள்ளது, அது பின்வருமாறு,

1.அரு.அரு.சோம (சத்திரம் சோம)

2.அரு.அரு.இராம (இரட்டை அரு)

3.அழ.அரு (ஜமீந்தார்)

4.அழ.சுப.சு


பாண்டிய மன்னரால் கட்டப்பெற்ற மங்களநாதர் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் நல்ல கருங்கற்களால் ஆனது. பின்னர் கட்டப்பெற்ற மண்டபங்கள் மற்றும் அம்பாள் கோயில் உள்ளிட்டவை கடற்பாறை கற்களால் ஆனது. கடற்பாறை என்பது கட‌ற்கரை பகுதியில் கிடைக்கக்கூடியது. அது எளிதில் சிதையும் தன்மை கொண்டது. ஆகையால் தான் கடற்பாறைகளால் கட்டப்பெற்று சிதிலமடைந்திருந்த பகுதிகளை நகரத்தார் கருங்கற்களால் மறுகட்டுமாணம் செய்துள்ளனர். இந்த உத்தரகோசமங்கை திருப்பணிக்காக அம்பாசமுத்திரம் அருகேயிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.


இராமசாமி செட்டியார் திருப்பணி வேலைகளை உத்தரகோசமங்கையிலேயே தங்கியிருந்து பார்த்துவந்துள்ளார். அதற்காக தெற்கு ரத வீதியில் ஒரு பங்களா கட்டியுள்ளார், அது திருப்பணி பங்களா என்று அழைக்கப்படுகின்றது. 


மேலும் இராமசாமி செட்டியாரால் மேற்கு ரத வீதியில் ஒரு பசுமடமும், பெரிய நந்தவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. நந்தவனத்தின் உள்ளே பூக்கட்டும் மடமும் அருகே இரண்டு பிள்ளையார் கோயில்களும் கட்டப்பெற்றுள்ளன.


பின்னர் 1959-ஆம் ஆண்டு மன்னர் பாஸ்கர சேதுபதியின் பேரர் மன்னர் ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி தலைமையில் தேவகோட்டை இரட்டை அரு குடும்பத்தார் திருப்பணி குழுவினராக இருந்து, இராமசாமி செட்டியாரின் மூத்த மகன் வழிப்பேரர் அழ.சித.லெ.இராம.இராம. லெட்சுமணன் செட்டியார் திருப்பணி செயலாளராக இருந்து மீண்டும் திருப்பணிகள் தொடங்கப்பெற்றுள்ளது.³ அதற்கு அடிக்கல் நாட்டிய கல்வெட்டு ஒன்று அங்குள்ளது. அப்போது மங்களநாதர் சந்நதி முன் மண்டபம், மதில் சுவர் மற்றும் திருச்சுற்று மாளிகை கட்டும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. லெட்சுமணன் செட்டியார் மறைந்ததும், மீண்டும் திருப்பணி பாதியில் நின்று விட்டது.



அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் பேரர் அரு.இராமசாமி செட்டியார் கூறுகையில்⁴ "எங்கள் ஐயா இராமசாமி செட்டியார் வலையபட்டியில் பிறந்தவர்கள், எங்கள் பாட்டையா லெட்சுமணன் செட்டியாருக்கு ஆண் வாரிசு இல்லாததால் இராமசாமி செட்டியாரை பிள்ளைகூட்டி கொண்டார்கள். உத்தரகோசமங்கை கோயிலை சீரமைக்கும் பொறுப்பை மன்னர் பாஸ்கர சேதுபதி தேவகோட்டை சத்திரம் அருணாசலம் செட்டியாரிடம் கொடுத்தார்கள். அருணாசலம் செட்டியாரின் மகள் உண்ணாமலை ஆச்சியை எங்கள் ஐயா திருமணம் செய்திருந்தார்கள். மேலும் எங்கள் ஐயாவுக்கு இராமநாதபுரத்தில் தொழில் இருந்தது கடைகள் இருந்தன. ஆகையால் உத்தரகோசமங்கை திருப்பணி பொறுப்பை அருணாசலம் செட்டியார், தனது மாப்பிள்ளையான எங்கள் ஐயாவிடம் ஒப்படைத்தார்கள். எங்கள் ஐயாவும் சிறப்புற திருப்பணி செய்தார்கள்."


மற்றொரு பேரர் அரு.சிதம்பரம் செட்டியார் கூறுகையில்⁵ "உத்தரகோசமங்கை திருப்பணிக்காக தேவகோட்டை சத்திரம் சோம குடும்பத்தார் 250ரூபாயும், இரட்டை அரு குடும்பத்தார் 250ரூபாயும், ஜமீந்தார் அழ.அரு குடும்பத்தார் 250 ரூபாயும், அழ.சுப.சு குடும்பத்தார் 125ரூபாயும் எங்கள் ஐயா அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் 125ரூபாயும் என மொத்தமாக மாதத்திற்கு 1000ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். வருடத்திற்கு 12,000ரூபாய். 10வருடங்கள் திருப்பணி நடந்துள்ளது. மொத்த திருப்பணிச் செலவு 1,20,000ரூபாய். திருப்பணியை எங்கள் ஐயா முன்னின்று மிகவும் சிக்கனமாக நடத்தியுள்ளார்கள். 


ஒருமுறை தேவகோட்டையில் இருந்து உத்தரகோசமங்கைக்கு மாட்டு வண்டியில் எங்கள் ஐயாவும் அப்பத்தாவும் செல்கையில் ஒரு திருடன் வண்டியை பின் தொடர்ந்து இருக்கிறான். அப்பத்தா 'திருடன் நம்மை தொடர்கிறான்' என்று சொல்ல, ஐயா 'அடி பைத்தியக்காரி அது திருடன் அல்ல மங்களநாதர் நமக்கு துணைக்கு வருகிறார்' என்று சொல்ல, அதைக் கேட்டு திருடனும் ஓடிவிட்டானாம். ஐயா எப்போதும் 'மங்களநாதா! மங்களநாதா!' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். உத்தரகோசமங்கை மங்களநாதர் மீது அளவுகடந்த பக்தி உடையவராய் இருந்தார்கள்."


 உத்தரகோசமங்கையில் திருப்பணி செய்ததின் காரணமாக தேவகோட்டையில் அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் வீட்டை உத்திரகோசமங்கை செட்டியார் வீடு என்று அழைக்கின்றனர். 


உத்தரகோசமங்கையில் இராமசாமி செட்டியாரால் தொடங்கப்பெற்ற சிவன் கோயில் திருப்பணி நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது கோவையை சேர்ந்த இரா.வசந்த குமார் அவர்களால் திருச்சுற்று மாளிகை முழுமையாக கட்டப்பெற்று திருப்பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரன்பணி அறக்கட்டளை குழுவினரால் கோயிலின் மற்ற பகுதிகள் பழமை குன்றாதவாறு சிறந்த முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இராமநாதபுர சமஸ்தான ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் அவர்கள் தலைமையில் வெகுசிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கும்பாபிஷேகத்தன்று சிதம்பரம் நகர விடுதி ட்ரஸ்ட் உடன் உத்திரகோசமங்கை செட்டியார் வீட்டில் "டென்னிஸ்அரு" குடும்பம் இணைந்து அவர்களின் பசுமடத்தில் அன்னதானம் செய்தார்கள்.■



மேற்கோள்கள்:


1. INDIAN STREAMS RESEARCH JOURNAL, Volume-7 Issue-3 - April 2017 - "Tourism Potential in Sculptures Art and Architecture of Uthirakosamangai Temple - A study" - Dr.R.Muthu and Mr.M.Syed Ibrahim


2. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - 1953 - பண்டிதமணி கதிரேசன் செட்டியார் - பக் 252


3. கல்வெட்டு சிவன் சந்நிதி முன்பு உள்ளது.


4. அரு.இராமசாமி செட்டியார் என்கிற சோமன் செட்டியார் 01/02/2025 அன்று இக்கட்டுரை ஆசிரியரிடம் கூறியது.


5.அரு.சிதம்பரம் செட்டியார் 12/01/2025 அன்று இக்கட்டுரை ஆசிரியரிடம் கூறியது.







Friday, February 28, 2025

காரைச் சிவனடியார் திருக்கூட்டம்

சீர்திருத்தச்செம்மல் சொ.முருகப்பா அவர்களால் 1923ஆம் ஆண்டு காரைக்குடி பகுதியில் சைவ சமயத்தை வளர்க்கும் நோக்கில் "காரைச் சிவனடியார் திருக்கூடம்" என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் இதன் சார்பில் "குமரன்" என்னும் மாத இதழ் வெளிவந்து. இவ்வமைப்பினால் திரு.வி.க எழுதிய "நாயன்மார் வரலாறு" நூல் முதன் முதலில் வெளியிடப்பட்டது.

அமராவதிபுதூர் மழலையர் பள்ளி - 1939

          காரைக்குடி சீர்திருத்தச்செம்மல் சொ.முருகப்பா அவர்களால் 1938ல் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் இளம் விதவைப்பெண்கள் மற்றும் கைவிடப்பட்டபெண்கள் முன்னேற்றத்துக்காக "மகளிர் இல்லம்" தொடங்கப்பெற்றது. அதில் பெண்களுக்கு கல்வியும் , கைத்தொழில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. சிலருக்கு மறுமணமும் செய்துவைக்கப்பட்டுள்ளது. 


இப்பெண்களின் குழந்தைகள் கல்வி கற்க மகளிர் இல்ல வளாகத்தினுள்ளே 1939-ல் ஒரு மழலையர் பள்ளி தொடங்கப்பெற்றுள்ளது. மழலையர் பள்ளி கட்டிடத்தை இலங்கை ஸ்ரீலஸ்ரீ விபுலானந்த சுவாமிகள் திறந்துவைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


பெண்கள் மறுமணம், கல்வி மற்றும் முன்னேற்றத்துக்காக அயராது உழைத்த சொ.முருகப்பா பற்றி இன்று யாரும் பேசுவதில்லை. அறியப்படாத மனிதருள் ஒருவராய் உள்ளார்.


- பழ.கைலாஷ் 

Thursday, February 20, 2025

செட்டிநாட்டிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! மீஸெல் அட்மென்ட் - பெர்னார்ட் டிராகன் சிறப்பு பேட்டி.

-பழ.கைலாஷ்-


                     செட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பலர் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள், செட்டிநாட்டு வீடுகளையும் கோயில்களையும் சுற்றிபார்கிறார்கள் புகைப்படம் எடுக்கிறார்கள் பின்னர் அடுத்த சுற்றுலா தலத்திற்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பிரான்ஸ் நாட்டிலிருந்து செட்டிநாட்டுக்கு சு‌ற்றுலா வந்த இருவர் செட்டிநாட்டு வீடுகள் மேல் காதல் கொண்டு கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக செட்டிநாட்டிலேயே வசித்துவருகின்றனர். மேலும் இவர்கள் "செட்டிநாடு" யுனெஸ்கோ(UNESCO)வின் "உலக பாரம்பரிய இடங்கள்-தற்காலிக பட்டியலில்"(Tentative list) இணைய பெரும் பங்காற்றியுள்ளனர்.

பெர்னார்ட் டிராகன் மற்றும் மீஸெல் அட்மென்ட்


நான் கடந்த மாதம் இவர்கள் இருவரையும் கொத்தமங்கலம் "சாரதா விலாஸ்"-ல் ஒரு மதிய வேளையில் சந்தித்தேன். ஒருவர் பெயர் மீஸெல் அட்மென்ட்(Michel Adment) மற்றொருவர் பெயர் பெர்னார்ட் டிராகன்(Bernard Dragon). இந்த "சாரதா விலாஸ்" கி.பி.1905-ஆம் ஆண்டு சி.அ.சு.செல்லப்ப செட்டியாரால் கட்டப்பெற்ற அழகிய மாளிகை. இந்த வீட்டை தற்போது இவர்கள் இருவரும் ஹெரிடேஜ் ஹோட்டலாக(Heritage Hotel) நடத்திவருகின்றனர். இவர்களுடன் உணவருந்தி கொண்டு உரையாடலை தொடங்கினேன்...


சாரதா விலாஸ்


தமிழில் பேசுவீர்களா? நீங்கள் இருவரும் உறவினரா? நண்பர்களா? உங்களை பற்றி கூறுங்கள்? 


அட்மென்ட் : நாங்கள் இருவரும் நண்பர்கள், இருவரும் கட்டிடக் கலைஞர்கள்(Architects), இருவரும் பிரான்ஸ் குடிமகன்கள். எங்களுக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. ஆனால் கொஞ்சம் தமிழ் புரியும் பேசவராது.


டிராகன் : எனது சொந்த ஊர் மசாய்ஸ், இது பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ளது. அட்மென்ட் பிறந்தது அல்ஜீரியா அது அப்போது பிரான்ஸின் காலனி நாடு, இரண்டு வயது இருக்கும் போது அவர் குடும்பத்தார் பாரிஸ் வந்துவிட்டனர், அவர் வளர்ந்தது பிரான்ஸில் தான்.  


செட்டிநாடு பற்றி எப்படி தெரியும்? எப்போது இங்கு வந்தீர்கள்?


அட்மென்ட் : அது பெரிய கதை நான் கொஞ்சம் சொல்கிறேன், டிராகன் மீதியை சொல்வார். நாங்கள் இருவரும் பிரான்ஸில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆர்கிடெக்ட்-ஆக பணியாற்றி வந்தோம், உலகம் முழுவதும் பல கட்டிடங்களை வடிவமைத்துள்ளோம். இப்படி 1998 வாக்கில் சீனாவில் தங்கியிருந்து ஒரு பெரிய திட்டத்தில் பணியாற்றி வந்தோம். தினசரி வேலைகள் இருக்கும். ஓய்வு நேரம் மிகக் குறைவு. வேலைப் பளு அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் ஒரு ஆறு மாத காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு, கொஞ்ச காலம் எங்காவது சுற்றுலா செல்லலாம் என யோசித்து, இந்தியா செல்ல முடிவெடுத்தோம்.


டிராகன் : முதலில் மும்பை வந்திறங்கினோம். மும்பை விமான நிலையத்தில் சென்னைக்கான விமானத்தை தவரவிட்டுவிட்டோம். இப்போது இருப்பது போல் 1998-ல் நிறைய விமானங்கள் இல்லை. மும்பை விமான நிலையத்தில் அடுத்த விமானத்திற்காக காத்திருந்த போது கைடுபுக்கில்(GuideBook) மதுரை கோயில் கோபுரங்களை பார்த்தோம். நேரடியாக மதுரை வந்திறங்கினோம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றோம் இரவு நேரத்தில் விளக்கொளியில் கோயில் மிக அழகாக இருந்தது. சொல்ல வார்த்தையே இல்லை! பின்னர் கேரளா கொச்சின் சென்றோம். அங்கு பழைய மரத்தூண்கள், நாற்காலிகள் வாங்கிக்கொண்டு பிரான்ஸ் சென்றோம், மூன்றே வாரத்தில் அத்தனை பொருட்களையும் விற்றுவிட்டோம் பெரும் லாபம் கிடைத்தது. தொடர்ந்து சில முறை கேரளா வந்து பழைய பொருட்களை வாங்கிச் சென்றோம். அப்படி ஒருமுறை கேரளா வந்தபோது ஒரு மரத்தூணை வாங்கினோம் இது செட்டிநாட்டு தூண் என்றார்கள், செட்டிநாடு என்கிற வார்த்தையை அப்போது தான் கேள்விப்பட்டோம். 2000-ஆவது ஆண்டில் முதன்முதலாக செட்டிநாடு வந்தோம் இந்த பிரமாண்டத்தில் ழூழ்கினோம்! நாங்கள் ஏதோ பத்து இருபது பெரிய வீடுகள் இருக்கும் என நினைத்து வந்தோம், ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான மாளிகைகள் இருப்பதை கண்டு வியந்துபோனோம்.


செட்டிநாட்டை யுனெஸ்கோ(UNESCO) வரை எடுத்து சென்றது எப்படி? செட்டிநாட்டில் தங்களை எது ஈர்த்தது? 


அட்மென்ட் : எங்களை ஈர்த்தது செட்டிநாட்டு கட்டிடக்கலை என்று சொல்வதைவிட இவ்வளவு எண்ணிக்கையிலான பெரிய வீடுகள் தான் ஈர்ப்புக்கு காரணம். உலகில் எங்குமே இதுபோன்ற வீடுகள் ஒரே இடத்தில் இல்லை. நாங்கள் முதன்முதலாக செட்டிநாடு வந்தபோது முதன்முதலில் பார்த்த ஊர் பள்ளத்தூர், தெருக்களின் அழகில் மயங்கினோம். அப்போதெல்லாம் யாரும் தங்கள் வீட்டை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள், இருப்பினும் பள்ளத்தூரில் சில வீடுகளுக்கு உள்ளே நுழைந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சி தந்தது. பிரான்ஸ் சென்றவுடன் நண்பர்களிடம் செட்டிநாட்டு வீடுகள் பற்றி கூறினோம். சிலநாட்களில் மீண்டும் செட்டிநாடு வந்த போது திருமதி.மீனாட்சி மெய்யப்பன், திருமதி.விசாலாட்சி இராமசாமி, திரு.எம்.வி.சுப்பையா செட்டியார் ஆகியோர் உள்ளிட்ட பலரை சந்தித்து செட்டிநாடு கட்டிடக்கலை மற்றும் செட்டியார் வாழ்க்கை முறை பற்றி கேட்டறிந்தோம். எங்களுக்கு முன் 1990கள் இறுதியில் செட்டிநாட்டு வீடுகளையும் செட்டியார்களையும் ராபர்ட் துலாவ்(Robert Dulau) எனும் பிரெஞ்ச்காரர் ஆய்வுசெய்து பிரெஞ்ச் மொழியில் ஆய்வு நூலாக எழுதியிருந்தார். அதை படித்தும் தெரிந்துகொண்டோம்.


டிராகன் : பிரான்ஸில் யுனெஸ்கோ அமைப்பினரை சந்தித்து செட்டிநாடு பற்றி கூறினோம். அவர்கள் டெல்லியில் உள்ள யுனெஸ்கோவின் இந்திய தலைமையகத்திற்கு எங்களை அறிமுகப் படுத்தினார்கள். டெல்லியில் ஒரு பெண்மணி தான் யுனெஸ்கோ தலைமை பொறுப்பில் இருந்தார்கள், அவர்கள் உள்ளிட்ட அங்குள்ள யாருக்கும் செட்டிநாடு பற்றி தெரியவில்லை. நான் செட்டிநாடு பற்றி புகைப்படங்களுடன் செய்திகளை எடுத்து கூறிய பின் 2006-ல் Revive Chettinad Campain என்னும் திட்டத்தை கொண்டுவந்தார்கள். அதில் எங்களுடன் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., அமைச்சர், அண்ணா பல்கலைக்கழக ஆர்கிடெக்ட் மாணவர்கள், செட்டியார்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இது காரைக்குடியில் நடைபெற்றது. இத்திட்டத்தின் நோக்கம் செட்டிநாட்டு வீடுகளை அழிவிலிருந்து மீட்டெடுப்பது. பின்னர் 2008-ல் பிரான்ஸ் நாட்டு ஆர்கிடெக்ட் மாணவர்கள் மற்றும் இந்திய ஆர்கிடெக்ட் மாணவர்களுடன் சேர்ந்து நாங்கள் கொத்தமங்கலம், லெட்சுமிபுரம், கானாடுகாத்தான், பள்ளத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள செட்டியார் வீடுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய தொடங்கினோம். வீடுவீடாக சென்று செய்திகளை சேகரித்தோம். வீடுகள் கட்டிய காலங்களை கணக்கிட முகப்பு தோற்றம் மற்றும் வீட்டின் வடிவமைப்பை கொண்டு வகைப்படுத்தினோம்.

ஊரின் வரைபடம் அதில் தெருக்கள், பழைய வீடுகள், வடிகால் அமைப்புகள், ஊருணிகள், கோயில்கள் ஆகியவற்றை அளந்து வரைந்தோம். செட்டிநாட்டின் புவியியல், பொருளாதாரம், செட்டியார்களின் வரலாறு மற்றும் மக்களின் இன்றைய வாழ்க்கை முறையை பதிவுசெய்தோம். பின்னர் 2010-ல் யுனெஸ்கோ சார்பில் நாங்கள் "Chettinad Village Clusters of Tamil Merchants" என்னும் தலைப்பில் இவற்றை புத்தகமாக எழுதி ஆங்கிலத்தில் வெளியிட்டோம். அந்த புத்தகத்தை 2012-ல் பிரெஞ்ச் மொழியிலும் யுனெஸ்கோ சார்பில் வெளியிட்டோம். இப்படியாக தொடங்கிய எங்கள் பயணம் பல கட்ட பணிக்கு பின், 2014 ஏப்ரல் மாதம் செட்டிநாட்டை "உலக பாரம்பரிய இடங்கள்-தற்காலிக பட்டியலில்" இணைத்தது யுனெஸ்கோ.


இந்த ஹெரிடேஜ் ஹோட்டல் தொடங்கியது எப்படி? 


அட்மென்ட் : கிட்டத்தட்ட யுனெஸ்கோ பணி கதையும் சாரதா விலாஸ் கதையும் ஒரே இடத்தில் தொடங்கியது தான். 2007-ல் நான் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆர்கிடெக்ட்-ஆக பணியில் சேர்ந்தேன், அதேநேரம் டிராகன் செட்டிநாட்டில் யுனெஸ்கோ பணியை தொடர்ந்து வந்தார். அப்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் நீம்ரானா ஹோட்டல்ஸ்(Neemrana Hotels) உரிமையாளருமான பிரான்சிஸ் வக்சியார்க்(Francis Wacziarg) மூலம் சாரதா விலாஸ் எங்களுக்கு அறிமுகமானது. அவர் "நாம் மூவரும் இணைந்து சாரதா விலாஸை ஹெரிடேஜ் ஹோட்டலாக நடத்துவோம்" என்றார். ஆனால் அவர் சில காரணங்களால் விலகிக்கொண்டார். பின்னர் நாங்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து "Adment & Dragon Tourism & Cultural Development P.Ltd." எனும் நிறுவனத்தை இந்தியாவில் பதிவு செய்தோம். அதன்பின்னர் 2009-ல் சாரதா விலாஸ் உரிமையாளரான திரு.செல்லப்பன் அவர்களிடம் ஒப்பந்தம் செய்து இந்த வீட்டை குத்தகைக்கு எடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை புனரமைக்க தொடங்கினோம். இனிமேல் தான் பெரிய கதையே இருக்கு!


டிராகன் : ஆமாம்! இந்த வீட்டை புனரமைப்பது மிகுந்த சவாலான பணியாக இருந்தது. முதலில் வீட்டின் பல இடங்களில் ஒழுகியது, ஆகையால் வீட்டில் உள்ள நாட்டு ஓடுகளை பிரித்து பின் மீண்டும் அதே நாட்டு ஓடுகளை பரப்பினோம். அதில் சில ஓடுகள் உடைந்திருந்தது அவற்றுக்கு பதிலாக வீட்டின் மாட்டு கொட்டகையில் இருந்த நாட்டு ஓடுகளை பயன்படுத்தினோம். இப்போது யாரும் நாட்டு ஓடுகளை பழுதுபார்ப்பதில்லை. சீமை ஓடுகள் மற்றும் சீட் மூலம் நாட்டு ஓடுகளை மாற்றி அமைக்கின்றனர். ஆனால் நாங்கள் பழமை குன்றாதவாறு வீட்டை சீரமைக்க எண்ணினோம். அப்படியே செய்தோம். வீட்டின் சுவர்களில் பெயிண்ட் அடிப்பதை முடிந்த வரை தவிர்த்தோம், பிரான்ஸில் இருந்து வாங்கி வந்த பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தி சுவற்றில் உள்ள அழுக்குகளை நீக்கினோம். மேலும் பிற்காலத்தில் அடிக்கப்பட்டிருந்த கெமிக்கல் பெயிண்ட்ஸை நீக்கி அதன் உள்ளே இருந்த ஒரிஜினல் ஓவியங்களை மீட்டெடுத்தோம். எங்குமே புதிய கிரானைட் கற்களை பயன்படுத்தவில்லை, பழைய தரைதலத்தில் தேவைப்படும் இடத்தில் மட்டும் ஆத்தங்குடி பூக்கல் பயன்படுத்தினோம். வீட்டின் வெளிப்புறம் இருந்த சுதை சிற்பங்கள் எல்லாம் முற்றிலுமாக சிதைந்திருந்தது. அவற்றை அதற்கான கலைஞர்களை கொண்டு புதிதாக செய்தோம். 2010 முதல் சிறப்பாக ஹோட்டலை நடத்தி வருகிறோம். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து எங்கள் ஹோட்டலில் தங்குகின்றனர்.







நீங்கள் செட்டிநாட்டவர்களுக்கு சொல்ல விரும்புவது?


நாங்கள் இருவரும் ஒரே வரியில் சொல்ல விரும்புவது "Revive Chettinad". செட்டிநாட்டை மீட்டெடுங்கள். யாரும் பழையவீட்டை இடிக்காதீர்கள். புனரமைக்கும் போதும் பழமை குன்றாதவாறு புனரமையுங்கள். தற்போது யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் உள்ள செட்டிநாட்டை நிரந்தர பட்டியலுக்கு கொண்டுவர சேர்ந்து முயர்ச்சிப்போம்.■


நமது செட்டிநாடு

பிப்ரவரி 2025







Tuesday, February 18, 2025

திருத்தங்கூர் நாகநாதசுவாமி கோயில்.

  

               நாகநாதசுவாமி கோயில், சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகேயுள்ள திருத்தங்கூரில் உள்ளது. இது சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குரிய கோயில்.

இக்கோயில் எப்போது யாரால் எந்த காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்று சரியாக தெரியவில்லை. பிற்கால பாண்டியர்கால கோயிலாக இருக்கலாம். தற்போது உள்ள கோயிலானது முழுவதும் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் புதிதாய் கட்டப்பட்டு கி.பி.1904ல் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுள்ளது.


சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் தனித்தனி கோயில்களாக தனி இராஜ கோபுரங்களுடன் கட்டப்பட்டுள்ளது.


பழைய கல்வெட்டுகள் ஏதும் இல்லை. நகரத்தார் கட்டியதற்கும் கல்வெட்டு வைத்துக்கொள்ள வில்லை.


1904-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தபோது கண்டனூர் நா.பெ.நா.முத்துராமையாவால் "கும்பாபிஷேக கவி" ஒன்று பாடப்பட்டுள்ளது. அதில் நகரத்தாரால் கோயில் கட்டப்பட்டு குரோதி வருஷம்(1904) சித்திரை 10ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பெற்றதாய் உள்ளது.


கும்பாபிஷேக கவி.

"செயமிகு குரோதிசம் வற்சரஞ் சித்திரை மாதமது தேதிபத்

திற், றிகழ்சுக்ர வாரமுறு பூர்வபட் சத்திலே திதியான சத்தமித 

னி, - னயமதாம் புனர்பூச நட்சத் திரத்திடப லக்கின மாந்தினத்தி, 

னாட்டிலுள வணிகர்சேர்ந் தூனாவொ டானாவு நன்மையாம் பொருள்

கொடுத்து, - வயல்வளஞ் சூழ்திருத் தங்கூரி லுறைநாக நாதனாம் 

வள்ளலுக்கு, மாதா வெனுஞ்சொன்ன வல்லிமுத லனைவர்க்கு மாப 

ணி யியற்றி யன்பாய்ச், - சுயமான வட்டபந் தனமோடு கும்பாபி

டேகமுஞ் சுகமதாகத் தூய்தா நடந்ததும் நற்கடவுள் பவனியுஞ்

சொல்லுதற் கெளியவாமோ"


அன்பன் 

பழ.கைலாஷ்.














Monday, January 27, 2025

சுதந்திரப்போராட்ட வீரர் D.R.அருணாசலம்

 




D என்பது தேவகோட்டை, R என்பது இராமநாதன் செட்டியார்


D.R.அருணாசலம் அவர்களின் தந்தை இராமநாதன் செட்டியார் திருகாளஹஸ்தி கோயில் திருப்பணியாளர்.


தேவகோட்டையில் பெரும் செல்வ குடும்பத்தில் பிறந்த D.R.அருணாசலம், மகாத்மா காந்தி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.


 1941-ல் தனிநபர் சத்தியாகிரகம் செய்தமைக்காகக் கைது செய்யப்பட்டார். பின்னர் 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். இவரது தூண்டுதலில் இவரது நண்பர்களால் தேவகோட்டை நீதிமன்றம் கொளுத்தப்பட்டது.

 மதுரை, அலிப்புரம், வேலூர், தஞ்சாவூர் சிறைச்சாலைகளில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். 


இந்திய விடுதலைக்குப்பின், இந்திய அரசு இவரது நாட்டுத் தொண்டைப் பாராட்டித் தாமிரப்பட்டயம் அளித்துள்ளது. 


தேவகோட்டையில் 1941-ல் மாபெரும் தமிழிசை மாநாட்டை இராஜா சர். அண்ணாமலை செட்டியார் தலைமையில் இவர் முன்னின்று நடத்தினார்.


லூயிஃபிஷர் எழுதிய 'நான் கண்ட காந்தி', ஜி. ராமச்சந்திரன் எழுதிய 'காந்திஜி வாழ்க்கையில் சில ரசமான சம்பவங்கள்' முதலிய சில நூல்களை ஆங்கிலத்திலிருந்தும் சில நூல்களை இந்தியிலிருந்தும் இவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 


- பழ.கைலாஷ்

Monday, January 20, 2025

துதிக்கையில்லா கரிமுகன்

 

நடுவாற்று மருதம் பிள்ளையார்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர் கண்டரமாணிக்கம். இவ்வூரையடுத்த கொங்கரத்தியில் மணிமுத்தாற்றின் நடுவே கோயிலின்றி, கும்பமின்றி, துதிக்கையுமின்றி தன்னை நாடி வரும் பக்தர்கள் வேண்டிய வரங்களை கொடுத்து, அருள்பாலித்து வருகிறார் "நடுவாற்று மருதம் பிள்ளையார்".

மருதுசகோதரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர், பாடுவார் முத்தப்பரின் தேகநோயை தீர்த்தருளியவர் என மருதம் பிள்ளையார் வரலாற்றில் நிற்கிறார்.

சில நுற்றாண்டுகளுக்கு முன்பு கண்டரமாணிக்கத்தை சேர்ந்த முருகப்ப செட்டியார் என்பவர் தன் மனைவியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி பற்பல புண்ணிய தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில், இருவரும் கண்டரமாணிக்கத்தின் அருகே கொங்கரத்தியில் ஒரு மருத மரத்தடியில் குடிக்கத்தண்ணீர் இன்றி சோர்ந்து மிகுந்த களைப்புடன் கண் அயர்ந்தனர்.

அப்போது... "முருகப்பா, இங்கு நீங்கள் இருவரும் எப்படி தண்ணீர் இன்றி கஷ்டப்பட்டு, களைப்புடன் இருக்கின்றீர்களோ அதுபோலத்தான் இந்த வழியாக வரும் மனிதர்கள், ஆடு, மாடு, பறவைகளும் அருந்தத் தண்ணீர் இன்றி கஷ்டப்படுகின்றன. அதனால் தண்ணீர் தாகம் தீர இந்த இடத்தில் நீ ஒரு குளம் வெட்டு, அப்போது பிள்ளையார் சிலை ஒன்று கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் அந்த பிள்ளையார் சிலையை இங்கு முறைப்படி பிரதிஷ்டை செய்து இந்த குளத்திலிருந்து நீர் எடுத்து பயபக்தியுடன் தினமும் அபிஷேக ஆராதனைகள் செய்து வா. அவ்வாறு செய்து வரும் நாட்களில் உன் மனைவியை மருதமரத்துக் கொழுந்தை 48 நாட்கள் சாப்பிட்டு வரச் சொல். அப்படி செய்தால் உன் மனைவிக்கு இன்னும் ஓராண்டில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்" என தெய்வக்குரல் ஒலித்தது.

பின்னர் இருவரும், ஒரு நல்ல நாள் பார்த்து இறைவன் கூறிய இடத்தில் குளம் வெட்டினர், தெய்வக்குரல் ஒலித்தபடி அங்கு மிகுந்த ஒளியுடன் கூடிய பிள்ளையார் சிலை ஒன்று கிடைத்தது. இறைவன் வாக்கால் மருதமரத்தடியில் கிடைத்திட்ட அந்தப்பிள்ளையாருக்கு "மருதம் பிள்ளையார்" எனப் பெயர் சூட்டி, பிரதிஷ்டை செய்து மிகுந்த தூய்மையுடன் தினமும் அபிஷேக, ஆராதனைகள் செய்து வந்தனர். இறைவன் கூறியபடி மருத மரத்தின் கொழுந்தினை தன் மனைவிக்கு மருந்தாக கொடுத்து வந்தார் முருகப்ப செட்டியார். ஓராண்டில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இறைவன் அருளால் பிறந்த அந்த குழந்தைக்கு "மருதப்பன்" எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

பின்னர், இப்பகுதியை ஆண்ட மருதுசகோதரர்கள் போருக்குப் போகும் முன் இந்த மருதம் பிள்ளையாருக்கு வழிபாடு நடத்தி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். மருதுசகோதரர்கள் மீது கர்னல் அக்நியு என்னும் கொடூரன் படையெடுத்த போது இந்த மருதம் பிள்ளையார் யானை உருவில் வந்து ஆங்கிலேயப் படையைப் பயமுறுத்தி திசை மாற்றி அனுப்பியதாக வரலாறு உண்டு. இச்செய்தி பாடுவார் முத்தப்பர் பாடிய நடுவாற்று மருதம் பிள்ளையார் பதிகத்தில் இடம்பெற்றுள்ளது.

மருதுசகோதரர்களை காத்தது இந்த மருதம் பிள்ளையார்தான் என பின்னர் அறிந்து கோபமுற்ற வெள்ளையர்கள் மருதம் பிள்ளையார் தலையை துண்டிக்க முயன்றபோது, துதிக்கை மட்டும் துண்டானது தலை துண்டாகவில்லை. இதன் சாட்சியாக தற்போதும் துதிக்கையின்றி காட்சியளிக்கின்றார் மருதம் பிள்ளையார்.

ஒருமுறை வரகவி பாடுவார் முத்தப்பரை தேகநோய் கடுமையாக தாக்கியது. கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் திருமுன்னே பாடல் பாடி நோயை தீர்த்தருள வேண்டினார். இரவில் கனவிலே தோன்றிய அம்பாள் "முத்தப்பா! கண்டரமாணிக்கம் நடுவாற்று மருதம்பிள்ளையார் கோயிலுக்கு சென்று பத்து நாள் நோன்பிருந்தால் நோய் தீர்ந்து சுகம் கிடைக்கும்" என்றுரைத்தாள். அம்பாளின் உத்தரவுப்படி கண்டரமாணிக்கம் சென்று நடுவாற்று மருதம் பிள்ளையார் திருவுருவைக் கண்டு அடிபணிந்தார். நாள்தோறும் வழிபாடு செய்து நாளுக்கொரு பாடல் பாடினார். பத்து நாட்களில் நோய் முழுவதும் தீர்ந்து உடல் நலம்பெற்றார். அந்த பத்து நாட்கள் பாடிய பாடல்கள் "நடுவாற்று மருதம் பிள்ளையார் பதிகம்" என்று அழைக்கப்படுகின்றது.

மருதப்பச் செட்டியாரின் வழிமுறையினர் மருதம் பிள்ளையாருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய பல முறை முயன்றபோதும் "நான் வெட்டவெளியில் இருப்பதைத்தான் விரும்புகின்றேன்" எனக் கூறி தடுத்துவிட்டாராம். இன்றும் நட்ட நடுக்காட்டில் வானமே கூரையாய் கும்பமின்றி துதிக்கையின்றி தன்னை நாடி வரும் பக்தர்களின் நோய் நொடிகளை தீர்த்து, அருள் புரிந்து வருகிறார்.

- பழ.கைலாஷ்


நமது செட்டிநாடு - ஜனவ‌ரி 2025


Monday, January 13, 2025

களத்தூர் சிவன் கோயில்

 பர்வதவர்த்தினி உடனமர் இராமநாத சுவாமி திருக்கோவில், 
களத்தூர்(புதுவயல் அருகே),
சிவகங்கை மாவட்டம்.















க்கோயில் கி.பி 1908ஆம் ஆண்டு கோட்டையூர் க.வீ.சொ.வீ.அழகப்ப செட்டியார் அவர்களால் கட்டப்பெற்றது.(இவர் கல்லூரி கட்டிய வள்ளல் அழகப்ப செட்டியார் இல்லை) 


க.வீ.சொ.வீ.அழகப்ப செட்டியார் கோவிலூர் மடாலயத்தின் ஐந்தாவது மடாதிபதி திருக்களர் ஆண்டவரின் சீடர், சிறந்த வேதாந்த வித்தகர். பற்பல கோயில் திருப்பணிகள் செய்துள்ளார். கோட்டையூரில் தாம் வாழ்ந்த பெரிய வீட்டையே பள்ளிக்கூடத்திற்கு கொடுத்துவிட்டார். 


இவர் களத்தூரில் கட்டிய கோயில் தற்போது மிகுந்த சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பார்க்க வருத்தமாக உள்ளது. நீண்டகாலமாகவே இவரின் குடும்பத்தாருக்கும் கோயிலுக்கும் தொடர்பு இல்லாமல் உள்ளது. 


நான் மேற்படி குடும்பத்தாருக்கு இக்கோயில் பற்றிய தகவலை கூறியுள்ளேன். விரைவில் நல்லது நடக்கும் என்று நம்பலாம்.


-பழ.கைலாஷ் 

13/01/2025

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...